வேலூர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்களுக்கான கூட்டத்தை, கே.வி.குப்பம் அடுத்த லத்தேரியிலுள்ள திருமண மண்டபத்தில் நவம்பர் 16ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தார் மா.செ. நந்தகுமார் எம்.எல்.ஏ.. அக்கூட்டத்தில், தி.மு.க. பொதுச்செயலாளரும், மாவட்ட அமைச்சருமான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன், வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த், வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமுலு உட்பட, தி.மு.க.வின் அனைத்து நிர்வாகிகளும், பொதுக்குழு உறுப்பினர்களுமாக சுமார் 4 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

vv

கூட்டத்தில், கே.வி.குப்பம் மேற்கு ஒன்றிய துணைச்செயலாளர் ராஜேந்திரன் பேசும்போது, "என்னோட ஊர் பி.கே.புரம். எங்கள் ஊரில் தி.மு.க.வை விட அ.தி.மு.க.வுக்கு ஓட்டுகள் அதிகமா விழும். வரப்போற பாராளுமன்றத் தேர்தலுக்கு அனைவரும் ரொம்ப கஷ்டப்பட்டு தி.மு.க.வுக்கு அதிக ஓட்டு வாங்கித்தரணும், கஷ்டப்பட்டு நாம ஜெயிக்க வைக்கிறோம். ஜெயிச்சவங்கல்லாம் கார்ல போறாங்க, நாம வண்டிக்கு பெட்ரோலுக்குக்கூட பணமில்லாம இருக்கோம். (பலத்த கைத்தட்டல்) வீட்டாண்ட போனால் திரும்பிப் பார்க்கக்கூட ஆளில்ல. மெட்ராஸ் வரைக்கும் போறோம், சாப்பிட்டியான்னு கேட்க ஆளில்ல. நாலு நாளைக்கு முன்னாடி நடந்ததைச் சொல்றேன். எங்க மேற்கு ஒன்றியத்தில் மூத்த தலைவர் ஒருத்தர் 8 லட்ச ரூபாய்க்கு வேலை தர்றேன், 12 பர்சன்ட் கமிஷன்தான்னு கேட்கறாரு. 40 வருஷமா கட்சியில இருக்கேன். கட்சிக்காக எவ்வளவு செலவு செய்திருக்கேன். கட்சியில எப்படியெல்லாம் கஷ்டப்பட்டி ருப்பேன். 12 பர்சன்ட் கமிஷன் கேட்டா எப்படி? எலெக்ஷனுக்கு மாடா உழைக்கறோம். எங்களுக்கு என்ன செய்யப்போறீங்க?'' என்று அரங்கை அதிரவைத்தார். இவரைப்போல் இன்னும் சில நிர்வாகிகளும் ஆதங்கத்தை வெளிப்படுத்திப் பேசினர்.

தடாலடியாகப் பேசியது குறித்து ஒன்றிய துணைச்செயலாளர் ராஜேந்திரனை நாம் தொடர்புகொண்டபோது, கூட்டத்தில் பேசியது குறித்து வெளியில் பேச மாட்டேனென்று மறுத்துவிட்டார். கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளிடம் இதுகுறித்துப் பேசியபோது, "அவர் பேசியது கொஞ்சம்தான். இன்னும் நிறைய இருக்கு. அமைச்சருங்க, மா.செ., எம்.எல்.ஏ.ங்க எதிர்க்கட்சியா இருக்கும்போது தொண்டர்களோட நெருக்கமா இருந்தாங்க. ஆளும்கட்சியான பின் மாறிட்டாங்க. அதைத்தான் அவர் சொல்றார். வடக்கு மண்டலத்தில் உள்ள ஒரு சீனியர் அமைச்சர், முக்கிய நிர்வாகிகள் தவிர வேற யாரும் என் வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் வரக் கூடாதுன்னு உத்தரவே போட்டிருக் கார். கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் அவரைச் சந்திக்கவே முடிவதில்லை.

அதேபோல், பொதுமக்கள் சந்திப்பும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நடக்கவேயில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது தினமும் கட்சி அலுவலகத்துக்கு வந்த மா.செ. கம் எம்.எல்.ஏ., ஆளும்கட்சி யான பின்பு ஆபீசுக்கே வர்றதில்லை. அவருக்கு, கோடிகளில் வருவாய் வருது, ஆனால் செலவு செய்ய யோசிக்கறார். இன்னொரு எம்.எல்.ஏ கம் மா.செ,, எலெக்ஷனுக்கு வாங்கின கடனுக்கு வட்டி மட்டும்தான் கட்டிக்கிட்டு இருக்கேன்னு கட்சிக்காரன்கிட்டயே சொல்றார். மணல் ஒப்பந்ததாரர் மட்டும் மாதம் கோடி ரூபாய் அவருக்கு பங்கு தர்றார். அவுங்க சம்பாதிக்கிறது தப்புன்னு சொல்லல. 10 ஆண்டுகாலம் எதிர்க்கட்சியா நெருக்கடியில் இருந்தபோது செலவு செய்தாங்க, கட்சியை நடத்தனாங்க. அதே மாதிரிதானே கீழ்மட்ட நிர்வாகியும் தன் சக்திக்கு உட்பட்டு செலவு செய்து கட்சி வேலை பார்த்துக்கிட்டு இருந்தான். ஆளும்கட்சியாகி பதவியில் இருக்கறவங்க சம்பாதிக்கற மாதிரி, எம்.எல்.ஏ., எம்.பி., சேர்மன்னு பதவிக்கு வர்றதுக்கு மக்கள்கிட்ட ஓட்டு வாங்கித் தருவதற்காக உழைச்சவனையும் நல்லா பார்த்துக்கணுமில்ல?.

vv

Advertisment

பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம் என எந்தத் துறையாக இருந்தாலும், எந்த ஒர்க் எடுத்தாலும், மொத்தமா 30% தர வேண்டியிருக்கு. ஒரு வேலைக்கு, எம்.எல்.ஏ.வுக்கு, மா.செ.வுக்கு, ஒ.செ.வுக்குன்னு தனித்தனியா கேட்கறாங்க. அதிகாரிகள் தனியா 5% வாங்கறாங்க. 1 லட்ச ரூபாய் வேலைக்கு 35 ஆயிரம் வரை கமிஷனாவே போகுது. அப்புறம் எப்படி வேலை செய்து லாபத்தை எடுக்கறது? பொருளாதார ரீதியா கட்சியில் ஒருத்தன் வளர்ந்தால், பதவியில் இருக்கறவங்க, நமக்கு போட்டியா வந்துடுவான்னு முடிவு செய்து சொந்தக் கட்சிக்காரனை காலி செய்து, எதிர்கட்சிக்காரனை வளர்க்கறாங்க.

கூட்டுறவுத்துறை உட்பட சில துறைகளில் இப்போது வேலைக்கு ஆள் எடுக்கப்படுது. 6 லட்சம், 7 லட்சம்னு ரேட் பிக்ஸ் செய்து, இது தந்தால் வேலை உறுதின்னு சொல்றாங்க. சொந்தக் கட்சிக்காரன் புள்ளைக்கு வேலை போடவே அவ்வளவு கேட்கறாங்க. இப்படி கட்சிக்காரன் கிட்டயே சுரண்டறவங்க, எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு வந்து, நம்ம கட்சி ஜெயிக்கணும், பூத் கமிட்டி அமைங்க, ஓட்டு சிந்தாம சிதறாம வாங்கணும்னு பேசறாங்க?'' என கேள்வி எழுப்பினார்கள்.

தொண்டர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள் என அமைச்சர்களுக்கு, கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சராக, கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாலும், பெரும்பாலான அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் அதனை கண்டுகொள்ளவில்லை என்பதால்தான் பொதுச்செயலாளர் முன்னிலையிலேயே அதிருப்தி யை வெளிப்படுத்தியுள்ளனர்.