ரு பெருங்காலத்திற்குப் பிறகு நீலகிரிவாழ் மக்களே... உங்களிடம் பேச வேண்டியதாயிருக்கிறது. நாங்கள் யானைகள் என்பதால் எங்கள்மீது உங்களுக்கு கோபம் வருவது இயல்புதான். ஏனென்றால் நாங்கள் உங்கள் வீடுகளை சேதப்படுத்துகிறோம். உங்கள் வயல்களை நாசப்படுத்துகிறோம். இன்னும் கூடுதலாய் சொல்ல வேண்டுமென்றால், உங்கள் உயிர்களை எடுக்கிறோம் என்பதால் எங்கள் மீது கோபம் கனலாய்க் கொதிக்கிறது. வாஸ்தவம் தான். ஆனால் நாங்கள் எதனால் செய்கிறோம் எனச் சொல்வதற்காகத்தான் இந்த பேச்சே.

சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில், ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. அது என்ன தெரியுமா? மசினகுடியில் இருந்து பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம், மாயார், செம்மநத்தம், பூதநத்தம், சிறியூர், ஆனைகட்டி, சிங்காரா வரை உள்ள யானை வழித்தடங்களை மறித்து தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் என தனியார் முதலாளிகள் கட்டிக்கொண்டார்கள். அதனால் வழித்தடங்கள் துண்டிக்கப்பட்டு யானைகள் இடம் பெயர்ந்து செல்ல முடியாமல் தவிக்கின்றன. அதனால்தான் யானைகள் எங்கு போவதெனத் தெரியாமல் மனிதர்களின் குடியிருப்புகளுக்குள் சென்று தாக்குகின்றன.

elephant

எனவேதான் யானை -மனித மோதல்கள் அதிகரித்துவிட்டன. அதனால் "யானை வழித்தடங்களில் உள்ள 29 தனியார் கட்டடங்களை அகற்றவேண்டும்' என வக்கீல் வைத்த வாதத்தின் அடிப்படையில் தீர்ப்பு வந்துள்ளது. இப்போது புரிகிறதா மக்களே... நாங்கள் ஏன் உங்களைத் தாக்குகிறோம் என்று. மாவட்ட கலெக்டர் கொடுத்த அறிக்கையும், அதன்படியே இருந்ததால்தான் நீதிபதிகள் "39 விடுதிகளில் 27 விடுதிகளுக்கு 48 மணி நேரத்தில் சீல்வைக்க வேண்டுமென்றும், மீதமுள்ள 12 விடுதிகள் அதே 48 மணி நேரத்தில் உரிய ஆவணங்களை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறது. அது மட்டுமில்லாமல்... ஆவணங்களில் உண்மைத்தன்மை இல்லையென்றால் அவற்றுக்கும் சீல் வைக்க வேண்டு'மென்றும் சொல்லியிருப்பதில் உள்ள உண்மை உங்களுக்கு புரிகிறதா?

ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். உங்கள் வழித்தடங்களையோ, நிலங்களையோ யாரேனும் அபகரித்தால் உங்களுக்கு எப்படி சினம் உண்டாகிறது? இவ்வளவு ஏன், சொத்துக்காக அண்ணன் தம்பிகளே வெட்டிக் கொலை செய்வதை நீங்களும்தானே பார்க்கிறீர்கள்? ஆறறிவு கொண்ட ஜீவராசிகளான உங்களுக்கே கொலை செய்யத் தோணும்போது... மன்னிக்கணும். ஐந்தறிவு ஜீவராசிகளான நாங்கள் உங்களைக் கொல்ல நினைக்கவில்லை. எங்களை பாதுகாக்கப் பாடுபடுகிறோம். சினிமா பணக்காரர்கள் எப்போது இங்கே ஷூட்டிங் ஸ்பாட் என்று வந்தார்களோ அப்போதே நாங்கள் வாழ்விடங்களை இழக்கத் தொடங்கிவிட்டோம்.

ஏன்... இந்த நாட்டு மகாராணியாய் இருந்த தலைவிகூட இங்கே உள்ள மலையை வாங்கிப் போட்டுவிட்டு, எங்களுக்கு மட்டுமல்ல... அந்த ஊர் பூர்வகுடிமக்கள் காலங்காலமாய் பயன்படுத்தி வந்த பாதையை மறித்து இம்சை கொடுத்தபோது அவர்களும் நீதிகேட்டு ஓடிப் போனார்களே?

பாதிப்பு என்று வரும்போது எல்லார்க்கும் எல்லாமும் ஒன்றுதான் மக்களே. நாங்கள் ஏன் இடம்பெயர்ந்து போகிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? நாங்கள் அப்படி இடம் பெயரும்போது எங்கள் உடல்களில் ஒட்டிக்கொள்ளும் விதைகளை நாங்கள் வேறொரு இடத்திற்கு கொண்டு போகிறோம். அதனால் மரங்கள், செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து சோலைக் காடுகள் உருவாக நாங்கள் காரணமாகிறோம். பல்லுயிரினப் பெருக்கத்திற்கும் காரணமாகிறோம். நாங்கள் பல கி.மீ. தூரம் நடப்பதால் புதிய வழிப்பாதைகள் கிடைக்கின்றன. அது மட்டுமல்ல... பூமிக்கடியில் இருக்கும் ஊற்றுத்தண்ணீர் எங்கே இருக்கும் என எங்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியும். அப்படி மண்ணைக் கிளறி நாங்கள் கண்டு பிடிக்கும் ஊற்றுத் தண்ணீரை மற்ற விலங்குகள் அருந்தி மகிழ்கின்றன.

60 முதல் 70 வயதுவரை வாழும் எங்களுக்கு 200 முதல் 250 கிலோ வரை ஒரு நாளைக்கு உணவு தேவைப்படுகிறது. அந்த உணவைத் தேடுவதற்கே ஒருநாளில் முக்கால் காலத்தை தொலைத்துவிடுகிறோம். 100 லிட்டர் தண்ணீர் குடித்தால்தான் இந்த பெரும் உடலைத் தூக்கிக் கொண்டு நாங்கள் நடக்கமுடியும்.

உங்களை போலவே தினமும் குளிக்கும் பழக்கத்தையும் நாங்கள் கொண்டிருக்கிறோம். இப்படியான எங்களை நீங்கள் நாகரிகம் என்ற பெயரால் கட்டடங்கள் கட்டி மிரட்டுகிறீர்கள், கற்கள் கொண்டு எறிகிறீர்கள். இப்போதுகூட 27 தனியார் தங்கும் விடுதிகளை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். மூடி விட்டால் வாழ்வாதாரம் போய்விடும் என்று சொல்லி பதைபதைக்கிறீர்கள். மூன்று நாட்கள் கடைகளை மூடி எதிர்ப்பு தெரிவிக்க இருக்கிறீர்கள். தெரியாமல்தான் கேட்கிறோம்... பெரும்முதலாளிகள் இந்தக் கட்டடங்கள் கட்டுவதற்கு முன்னால் நீங்கள் சாப்பிடவில்லையா?

எல்லாம் வளர்ச்சி என்று சொல்லி எங்களை வதைக்காதீர்கள். எங்களுக்கு வழி கொடுங்கள். அப்படிச் செய்தால் உங்கள் வழிகளுக்குள் நாங்கள் வரமாட்டோம். உங்கள் விழிகளில் படவும் மாட்டோம். ஆதலால் தும்பிக்கை கூப்பிக் கேட்கிறோம்... எங்களுக்கு வழி கொடுங்கள்...''

-இப்படிக்கு

கெஞ்சிக் கேட்கும் களிறுகள்.

Advertisment

-அருள்குமார்