நாமக்கல்லில், சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத் தையே உலுக்கியுள்ளது.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இரண்டாமாண்டு படித்துவரும் மாணவ, மாணவிகள் 13 பேர், செப்டம்பர் 16ஆம் தேதி இரவு, நாமக்கல் - பரமத்தி சாலையிலுள்ள "ஐவின்ஸ்' என்ற துரித உணவகத்தில் சிக்கன் ஷவர்மா, கிரில் சிக்கன் உணவு வகைகளை சாப்பிட்டுள்ளனர். கல்லூரி விடுதிக்கு திரும்பிய சிறிது நேரத்திலேயே வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட, அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. அவர்கள் அனைவரும் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.

ss

மருத்துவ மாணவ, மாணவிகள் கொத்தாக படுக்கையில் விழுந்த தகவலறிந்து அதிர்ந்துபோன மாவட்ட ஆட்சியரான மருத்துவர் உமா, சம்பந்தப்பட்ட உணவகத்தில் சோதனைக்கு உத்தரவிட்டார். உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அருண் தலைமையில் நடந்த சோதனை யில், ஐவின்ஸ் உணவகத்திலிருந்து 42 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்த னர். குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போன இறைச்சி, சிக்கன் உணவுகள் இருந்தது தெரிய வந்ததும் கடையை இழுத்து மூடி 'சீல்' வைக்கப் பட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அதே உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட ஒரு குடும்பமே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிர்ச்சித் தகவலும் வெளியானது. நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையைச் சேர்ந்தவர் தவக்குமார். அவரது மனைவி சுஜாதா, அவருடைய 14 வயது மகள் கலையரசி, மகன் பூபதி, சுஜாதாவின் அண்ணன் சுனோஜ், அண்ணி கவிதா ஆகியோர் அதே செப்டம்பர் 16ஆம் தேதி இரவு, ஐவின்ஸ் உணவகத்தில் சிக்கன் ஷவர்மாவை வீட்டுக்கு பார்சல் வாங்கிச்சென்று சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை மட்டும் பெற்று வீடு திரும்பினர். ஆனாலும் சிறுமிக்கு மட்டும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 18ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில், சிறுமி கலையரசி படுக்கையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம்தான் ஒட்டு மொத்த தமிழகத்தையே உலுக்கிப் போட்டது.

Advertisment

ss

ஐவின்ஸ் உணவகத்தில் அதேநாளில் சாப்பிட்டவர்களில் 43 பேருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஐவின்ஸ் உணவக உரிமையாளரான நாமக்கல் சிலுவம்பட்டியைச் சேர்ந்த நவீன்குமார், வடமாநில சமையலர்கள் சஞ்சய் மகாகுர், தபாஷ்குமார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்த உணவகத்திற்கு சிக்கன் விநியோகம் செய்த சீனிவாசன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் நால்வர் மீதும் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் கூறினார்.

இதையடுத்து, சேலம் மாவட்டத்தில், உணவுப் பாது காப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன், மாநகராட்சி நல அலுவலர் யோகானந்த் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் 182 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது. தொப்பி வாப்பா பிரியாணி உணவகத்தில், உணவக ஊழியர்கள் இரண்டு எலிகளை கொன்று பெட்டியில் வைத்திருந்ததைத் தொடர்ந்து அக்கடைக்கு 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 82 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதோடு 35 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், "நம்ம ஊர் கடைகளில் சிக்கன் ஷவர்மாதான் விற்கப்படுகிறது. சிக்கன் கறியை துண்டு துண்டாக வெட்டி, ஒரு கம்பியில் செலுத்தி, தீயில் சுட்டு, பின்னர் அதை சீவல் சீவலாக சீவி எடுக்கின்றனர். அந்தக் கறியை 'நான்' வகை ரொட்டிக்குள் வைத்து, மயோனைஸ், கெட்சப் சேர்த்து சாப்பிடக் கொடுக்கின்றனர். அதனை அரைவேக்காடாகச் சாப்பிடும்போது அதில் உள்ள சால்மோனல்லா, ஷிகெல்லா, கிளாஸ்டிரிடியம் வகை பாக்டீரியா கிருமிகள் உடல் உபாதையை ஏற்படுத்துகின்றன. வாடிக்கை யாளர் கூட்டம் அதிகரிக்கும்போது அரைவேக்காடான ஷவர்மாவைக் கொடுப்பதும், இதனை சமைக்கத் தெரியாதவர்கள் சமைப்பதும் தான் சிக்கலாகிறது. பெரும்பாலான கடைக்காரர்கள் அவர்களே சொந்தமாக மயோனைஸ் தயாரிக் கும்போது, கிருமித்தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான 'ப்ராசஸ்' செய்வதில்லை. சில கடைகளில் கெட்டுப்போன மயோனைஸையும் பயன்படுத்தி உள்ளனர்.'' என்றார்.

"சிறுமி கலையரசி சாப்பிட்ட ஷவர்மாவின் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அறிவியல் பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுக்குப் பிறகே சிறுமியின் இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும்'' என்கிறார் நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அருண்.

கூடுமானவரை வெளி இடங் களில் உண்பதைத் தவிர்த்து, வீட் டில் சமைத்த உணவுகளை சாப் பிடுவதுதான் உடல் நலத்திற்கு நல் லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

உணவே மருந்து என்ற நிலை மாறி, உணவே நஞ்சாக மாறி விட்டதோ என்ற அச்சத்தை சிறுமியின் மரணம் ஏற்படுத்தி யுள்ளது.

________________

Advertisment

பாண்டிச்சேரி மற்றும் கடலூர் மாவட்ட நக்கீரன் நிருபராக பணியாற்றி வந்த சுந்தரபாண்டியன், பணியிலிருந்து நீக்கப் பட்டுள்ளார். அவருடன் செய்தி சம்பந்தமாக எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என தெரிவித்துக்கொள்கிறோம்.

(-ஆர்.)