பொதுவாக யானைகள் சராசரியாக 70 வயதுவரை வாழும். சில ஆண் யானைகள் 100 வயது கடந்தும் வாழ்ந்திருக்கின்றன. ஆவணங்களின் அடிப்படையில் பெண் யானை லலிதாவுக்கு 56 வயதுதான். உடற்கூறு அடிப்படையிலோ 64 வயதைக் கடந்துவிட்டதெனச் சொல்கின்றனர். இந்த நிலையில்தான், "ஓய்வுபெறும் வயதில் லலிதாவை இனிமேல் வேலை வாங்கக்கூடாது. கவனிப்போடு உணவு மட்டுமே வழங்கப்படவேண்டும்' என நீதிப் பேராணை WP(MD) எண்:7655/2020-ன் கீழ் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது.

elephant

Advertisment

மேலும் அந்த உத்தரவில் "ஒலிபெருக்கிகள் மூலம் உரத்த இசை ஒலிக்கப்படுவது லலிதாவுக்கு கடுமையான இடையூறாக இருக்கும். அது லலிதாவால் ஏற்றுக்கொள்ளக்கூடிய டெசிபல் அளவைத் தாண்டியதாக இருக்கும். லலிதா இருக்கும் இடம், ஒலி மாசு இல்லாத சுற்றுப்புறமாக இருப்பதை காவல்துறை உறுதிசெய்ய வேண்டும். லலிதா முழுவதுமாக குணமடைந்து நடமாடத் தகுதியானவள் எனச் சான்றிதழ் பெற்றபின்பே, அழைத்துச் செல்லப்படவேண்டும்'’ என யானை லலிதா உடல்நலம் குறித்த அக்கறை வெளிப்பட்டிருந்தது. ஏன் தெரியுமா?

பின்னங்கால் மற்றும் தொடைப் பகுதியில் காயம், முன் வலதுகாலில் ஆணி வெடிப்பு, அடிவயிற்று தோலுக்கடியில் வீக்கம், துருத்தியபடி பிதுங்கிய நிலையில் முதுகுத்தண்டு, முன் வலதுகாலில் படுக்கைப் புண், நெற்றியில் ஆழமான குழி என, வலியும் ரணமுமாகப் பரிதவித்த லலிதா, கீழே விழுந்ததாலேயே இந்த அளவுக்கு உடல்நலம் குன்றிப்போனாள்.

Advertisment

elephant

கடந்த 12ஆம் தேதி, விருதுநகர் ஸ்ரீபராசக்தி மாரியம்மன் பங்குனிப் பொங்கல் சாட்டுதலுக்கு முன்பாகவே, வெயில் கொளுத்திய விருதுநகரிலிருந்து வேறொரு பசுமையான இடத்துக்கு லலிதாவைக் கொண்டு செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டிருந்த வேளையில், விலங்குகள் நல ஆர்வலர்கள் தரப்பு "இப்படியொரு மோசமான நிலையிலுள்ள யானையை வேறொரு இடத்துக்கு நகர்த்த முயற்சிப்பது உயிருக்கு ஆபத்தாகிவிடும்'’என எச்சரித்தது. அதனால், விருதுநகரிலேயே மருத்துவக்குழு தொடர் சிகிச்சையளித்து வந்தது. ஆனாலும், கடந்த 20-ஆம் தேதி லலிதா யானை இறந்துபோனது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஷா என்பவர், 8-5-2000 அன்று பெண் யானை லலிதாவை விலைக்கு வாங்கி வளர்த்து வந்தார். கடந்த 23-3-2020ல், வேறொருவர் பெயருக்கு உரிமையை மாற்றி யானையை விற்பதற்கு அவர் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதேநேரத்தில், யானையை அவரே தொடர்ந்து பராமரிப்பதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி கிடைத்தது. அதனால், வழக்கம்போல் நிகழ்ச்சிகளுக்கு லலிதாவை அனுப்பிக்கொண்டிருந் தார். 9-12-2022 அன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் -அச்சம் தவிழ்த்தான் தென்னந்தோப்பில் முகாமிட்டிருந்த போது லலிதா கீழே விழுந்ததால் உடல் நலமில்லா மல் போனது. அப்போதே கால்நடை மருத்துவர்கள், லலிதா பூரணமாக குணமடையும்வரையில் திரு விழாக்களுக்கோ, வேறு இடங்களுக்கோ கொண்டு செல்லவேண்டாம் என அறிவுறுத்தியிருந்தனர்.

யானைக்கு உணவு வழங்குவதும், பராமரிப் பதும் பணம் பண்ணுவதற்கான செயலென்றே கருதிய ஷா ஏற்பாட்டின் பேரில், வனத்துறையிடம் அனுமதிபெறாமல், கடந்த ஜனவரி 1ஆம் தேதி இரவு, விருதுநகர் பெருமாள் கோவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக யானை லலிதாவை லாரியில் கொண்டுவந்தனர். லாரியிலிருந்து இறக்கிய போது வயது முதிர்வு காரணமாக பக்கவாட்டில் சரிந்த யானை கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட் டது. திருவிழா முடிந்தாலும், ராஜபாளையத்திற்கு மீண்டும் யானையை அழைத்துச் செல்ல வனத் துறையினர் அனுமதிக்கவில்லை. அதனால், விருதுநகர் ரயில்வே காலனி முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. யானையின் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் எழுப்பிய தால், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேரில் வந்து பார்வையிட்டார். உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிப் பேராணையின் கீழ் உத்தரவு பிறப்பித்தது.

elephant

முதுமலை யானைகள் முகாமில் கால்நடை மருத்துவப் பொறுப்பாளராக இருந்த டாக்டர் கலைவாணன், யானைக்கு சிகிச்சையளிப்பதற்கான பரிந்துரைகளை மேற்கொள்ள, விருதுநகர் மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குநர் கோவில்ராஜா தலைமையில் சிகிச்சையளிக்க, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனின் தொடர் கண்காணிப்பில் யானை எழுந்து நடப்பதற்கான அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனைத் தொடர்புகொண்டோம். அடுத்து நமது லைனில் வந்தார் விருதுநகர் மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குநர் கோவில்ராஜா. "நேத்துகூட 25 கட்டு புல்லு சாப்பிட்டுச்சு. 30 லிட்டர் தண்ணீர் குடிச்சுச்சு. வாழைப்பழங்கள் எல்லாம் சாப்பிட்டுச்சு. நல்லா சாப்பிட்டு நல்லாத்தான் நின்னுட்டு இருந் துச்சு. ஆனா.. திடீர்னு செத்துருச்சு''’என்றார் சோகத் துடன். பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, விருது நகரில் தனியாருக்குச் சொந்தமான மயானத்தில், விருதுநகர் மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் முன்னி லையில் யானை லலிதாவை அடக்கம் செய்தனர்.

"வனவிலங்குகளைப் பாதுகாப்பதும், உயிரினங்கள் மீது இரக்கம் காட்டுவதும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும் எனச் சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால், கான்கிரீட் தளங்களில், தகரக்கூரையின் கீழே 24 மணி நேரமும் சங்கிலியால் பிணைத்து, யானைகளின் வாழ்க்கையை நரகமாக்கிவிடுகின்றனர். இவற்றைச் சுட்டிக்காட்டி, கோயில்களிலும் இனி யானைகளை வாங்கக்கூடாது என அறநிலையத்துறை செயலர் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்'’என உயர்நீதிமன்றம் அழுத்தம் தந்துள்ளது.