விளைநிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைப்பதால் வரும் ஆபத்து குறித்து சட்டமன்றத்தில் எச்சரித்தார் தாராபுரம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிமுத்து.

""எந்த ஆபத்தும் இல்லை என்பது குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என பதிலளித்தார் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி.

electric-tower

Advertisment

""இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களையெல்லாம் விட்டுவிட்டு, தமிழகத்தை மட்டும் குறிவைத்து குதறிக்கொண்டிருக்கிறது "ஆப் கி மோடி' சர்க்கார். முன்னேற்றம், வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகளின் வருமான வெறிக்கு விவசாய நிலங்களை பலி கொடுக்கத் துணிந்துவிட்டதன் அடுத்த கட்டம்தான், உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்கும் திட்டம்.

முப்போகம் விளைந்த பூமியெல்லாம் இனி எப்போது விளையுமோ என்று சொல்லும் அளவுக்கு தரிசு நிலங்களாகிவிட்டன. இந்த நிலையில் இருக்கும் விவசாய நிலங்களையும் கபளீகரம் செய்யும் எண்ணத்தோடு களம் இறங்கியிருக்கிறது மோடி சர்க்கார்.

"பவர் கிரிட்' என்ற நிறுவனமும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் இணைந்து உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்கப்போகின்றன. இந்தக் கோபுரங்கள் வழியாகச் செல்லும் மின்சாரம், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான், கிரிகஸ்தான் போன்ற நாடுகளுக்கு விற்கப்படும். மொத்தம் 70 ஆயிரம் மெகாவாட் மின்சார விற்பனையால, இந்தியாவுக்கு கொழுத்த லாபம் அப்படின்னு நாம நினைச்சோம்னா, நம்பர் ஒன் ஏமாளிகள் நாமதான். பவர் கிரிட் என்ற நிறுவனமானது கொழுத்துப் பெருத்த கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சொந்தமானது.

Advertisment

கொழுத்தவர்களின் கொடிய திட்டப் பாதை இப்படித்தான் அமையப் போகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் என தமிழகத்தின் பாதி மாவட்டங்களின் விவசாய நிலங்கள் வழியாகத்தான் மின்கோபுரம் அமைக்க திட்டம் தீட்டியுள்ளனர். இதில் புகளூரிலிருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்ச்சூர், புகளூரிலிருந்து உடுமலைப்பேட்டை மைவாடி, அடுத்து புகளூரிலிருந்து திருவளம், கேரள மாநிலம் திருச்சூர், தமிழகத்தின் இடையார்பாளையம், அரசூர், இடையார்பாளையத்திலிருந்து மைவாடி, ராசிபாளையம் முதல் தர்மபுரி பாலவாடி வரை, அடுத்து பாலவாடியிலிருந்து அரசூர், ஈங்கூர், திருவளத்திலிருந்து அரியலூர் வரை என மொத்தம் 12 மின் வழித்தடங்கள்.

electric-tower

இதுமட்டுமல்ல, அணுமின்/அனல்மின் நிலையங்களிலிருந்தும் மின்சாரத்தை, தாராபுரம் அருகே உள்ள இச்சிப்பட்டி என்ற ஊருக்குக் கொண்டு வந்து, அங்கிருந்து மற்ற மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் வினியோகிக்கும் திட்டமும் வைத்திருக்கிறார்கள். இவையெல்லாமே விவசாய நிலங்களில் 400 மீட்டர் இடைவெளியில், 20 முதல் 100 மீட்டர் நீள அகலத்தில் அமைக்கப் போகிறார்கள். ஏற்கெனவே 800 முதல் 1000 கிலோவாட் வரை மின்சாரம் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மின்கோபுரங்களால் விவசாய நிலங்களை விழுங்கிவிட்டார்கள்.

electric-towerஇப்போது கல்பாக்கத்தில் கூடுதலாக 4 அணு உலைகள், கூடன்குளத்தில் 6 அணு உலைகளை நிறுவப் போகிறார்கள். அத்துடன் தூத்துக்குடி, நாகப்பட்டினம், கடலூர், மரக்காணம், இராமநாதபுரம், கும்பகோணம், எண்ணூர், மணலி, செங்கல்பட்டு, காட்டுப்பள்ளி, செய்யூர், ஜெயங்கொண்டம், உடன்குடி, இங்கெல்லாம் அனல்மின் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் என மொத்தம் 70 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தைக் கொண்டு செல்ல, இன்னும் எத்தனை லட்சம் விவசாய நிலங்கள் பறிபோகப் போகின்றனவோ? வரப்போகும் பேராபத்தை எங்களின் உயிரைக் கொடுத்தாவது தடுத்தே தீருவோம்''’என்கிறார் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் கொங்கு ராஜாமணி.

விவசாயிகள் கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் ஈசன் நம்மிடம் பேசிய போது, ""இந்த மின்கோபுரத் திட்டத்தால் நிலங்கள் துண்டாடப்படும், விவசாயம் முற்றிலும் அழிந்துபோகும், கால்நடைகள் வளர்க்க முடியாது. மின்கதிர் வீச்சால் மக்களுக்கு புற்று நோய் தாக்கும் ஆபத்தும் இருக்கிறது. கேரளாவில் 150 கி.மீ.தூரத்துக்கு நெடுஞ்சாலையில், பூமிக்கடியில் கேபிள் அமைத்துத்தான் மின்சாரத்தைக் கொண்டு போகிறார்கள். அதேமாதிரி தமிழகத்திலும் அமைத்தால் என்ன கேடு வந்துவிடப் போகிறது. நெதர்லாந்திலிருந்து நார்வே நாட்டுக்கு கடலுக்கடியில் கேபிள் பதித்து அதன் வழியாகத்தான் மின்சார சப்ளை செய்கிறார்கள். இங்கே கேபிள் அமைத்தால் அதிகம் செலவாகும் என நொண்டிச் சாக்கு சொல்கிறார்கள். முழுக்க முழுக்க வியாபார நோக்கத்துடன் அமையப் போகும் திட்டத்திற்கு எவ்வளவு செலவழித்தால்தான் என்ன?''’என்ற நியாயமான கேள்வியைக் கேட்டார்.

""கட்டவிழ்த்துவிடப்பட்ட உலக வணிகச் சந்தையில் கார்ப்பரேட் முதலாளிகள் தின்று கொழுக்க, நமது விவசாயிகளை இரையாக்கத் துணிந்துவிட்டார்கள் இங்கிருக்கும் எடப்பாடியும் அங்கிருக்கும் மோடியும். எங்களை மீறி எங்கள் நிலத்தில் கால் வைத்தால், அடித்து துரத்தவும் தயாராகிவிட்டோம்''’என ஆவேசப்பட்டார் தற்சார்பு விவசாயிகள் அமைப்பின் பொன்னையன்.

கடந்த 06-ஆம் தேதி ஈரோட்டில், விவசாயிகள் கூட்டு இயக்கம் சார்பாக, மின்கோபுர எதிர்ப்பு கோரிக்கை மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அ.தி.மு.க., பா.ஜ.க. தவிர அனைத்துக் கட்சிகளும் கலந்துகொண்டன. தமிழகம் அடுத்த போராட்டக்களத்திற்குத் தயாராகிவிட்டது.

-ஜீவாதங்கவேல்