அ.தி.மு.க. ஆட்சியின் டெண்டர் ஊழல்களை ஆதாரத்துடன் மு.க.ஸ்டாலின் பட்டியலிடும்போது கலைஞரிடம் சட்டமன்றத்தில் திணறிய எம்.ஜி.ஆர். அரசு போலவே இருக்கிறது எடப்பாடி அரசும். ஆனால், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுவசதி வாரிய நிலம் குறித்த மு.க.ஸ்டாலினின் அறிக்கையோ, பூமராங்காகிவிட்டதாக அ.தி.மு.க.-தி.மு.க. இரு தரப்பிலும் சொல்கிறார்கள்.

stalin

ஆங்கில நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில் ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு சட்டமன்றத்தின் கடைசிநாளில் விரிவாக பதிலளித்தார் ஓ.பி.எஸ். மறுப்பேதும் சொல்லாத ஸ்டாலின், "எந்த நோக்கத்துக்காக கொடுக்கப்பட்டதோ, அந்த நோக்கத்திற்கு மாறாக அந்த நிலம் பயன்படுத்தப்படுகிறது'‘என்று சொல்ல... "நடவடிக்கை எடுப்பீர்களா? என கேளுங்கள். அதற்கு நாங்கள் பதில் சொல்கிறோம். அதை விட்டுவிட்டு நாங்கள் தவறு செய்ததுபோல பூதாகரமாக்கியிருக்கிறீர்களே?'’என ஓ.பி.எஸ். கேட்டதும் அமைதியாகிவிட்டார் மு.க.ஸ்டாலின். இது அவருடன் சட்டமன்றத்திலிருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கே சங்கடத்தை உண்டாக்கிவிட்டது.

Advertisment

அன்றிரவு (9-ந்தேதி), அமைச்சர்கள் சிலரையும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரையும் வழக்கம்போல சந்தித்த ஓ.பி.எஸ்., "ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு, தான் அளித்த விளக்கம் எப்படி இருந்தது?' என பூரிப்புடன் கேட்டிருக்கிறார்.

அ.தி.மு.க.வின் துணைஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமியிடம் இதுகுறித்து நாம் கேட்டபோது, ""எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் ஆட்சிக்கு எதிரான விசயங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை ஸ்டாலினுக்கு இருக்கு. ஆனால், அது உண்மைத்தன்மையுடன் இருக்க வேண்டும். ராமச்சந்திரா அறக்கட்டளைக்கு நிலத்தை ஒதுக்கலாம் என முதன்முதலில் முடிவெடுத்து அதற்கான உத்தரவு பிறப்பித்தது தி.மு.க. ஆட்சியில்தான். அதன்பிறகு அந்த நிலத்தை அறக்கட்டளைக்கு ஒப்படைப்பதில் பல விசயங்கள் நடந்திருக்கிறது. இந்த விவரம்கூட தெரியாமல் குற்றச்சாட்டு கூறியதால்தான் ஓ.பி.எஸ்.சின் விளக்கத்தை ஸ்டாலினால் எதிர்க்க முடியாமல் போனது.

j-anbalagan-kpmurusamyபொதுவாகவே, பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்தும், தன்னைச் சுற்றியிருக்கும் சிலர் தருகிற தகவல்களை வைத்தும் அவசர கோலத்தில் குற்றம்சாட்டி விடுகிறார். அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கிடையாது. கலைஞர் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது, சரி, முதல்வராக இருக்கும்போதும் சரி ஜெயலலிதாவுக்கு எதிராக பலரும் பல குற்றச்சாட்டுகளை எடுத்துச்செல்வார்கள். எந்த குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்த நினைக்கிறாரோ அது குறித்து தீவிரமாக விசாரித்து உண்மையாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே அறிக்கை கொடுப்பார். அவரை சுற்றி நல்ல ஆலோசகர்கள் இருந்தனர். ஆனால், ஸ்டாலினை சுற்றி அப்படிப்பட்ட ஆலோசகர்கள் இல்லை என்றே தெரிகிறது. நல்ல ஆலோசகர்களை ஸ்டாலின் வைத்துக்கொள்ள வேண்டும்''’என்கிறார் அதிரடியாக.

Advertisment

தி.மு.க.வின் இரண்டாம்நிலை தலைவர்களிடமும் இந்த விரக்தி எதிரொலிக்கிறது. பெயரை பதிவு செய்யாதீர்கள் என சொல்லிவிட்டு நம்மிடம் பேசிய சிலர், ""அ.தி.மு.க.வுக்கும் ஜெயலலிதாவுக்கும் எதிராக கலைஞரிடம் பலரும் தகவல் தருவார்கள். அவர்களில் யாருடைய தகவல்கள் சரியாக இருக்கும் என முடிவு செய்துவிட்டு அந்த தகவல்களை தனது உதவியாளர்கள் சண்முகநாதனிடமோ, ராஜமாணிக்கத்திடமோ கொடுத்து விசாரிக்கச்சொல்வார். விசாரித்து கிடைக்கும் தகவல்களை கொண்டே அறிக்கை கொடுக்கலாமா, வேண்டாமா என கலைஞர் முடிவு செய்வார். அதனால்தான் கலைஞர் வைத்த குற்றச்சாட்டுகள் வலிமையானதாக இருந்தன. சம்பந்தப்பட்டவர்களால் மறுக்கவும் முடிந்ததில்லை. டான்சி நிலம், சொத்துக்குவிப்பு என ஜெ.வுக்கு எதிராக கலைஞர் தொடுத்த அஸ்திரங்களும் அரசியலையே மாற்றின. கலைஞரைப் போல தனக்கு கிடைக்கும் தகவல்களின் உண்மைத் தன்மையை கண்டறியும் வகையில் நல்ல ஆலோசகர்களை ஸ்டாலின் அருகில் வைத்துக்கொள்ள வேண்டும்''’என்கின்றனர்.

இப்படிப்பட்ட விமர்சனங்கள் குறித்து தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனிடம் நாம் பேசியபோது, ’’""தலைவர் கலைஞரைப் போலவே, தமக்கு கிடைக்கும் தகவல்கள் உண்மைதானா என்பதை ஆராய்ந்து முடிவெடுப்பவர் ஸ்டாலின். தகவல்களை ஏனோதானோ என அணுகுவதில்லை அவர். தனக்கு கிடைக்கும் தகவல்களை விசாரிக்காமல் ஸ்டாலின் குற்றம்சாட்டிவிடுகிறார் என்பது தவறானது''’என்கிறார் அழுத்தமாக.

-இரா.இளையசெல்வன்

---------------------------------------

திருந்துங்க... இல்லேன்னா ஒதுங்குங்க!

லண்டன் பயணத்திற்கு முன்பாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந் தேதி சனிக்கிழமை காலை கொங்கு மண்டலத்தில் உள்ள சில கட்சி நிர்வாகிகளை அறிவாலயம் வரச்சொல்லியிருந்தார். ஈரோடு மாநகரச் செயலாளர், பவானி நகரம், மொடக்குறிச்சி, அம்மாபேட்டை மற்றும் கொடுமுடி ஒ.செ.க்கள், திருப்பூரில் இரண்டு பகுதி கழகச் செயலாளர்கள், கருவம்பாளையம், அவினாசி, காங்கேயம், தாராபுரம், குடிமங்கலம், பொங்கலூர் ஒ.செ.க்கள், காங்கயம் ந.செ. மற்றும் கோவை யில் 7 நிர்வாகிகள் அறிவாலயத்தில் காத்திருந்தனர். ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்த ஸ்டாலின் அவர்கள் மீது உள்ள புகார்களை வாசித்துள்ளார். ""கட்சி வளர்ச்சியில் அக்கறையில்லையென்றால் பேசாமல் ஒதுங்கிவிடுங்கள். உங்கள் மீது உள்ள புகார்களுக்கு இனி விளக்கம் கேட்கமாட்டேன். திருந்துங்க... ஒரு மாதம் டைம். அப்புறம் நடவடிக்கைதான்'' என குரலை உயர்த்திப் பேசியிருக்கிறார் ஸ்டாலின்.

கள ஆய்வு மூலம் புகார்களுக்கு உள்ளானவர்களை நீக்கிவிட்டு பல இடங்களில் புதிதாக போடப்பட்ட நிர்வாகிகளால் பெருங்குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதால் அதை தவிர்க்க சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்புவது என ஸ்டாலின் முடிவெடுத்துள்ளாராம். லண்டனிலிருந்து திரும்பியதும் இது தொடருமாம்.

-ஜீவாதங்கவேல்