"ஒழுங்கு மரியாதையா வீட்டை காலி பண்ணு. இல்லைன்னா வீட்டை இடிச்சுப்புடுவேன். இவ்வளவு தான் மீதப்பணம் கொடுக்க முடியும். யாரிடம் வேண்டுமானாலும் போ. என்னைய ஒண்ணும் செய்ய முடி யாது'' என தேனி எம்.பி. தங்கதமிழ் செல்வன் சவால்விட்டுப் பேசிய அந்த ரகசிய வீடியோ நக்கீரன் டிஜிட்டலில் ஒளிபரப்பானது. இது தேனி மாவட்டத்தையும் தாண்டி தமிழ்நாட்டு அரசியலில் பல அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
தேனி மாவட்டம் அல்லி நகரப் பகுதியை சேர்ந்தவர் சொக்கத்தேவர் மகன் குணசேகரன். இவருடைய மனைவி செல்வி. குணசேகரனுக்கு சொந்தமான சர்வே எண் 829-ன் படி, 3 ஏக்கர் 10 சென்ட் நிலம் உள் ளது. குணசேகரனுக்கு சொந்தமான 3 ஏக்கர் 10 சென்ட் நிலத்தில், 1 ஏக்கர் 10 சென்ட் நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளார். மிச்சமுள்ள 2 ஏக்கரில் 10 சென்ட்டில் ஒரு வீடு கட்டியதுபோக மிச்சமுள்ள 1 ஏக்கர் 90 சென்ட் நிலத்தை, ஒரு சென்ட் ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் என விலை பேசி சுரேஷ்குமார், ஆனந்தன், முகமது ரபிக், சிவக்குமார், முத்தையா ஆகியோருக்கு விற்பனை செய்யப் பட்டது. அதன்படி 1 கோடியே 70 லட்சம் ரூபாய் குணசேகரனிடம் கொடுக்கப்பட்டது. நிலத்தை விற்ற பின்பு மீதிப் பணமான 1 கோடியே 85 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக வாய்மொழியாக பேசி முடித்தனர். அந்த நிலம் இப்பொழுது தேனி எம்.பி. தங்கதமிழ்செல்வனிடம் கைமாற, குணசேகரனுக்கு பிரச்சனை துவங்கியது'' என்றார் குணசேகர னின் உறவினர் ஒருவர்.
வீரப்ப அய்யனார் கோவில் பகுதியை சேர்ந்த குணசேகரனின் மற்றொரு உறவினர் ஒருவரோ, "முதன்முறையாக அவரோட மகனுக்கு வாங்குகிற சொத்து. அதனால் ரவுண்டாக கொடுங்கள் எனக் கேட்கின்றார். எம்.பி.யே ஆசைப்படுறார். எம்.பி.கிட்டயே இதனை பேசிக்கொள்ளுங்கள் என எம்.பி. தங்கதமிழ்செல்வனிடம் குணசேகரனை கூட்டிச் சென்றனர். கூடவே அவரோட மனைவி செல்வி யும் இருந்தார். முதலில் பேசிப்பார்த்த எம்.பி., "சரிப்பா உன் வீடு இருக்கின்ற 10 சென்டை நீயே வைச்சுக்க. மீத முள்ள 1.90 ஏக்கரை மட்டும் கொடு. குளக்கரை பாதையையும் நீ பயன்படுத்திக்க. ஆனால் ஒண்ணு, ரவுண்டாக மொத்தத்தையும் இப்ப கொடுத்துடு. பத்திரம் போட்டவுடன் வீடு இருக்கின்ற 10 சென்டை உனக்கு நான் கொடுத்ததாக இருக்கட்டும். ஒரு தாய் மக்கள் தானே? இது கூட செய்ய மாட்டியா?' எனக் கேட்க, உடனே பத்திரப்பதிவு ஆனது. இப்ப என்னவென்றால், பத்து சென்டை தரமாட்டேன் என்கின்றார். பாதையையும் தரமாட்டேன் என்கின்றார். மீதமுள்ள வாழை பயிரிடப்பட்ட 1.10 ஏக்கரையும் கொடுத்துட்டுப் போ என்கின்றார் எம்.பி. தங்கதமிழ் செல்வன். பவரில் இருக்கின்ற அவரை எப்படி எதிர்க்க முடியும்?'' என்றார் அவர்.
இதுகுறித்து ஊரிலுள்ள அங்காளி பங்காளிகளிடம் பஞ்சாயத்து வைத்த நிலையில், "ஆளுங்கட்சி எம்.பி. அவர். அவரை எதிர்ப்பது சாதா ரண விஷயம் அல்ல. எழுதிக் கொடுத்துட்டு எனக்கு 10 சென்டை கொடு என்றால் எப்படி நியாயமாகும்? சட்டம் அவர் பக்கம் தானே நிற்கும்' எனப் பேசியிருக்கின்றனர். வேறு வழியில்லாமல் எம்.பி.யின் பேச்சை உறுதிசெய்ய எம்.பி. தங்கதமிழ் செல்வன் வீட்டிற்கே சென்று மறைத்து வைக்கப்பட்ட ரகசிய கேமரா மூலம் எம்.பி.யின் பேச்சை பதிவு செய்துள் ளது குணசேகரன் தரப்பு. இந்த வீடியோ நக்கீரன் டிஜிட்டலில் ஒளி பரப்பாக, திருடனுக்கு தேள்கொட்டிய நிலை எம்.பி. தங்கதமிழ்செல்வனுக்கு.
"ஊருக்குள்ள இருக்கும் வீட்டுக்கு கேஸ் நடப்பதால்தான் அந்த வீட்டை எனது ஒரு மகனுக்காகக் கட்டினேன். தற்போது அந்த வீட்டில் நாங்கள் வசித்து வருகிறோம். அக்ரிமெண்ட் போடும்போதே ஒரு ஏக்கர் 90 சென்ட் மட்டும்தான் அக்ரிமெண்ட் போட்டோம். 10 சென்ட்டை அவர்கள், நீங்கள் திரும்ப எழுதி வாங்கிக்கொள்ளலாம் எனத் தெரிவித்தனர். மொத்தம் 200 சென்ட் நிலம் 190 சென்ட் மட்டுமே எழுதிக் கொடுத்துள்ளோம் அட்வான் ஸா 5 லட்சம் மட்டுமே வாங்கியுள் ளோம். நீங்கள் இடத்தை வாங்கும் போது தான் அந்த ஐந்து லட்சத்தை அட்வான்ஸாக நாங்கள் வாங்கி னோம். பத்திரம் முடிக்கும்போது உங்களுக்கு 2 ஏக்கரையும் பத்திரம் முடித்துக் கொடுத்துவிட்டனர்.
மேலும், பின்னாடி இருக்கும் எங்கள் தோட்டத்திற்கு பாதை கொடுக்கிறோம் என்று சொன் னார்கள். அதெல்லாம் நாங்கள் சொல்லவில்லை, நான் இடத்தை வாங்கும்போதே அருகேயுள்ள முத்து கோவிந்தன் வீட்டு அடி மனைப் பாதையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தான் இந்த நிலத்தை வாங்கினேன். நாங்கள் 50 ஆண்டுகளாக பயன்படுத்திவரும் குளத்துப் பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம் எனச் சொல்லித்தான் அந்த இடத்தை நாங்கள் விற்பனை செய்தோம். இப்ப அனைத்தையும் மறுக்கிறீர்கள்'' என குணசேகரன் செல்வி தம்பதியினர் பேச, "நிலத்தை விற்பனை செய்துவிட்டீர்கள். எனவே உடனடியாக நீங்கள் மரியாதையாக வீட்டை காலி செய்து வெளியேற வேண்டும். இப்பவே ஆள வைச்சு இடிச்சுத் தள்ளிவிடுவேன். யாரிடம் வேண்டுமானாலும் போ..என்னைய ஒண்ணும் செய்ய முடியாது'' என்கிறது எம்.பி. தங்கதமிழ்செல்வன் பேசிய 12.22 நிமிட வீடியோ.
இதுகுறித்து குணசேகரனிடம் கேட்டோம். "சார், அவங்க தரப்பில் சொன்னதை நம்பி ஏமாந்துட்டோம். அட்வான்ஸ் பணத்தோட எங்க வாழ்க் கை போச்சு. எம் பிள்ளைகளுக்காக கட்டிய வீடு சார் அது'' என அழுது புலம்பினார். எம்.பி. தங்கதமிழ்செல் வன் கூறியது போலவே 10 சென்ட் நிலத்தில் இருக்கும் அந்த வீட்டை இடிக்க அடியாட்கள் சகிதமாக ஜே.சி.பி. வாகனம் வீட்டை ஆக்ரமித் தது அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாக, எஸ்கேப்பாகியது எம்.பி. தரப்பு.
இதுகுறித்து கருத்தறிய தங்கதமிழ்செல்வன் எண்ணில் தொடர்பு கொண்டோம். அவர் அழைப்பை எடுக்கவில்லை. அவரின் உதவியாளரான ராஜேஷை தொடர்பு கொண்டோம். அழைப்பை எடுத்தவர், "எம்.பி.யை மீண்டும் கூப்பிடுங்கள்'' என்றார். அதன்பின் எம்.பி,யை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்தரப்பு கருத்தை அளித்தால் வெளியிடத் தயாராக இருக்கிறோம். இதே வேளையில், எம்.பி. தங்க தமிழ்செல்வன் வீடியோ வாக்குமூலத் தில் கொடுத்தபடி, ரூ.1 கோடியே 70 லட்சம் எனில் எவ்வளவு ரூபாயில் பணப்பரிவர்த்தனை நடந்தது? நிலத்தின் மதிப்பு என்ன? அதற்குரிய பத்திர வில்லைத்தாள் பயன்படுத்தி பத்திரம் பதிவு செய்யப்பட்டதா? இல்லையெனில் நிலத்தின் மதிப்பை குறைத்துக் காட்டி பத்திரப்பதிவு நடந்ததா..? என்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் வலம் வருகின்றன. பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பின ரான தங்க தமிழ்செல்வன் இதற்கு என்ன பதிலை வைத்திருக்கிறார்?