தூத்துக்குடி மாவட்டம் புதியம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவன் முருகன். அடிப்படையில் சலவைத் தொழிலாளி குடும்பத்தைச் சார்ந்தவர். துணிகளுக்கு நீராவி வைக்கும் பழக்கம் இருப்பதால் நீராவி முருகன் என்றழைக்கப்பட்டவர்.
சகாக்களை சேர்த்துக்கொண்டு சின்னச் சின்ன திருட்டுக்களில் ஈடுபட்டபடி, பெண்களுடன் சகவாசம் வைத்துக்கொண்டு ஊர் சுற்றுகிறவன் நீராவி முருகன். தூத்துக்குடி, நெல்லை பகுதிகளில் இவன் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன.
படிப்படியாக தன்னுடைய திருட்டுகளை சென்னை சேலம், ஈரோடு, நாமக்கல் என்று விரிவுபடுத்திய நீராவி முருகன், பல வழக்குகளில் தலையைக் கொடுத்து ரவுடி லிஸ்டில் வைக்கப்பட்டவன். பின்னர் கூலிக்கு வேலை செய்யும் கூலிப்படைத் தலைவனாக மாறிய நீராவி முருகன் கொலைச்செயலுக்கும் தனது ஆட்களை அனுப்பி வந்திருக்கிறான்.
2011-ல் தூத்துக்குடியின் தி.மு.க. மாவட்ட து.செ.வான ஏ.சி.அருணாவுக்கும் வேறு சிலருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக பட்டப்பகலில் வீட்டினருகே ஏ.சி.அருணா வெட்டிக் கொல்லப்பட்டதில் நீராவி முருகன் முன்னின்று செயல்பட்டு வழக்கில் மாட்டியவன். இந்தக் கொலை வழக்கின் மூலம்தான் நீராவி முருகனின் பெயர் வெளியுலகில் பிரபலமாகி, ரவுடி என்கிற அடையாளத்தைக் கொடுத் திருக்கிறது. 3 கொலை வழக்கு கள், 30-க்கும் மேற்பட்ட பிற வழக்குகளிலிருந்ததால் நீராவி முருகனை ஈரோடு போலீசார் என்கவுன்டர் செய்யத் திட்டமிட்டபோது தப்பியிருக் கிறான்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தின் ஒட்டன் சத்திரத்தில் நடந்த 150 பவுன் நகைக் கொள்ளையில் தொடர்புடைய அவனைப் பிடிப்பதற்காக பழனி எஸ்.ஐ. இசக்கிராஜாவின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டுவந்தான். இந்த டீம் ஏ.டி.எஸ்.பி. லாவண்யா தலைமையில் செயல்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட மணியாச்சி பக்கமுள்ள பாறைக்குட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஐ. இசக்கிராஜா, கடந்த 2020-ல் கோவில்பட்டியில் எஸ்.ஐ.யாகப் பணியிலிருந்தவர். எதையும் துணிச்சலாக எதிர் கொள்ளும் இசக்கிராஜா, "என்னுடைய காவல் லிமிட்டில், ரவுடியோ, திருடர்களோ இருந்தால் வெளியேறிடுங்க... இல்லன்னா என் துப்பாக்கிதான் பேசும்'' என தன்னுடைய பேஸ்புக்கி லும் தைரியமாகப் பதிவிட்ட வர். அதனை ஆடியோ வாகவும் வெளியிட்டது சர்ச்சையாகியிருக்கிறது.
அதன் காரணமாகவே அவரது காவல் லிமிட்டில் குற்றங்கள் குறைந்திருக்கின்றன. இந்த நிலையில்தான் எஸ்.ஐ. இசக்கிராஜாவின் டீம் நீராவி முருகனை பல இடங்களில் தேடியுள்ளது. நீராவி முருக னும், எஸ்.ஐ. இசக்கிராஜாவும் அருகருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் நீராவிமுருகன் பற்றிய துல்லிய தகவல்களை விரல்நுனியில் வைத்திருந்தார். இதனாலேயே இசக்கிராஜா விடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் ஏ.டிஎஸ்.பி. லாவண்யா.
கடந்த பிப்.15 அன்று ஒட்டன்சத்திரத்தில் டாக்டர் சக்திவேல் வீட்டில் 150 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த நீராவி முருகன், அவரது காரையும் திருடிச் சென்றது மிகப்பெரிய கொள்ளை என்பதால், எஸ்.ஐ. இசக்கிராஜா அவனது செல்போனை ட்ரேஸ் செய்துவந்தார். அதில் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை மூன்று நாட்களாகக் காட்டியிருக்கிறது.
சற்றும் தாமதிக்காத இசக்கிராஜா டீம், களக்காட்டில் பதுங்கியிருந்த நீராவி முருகனை வளைத்திருக்கிறார்கள். இன்னோவா காரில் தப்பிய நீராவிமுருகனை அப்படியே வளைத்த எஸ்.ஐ. இசக்கிராஜா டீம், களக்காட்டிலிருந்து நாங்குநேரிப் பக்கம் பகல் 11 மணியளவில் கடம்போடுவாழ்வு கிராமத்தின் பிரிவுச் சாலையின் மீனவன்குளம் யூகலிப்ட்ஸ் மரக்காடுகளுக்குக்குள் கொண்டுவந்திருக் கிறார்கள்.
அந்தப் பகுதியில் வைத்துதான் எஸ்.ஐ. இசக்கிராஜாவால், நீராவி முருகன் என்கவுன்டர் செய்ப்பட்டிருக்கிறான். இதில் எஸ்.ஐ. இசக்கிராஜாவுக்கு தலையில் வெட்டும் காவலர்களான சத்தியராஜ், காங்குமணிக்கு உடல் பாகங்களில் வெட்டும் விழுந்திருக்கிறது.
நீராவிமுருகனின் என்கவுண்டரால் அதிகமான மற்றும் தீவிரமான வழக்குகளுள்ள ரவுடிகள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர்.
-பி.சிவன்
படங்கள்: ப.இராம்குமார்
____________
சுட்டது எப்படி?
ஏ.டி.எஸ்.பி. லாவண்யா தலைமையிலான தனிப்படையிலுள்ள எஸ்.ஐ. இசக்கிராஜா தனது வாக்குமூலத்தில், நீராவிமுருகனின் மரணமும் காவலர்கள் காயமடைந்ததும் எப்படி நடந்ததென விளக்கியிருக்கிறார். அதில் “நீராவிமுருகன் பயன்படுத்தி வந்த TN 72 GG 5001 இனோவா காரையும், செல்போனையும் தொடர்ந்து கண்காணித்து வந்ததின் அடிப்படையில் நாங்குநேரி பகுதியிலிருப்பது தெரியவந்தது.
கடந்த 16-ஆம் தேதி நீராவிமுருகனைப் பிடிப்பதற்காக நாங்குநேரி பாலத்தின் கீழே காத்திருந்தோம். களக்காடு ரோட்டில் நீராவிமுருகனின் இனோவா கார் போவதைப் பார்த்து எங்களது வாகனத்தில் பின்தொடர்ந் தோம். எங்கள் வாகனத்தைப் பார்த்து சுதாரித்த அவன் தனது காரை நிறுத்தினான். நாங்களும் எங்களது காரை கொஞ்ச தூரத்தில் நிறுத்தி கண்காணித்து வந்தோம். திரும்பவும் அங்கிருந்து கார் வேகமாகப் புறப்பட பின்தொடர்ந்து சென்றோம். அப்போது எங்களது டெம்போ டிராவலரை வைத்து காரைத் தடுத்தபோது, நீராவி முருகனின் காரின் பின்பக்கத்தில் இடித்து நின்றது. காரிலிருந்த நீராவி முருகன் வாளை எடுத்துக்கொண்டு இறங்கி காட்டுக்குள் ஓடினான்.
நாங்களும் அவனைப் பின்தொடர்ந்து விரட்டினோம். காவலர்களான சத்தியராஜும், காங்குமணியும் நீராவிமுருகனைப் பிடிக்க முயற்சிசெய்தனர். தனது கையில் வைத்திருந்தவாளால் நீராவி அவர்களை வெட்டியதில் காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவருக்கும் துணையாக சுகந்தகுமார் நீராவியைப் பிடிக்க முயன்றபோது அவரை நெஞ்சில் உதைத்துக் கீழே தள்ளிவிட்டு வெட்டமுயன்றான். நான் தடுக்க முயன்றபோது, "உங்களைக் கொல்லாமல் விடமாட்டேன்" என்றபடி வாளைவீச, என் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. அவனை காலால் மிதித்து கீழே தள்ளினேன். திரும்பவும் என்னை வெட்ட வந்தபோதுதான் தற்காத்துக்கொள்ள முருகனை எனது துப்பாக்கியால் சுட்டதில் இறந்தான்''’என்று கூறியிருக்கிறார்.
-சக்தி
_________________
நீராவி முருகன் ஒரு சைக்கோ!
சமீபத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள், வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில், "தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு தொடர்பான விஷயத்தில் நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்" என முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக சாட்டையைச் சுழற்றினார். அதற்கேற்ப காவல்துறை சைக்கோ கொலைகாரன் நீராவிமுருகனை என்கவுண்டர் செய்து மக்களின் அச்சத்தைப் போக்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட ஆசைத்தம்பி, கபிலன், வெங்டேசபண்ணையார், ஜெயக்குமார், துரைமுருகன் ஆகியோர் வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் சைக்கோ கொலையாளி நீராவிமுருகன்.
எப்போதும்வென்றான் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கீழச்செய்தலை பகுதிதான் முருகனின் சொந்த ஊர். வறுமையின் காரணமாக 26 வருடங்களுக்கு முன்பு புதியம்புத்தூரிலுள்ள நீராவி மேட்டுத்தெருவிற்கு இடம்பெயர்ந்தது முருகனின் குடும்பம். அப்பா ஆறுமுகம் சலூன் வைத்து பிழைப்பு நடத்த, அப்பாவுக்கு ஒத்தாசையாக இருக்கவேண்டிய முருகன் சிறுவயதிலேயே திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கிறான்.
"திரவியபுரம் முனியசாமி கோவில் தெருவிலுள்ள கொப்பரை கேங்க், ஒயின்ஸ் சங்கர் ஆதரிக்க... அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என முன்னேறினான். இதே காலகட்டத்தில் பழைய தொழில் ஞாபகம் வர, புதியம்புத்தூர் பகுதிக்குச் சென்று செயின்பறிப்பு, திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு நல்ல பிள்ளையாக தூத்துக்குடி திரும்பியதும் தொடர்கதையானது. யார் இந்த சம்பவத்தில் ஈடுபடுவது எனத் தெரியாமல் நாங்கள் தலையை பிய்த்துக்கொண்ட காலம் அது'' என்கின்றார் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ஒருவர்.
நீராவிமுருகன் கொலை, கொள்ளையென 36 சம்பவங்கள் செய்தும் அவனின் புகைப்படம் ஒன்றுகூட போலீஸாரிடம் இல்லை. ஏறக்குறைய 34 சம்பவங்களுக்குப் பிறகு துரைப்பாக்கம் சம்பவம்தான் நீராவிமுருகனை அடையாளம் காட்டியது.
மத்திய பாகத்தை சேர்ந்த க்ரைம் அதிகாரி ஒருவர், "2014-ஆம் ஆண்டு துரைப்பாக்கத்தில் வேலா என்கின்ற ஆசிரியையிடம் வாள்கொண்டு மிரட்டி செயின் பறிப்பு நடந்தபோது அங்கிருந்த கல்லூரி மாணவி ஒருவர் மறைவாக நின்று வீடியோ எடுத்த நிலையில், நீராவிமுருகனின் தெளிவில்லாத முகம் கிடைத்தது போலீஸாருக்கு! பிறகுதான் அவனைக் கைதுசெய்து கை, காலை உடைத்து ஜெயிலுக்கு அனுப்பியது போலீஸ்.
2011-ல் அசோக் என்ற ரவுடிக் கும்பலுடன் சேர்ந்து தி.மு.க. மா.து.செ. அருணா கொலை, திருப்பூரில் கொள்ளையடித்த நகைகளை பங்கு போடும்போது கூட்டாளியைக் கொலை செய்தது, நகைப் பறிப்பில் ஈடுபட்டபோது சிறுமியை நகத்தால் கழுத்தை அறுத்துக் கொன்றது ஆகிய சம்பவங்கள் இவனைப் பிரபலமாக்கியது. அவன் ஒரு சைக்கோ. கைவிரல்களில் நகங்களை நீளமாக வளர்த்து இடதுகையில் மட்டும் அதனை கூர்செய்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தான். செயின் பறிக்கும்போது அவனுடைய கூரான நக விரல்களை கழுத்தில் அழுத்தி ரத்தம் வரவழைத்த பின்னரே நகைகளைப் பறிப்பான். நகைகளை இழந்தவர்கள் பலர் கழுத்தில் வழியும் ரத்தத்தைப் பார்த்து மயங்கிவிடுவார்கள்'' என்கிறார் அவர்.
எஸ்.ஐ. இசக்கிராஜா தலைமையில் காங்குமணி, சத்யராஜ், ஷேக்முபாரக் ஆகிய தனிப்படைப் போலீஸார் தகவல் கிடைத்து நீராவிமுருகனை களக்காடு பகுதியில் சுற்றி வளைத்தனர். அப்போது காவலர்களை நீராவி முருகன் தாக்கி காயப்படுத்திய நிலையில், தற்காப்பிற்காக என்கவுண்டர் செய்யப்பட்டான்.
இச்சம்பவம் குறித்து பேசிய நெல்லை மாவட்ட எஸ்.பி. சரவணன், "களக்காடு அருகே நீராவி முருகன் இருப்பது அறிந்து அவரை தனிப்படையினர் கைது செய்ய முயற்சித்தபோது, காவலர்களைத் தாக்கியதால் தற்காப்புக்காக தனிப்படையினர் ஒரு ரவுண்ட் சுட்டதில் ரவுடி நீராவி முருகன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நீராவி முருகன் மீது 60-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. என்கவுண்டர் சம்பவம் குறித்து களக்காடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடுவர் விசாரணைக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்படும்'' என்றார்.
"நீராவிமுருகனை கொல்லவேண்டும் என காவல்துறை உயரதிகாரிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட என்கவுண் டர் இது. எனவே, நீராவிமுருகனை என்கவுண்டர் செய்த காக்கிச்சட்டை போட்ட குற்றவாளிகள் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என மனித உரிமை ஆர்வலர் கள் குரலெழுப்பி வருகின்றனர்.
-நாகேந்திரன்