அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை, "நண்பனே, எனது உயிர் நண்பனே' என்று பாடித்திரிந்த எக்ஸ்தள அதிபர் எலான் மஸ்க்கும், ட்ரம்ப்பும், அதற்கடுத்த சில நாட்களிலேயே ஈகோ யுத்தத்தில் இறங்கிவிட்டார்கள். ட்ரம்ப் அரசு அறிமுகப்படுத்திய புதிய வரிக்குறைப்பு மசோதாவை செனட் சபையில் தாக்கல் செய்ததிலிருந்தே அவருக்கும், எலான் மஸ்க்குக்கும் முட்டிக்கொள்ளத் தொடங்கியது. அம்மசோதாவில், எலான் மஸ்க்கின் பரிந்துரைகளை புறந்தள்ளிவிட்டு, ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு, வெளிநாட்டினரின் குடியேற்றத்துக்கு எதிரான கடும் விதிமுறைகளென இருந்த ஒவ்வொன்றையும் எலான் மஸ்க் எதிர்த்தார். ஆனால் "மிகவும் அருமையானதொரு மசோதா' என்று ட்ரம்ப் பெருமைப்பட்டுக்கொள்ள, எலான் மஸ்க்கோ, இந்த மசோதா முட்டாள்தனமாக இருக்கிறது எனக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்.
இவர்களுக்கிடைப்பட்ட சண்டையின் இறுதியில், "எலானின் நிறுவனத்துக்கு வழங்கப்படும் அரசாங்க மானியங்கள், ஒப்பந்தங்களை நிறுத்தினாலே பில்லியன்கணக்கான டாலர்களை மிச்சப்படுத்திவிடலாம்'' என்று ட்ரம்ப் காட்டிய அதிரடியில், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 14.3% குறைந்ததால், சுமார் 150 பில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டமடைந்தது. அதிகார மட்டத்தை சற்று ஓவராக உரசிப் பார்த்துட்டோமோ என்று சற்றே ஜெர்க்காகி, கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோம் எனப் புரிந்துகொண்டு சைலண்ட் மோடுக்கு சென்றார் எலான் மஸ்க்.
இந்நிலையில், அம்மசோதா நிறைவேற்றப்பட்ட சூழலில், புதுக்கட்சி தொடங்கப்போவதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு மீண்டும் பரபரப்பை பற்ற வைத்தார் எலான் மஸ்க். தனது தளத்தில், "இந்த முட்டாள்தனமான சட்டம் அமலுக்குவந்தால், மறுநாளே அமெரிக்கா கட்சி தொடங்கப்படும். நம் நாட்டுக்கு, ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சிக்கு மாற்றாக இந்த கட்சி செயல்படும்' என்று அதிரடி காட்டினார்.
ட்ரம்பை மட்டுமே தாக்காமல், அம்மசோதாவை நிறைவேற்ற வாக்களித்த உறுப்பினர்களையும், "அரசாங்கத்தின் செலவைக் குறைப்பதற்கு பதிலாக, இருக்கின்ற கடனை மேலும் மேலும் அதிகரிக்கும் இந்த சட்டத்துக்கு வாக்களித்ததற்காக அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்த ஆட்டமெல்லாம் இன்னும் சிறிது காலத்துக்கு தான். அடுத்த ஆண்டு நடக்கும் பிரைமரி தேர்தலில் இவர்கள் தோற்பதை உறுதி செய்வேன்' என்று போட்டுத் தாக்கினார் மஸ்க்.
எலானின் டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்துக்கு அரசாங்கம் வழங்கும் சலுகைகள் ரத்து செய்யப்படும் என்பதால்தான் எலான் மஸ்க் இந்த அளவுக்கு நம்மை எதிர்க்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட ட்ரம்ப், மஸ்க்கின் பதிவுக்கு பதிலடியாக, "கடந்த தேர்தலில் எலான் மஸ்க் என்னை ஆதரிப்பதற்கு முன்பே, நான் எலெக்ட்ரிக் வாகனங்களின் சலுகைகளுக்கு எதிரானவன் என்று அவருக்கு தெரியும். அதுமட்டுமல்லாது, எனது தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியமான ஒன்றாகவே இதனை சொல்லிவந்தேன். இன்றைய சூழலில் எலக்ட்ரிக் கார்கள் நல்லதுதான். அதற்காக அதனை வாங்கியே ஆகவேண்டுமென்று பொதுமக்களை வற்புறுத்த முடியாது. எலான் மஸ்க்கின் நிறுவனத்துக்கு அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. நான் மட்டும் இந்த சலுகைகளை ரத்து செய்துவிட்டால், அவர் தனது நிறுவனத்தை மூடிவிட்டு தென்னாப்பிரிக்காவுக்கு திரும்பிச் சென்றுவிட வேண்டியது தான்' என்று குறிப்பிட்டிருந்தார். எலான் மஸ்க்கின் பூர்வீகம் தென்னாப்பிரிக்கா என்பதால், அவர் அமெரிக்காவில் பிறந்தவர் இல்லை என்பதை குத்தலாக சுட்டிக்காட்டும் விதத்தில் தான் அதை ட்ரம்ப் குறிப்பிட்டி ருந்தார். மேலும், "ராக்கெட்டுகள், சேட்டிலைட்டுகள், எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி எதுவுமிருக்காது என்பதால் நம் நாடு லாபமடையும். அமெரிக்க செயல்திறன் மேம்பாட்டுத்துறை (D.O.G.E.) இதனை கவனத்தில் கோள்ளவேண்டும். பெரிய அளவிலான நிதியாதாரம் காப்பாற்றப்பட வேண்டும்' என்றும் குறிப்பிட்டிருந்தார். விண்வெளிக்கு செல்லக்கூடிய விண்கலத் தயாரிப்பிலும் எலான் மஸ்க் ஈடுபட்டுள்ளதால் இப்படி நக்கலாக ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.
எலான் மஸ்க் தனது சொந்த நாட்டுக்கு திரும்பியாக வேண்டுமென்று ட்ரம்ப் பதிவிட்டது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, "எலான் மஸ்க்கை நீங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு திரும்பிச் செல்லவேண்டியதுதான் என்று குறிப்பிட்டுள்ளீர்களே, அவரை அங்கு திருப்பியனுப்பும் திட்டம் ஏதும் இருக்கிறதா?'' எனப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ட்ரம்ப், "அதுபற்றி உறுதியாகத் தெரியவில்லை. அமெரிக்க செயல்திறன் மேம்பாட்டுத் துறையை எலான் மஸ்க்கை பார்க்கச் சொல்லவேண்டும். அது ஓர் அசுரனைப் போன்றது. அது ஒரு கட்டத்தில் எலான் மஸ்க்கையே விழுங்கிவிடக்கூடும். அந்தளவுக்கு பயங்கரமானது'' என்றெல்லாம், ஏற்கனவே அந்த செயல்திறன் மேம்பாட்டு துறைக்கு எலான் மஸ்க்கை தலைவராக செயல்பட வைத்ததை மறைமுகமாக நக்கலடித்துக் குறிப்பிட்டுள்ளார். ஆக, தமிழ்நாட்டில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையிலான அறிக்கை, பரபரப்பு பேட்டி அரசியலைப்போல், அமெரிக்காவில் ட்ரம்ப், எலான் மஸ்க் இடையிலான ஈகோ அரசியல் எலான் மஸ்க் அமெரிக்காவை விட்டே சென்றுவிடுவாரோ எனுமளவுக்கு பரபரப்பாகப் பேசப்படுகிறது!