டாஸ்மாக் விவகாரத்தில் மட்டும்தான் அமலாக்கத்துறை சீரியஸ் காட்டி வருவதாக தி.மு.க. தலைமையை நம்பவைத்துக்கொண்டி ருக்கும் அமலாக்கத் துறை, சத்தமில்லாமல் வேறு ரூட்டிலும் பயணித்துக்கொண்டி ருக்கிறது.
குறிப்பாக, மணல் விவகாரங்களில் சிக்கியுள்ள எஸ்..ஆர்.. என வர்ணிக்கப்படும் புதுக்கோட்டை ராமச்சந்திரன் விவகாரத்தையும் தோண்டிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், ஊத்துக்கோட்டையில் நடந்துள்ள ஒரு விவகாரம், தி.மு.க.வுக்கு தலைவலியை கொடுக்கும் என்கிறார்கள் அதிகாரிகள்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக் கோட்டை தாலுகாவில் உள்ள அரியப்பாக்கம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான பிரமாண்ட மான ஏரி ஒன்று இருக்கிறது. இந்த ஏரியிலிருந்து க்ராவல் மண் எடுக்க பூபாலன் என்பவருக்கு அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு. பூபாலன், ராமச்சந்திரனின் ஆள். இந்த மண் எடுக்கப்படும் விவகாரத்தில் தான் புதிய ஆதாரங்கள் அமலாக் கத்துறைக்கு சிக்கியிருக்கிறது.
இதுகுறித்து விசாரித்த போது,‘"ஏரியிலிருந்து 10,000 யூனிட் மட்டுமே வெட்டி எடுக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் 55 நாட்கள். ஆனால், தினமும் 1,200 லாரி லோடு க்ராவல் மண் அந்த ஏரியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டது. இதுவரை 3 லட்சம் யூனிட் எடுத்துள்ளனர். ஒரு யூனிட் க்ராவல் மண் 800 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 24 கோடி ரூபாய். ஆனால், அரசுக்கு பெரிய அளவில் எந்த வருவாயும் இல்லை.
இதற்காக பூபாலனிடமிருந்து ராயல்டி வசூலித்து வருகிறது எஸ்.ஆர். தரப்பு. அந்த வகையில், இந்த 24 கோடி ரூபாயில் பெரும் பங்கு எஸ்.ஆர். தரப்பிடம் அடைக்கலமாகி யிருக்கிறது.
ஆற்று மணல் விவகாரத்தில் ஏற்கெனவே அமலாக்கத்துறையின் ரெய்டுகளை எதிர்கொண்ட எஸ்.ஆர். க்ரூப், க்ராவல் மண் எடுக்கும் விவகாரத்தில் அரசின் மேலிடத்துக்குத் தெரியாமல், கனிம வளத்துறையின் முன்னாளையும் அவர் வாரிசையும் மட்டும் கவனித்துவிட்டு தமிழகம் முழுவதும் க்ராவல் மண் பிசினெஸை தடையின்றி நடத்தினர். இதன்மூலம் பல கோடிகளை வசூலித்தனர்.
இதில் கிடைத்த ராயல்டி தொகையில், அண்ணாநகர் கார்த்தி என்பவருக்கு கப்பம் கட்டி வந்துள்ளனர். அதிகாரிகள், லோக்கல் அரசியல்வாதிகள் அனைவரும் சரிக்கட்டப் பட்டனர்.
இந்த இல்லீகல் க்ராவல் மண் பிசினெஸில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந் துள்ளதற்கான ஆதாரப்பூர்வமான தகவல்கள் கிடைத்திருப்பதால், ஊத்துக்கோட்டை ஏரி விவகாரம் தொடங்கி, இதன் பின்னணிகள் அனைத்தையும் எடுத்துள்ளோம்.
இந்த நிலையில்தான், ஆற்று மணல் பிசினெஸில் ஏகபோக சக்ரவர்த்தியாக மீண்டும் வலம்வர, மேலிடத்தில் சொல்லி அந்த காண்ட்ராக்ட்டை தங்களுக்கே கிடைப்பதற் கான உதவியை நீங்கள் செய்ய வேண்டும் என கார்த்தியிடம் எஸ்.ஆர். தரப்பு பேரம் பேசியுள் ளது. அந்த காண்ட்ராக்ட் கிடைத்தால், ஊத்துக் கோட்டை ஏரியிலிருந்து கிடைக்கும் மொத்த ராயல்ட்டியையும் உங்களுக்கே கொடுத்துவிடு கிறோம். தவிர, மணல் காண்ட்ராக்ட் எங்கள் கைகளுக்கு வந்துவிட்டால் அந்த பிசினெஸின் ஒரு பங்குத் தொகையும் மாதாமாதம் தரப்படும் எனக் கார்த்திக்கு உத்தரவாதம் தந்துள்ளது எஸ்.ஆர். தரப்பு. அவரும், முயற்சிக்கிறேன் எனச் சொல்லியுள்ளார்.
இப்படி இந்த விவகாரத்தின் பின்னணியி லுள்ள நீள அகலங்கள் அனைத்தும் எங்கள் உயரதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளது. விரைவில் இந்த பிசினெஸ் தொடர்பாக ரெய்டுக்கு திட்டமிடப்படுகிறது. அப்போது டாஸ்மாக் விவகாரம் போல, இந்த ஊத்துக்கோட்டை ஏரி விவகாரமும் அரசின் மேலிடத்துக்கு தலைவலியை கொடுக்கும்'' என்று விவரிக்கிறது அமலாக்கத்துறை வட்டாரங்கள்.
இதுகுறித்து கனிமவளத்துறை வட்டாரங் களில் விசாரித்தபோது, "இந்த ஊத்துக் கோட்டை ஏரியில் க்ராவல் மண் வெட்டி எடுக்கப்படுவதில் நடந்துவரும் சட்டவிரோத முறைகேடுகள், தற்போதைய அமைச்சர் ரகுபதி யின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதன் பின்னணிகளை அறிந்த ரகுபதி, உட னடியாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டரை தொடர்புகொண்டு ஊத்துக்கோட்டை குவாரியை மூடி, விசாரணை நடத்த உத்தரவிட் டுள்ளார். கலெக்டரின் விசாரணை நடக்கிறது.
எஸ்.ஆர். தரப்பு தந்துகொண்டிருந்த ராயல்டியால் உற்சாகத்திலிருந்தவர்கள், தற் போது கலெக்டரின் விசாரணைக்கு உத்தர விட்டிருப்பதையறிந்து திகைத்துப்போயிருக் கிறார்கள். காரணம், மேலிடத்துக்குத் தெரியாமல் இந்த விவகாரம் நடந்திருப்பதுதான். கலெக்டரின் விசாரணை அறிக்கைக்குப் பிறகு பூபாலன் உள்ளிட்டவர்கள் மீது ஆக்ஷன் பாயும்'' என்கிறார்கள் கனிம வளத்துறையினர்.
இதற்கிடையே, ஆட்சியர் மூலம் தமிழக அரசு ஆக்ஷன் எடுக்கும் அதே சமயத்தில், இந்த விவகாரத்தில் நடந்துள்ள சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளை அவ்வளவு எளிதாக அமலக்கத்துறை கடந்து போகாது என்றும், இதில் தொடர்புடைய அனைவரும் கண்காணிக்கப்படுகின்றனர் என்றும், இதனால் எஸ்.ஆர். தரப்புக்கு எதிராக மீண்டும் ஒரு அதிரடி இருக்கும் என்றும் அமலாக்கத்துறை வட்டாரங்களில் தகவல்கள் பரவியிருக்கின்றன.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத் தின் உத்தரவினால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் ஆற்று மணல் குவாரி களுக்கும், மணல் லோடிங் செய்யும் காண் ராக்ட்டுக்கும் நீடித்திருந்த தடையை நீக்கியிருக் கிறது உச்சநீதிமன்றம். இந்த தடைகளை நீக்க வலியுறுத்தி தமிழக அரசு தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு வழக்கில், ஆற்று மணல் திறக்க வேண்டிய அவசியத்தையும், லோடிங் செய்யும் கான்ட்ராக்ட்டை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டிய சூழல்களையும் விரிவாக விவரித்திருந்தது தமிழக அரசு.
அரசின் விளக்கம் திருப்தியளித்ததால் தடைகளை உச்சநீதிமன்றம் நீக்கியிருக்கிறது. இனி, பொதுப்பயன்பாட்டிற்கு ஆற்றுமணல் விரைவில் கிடைக்கும் என்கிறார்கள் அதிகாரிகள்.
இந்நிலையில், தமிழக டாஸ்மாக்கிற்கு எதிரான விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை 22-ந்தேதி (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான முதல் அமர்வு, "தனி நபர் செய்த தவறுகளுக்காக ஒரு நிர்வாகத் தின் மீது நடவடிக்கை எடுப்பதா? எந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப் படுகிறது?'' என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியதுடன், "அமலாக்கத்துறை வரம்புமீறிச் செயல்படுகிறது" என்றும் கண்டனம் தெரிவித் தது. இறுதியில், டாஸ்மாக்கிற்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி பா.ஜ.க. வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை வியாழக்கிழமை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதிகள், டாஸ்மாக்குக்கு எதிரான 41 வழக்குகளின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு பிறப்பித்ததுடன், வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்! இதனால் பொறி வைத்த அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் ஆப்பு வைத்துள்ளது.
-இரா.இளையசெல்வன்