"ஹலோ தலைவரே, கட்சிப் பதவிகளைச் சரமாரியாக விற்று கலெக்ஷனை வாரிக் குவிப்பதாக, நடிகர் விஜய்யின் த.வெ.க. மீது ஊழல் புகார்கள் வெடிக்க ஆரம்பித்திருக்கே.''”
"என்னப்பா சொல்றே? தன்னை ஊழலை ஒழிக்கவந்த மகான் மாதிரி காட்டிக்கொள்பவராச்சே விஜய்?''
"ஆமாங்க தலைவரே, ஏற்கனவே அரசல் புரசலாக விஜய் கட்சியில் நடக்கும் வசூல் பற்றி எழுந்த புகார்கள் இப்ப, பெரிய அளவில் வெடித்து வெளியே வரத் தொடங்கியிருக்கு. அங்கே கட்சிப் பதவிகளை லட்சக்கணக்கில் ரேட் வைத்து விற்கிறார்களாம். குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் கட்சிப் பதவியை வழங்க, விஜய் கட்சியினர் தலா 15 லட்ச ரூபாய்வரை வசூலிப்பதாக ஆரம்பத்தில் புகார் எழுந்தது. இது பற்றியெல் லாம் நாம் விசாரித்தபோது, ஒரு அதிரடித் தகவலைத் தெரிவித் தார்கள். அதாவது, த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு மிகவும் நெருக்கமான சஜி என்பவர் அண்மையில் மாரடைப்பால் மரணமடைந்தார். இவர், இருக்கும்போது, இவர் மூலம் கட்சிப் பதவி தருவதாகக் கூறி 17 பேரிடம் மொத்தமாக இரண்டரைக் கோடி ரூபாயை, த.வெ.க. மாநில நிர்வாகிகள் வசூலித்தார்களாம். அதில் 2 கோடி ரூபாய் கட்சிக்கு என்றும், 50 லட்ச ரூபாய் தொகுதிச் செலவுக்கு என்றும் சொல்லியே கலெக்ஷன் நடத்தப்பட்டதாம்.''”
"ம்...''”
"இது தொடர்பாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த, சஜி மூலம் வாங்கிய இரண்டு கோடி ரூபாயைத் திருப்பித் தந்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறாராம் புஸ்ஸி ஆனந்த். இந்த சஜி போன்ற ஆட்களால் தமிழகம் தழுவிய அளவில் பெருமளவில் வசூல் நடத்தப் பட்டிருக்கிறதாம். இதேபோல் சேலத்தில் பார்த்திபன் என்பவர் எம்.எல்.ஏ. சீட்டைக் கேட்டு, இப்போதே இரண்டரைக் கோடி ரூபாயை த.வெ.க. நிர்வாகி களிடம் கொடுத்திருக்கிறாராம். இப்படி த.வெ.க.வில் பதவியின் பேரில் நடத்தப்படும் மெஹா வசூல் வேட் டைகள் பற்றி, அண்மையில் நடந்த த.வெ.க. பொதுக்குழுவிற்கு வந்தவர் களே, பத்திரிகையாளர்களிடம் வேதனையோடு சொன்னார்களாம். இந்த கலெக்ஷன் விவகாரம் பல மாவட்டங்களிலும் சச்சரவை ஏற் படுத்த, இதை எப்படி சமாளிப்பது என்று புஸ்ஸி தரப்பு விழி பிதுங்கு கிறதாம்.”
"உப்பைத் தின்றவர்கள் தண்ணீரைக் குடிக்கட்டும். நாம் மற்ற விசயத்துக்கு வருவோம். முதல்வர் ஸ்டாலினை இங்குள்ள இலங்கைத் தமிழர்கள் நெகிழ்ச்சியோடு வாழ்த்துகிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, அதற்கான காரணத்தைச் சொல்றேன். முன்னாள் விடுதலைப்புலியான பாஸ்கரன் குமாரசாமி என்பவர் தமிழக அகதிகள் முகாமில் இருக் கிறார். இவரை, அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக ஆக்கி... இவர் தொடர்பான ஆவணங்களை அனுப்பி, இவரைத் தங்கள் நாட் டிற்கே திருப்பி அனுப்பும்படி, இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது இலங்கை. இவர் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடாதவர் என்பதோடு, கடந்த 10 ஆண்டுகளாக திருச்சியிலுள்ள மறுவாழ்வு முகாமில்தான் தங்கியிருக்கிறார். இவரது குடும்பத்தினர் அனைவரும் இலங்கை ராணுவத்தால் கொல்லப் பட்டுவிட்ட நிலையில்... இவரையும் அங்கே அனுப்பச் சொல்கிறார்கள். அனுப்பினால், என்கவுன்ட்டர் பாணியில் இவர் படுகொலை செய்யப்படும் அபாயம் இருப்பதால், சக முகாம்வாசிகள் பதறிவருகிறார் கள். பாஸ்கரன் குமாரசாமியோ, தனக்கு விசாவும் தஞ்சமும் தரும்படி, தனது நாட்டினர் அதிகம் வாழும் சுவிட்சர்லாந்து நாட்டிடம் விண் ணப்பித்துக் காத்திருக்கிறார். இந்த நிலையில் இவரை இலங்கைக்குத் திருப்பியனுப்பும் முயற்சியை, தமிழக டி.ஜி.பி. சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் காவல்துறை மேற்கொண்டது. இந்த விவகாரத்தை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கொண்டு செல்ல, பாஸ்கரனை இலங்கைக்கு அனுப்பத் தடைவிதித்து, அவர் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் ஸ்டாலின்.''”
"ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை யும் 29ஆம் தேதி ஸ்டாலின் நடத்தியிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். கூட்டத் தில் பேசிய திருமாவளவன், "தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடக்கும் வன்கொடுமைகளைத் தடுக்க வேண்டும். பாதிக்கப்படும் மக்கள் மீதே வழக்குகளை பதிவு செய்வது கவலையளிக்கிறது. பட்டியிலினத்தவர்களின் நலன் களுக்கான திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன' என்றெல்லாம் தன் கவலையை வெளிப்படுத்தினார். இதே குரல் சிலரிடமும் எழுந்தது. நிறைவாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "வன்கொடுமை வழக்கு களைத் தவறாக பதிவு செய்தால் நிச்சயம் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்' என்று தெரிவித்தார். மேலும், இந்த கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த சட்டம் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கையும் வைக்கப் பட, அதையும் உடனடியாக ஏற்றுக் கொண்ட முதல்வர், "நடப்பு சட்ட மன்றக் கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்ட மசோதா கொண்டுவரப்படும்' என்று உறுதியளித்திருக்கிறார். இது அரசு ஊழியர்கள் தரப்பை உற்சாகப் படுத்தியிருக்கிறது.''”
"டெல்லிக்கு செங்கோட்டை யனும் சென்றுவந்தது பற்றி விறுவிறுப் பான தகவல்கள் உலவுதே?''”
"ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்கள் சந்தித்துவிட்டு வந்த நிலையில், செங்கோட்டையனும் டெல்லி சென்று, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனை சந்தித்துவிட்டு தமிழகம் திரும்பியிருக் கிறார். டெல்லியில் நடந்த சந்திப்பில், அ.தி.மு.க. நிலவரம் குறித்தும், எடப்பாடியின் போக்கு குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், எடப்பாடி, பா.ஜ.க. கூட்டணிக்கு இணக்கமாக இல்லாதபட்சத்தில், நீங்கள்தான் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர், உங்கள் மீதான மதிப்பு எங்களிடம் எப்போதும் குறையாது என்று செங்கோட்டையனுக்கு நம்பிக்கையூட்டி அனுப்பிவைத்திருக்கிறது டெல்லி என்று செங்ஸ் தரப்பே சொல்கிறது. இது ஒருபுறமிருக்க, ஒரு முக்கியமான கோரிக்கையோடு தான் செங்கோட் டையன் டெல்லி சென்றார் என்றும் கூறுகிறார்கள்.''”
"அது என்னப்பா?''”
"செங்கோட்டையனுக்கு எதிராக அமலாக்கத்துறையின் பழைய வழக்கு ஒன்று இருக்கிறதாம். அது குறித்த விபரங்களை எடப்பாடி அண்மையில் தீவிரமாக சேகரித்தாராம். இதை வைத்து அவர் தனக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிடலாம் என்று நினைத்த செங்கோட்டையன், அந்த வழக்கை கண்ணும், காது வைத்த மாதிரி முடித்துக் கொடுத்து விடுங்கள். அதில் எனக்கு எந்தவித சிக்கலும் வந்துவிடாமல் என்னைக் காப்பாற்றுங்கள் என்று வேண்டுகோள் வைப்பதற்காகத்தான் டெல்லிக்குச் சென்றாராம். நிர்மலா சீதாராமனோ, "இந்த விபரத்தை அமித்ஷாவிடம் சொல்லிவிடுகிறேன். உங்கள் மீதான வழக்கு பற்றியெல்லாம் கவலைப் படவேண்டாம். எங்கள் பா.ஜ.க.வுடன் உங்கள் அ.தி.மு.க. கூட்டணி வைக்க வேண்டும். இதை எடப்பாடி யிடமும் சொல்லியிருக்கிறோம். அவர் சரிவராவிட்டால், காய்களைக் கலைத்து ஆடத் திட்டம் போட்டிருக்கிறோம். அப்படி ஒரு நிலை வந்தால், அ.தி.மு.க.வின் லகானை அவரிட மிருந்து பறித்து, உங்களிடம்தான் ஒப்படைப்போம்' என்று சொல்லி, செங்கோட்டையனை ரொம்பவே பூரிக்க வைத்துவிட்டாராம்.''”
"தமிழகத்தில் பள்ளிக் கட்டடங்களே புதிதாக கட்டப்படவில்லை என்றும், இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு மாநில பா.ஜ.க. நிர்வாகி சவால்விட்டாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, அந்த பா.ஜ.க. நிர்வாகியின் சவடாலை வெறும் வாய்ச்சவடால் என்று நிரூபிக்கும் விதமாகவும், அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், தனது துறையில் என்னென்ன பணிகள் நடந்திருக்கின்றன என்பதைத் தனது கடிதத்தில் பட்டியலிட்டிருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். அதில் ’பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் இதுவரை 3,497 கோடியில் 8,171 வகுப்பறைகள், 184 கழிவறைகள், 52 ஆய்வகங்கள், 28 நூலசுக் கட்டிடங்கள், 752 மீட்டர் சுற்றுச் சுவர்கள், 10 மாணவர் விடுதிகள் கட்டப்பட்டு அவை திறக்கப்பட்டுள்ளன. மேலும் 4,412 வகுப்பறைகள், 105 ஆய்வகங்கள், 323 கழிப்பறைகள் உள்ளிட்டவைகள் கட்டப்பட்டு வருகின்றன. அதேபோல, "நம்ம ஊரு; நம்ம ஸ்கூல்' திட் டத்தின் கீழ், 1,204 வகுப்பறைகள் கட்டப் பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. துறையின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக மட்டும் வருகிற நிதியாண்டில் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது’என்று தெரிவித்திருக்கிறார். இந்தக் கடிதத்தை, புகார் சொன்ன பா.ஜ.க. நிர்வாகிக்கு மட்டு மல்லாது, எதிர்க்கட்சி எம்.எல். ஏ.க்கள் உட்பட தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களுக்கும் அனுப்பிவைத்து, அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார் அன்பில் மகேஷ். கடிதத்தைப் பார்த்த சம்பந்தப்பட்ட மாநில பா.ஜ.க. நிர்வாகியோ மூக்கறுபட்ட நிலையில் கப்சிப் ஆகிவிட்டார்.''”
"பா.ம.க.வின் சித்திரைத் திருவிழாவுக்கு பா.ஜ.க. தலை வர்களை அழைத்துக் கொண்டிருக் கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே.. 2013-ல் நடத்தப்பட்ட சித்திரைத் திருவிழா வின்போது ஏற்பட்ட மரக்காணம் கலவரத்திற்குப் பிறகு, இந்த ஆண்டுதான் மீண்டும் அந்த விழாவை நடத்த இருக்கிறது பா.ம.க. இது தொடர்பாக கடந்த 29ஆம் தேதி பிரதமர் மோடியை, தன் மனைவி சௌமியாவுடன் சந்தித்த அன்புமணி, சித்திரைத் திருவிழா பற்றி விவரித்துவிட்டு, "இதில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டும்' என்று அழைப்பு விடுத்திருக்கிறார். இதைக் கேட்ட மோடி, "பார்க்கலாம்' என்று புன்னகையுடன் சொல்லியிருக்கிறாராம். அந்த சந்திப்பின்போது, ’தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை, இந்த நடப்பு நிதி ஆண்டிலேயே நடத்த வேண்டும்’என்கிற கோரிக்கைக் கடிதத்தையும் மோடியிடம் கொடுத்திருக்கிறார்கள். அதோடு, இந்தக் கணக்கெடுப்பு மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை விதைக்கும். அது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலிமை சேர்க்கும் என்றும் அவரிடம் விவரித்தார்களாம். மேலும் சித்திரை விழாவிற்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரையும் பா.ம.க. அழைத்திருக்கிறதாம். இதற்கிடையே ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய ரயில்வே பாலத்தைத் திறந்து வைக்க, ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு, டெல்லியிடம் காத்திருக்கிறாராம் ஓ.பி.எஸ். எனினும், ஞாயிற்றுக்கிழமைவரை, அதற்கான க்ரீன் சிக்னல் அவருக்குக் கிடைக்கவில்லையாம்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி அமைவது தொடர்பாக, எடப்பாடியை டெல்லிக்கு அழைத்துப் பேச்சுவார்த்தையை நடத்திய அமித்ஷா, இது தொடர்பான அடுத்தடுத்த நகர்வுகளுக்காக தர்மேந்திர பிரதான் தலைமையிலான ஒன்றிய அமைச்சர்கள் குழுவை அமைத் திருக்கிறாராம். அதில் ஜே.பி. நட்டா, கிஷன்ரெட்டி, அன்ன பூர்ணாதேவி ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்தக் குழு எடப்பாடியுடன் கூட்டணிக்கான பேரத்தை சீக்ரெட்டாக நடத்தி வருகிறதாம்.''