"நாங்கள் படித்துவரும் பொறியியல் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் ஒரு செக்ஸ் சைக்கோ. கல்லூரி மாணவிகளை உடல்ரீதியாக வும், மனரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி வருகிறார். அவருடைய அறையில் எங்களை நிர்வாணப்படுத்தி வீடியோக்கள் எடுத்து பிளாக்-மெயில் செய்கிறார். நாங்கள் யாருக்காவது அவர் குறித்து புகார் அனுப்பினால், எங்களின் நிர்வாண வீடியோக்கள், புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டுகிறார். எங்களது பாதுகாப்புக்காக முகத்தை மறைத்து சில புகைப்படங்களை அனுப்பியிருக்கிறோம்.

கன்னியாகுமரி மாவட்டம், சென்னை போன்ற இடங்களில் பணக்கார வி.ஐ.பி. வீடுகளுக்கு நாங்கள் அனுப்பிவைக்கப்பட்டபோதெல்லாம், "வைவா' தேர்வுக்குச் செல்கிறோம் எனப் பெற்றோரிடம் கூறும்படி கட்டாயப்படுத்தப் பட்டோம். கடந்த ஆண்டு, சில போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகளு டன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வைத்து, ரகசிய கேமராவால் படம் பிடிக்கப்பட்டு மிரட்டப்படுகிறோம். போன்-செக்ஸ், செக்ஸ்-சாட் பண்ணு வதற்கு சில அரசு மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு எங்களது செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தத் தில் எங்களைப் பொம்மைகளாக்கி பயன்படுத்து கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட 35 மாணவிகள்வரை அவரிடம் சிக்கியிருக்கிறோம்.

எங்களது பெயர்களையோ, புகைப்படங் களையோ பகிரவிரும்பவில்லை. நாங்கள் கூறியதை நீங்கள் நம்பவில்லையென்றால், இறுதி முடிவுகளை எடுப்போம். நாங்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்வோம். அப்போது, உங்களுக்கு நம்பிக்கை வரும்''’ என பகீர் தகவல்களுடன், அந்தக் கல்லூரி நிர்வாக இயக்குநர், யாரோ சில (முகம்மறைக்கப்பட்ட) பெண்களுடன் இருக்கும் தெளிவில்லாத கருப்பு-வெள்ளை போட்டோக்களை நமக்கு அனுப்பியிருந்தனர். கன்னியாகுமரி மாவட்டத் திலிருந்து வந்திருந்த, முகவரியில்லாத அக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வில்லங்கமான தகவல்கள் குறித்து விசாரணையில் இறங்கி னோம். நண்பர் ஒருவர் மூலம் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவிகள் இருவரிடம் பேசியபோது “அப்படியெல்லாம் எதுவும் கிடையாது” என்று உறுதியாக மறுத்தனர்.

அந்தக் கல்லூரி நிர்வாக இயக்குநரிடம் பேசினோம். "இந்தப் பிரச்சனை 2018-ல ஆரம்பிச்சது. இப்ப எனக்கு வயசு 32 ஆகுது. கல்லூரி நிர்வாகத்தை நானும், மற்ற பொறுப்புகளை என் மனைவியும் பார்த்துட்டு வர்றோம். ஆரம்பத்துல பில்டிங் சரியில்ல, அடிப்படை வசதிகள் இல்லைன்னு சொல்லி பெட்டிஷன் போட்டுட்டு இருந்தாங்க. இப்ப புதுசா பாலியல் குற்றம் நடக்குதுன்னு எக்ஸ்ட்ராவா கொஞ்சம் சேர்த்து பெட்டிஷன் போடறாங்க. மூணாவது தடவையா மொட்டைக் கடுதாசி வருது. நாகர்கோவில்ல இருந்து போஸ்ட் பண்ணுறாங்க. காலேஜ் கேர்ள்ஸ் அசோஸியேஷன், நலசங்கம்கிற பேர்ல அனுப்புறாங்க. அதுவும் அட்மிஷன் டைம் பார்த்து வருஷா வருஷம் பெட்டிஷன் வருது.

அந்த போட்டோஸ் எல்லாம் நான் நார்மலா காலேஜ்ல ப்ரோக்ராம் அட்டெண்ட் பண்ணப்ப எடுத்தது. என்னோட இன்ஸ்டா கிராம்ல இருந்தும் போட்டோ எடுத்து மார்பிங் பண்ணிருக்காங்க. நான் யாருகிட்டயோ தப்பா வாட்ஸ்-ஆப் சாட் பண்ணுனதா, என்னோட நம்பர் இருக்கிற மாதிரி செட் பண்ணிருக்காங்க. அதுல +91 இல்லாம என்னோட நம்பர் இருக்கும். நாங்களும் அப்ப இருந்தே போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்துட்டிருக்கோம்''” என்றார் வேதனையுடன்.

அவர் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் கொடுத்துள்ள மனுவில், "பொய்யான புகார் மூலம், 2000 மாணவ- மாணவிகள் படித்துவரும் எங்கள் கல்லூரியின் நற்பெயருக்கும், எனக்கும் களங்கம் ஏற்படுத்தி வரும் மர்ம நபரைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அந்த மனுவில் ‘அண்ணா பல்கலைக்கழகத்தின் இயக்குநருக்கும், காவல்துறை உயரதிகாரிகளுக்கும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கும், சமூக நலத்துறைக்கும் முகவரியற்ற புகாரை அனுப்பிவரும் அந்த நபர், என்னைத் துன்புறுத்தி, அலைக்கழித்து, மனஉளைச்சல் ஏற்படுத்தி வருகிறார். என்னையும், என் மனைவியையும், என் தகப்பனாரையும் இழிவுபடுத்தி யிருக்கிறார்'’எனக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisment

ss

இதுகுறித்து விசாரணை நடத்திவரும் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்வர்ணராணியிடம் பேசினோம்.

"அந்தக் கல்லூரி நிர்வாக இயக்குநர் மீதான புகார்ல உண்மை இருக்கிற மாதிரி தெரியல. எல்லாமே ம்ர்க்ண்ச்ஹ் பண்ணித்தான் போட்டுவிட்டிருக்காங்க. திரும்பத் திரும்ப பெட்டிஷன் வருது. டீம் டீமா காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்கிட்ட விசாரணை நடத்தியாச்சு. மாவட்ட சமூகநலத்துறையினரும் விசாரிச்சிருக்காங்க. ஐந்துபேர் கொண்ட குழு மாணவிகள்கிட்ட தனித்தனியாவும் விசாரிச்சாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியிருந்தே இது ஓடிட்டிருக்கு. அவருக்கு வேண்டாத யாரோ பண்ணுறாங்க போல. போலீஸ் டீமும் ஃபாலோ பண்ணிட்டிருக்கு. தொடர்ந்து விசாரிக்கிறோம்''’என்றார்.

அரசு அதிகாரிகளுக்கு எதிரான மொட்டைக் கடிதங்கள், முழுமையாக இல்லாத புகார்கள்மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லையென மத்திய தனிநபர் பயிற்சித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் ‘மக்கள் பிரதிநிதி கள் குறித்து மொட்டைக் கடுதாசி வந்தாலும் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளது.

கல்லூரி மாணவிகளின் பெயரால் கல்லூரி நிர்வாகிமீது சுமத்தப்பட்ட அவதூறான புகார் என்ப தால், சம்பந்தப்பட்ட பெயர்கள், புகைப்படங்களைத் தவிர்த்துள்ளோம்.

Advertisment