ந்தியா முழுக்க பா.ஜ.க.வுக்கு எதிரான இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறை மூலமாகப் பலவிதமாகக் குடைச்சல் கொடுத்துவந்த ஒன்றிய அரசின் அமலாக்கத்துறைக்கு தமிழ்நாடு அரசு கடிவாளம் போட்டுள்ளது! தமிழ்நாட்டிலுள்ள டாஸ்மாக் கடைகளில், ஏற்கெனவே அ.தி.மு.க. ஆட்சிக்காலத்திலேயே பல்வேறு வழக்குகளை மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 2017 முதல் 2024 ஆம் ஆண்டு வரை மொத்தம் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், திடீரென அவ்வழக்கு களை ஒட்டுமொத்தமாகக் கணக்கில்கொண்டு, அமலாக்கத் துறை இவ்விவகாரத்தில் நுழைந்தது.

கடந்த மார்ச் 6ஆம் தேதி தொடங்கி 8ஆம் தேதிவரை சென்னை, விழுப்புரம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டது. அமலாக்கத்துறையின் அறிக்கையை வைத்துக்கொண்டு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தமிழக அரசுக்கு எதிராக அரசியல் செய்தன. இவ் விவகாரத்தில், 1000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததற்கான எந்த ஆதாரத்தையும் அமலாக் கத்துறை வெளியிடவில்லை. இவ்விவ காரத்தை சட்டப்படி சந் திப்போம் என்று அப்போதைய அமைச் சர் செந்தில்பாலாஜி சட்ட மன்றத்திலேயே தெரிவித்தார்.

modi

இதையடுத்து, அமலாக் கத்துறை சோதனையை சட்டவிரோதமானது எனக்கூறி, அதற்கு தடைகோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளை அமலாக்கத்துறையினர் துன்புறுத்தியதாகவும் தமிழக அரசு குற்றம் சாட்டியது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், அமலாக்கத் துறை விசாரணைக்கு தடையில்லை என்று உத்தரவிட்டது.

இதையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி, தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, மே 22ஆம் தேதி, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின்போது, "தனி நபர்கள் செய்த விதி மீறலுக்காக ஒட்டுமொத்தமாக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா?'' என்ற கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர். மேலும், அமலாக்கத்துறை வரம்பு மீறி அரசியல் செய்வதாகவும், கூட்டாட்சி அமைப்பையே சிதைக்கிறது என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். அதையடுத்து, இவ்விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தத் தடை விதித்ததோடு, தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்மூலம், அமலாக்கத்துறையை வைத்து ஒன்றிய அரசு செய்யும் பழிவாங்கும் அரசியலுக்கு தமிழ்நாடு அரசு கடிவாளம் போட்டிருக்கிறது! இத் தீர்ப்பானது, இந்திய அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த விவகாரத்தில், அமலாக்கத்துறைக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பானது, எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். குறிப்பாக, பா.ஜ.க. ஆளாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், இந்த தீர்ப்பை தங்களுக்கு சாதகமானதாகப் பார்க்கிறார்கள். அந்த வகையில் தி.மு.க.வின் மதிப்பு தேசிய அளவில் உயர்ந்துள்ளது.

இதே அமலாக்கத்துறை, சத்தீஸ்கரில் கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மதுபானக் கொள்கையில் சுமார் ரூ.2,161 கோடி அளவில் ஊழல் நடந்ததாகக்கூறி விசாரித்துவருகிறது. இவ் வழக்கின் விசாரணையிலும், கைதுசெய்யப்பட்ட அரவிந்த் சிங், அன்வர் தேபார் ஆகியோரின் ஜாமீன் வழக்குகளில், "விசாரணையென்ற பேரில், ஓராண்டு காலம் கட்டாயம் சிறையிலிருக்க வேண்டுமென்று எந்த சட்டமும் சொல்லவில்லை. நீங்கள் விசாரணை என்ற பெயரிலேயே சிறைக்குள் ஏழு ஆண்டுகளாக வைத்திருக்கலாமென நினைக்கிறீர்களா?'' என்றும், "ஆதாரமே இல்லாமல் குற்றம்சாட்டுவதை அமலாக்கத்துறை வாடிக் கையாகக் கொண்டுள்ளது. அமலாக்கத் துறை யால் பதிவு செய்யப்படும் ஏராளமான வழக்கு களில் இதை நாங்கள் பார்க்கிறோம்'' என்றும் கடுமையாக அமலாக்கத்துறையை காய்ச்சியெடுத் தனர்.

கேரளாவில், கொல்லத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்மீது அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை விசாரிக்காமல் நிறுத்தி வைப்பதற்காக, ரூ.2 கோடி லஞ்சம் கேட்ட விவகாரத்தில், அமலாக்கத் துறை உதவி இயக்குநர் சேகர் குமார், எர்ணாகுளத்தைச் சேர்ந்த வில்சன் வர்கீஸ், ராஜஸ்தானைச் சேர்ந்த முகேஷ் குமார். கொச்சியைச் சேர்ந்த ரஞ்சித் வாரியார் ஆகியோர் பிடிபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

இதுதொடர்பாக "பா.ஜ.க.வால் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் அமலாகத்துறை இயக்குநரகம், தற்போது பெரிய ஊழலின் மையமாக உள்ளது'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது! இப்படியாக, மோடி அரசின் ஏவலாளாகச் செயல்பட்டுவரும் அமலாக்கத்துறை, தொடர்ச்சி யாக அடிவாங்கி வருகிறது!

Advertisment