களமிறங்கி விட்டார் கமல்... அரசியல் கட்சியின் தலைவராக!
கடலூர் மாவட்டத்தில் கமல்ஹாஸன் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடைய பயணம் கடலூர் மக்களவைத் தொகுதிக்கான முதல்கட்ட தேர்தல் பிரச்சாரமாக அமைந்தது. கமலின் படம் போலவே ப்ளஸ், மைனஸ் இரண்டும் இந்த பயணத்தில் இருந்தது.
கடலூரில் மு.க.முத்துவின் மகள் தேன்மொழியைத் திருமணம் செய்த சி.கே.ரெங்கநாதனின் தம்பி சி.கே.குமரவேல்தான் மக்கள் நீதி மய்யத்தின் கடலூர், நாகை மண்டலப் பொறுப்பாளராக இருக்கிறார். கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த யார் கடலூர் வந்தா லும் ரெங்கநாதன் இல்லத்தில்தான் தங்குவது வழக்கம்.
இவர்களுக்கு சொந்தமான அக்ஷரா பள்ளியில் நடைபெற்ற குடியரசுதின விழாவில்தான் முதல் நிகழ்ச்சியாக கமல் பங்கேற்றார். சி.கே.குமரவேல்தான் கமல்ஹாஸனின் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தையும் ஏற்பாடு செய்திருந்தார். குணமங்கலம், அழகியநத்தம் கிராமங்களில் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்றார். அதில் கமலை அறிமுகப்படுத்திய ஊரக வளர்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, "தூய்மை இந்தியா திட்டத்தில் பிரதமர் மோடியின் தூதுவராக கமல் இருக்கிறார்' என்று அறிமுகப்படுத்தினார். அதை நிராகரித்த கமல், ""நான் தூய்மை இந்தியா திட்டத் திற்குத்தான் தூதுவனாக இருக்கிறேன். மோடியின் தூது வனாக இல்லை'' என்றார். இருந்தாலும், மத்திய அரசைக் காட்டிலும் மாநில அரசைத்தான் அதிகமாக விமர் சித்தார். ""கஜா புயலுக்கு நிவாரணம் கொடுக்க நிதி யில்லை என்ற மாநில அரசு பொங்கல் பரிசாக 2 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியது எப்படி?'' என்று கேட்டார்.
கிராமசபை கூட்டங்களில் பங்கேற்ற கமல் பேசுவதைக் கேட்பதைக் காட்டிலும் அவர் முகத்தை பார்க்கவே பெண்கள் ஆர்வம் காட்டினார்கள். கூட்டம் முடிந்து சென்ற வசந்தா, சின்னப்பொண்ணு என்ற இரு பெண்களிடம் கேட்டபோது, “""ஆள் நல்லா வெள்ளை வெளேர் என்று இருக்கிறார். ஏதோ புதுசா பேசுறார். புதுசா வந்திருக்கிற இவருக்கு ஒரு தடவை வாக்களித்து பார்ப்போமே'' என்று பொதுவாக சொன்னார்கள்.
கூட்டங்களில் மக்களிடம் பேசிய கமல், ""இனிமேல் நோட்டாவுக்கு மட்டும் வாக்க ளிக்காதீர்கள். நீங்கள் விரும்புகிற கட்சியாக நாங்கள் இருக்க விரும்புகிறோம். ஓட்டுக்கு காசு கொடுத்தால் வாங்காதீர்கள். அப்போது தான் நல்ல அரசு அமைக்க முடியும். யாராவது ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் கொடுப்பீர்களா என்று கேளுங்கள்'' என்றார்.
நெய்வேலி மக்கள் சந்திப்பில் பேசிய கமல், ""நெய்வேலியில் ஏற்கெனவே சுரங்கத் திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கே இழப்பீடு கொடுக்கவில்லை என்கிறார்கள். அதுமட்டு மின்றி வடமாநிலத்தவரைத்தான் வேலைக்கு எடுப்பதாகவும் கூறுகிறார்கள். உள்ளூர் மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டியது கட்டாயம்'' என்று என்.எல்.சி. போராட்டத்தை ஆதரித்து பேசி னார்.
விருத்தாசலத்தில் பேசியவர், ""நான் சாவதற்குள் தமிழகத்தை சொர்க்கபுரியாக மாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வந்திருக்கிறேன்'' என்றார். முதல் நாள் நிகழ்ச்சியை அத்துடன் முடித்த அவர், 27 ஆம் தேதி சி.கே. பள்ளியில் கட்சி சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற் றார். "நம்ம கடலூர்', "கடலூர் சிறகுகள்' அமைப்புகளுக்கும், பல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் விருதுகளை வழங்கினார். அப் போது பேசிய அவர், ""நம்மை தேசிய நீரோட்டத்தில் இணைய மறுப்பதாக கூறுகிறார்கள். காந்தி, நேரு, சுபாஷ் பெயர்கள் தமிழகத் தில் உண்டு. காமராஜ், கக்கன், அண்ணா பெயர்கள் வடமாநிலத் தில் உண்டா? நான் கட்சி நடத்த காசு கேட்பதாகவும் அவர்கள் மக்களுக்கு காசு கொடுப்பதாகவும் ஒரு அமைச்சர் கூறுகிறார். அவர் கள் கொடுப்பதே மக்களிடம் எடுத்ததுதானே? மக்கள் நீதி மய்யத்தின் சிம்பலும், சுலோகனும் மக்களுக்கு அறிமுகமாகிற அளவுக்கு மாறவேண்டும்'' என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ""எங்களை வெளியிலிருந்து யாரும் இயக்கவில்லை. நாங்களே இயங்குகிறோம். திராவிடம் என்பது இரண்டு கட்சிகளுக்கோ, மூன்று குடும்பங்களுக்கோ சொந்தமில்லை. வடமாநிலங்களிலும் திராவிடர்கள் வாழ்கிறார்கள். மீண்டும் தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவேன்'' என்றார்.
அவருடைய பயணத்திட்டத்தின் இடையே, கடலூரில் இரண்டு நாட்கள் நடைபெற்ற அரசுப் பணியாளர் சங்க மாநில மாநாட்டில் கமல்ஹாஸன் இறுதி பேருரை ஆற்றுவார் என மாவட்டம் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. இரண்டு நாள் மாநாடு கடலூர் டவுன் ஹாலில் நடந்த நிலையில் கமல் பங்கேற்றால் கூட்டம் அதிகமாக கூடும் என்பதால் பொது மாநாட்டை மஞ்சக்குப்பம் மைதானத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தனர். கமல்ஹாஸன் பேச்சை கேட்க ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்த நிலையில் கடைசி வரை கமல் மேடைக்கு வரவில்லை.
இந்த மாநாட்டையொட்டிதான் கமலின் கடலூர் பயண திட்டமே போடப்பட்டதாகவும், இரண்டு நாள் இங்கேயே இருந்தவர், மாநாடு நடக்கும் போதும் இருந்தவர் கடைசி ஐந்து நிமிடமாவது பேசியிருக்கலாம் என்று கமல் ரசிகர் ஒருவர் கூறினார். "நம்மவர்' கமல் என எல்லாத் தரப்பும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அரசியலில் அநியாயத்துக்கு உழைக்க வேண் டும் என்பதை கமலுக்கு கடலூர் பயணம் உணர்த்தியிருக்கிறது.
-சுந்தரபாண்டியன்