கொரோனா இரண்டு அலைகளிலும் பல்வேறு இழப்புகளைத் தாண்டி தற்போது மூன்றாவது அலையின் தாக்கத்தில் சிக்கியிருக்கும் சூழலில், ஒன்றிய அரசின் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது. ஆனால் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 92 நிமிட உரையில், விவசாயிகள், மாதச்சம்பளதாரர்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், நடுத்தர, அடித்தட்டு மக்களைவிட மேல்தட்டு, பெருந்தொழிலதிபர்களுக்கான உற்சாக அறிவிப்புகளே அதிக நிமிடங்களை நிறைத்தன. அதன் தாக்கத்தை பட்ஜெட் உரை வாசிக்கப்பட்ட நாளில் பங்குச் சந்தையின் பெருநிறுவனப் பங்குகளின் விலையேற்றம் நிரூபித்தது.
மாதச் சம்பளதாரர்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் தனி நபர் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்ப்பதும், ஏமாற்றமடைவதுமே தொடர்கதையாக இருக்கிறது. இந்த உச்சவரம்பு ரூ.2.5 லட்சம், இந்த பட்ஜெட்டிலும் உயர்த்தப்படவில்லை. கொரோனாவால் மொத்த இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ள சூழலிலும், ஒன்றிய அரசுக்கான ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்து, 2022, ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி. வசூல், ரூ.1.40.986 கோடி என்ற அளவை எட்டியுள்ளதாகவும், ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே இதுதான் சாதனை அளவென்றும் நிதியமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்தார். இவ்வளவு வசூலானபின்பும், மாநிலங் களுக்குரிய இழப்பீட்டுத்தொகையை வழங்க ஒன்றிய அரசு முன்வராதது விமர்சிக்கப்படுகிறது.
நாட்டின் உள்கட்டமைப்பில், வரும் நிதியாண்டில், பிரதமரின் கதி சக்தி திட்டத்தின்மூலம் 25 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அதிகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். வட மாநிலங்களின் வளர்ச்சிக்காக ரூ.1,500 கோடி ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தார். வட மாநிலத் தேர்தல்களை மனதில்கொண்டு இந்த அறிவிப்பு வெளியானதாகத் தெரிகிறது.
பெட்ரோல், டீசலுக்கான வரிகளைக் குறைப்பது குறித்தோ, ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவருவது குறித்தோ எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. மாறாக, மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, மின் வாகனங்களின் பேட்டரிகளை அப்படியே மாற்றிக் கொள்ளும் வகையில் பேட்டரி பரிமாற்ற மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் மூலம், 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் 80 லட்சம் வீடுகள் கட்டப்படும். "ஒரு வகுப்பு ஒரே தொலைக்காட்சி' திட்டத்தின்மூலம், 200 சேனல்கள் ஏற்படுத்தப்படும். பத்திரப் பதிவுத் துறையில் "ஒரே நாடு ஒரே பதிவு' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, நாட்டின் எந்தவொரு இடத்தில் இருந்தும் பத்திரப்பதிவு செய்யும் வசதி உருவாக்கப்படும். 2025-ம் ஆண்டில், அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்கும் பாரத்நெட் பிராட்பேண்ட் திட்டம் செயல்படுத்தப்படும். 5ஜி செல்போன் சேவையைக் கொண்டு வருவதற்கான ஏலம் இந்த ஆண்டில் நடத்தப்படும் என்ற அறிவிப்புகள் கவனத்தைப் பெற்றுள்ளன.
கிரிப்டோ கரன்சி பயன் பாட்டின்மூலம் பெறப்படும் வருமானத் துக்கு 30% வரி விதிக்கப்படும் என்றும், 2022-23ம் ஆண்டில் ரிசர்வ் வங்கி மூலமாக டிஜிட்டல் கரன்ஸி உருவாக்கப்படும் என்றும் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு, கிரிப்டோகரன்ஸியின் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் விற்பனையை வெற்றி கரமாக முடித்ததுடன், நடப்பு நிதியாண் டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன்மூலம் 65 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது தாக்கல் செய்யப் பட்டுள்ள பட்ஜெட், நடுத்தர, அடித்தட்டு மக்களுக்கு பயனளிப்பதாக இருக்கிறதா என்று தோழர் கனகராஜிடம் கேட்டபோது, "அடித்தட்டு, நடுத்தர மக்களுக்கு பயனளிப்பதாக இந்த பட்ஜெட் அமையவில்லை. அடித்தட்டு மக்களின் மூன்று முக்கியத் தேவைகள், உணவு மானியம், உர மானியம், எரிபொருள் மானியம் ஆகியவை. இந்த மூன்றுக்கான மானியத் தொகையும், கடந்த பட்ஜெட்டில் அறிவித்திருந் ததைவிட தற்போது சுருக்கப்பட்டுள்ளது. உணவு மானியத்தைப் பொறுத்த வரை, 2021-22 பட்ஜெட்டில், 2,51,261 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. நடப்பு நிதியாண்டுக்கு, கடந்த பட்ஜெட்டைவிட 33,000 கோடி அளவுக்கு குறைவாகத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
உரத்திற்கான மானியம் ரூ. 1,40,122 கோடியிலிருந்து ரூ.1,05,222 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. எரிபொருளுக்கான மானியம், கடந்த ஆண்டில் ரூ.6517 கோடி ஒதுக்கப்பட்டு, தற்போது ரூ.5813 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா லாக்டௌன் பிரச்சனையால் சுமார் 20 கோடி பேர் வேலையிழப்பைச் சந்தித்துள்ளனர். புதிதாக 23 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக்கீழ் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல், 5-ல் 4 பகுதியினருக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாதிரியான தருணங்களில் கிராமப்புற வேலை உறுதியளிப்புத்திட்டம் ஏழைகளுக்கு பெரிதும் கைகொடுக்கும். ஆனால் இத்திட்டத்துக்கு கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம், இந்தியக் குழந்தைகளுக்கு வயதுக்கேற்ற ஊட்டச்சத்து வழங்கப்படவில்லை என்று கூறியிருந்தது. இதற்கென கடந்த ஆண்டில் ரூ.11,000 கோடி ஒதுக்கியவர்கள், தற்போது ரூ.11,500 கோடி ஒதுக்கியுள்ளனர். வெறும் 500 கோடி அதிகரித்திருப்பது மிகவும் குறைவானதாகும்.
விவசாயிகள் போராட்டத்தின்போது குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. கடந்த ஆண்டில் இதற்கென ரூ.2,47,000 கோடி ஒதுக்கியதை தற்போது 10,000 கோடியைக் குறைத்து, ரூ.2,37,000 கோடியாக அறிவித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு, கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு, நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளின் மருத்துவத்துக்கான நிதி ஒதுக்கீட்டு அளவு கடந்த பட்ஜெட்டைவிடத் தற்போது குறைந்துள்ளதால், நடுத்தர, அடித்தட்டு மக்களுக்கு இந்த பட்ஜெட் ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. அதேவேளை, பெருந்தொழிலதிபர்களுக்கு கார்ப்பரேட் வரிமீதான சர்சார்ஜ் குறைக்கப்பட்டு, பெரும்பணக்காரர்களுக்கான பட்ஜெட்டாக உள்ளது'' என்றார்.
-ஆதவன்
________________
பட்ஜெட் எப்படி? தலைவர்கள் கருத்து!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக அரசு கேட்டி ருந்த திட்டங்களுக்கு போதிய நிதி உதவி இல்லை. தமிழகத்துக்கு புதிய ரயில் திட்டங்கள் இல்லை. கோதாவரி -பெண்ணாறு -காவிரி இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு இல்லாதது கவலை யளிக்கிறது. 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.25 ஆயிரம் கோடி குறைத்திருப்பது திட்டத்தை முடக்கும் முயற்சியாகும். ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத்தொகையைத் தொடர்ந்து வழங்க வேண்டுமென்ற மாநில அரசுகளின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது ஒன்றிய அரசின் பெரியண்ணன் மனப்பான்மையையே காட்டுகிறது. மக்களின் நலனை மறந்த பட்ஜெட் என்றழைப்பதே பொருத்தமானது.
எடப்பாடி பழனிசாமி
வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, விவசாயத்துறையில் குறைந்தபட்ச ஆதார விலைக்கான நிதி ஒதுக்கீடு, மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், 5ஜி சேவை, 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளுக்கான அறிவிப்புகள் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும்.
ராகுல் காந்தி
இது மோடி அரசின் ஜீரோ பட்ஜெட். இந்த பட்ஜெட்டில் மாதச் சம்பளதாரர், நடுத்தர மக்கள், ஏழைகள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், சிறு, குறு நிறு வனங்களின் முன்னேற்றத்துக்கு என ஒன்றுமில்லை.
ப.சிதம்பரம்
வருமான வரிச் சலுகைகள், ஜி.எஸ்.டி. சலுகைகள் இல்லாத பட்ஜெட். மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்கப்படும் என்பதைத் தவிர வரவேற்புக்குரிய எந்த அம்சங்களும் பட்ஜெட்டில் இல்லை. இது அப்பட்டமான முதலாளித் துவத்திற்கான பட்ஜெட்.
மம்தா பானர்ஜி
விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டத்தால் நசுக்கப்பட்டுள்ள நடுத்தர, அடித்தட்டு மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லாத இந்த பட்ஜெட்டில், வெறும் வார்த்தை ஜாலங்களைத் தவிர வேறு எதுவும் இல்லை
சந்திரசேகர ராவ்
தெலுங்கானாவின் மருமகள் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் நிதியமைச்சர், எங்கள் மாநிலத்துக்காக எதுவுமே செய்யவில்லை. 700 விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்தும் விவசாயத்துக்காக இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.
வைகோ
நசிவடைந்த பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான அறிகுறிகளே இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட விவசாயத்துறையின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை.
கமல்ஹாசன்
மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தாத பட்ஜெட். ஏழை மக்களுக்கான திட்டங்கள், வருமான வரி உச்சவரம்பில் மாற்றம், சிறுகுறு நடுத்தர தொழில்களுக்கான உதவி எதுவும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.