கூடுவாஞ்சேரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி அருகே, கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில், காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுரு நாதன் மற்றும் காவலர்கள் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது, அதி வேகமாக வந்த கருப்பு நிற காரை நிறுத்த முற்பட்டனர். அந்த வாகனமோ உதவி ஆய்வாளரை இடிப்பதுபோல் வந்து போலீஸ் ஜீப்மீது மோதி நின்றது. போலீஸார் வண்டியிலிருந்தவர்களை விசாரிக்க முயன்ற போது, அதிலிருந்த நான்கு நபர்கள் ஆயுதங் களுடன், போலீசாரைத் தாக்கமுற்பட்டனர்.

Advertisment

rr

அதில் ஒருவர் அருவாளால் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டிவிட்டு மீண்டும் தலையை வெட்ட முற்பட்டபோது உதவியாளர் விலகியதால், அவரது தொப்புளில் வெட்டுப்பட்டுள்ளது. இதைப் பார்த்த காவல் ஆய்வாளர், ரவுடிக் கும்பலை நோக்கி ஆறு ரவுண்டு சுட்டதில் இருவர் கொல்லப் பட்டனர். மீதி இருவர் அங்கிருந்து ஆயுதங்களுடன் தப்பி ஓடிவிட்டனர். மேற்படி இருவரைப் பற்றி காவல்துறையினர் விசாரிக்க, அதில் ஒருவர் பெயர் வினோத் என்கிற சோட்டா வினோத், மற்றவர் ரமேஷ் என்பதும் தெரியவந்துள்ளது. சோட்டா வினோத், ரமேஷ் இருவர் மீதும் ஓட்டேரி காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையிலிருப்பதும், இருவருமே சரித்திரப் பதிவு குற்றவாளிகள் என்பதும் தெரிய வந்துள்ளது.

Advertisment

இப்பகுதியில் பிரபல ரவுடியான நெடுங்குன்றம் சூர்யாவின் கூட் டாளிகள் தான், இந்த சோட்டா வினோத், ரமேஷ். சமீபத்தில் ஓட்டேரி அ.தி.மு.க. பிரமுகர் கிருஷ்ண குமார், தி.மு.க. நிர்வாகி விஜயராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய இவர்களை, போலீசார் தேடிவந்தனர்.

கடந்த ஜூலை 12-ஆம் தேதி, ஆதனூரைச் சேர்ந்த, தி.மு.க. பிரமுகரான சக்கரபாணியை ஓட ஓட வெட்டியதில், அவர் படுகாயமடைந்து இரண்டு கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Advertisment

இது ஒருபுறமிருக்க, நெடுங்குன்றம் சூர்யாவின் கையாட்களான இவர்கள், கூடுவாஞ்சேரி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடைகளை எடுப்பதில் தலையிட்டு, தங்களுக்கு 20 முதல் முப்பது லட்சம் கொடுக்கும்படி பலருக்கும் நெருக்கடி கொடுத்துள்ளனர். அப்பகுதி கட்சிப் பிரமுகர்களையும் மிரட்டியதாக காவல் துறைக்குப் புகார் போயுள்ளதாம். பா.ஜ.க. ஆதரவு ரௌடி கும்பலான இவர்கள் மீது வழக்குகள் இருக்கும் நிலையில், இந்த பேருந்து நிலைய கடை எடுக்கும் விவகாரமும் சேர்ந்துகொண்டதால்தான் இந்த என்கவுன்ட்டர் என்கிறார்கள்.