ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23-ஆம் தேதி பட்ஜெட் சமர்ப்பித்தார். மத்தியில் பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட்டணி துணையுடன் பா.ஜ.க. அரசமைத்துள்ள நிலையில், பா.ஜ.க. மூன்றாவது ஆட்சிக் காலத்தின் முதல் பட்ஜெட் (2024-25) இது. இதனால் முந்தைய வருடங்களைப் போலின்றி கார்ப்பரேட் மைய பட்ஜெட்டாக இல்லாமல், மக்கள்நல பட்ஜெட்டாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்தனர். இந்திய வரலாற்றில் முதன்முறையாக தொடர்ச்சியாக 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் அந்த எதிர்பார்ப்பை முறியடித்தார்.
பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கான வரி விகி தங்கள் 15 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாகவும், பிளாட்டினத்துக்கான வரி 12-லிருந்து 6.5 சதவிகித மாகவும் குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2500 வரை குறைந்துள்ளது. இது முதன்மையாக மக்களுக்கு ஆதாயம் என்றாலும், பெருமளவில் தங்கம் விற்பனை செய்யும் கார்ப்பரேட் முதலாளிகளின் நெருக்குதலாலேயே இந்த வரி குறைக்கப்பட்டது.
அதேபோல கைபேசி, அதன் உதிரிப் பாகங்களுக்கான சுங்கவரி 15 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக விலையுள்ள ஆப்பிள் போன் முதல் அடுத்த கட்டத்திலுள்ள ஸ்மார்ட் செல்போன்களின் விலை குறையும். புற்றுநோய் மருந்துகள், எக்ஸ்ரே இயந்திர உதிரிபாகங்கள், இறக்குமதி செய்யப்படும் 25 முக்கிய தாதுப் பொருட்களுக்கு சுங்க வரி குறைப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த ஆண்டு பட்ஜெட்டில் உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டு நிறு வனங்களுக்கான கார்ப்பரேட் வரி 40-லிருந்து 35 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு, தான் என்றும் கார்ப்பரேட் ஆதரவு அரசு என்பதை நிரூபித் துள்ளது பா.ஜ.க.
மாநிலங்களை எடுத்துக்கொண்டால் பஞ்சாப், பீகார், ஆந்திரா இந்த மூன்று மாநிலங்களைத் தவிர எந்த மாநிலத்தின் பெயரும் பட்ஜெட்டில் தட்டுப்படவில்லை. கூட்டணிக்கு முதுகெலும்பாக அமைந்த இவ்விரு மாநிலங் களுக்கும், அமராவதி மேம்பாட்டுக்காக 15,000 கோடி ரூபாயும், பீகாரின் நெடுஞ்சாலை மேம்பாட்டுக்காக 26,000 கோடியும், அதுபோக வெள்ள நிவாரணப் பணிகளுக்காக இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு 11,500 கோடியும் ஒதுக்கப் பட்டுள்ளது. பிற மாநிலங்களின் வெள்ளம் ஒன்றிய அரசுக்குத் தெரிந்த நிலையில், கடந்த ஓராண்டாக வெள்ள நிவாரண நிதி கேட்டுவந்த தமிழகமும், கேரளமும் நிதியமைச்சரின் கண்ணுக்குத் தெரியாதது துரதிர்ஷ்டமாகும்.
தேர்தலுக்கு நெருக்கத்தில் விவசாயிகளின் கோபத்துக்கு ஆளான பா.ஜ.க. அரசு, இந்த பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. முதற்கட்டமாக ஐந்து மாநில விவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு அறிமுகம், அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாற ஊக்கம் என பளபளப்பான திட்டங்கள் இருந்தாலும், போராடிய விவசாயிகளின் கோரிக்கைகளைப் பூர்த்திசெய்யும் திட்டங்கள் எதுவும் தட்டுப் படாதது வருத்தத்துக்குரியதே.
தனிநபர் வருமான வரி விதிப்பு முறையை எடுத்துக்கொண்டால், புதிய வருமான வரி விகிதம், பழைய வருமான வரி விகிதம் என இரண்டு இருக்கிறது. இதில் பழைய வருமான வரி விகிதம் சேமிப்பையும், புதிய வருமான வரி விகிதம் செலவையும் அடிப்படையாகக் கொண்டது. வழக்கம்போலவே பழைய வருமான வரி விகிதம் இந்த முறையும் நிதியமைச்சரால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. வரி விகிதத்தில் சிறிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பு 3 முதல் 6 லட்சம் வரை 5% வரி என் றிருந்ததை 7 லட் சம் வரை என உயர்த்தியிருக்கிறார் கள். மேலும் நிரந் தரக் கழிவு 50,000-லிருந்து 75,000 ஆக உயர்த் தப்பட்டுள்ளது.
மொத்தத்தில் எலைட் மக்களுக்கான திட்டங்களே பட்ஜெட்டில் பெரும்பான்மையும் காணப்படுகிறது. ரயில்வே பட்ஜெட் மட்டும் காணாமல் போகவில்லை. பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கான அறிவிப்புகளும் பெரிதாகக் கண்ணிலே படவில்லை. 3 கோடி மக்களுக்கு வீடுகள் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த 1 கோடி வீடுகளே முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு பயனாளர்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்பதும், இந்தத் திட்டத்தில் மாநிலவாரியாக பெரிய முறைகேடு புகார்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.
"அடிமட்டத்திலுள்ள 40 சதவீதத்தினரின் வருமானத்தை மேம்படுத்துவதற்காக எந்தத் திட்டமும் அறிவிக்கவில்லை. இன்று நம் நாட்டில் நிலவும் சமத்துவமின்மைக்கு தீர்வு இந்த பட்ஜெட்டில் குறைவாக உள்ளது'’என கருத்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி.யான சசி தரூர். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமோ, "காங்கிரஸின் தேர்தல் அறிக்கைகளிலிருந்து சில விஷயங்களை நிதியமைச்சர் நகல் செய்துள்ள தாக'த்”தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினோ, "பட்ஜெட்டில் தமிழகத்துக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களை நகலெடுத்த நிதியமைச்சர், தமிழ்நாட்டுக்கு பெருந்திட்டம் ஒன்றைக்கூட அறிவிக்கவில்லை. முத்திரைத்தாள் கட்டணக் குறைப்பை அறிவித்த அரசு, அதை இழப்பீடு செய்ய மாநிலங்களுக்கு எந்த இழப்பீட்டையும் வழங்கவில்லை. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது'' என்று கூறி, வரும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.