"அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பொன்முடியைத் தொடர்ந்து அமலாக்கத்துறையிடம் சிக்கும் அடுத்த மந்திரி யார்? என்கிற பரபரப்பு தி.மு.க.வில் பரவிவரும் நிலையில் பொன்முடியின் மகனை கைது செய்யும் ஆயத்தப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது அமலாக்கத்துறை.
அமலாக்கத்துறை அதிரடி!
சட்டவிரோத பணப்பரிமாற்றம், அன்னியச் செலாவணி மோசடி ஆகியவை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடியும் அவரது மகன் கௌதம சிகாமணி எம்.பி.யும் சிக்கியிருக்கிறார்கள். இது தொடர்பாக இவர்களின் சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள வீடுகள், கல்லூரி மற்றும் அலுவலகங்களில் கடந்த 17-ந்தேதி அதிரடி ரெய்டினை நடத்தியது அமலாக்கத்துறை.
இரவு வரை நடந்த சோதனைகளுக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார் பொன்முடி. அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. விடியற்காலை 3:30 மணிக்கு வீட்டிற்குச் செல்ல அவரை அனுமதித்த அதிகாரிகள், கௌதமசிகாமணியை 18-ந் தேதி மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக வேண்டும் என சம்மன் கொடுத்து அனுப்பிவைத்தனர். அதன்படி மகனுடன் ஆஜரானார் பொன்முடி. மறுநாள் 19-ந் தேதி அவரது மகன் கௌதம சிகாமணி மட்டும் மீண்டும் ஆஜாராகி விசாரணை யை எதிர்கொண்டிருக்கிறார்.
செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஏற்பட்ட எந்த சர்ச்சையும் பொன்முடி விவகாரத்தில் நடக்கக் கூடாது என டெல்லியிலிருந்து இன்ஸ்ட்ரக்சன்கள் கொடுக்கப்பட்டதால், கவனத்துடன் பொன் முடியைக் கையாண்டுள்ளது அமலாக்கத்துறை.
பொன்முடிக்கு எதிரான வழக்கு என்ன?
கலைஞர் தலைமையிலான 2006-2011 தி.மு.க. ஆட்சியில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அந்த சமயத்தில், தனது அதி காரத்தைப் பயன்படுத்தி தனது மகன் கௌதம சிகாமணி, சிகாமணியின் மச்சான் மகேந்திரன், இவரது நண்பர் ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு விழுப்புரம் மாவட்டத்தில் 5 குவாரிகளை ஒதுக்கு கிறார். இதில் 20 அடி ஆழம் வரை செம்மண் அள்ள லைசன்ஸ் தருகிறது கனிம வளத்துறை. ஆனால், 70 அடி ஆழம்வரை சட்டவிரோதமாக செம்மண் அள்ளி விற்கிறார் கௌதமசிகாமணி. அமைச்சர் பொன்முடிக்குத் தெரிந்தே இந்த சட்டவிரோதம் நடக்கிறது. இதனால் அரசுக்கு 28.37 கோடி ரூபாய் இழப்பு. இதற்கிடையே 2011-ல் ஆட்சி மாற்றம். ஜெயலலிதா முதல்வராகிறார். தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து வழக்குகள் போடப்படுகின்றன. அதில் அமைச்சர் பொன்முடியும் ஒருவர். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதாக பொன்முடி, கௌதமசிகாமணி உள்பட 7 பேர் மீது 2012-ல் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் அன்றைக்கு வானூர் தாசில்தாராக இருந்த குமரபாலன் புகார் கொடுக்கிறார். வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. இதேபோன்று, ஆற்று மணல் அள்ளுவதிலும் பொன்முடிக்கு எதிராக புகார் எழுந்தது.
அன்னியச்செலாவணி மோசடி! சொத்துக்கள் முடக்கம்!
சட்டவிரோதமாக செம்மண் கொள்ளை யடிக்கப்பட்டதில் கிடைத்த வருவாயை வெளிநாடு களில் முதலீடு செய்யத் திட்டமிடுகிறார் கௌதம சிகாமணி. இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தா வில் இருக்கும் பி.டி.எக்ஸல் மெகிண்டோ என்ற நிறுவனத்தில் 1 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பி லான ஷேர்களை 2008-ல் வாங்குகிறார். அன்றைக்கு இதன் இந்திய மதிப்பு 41.57 லட்சம். அதேபோல, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள நிறுவனத்தில் 55 ஆயிரம் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்கிறார். இதன் இந்திய மதிப்பு 21.86 லட்சம். இந்த ஷேர்கள் மற்றும் முதலீடுகள் மூலம் பல கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறது. இந்த பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி யை கௌதமசிகாமணி பெறவில்லை. இதனையெல் லாம் புலனாய்வு செய்த அமலாக்கத்துறை, அன்னிய செலாவணி மோசடியில் கௌதம சிகாமணி ஈடுபட்டிருப்பதை கண்டறிந்தது. இதனையடுத்து பொன்முடி, கௌதமசிகாமணி உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் (ஃபெமா) கீழ் வழக்கு பதிவு செய்ததுடன், சுமார் 8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான இவர்களுடைய சொத்துக்களையும் கடந்த 2020-ல் முடக்கியது அமலாக்கத்துறை.
ரகசிய டைரியும் பொன்முடியின் பதிலும்!
பொன்முடி, கௌதமசிகாமணி தொடர் புடைய 7 இடங்களில் நடத்திய சோதனைகளில் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்ட முக்கிய ஆவணங்கள், கணக்கில் காட்டப்படாத 81.7 லட்சம் ரூபாய், 13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவற்றை கைப்பற்றியிருக்கிறார்கள். ரகசிய டைரி ஒன்றும் அமலாக்கத்துறையிடம் சிக்கியிருக்கிறது. இந்த நிலையில், அமலாக்கத்துறை இயக்குநர் அலுவலகத்தில் பொன்முடியிடம் விடிய விடிய நடத்திய விசாரணையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களைக் காட்டி, இந்த முதலீடுகள் எப்படி வந்தது? ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் முதலீடு செய்வது சட்டவிரோதம் என்பது தெரியுமா? ஏன் அனுமதி பெறவில்லை? 13 லட்சம் ரூபாய்க்கு வெளிநாட்டு கரன்சிகளை எதற்காக வாங்கி வைத்திருக்கிறீர்கள்? என்றெல்லாம் அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு, எனக்கு எதுவும் தெரியாது; நினைவில்லை; என் மகனுக்கும் ஆடிட்டருக்கும்தான் தெரியும். சட்டவிரோதமாக எந்த முதலீடுகளையும் செய்யவில்லை; அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்டது பொய் வழக்கு. எனது பணிக்காலத்தில் ஒதுக்கப்பட்ட குவாரிகளை ஏற்கனவே கையாண்ட நபர்கள் அள்ளிய செம்மண் அளவுகளை எங்களோடு இணைத்து ஜெயலலிதா ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏற்கெனவே அள்ளப்பட்ட அளவுகளுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்? என்றெல்லாம் பொன்முடி பதில் கொடுத்ததாக அவருக்கு நெருக்கமான தி.மு.க.வினர் கூறுகின்றனர். 13 மணி நேர ரெய்டு, 5 மணி நேர விசாரணையை எதிர்கொண்டதில் ஏகத்துக்கும் களைப்படைந்து விட்டார் பொன்முடி. மன உளைச்சலும், பி.பி.யும் அதிகரித்திருக்கிறது. இதனை உணர்ந்த அதிகாரிகள், "நீங்கள் வீட்டுக்குப் போய் ஓய்வு எடுத்துக்கொண்டு மகனுடன் மாலை 4 மணிக்கு வாருங்கள்'' என 18-ந் தேதி விடியற்காலை 3:30 மணிக்கு பொன்முடியை அனுப்பி வைத்தனர்.
பொன்முடியின் மகனை எச்சரித்த அதிகாரிகள்!
அமலாக்கத்துறை அலுவலகத்தில் மகனுடன் மீண்டும் ஆஜரானார் பொன்முடி. அப்போது, கௌதம சிகாமணியிடம்தான் அதிக கேள்வி களைக் கேட்டிருக்கிறார்கள் அதிகாரிகள். பெரும்பாலும், "நினைவில் இல்லை' என்றே பதிலளித்திருக்கிறார் சிகாமணி. அதற்கு, "எங்களின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையெனில் சட்டரீதியிலான நடவடிக்கையை நாங்கள் எடுக்க வேண்டியதிருக்கும்' என அதிகாரிகள் எச்சரித்த நிலையில்தான் வாய் திறந்திருக்கிறார் சிகாமணி. பணம் வந்த வழிகளை அவர் விவரித்தாலும், ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் செய்த முதலீடுகள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறி யுள்ளார். அதேசமயம், "ஆடிட்டருக்குத் தெரியும்; அவரிடம் கேட்டுச் சொல்கிறேன்' என்றிருக்கிறார் சிகாமணி. 4 மணி நேர விசாரணைக்குப் பிறகு, "நீங்கள் மட்டும் நாளைக்கு வாருங்கள்' என சிகாமணிக்கு சொல்லிவிட்டு தந்தையையும் மகனையும் அனுப்பிவைத்தனர் அதிகாரிகள். வெளியே வந்த இருவரின் முகமும் இறுகியிருந்தது. இந்த நிலையில், 19-ந் தேதி ஆஜராகி விசாரணையை எதிர்கொண்ட சிகாமணி, தனது ஆடிட்டரிடம் விவாதித்து தயாராக வைத்திருந்த பதில்களைச் சொல்லியிருக்கிறார். அதனைக் குறித்து வைத்துக் கொண்ட அதிகாரிகள், சம்மந்தப் பட்ட ஆடிட்டரை வரவழைத்து விசாரிக்கவும் தயாராகியிருக்கிறார்கள்.
பொன்முடிக்கு தைரியம் சொன்ன முதல்வர்!
பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட நிலையிலும், அவரது சிந்தனை முழுவதும் சென்னையிலேயே இருந்தது. அமைச்சர்களை அனுப்பி பொன்முடிக்கு தைரியம் கொடுக்க வைத்தார். பெங்களூருவில் இருந்த போதும், சென்னை திரும்பிய பிறகும் பொன்முடியிடம் அமலாக்கத் துறையின் விசாரணை குறித்து கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, ”"தைரியமாக இருங்கள். வழக்கை துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள். கழகமும் நானும் உங்களுக்குத் துணையாக நிற்போம்''’என நம்பிக்கை கொடுத்தார் ஸ்டாலின். இதன்பிறகு அமைச்சர்கள் சிலரிடம் விவாதித்தார் ஸ்டாலின். அப்போது, "எவ்வளவு சொல்லியும் பொன்முடி எச்சரிக்கையாக இல்லாமல் இருந்திருக்கிறாரே?'' என வருத்தப் பட்டுள்ளார்.
சிகாமணி கைது?
பொன்முடியும் அவரது மகனும் கைது செய்யப்படுவார்களா? என அமலாக்கத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது,”"வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகளில் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் நடந்துள்ள பணப்பரிவர்த்தனை களுக்கு கௌதம சிகாமணியிடம் முறையான பதில் இல்லை. சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் கிடைத்த லாபத்தை வைத்து சிலபல இடங்களில் முதலீடு செய்யப் பட்டிருப்பதற்கான ஆதாரங்களையும் அமலாக்கத்துறை சேகரித்திருக்கிறது. அதனால், பொன்முடியையும், சிகாமணியையும் கைது செய்வதற்கான ஆதாரங்களும் முகாந்திரமும் இருப்பதாக முடிவு செய்திருக்கிறது அமலாக்கத்துறை. ஆனால், பொன்முடி அமைச்சராகவும், கௌதம சிகாமணி எம்.பி.யாகவும் இருக்கின்றனர். செந்தில் பாலாஜி விவகாரத்தில் நடந்ததுபோல, நடந்து விடக்கூடாது என அமலாக்கத்துறைக்கு டெல்லி உத்தரவிட்டிருப்பதால் கைது நடவடிக்கை குறித்து டெல்லியின் உத்தரவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள். கிடைக்கும் உத்தரவுகளைப் பொறுத்து இருவரும் கைது செய்யப்படுவார் களா? அல்லது கௌதமசிகாமணி மட்டும் கைது செய்யப்படுவாரா? என்பது தெரியும்''’ என்கிறார்கள்.
அமைச்சர்களுக்கு குறி! அமலாக்கத்துறைக்கு எதிராக தீர்மானம்?
இந்த நிலையில்... சீனியர் அமைச்சர்கள் மூன்று பேர், புதிய அமைச்சர்கள் இரண்டு பேர் உள்ளிட்ட 9 அமைச்சர்கள், முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களுக்கு நெருக்க மான தொழிலதிபர்கள், தொழிலதிபர்கள் மூலம் செய்யப்பட்ட முதலீடுகள் என பலரின் இன் அண்ட் அவுட் விவாகரங்களை அமலாக்கத் துறையும், வருமானவரித்துறைம் சேகரித்து வைத்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் இவர்கள் குறி வைக்கப்படலாம். இப்படிப்பட்ட சூழலில்தான், அமைச்சரவையை கூட்டவிருக் கிறார் முதல்வர் ஸ்டாலின். அதில், அமலாக்கத்துறைக்கு எதிரான தீர்மானத்தை பேரவையில் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்படலாம் என்கிறது கோட்டை வட்டாரம். தி.மு.க. அமைச்சர்களை குறிவைத்து அமலாக்கத்துறையை மோடி சர்க்கார் ஏவி வருவதால், நாடாளுமன்றத் தேர்தல்வரை தி.மு.க.வுக்கு தலைவலிதான்!
_________
திறக்காத பூட்டு! தயாரான கள்ளச்சாவி!
கடந்த 17ஆம் தேதி, காலை 7 மணி முதல், மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் கொண்ட குழு, விழுப்புரம் கிழக்கு சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அதிரடி சோதனைகளை விடிய விடிய நடத்தியது. இந்த சோதனையின்போது பொன்முடி வீட்டிலிருந்த இரண்டு பீரோக்களை திறக்க முடியவில்லை எனக் கூறி, திறக்கப்படாத பூட்டுகளை திறக்கக்கூடிய, திறமையுள்ள சாவி தயாரிக்கும் தொழிலாளி தனபால் என்பவரை வரவழைத்து மாற்றுச் சாவி தயார் செய்து பீரோக்கள் திறக்கப்பட்டு சோதனைகள் நடைபெற்றுள்ளன. அமைச்சர் வீட்டில் சோதனை நடக்கும் தகவல் வேகமாக பரவியது. இதையடுத்து விழுப்புரம் பகுதியில் உள்ள தி.மு.க. வழக்கறிஞர்கள் பொன்முடியின் ஆதரவாளர்கள் அவர் வீடுமுன்பு வந்து குவிந்தனர். இதனால் விழுப்புரம் நகரமே பரபரப்பானது.
-எஸ்.பி.எஸ்.