சீட் கேட்பியா? ஒ.செவை வசைபாடிய முன்னாள் அமைச்சர்!

adukalam

திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.வை சேர்ந்த கந்திலி மேற்கு ஒ.செ மணிகண்டன், கந்திலி கிழக்கு ஒ.செ. சங்கர், திருப்பத்தூர் ந.செ. டி.டி.குமார், திருப் பத்தூர் ஒ.செ. டாக்டர் திருப்பதி ஆகியோர் விருப்ப மனு தந்துள்ளனர். இதில், கால்நடை மருத்துவரான திருப்பதி, கட்சியின் சீனியரான எம்.பி. தம்பிதுரை மூலமாக சீட்டை உறுதிசெய்திருக்கிறார். திருப்பதியை விரும்பாத முன்னாள் அமைச்சரும், மா.செ.வுமான வீரமணி, திருப்பத்தூர் தொகுதியில் சங்கர் அல்லது டி.டி.குமாருக்கு சீட் வாங்கித் தரலாமென முடிவுசெய்துள்ளார். இந்நிலையில் மணிகண்டனை அழைத்த வீரமணி, "உன் ஒன்றியப் பகுதி ஜோலார்பேட்டை தொகுதிக் குள்ள தானே வருது? நீ எதுக்கு திருப்பத்தூர் தொகுதியைக் கேட்டு விருப்ப மனு தந்த?''’எனத் திட்டித் தீர்த்துள்ளார். "ஜோலார்பேட்டை தொகுதியில் நீங்க நிற்கறிங்க, அதனால்தான் நான் திருப் பத்தூர் கேட்டேன்' ’எனச் சொல்ல, "உனக்கு அதுக்குள்ள எம்.எல்.ஏ. ஆசை வந்து டுச்சா?''’என வசைபாடியுள்ளார். இந்நிலையில், அ.தி. மு.க.வினருக்கு அதிர்ச்சிதரும் விதமாக, பா.ம.க. அன்புமணி டீம், திருப்பத்தூர் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென்று விடாப்பிடியாகக் கேட்டுவருகிறது. 

Advertisment

-து.ராஜா


எனக்கு எதிரா சதி செய்வது அவுங்க தான்! புலம்பும் அமைச்சர்!

adukalam1

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பனப்பாக்கம் சிப்காட்டில் தனியார் நிறுவனத்தின் புதிய கார் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சரும், மா.செ.வுமான காந்திக்கு முக் கியத்துவம் தரவில்லை. அதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு சென்னையில் கதர்த்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், மேடையிலேயே அமைச்சர் காந்தியிடம் கோபத்தை வெளிப்படுத்தினார் முதலமைச்சர். உடல்நிலை சரியில்லாததால் அமைச்சரால் சரியான நேரத்துக்கு விழாவுக்கு செல்ல முடியவில்லை என்கிறார்கள் அவரது தரப்பினர். முதலமைச்சரிடம் அவருக்கு எதிராக போட்டுக்கொடுப்பது சீனியர் அமைச்சர் ஒருவரும், எம்.பி. ஒருவரும் தான். தனக்கு மீண்டும் எம்.எல்.ஏ. சீட் கிடைக்காதபடி லாபி செய்கிறார்கள் என்றும், சொந்த மாவட்டத்திலேயே முதலமைச்சர் நிகழ்ச்சியில் என்னை அசிங்கப்படச் செய்துவிட்டார்கள் என்றும் புலம்புகிறாராம் அமைச்சர் காந்தி. 

Advertisment

-கிங்


தலைவர்களுக்கு எதிராக போஸ்டர்!  தவிக்கும் காங்கிரஸ்!

adukalam3

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆட்சிப் பொறுப்பிலுள்ள என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க.வை விரட்டிவிட்டு முதலமைச்சர் நாற்காலியில் அமரவேண்டுமென காங்கிரஸ் முயற்சித்துவருகிறது. சோசியல் மீடியாவில் ஏ.ஐ. தாத்தா ஒருவர் மூலமாக, என்.ஆர்.சி. - பா.ஜ.க. ஆட்சியின் ஊழல், சட்டம் ஒழுங்கை விமர்சனம் செய்துவருகிறது. இதற்கு பதிலடியாக, புதுவை காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான வைத்தியலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இருவரின் புகைப்படத்தைப் போட்டு, ‘திருப்பரங் குன்றத்தில் தீபம் ஏற்றுவதைத் தடுக்க முதல் கையெழுத்திட்ட இவரையும் (வைத்தியலிங்கம்), பெண்களுக்கு குழந்தைகளைத் தவிர அனைத்தையும் கொடுத்தோம்னு சொன்ன இவரையும் (நாராயணசாமி) நிராகரிப்போம்’ என்கிற போஸ்டரை பாண்டிச்சேரி, காரைக்கால் முழுவதும் ஒட்டியுள்ளனர். இதனை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறது காங்கிரஸ். இண்டியா கூட்டணியிலுள்ள தி.மு.க., வி.சி.க., இடதுசாரிக்கட்சி களை அரவணைத்து, ஆளும்கட்சியை எதிர்க்காமல் சோலோவாக காங்கிரஸ் அரசியல் செய்வதால் அக்கட்சிகள் வேடிக்கை பார்க்கின்றன. 

-தமிழ்குரு

விஜய்யை வறுத்தெடுத்த சி.வி.சண்முகம்!

adukalam4

திண்டிவனத்தில் அ.தி.மு.க.வின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் அதிரடியான பேச்சு பரபரப்பை கிளப்பியுள்ளது. "அ.தி.மு.க. கூட்டணி கலகலத்துவிட்டது என்றார்கள் தி.மு.க.வினர். ஆனால் இப்போது தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்கள்தான் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சீட்டு தரவில்லையென்றால் அங்கே போய் விடுவேன், இங்கே போய் விடுவே னென்று தி.மு.க.வை மிரட்டு கிறார்கள். நமக்கு அன்றும் சரி, இன்றும் சரி, தி.மு.க. தான் எதிர்க் கட்சி. அவர் வருகிறார், இவர் வரு கிறார்னு நாம் நினைக்க வேண்டாம். மூப்பனார் வந்தார் போனார், வைகோ வந்தார் போனார், விஜயகாந்த் வந்தார் போனார், கமலஹாசன் வந்தார், தி.மு.க.விற்கு நானே மாற்று சக்தி என்றார். அவர் போட்டியிட்ட தொகுதியில்கூட அவர் வெற்றிபெற முடியவில்லை. இப்போது ஒரு வர் வந்திருக்கிறார். அவர் தியேட்டரில் விசி லடிக்கலாம், பையன்கள் முன்னாடி விசிலடிக்க லாம், ஆனால் அ.தி.மு.க.வின் இரட்டை இலைக்கு ஓட்டு போடுவதை யாராலும் தடுக்க முடியாது. பல ஜாம்பவான் களை பார்த்த இயக்கம் அ.தி.மு.க.'' என்று விஜய்யை வறுத்தெடுத்தார்.                      

Advertisment

-எஸ்.பி.எஸ்.

சீச்சீ...…இந்தப் பழம் புளிக்கும்! தொகுதி மாறும் எம்.எல்.ஏ.க்கள்! 

adukalam.5

தி.மு.க. கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சிலர் இந்த முறை தொகுதிமாற முடிவு செய்திருக்கிறார்கள். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான செல்வப்பெருந்தகை, இந்த முறை சென்னைக்கு தாவ முடிவு செய்திருக்கிறார். தி.மு.க. வசமுள்ள எழும்பூர் தொகுதியை குறிவைத்து அவர் காய் நகர்த்துவதாக சத்திய மூர்த்தி பவன் கதைக்கிறது. அதேபோல, வேளச்சேரி தொகுதி யின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் மௌலானாவின் பார்வை, அம்பத்தூர் தொகுதி மீது விழுந்துள்ளது. தொகுதிகளில் நிலவும் கடும் அதிருப்தியே சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மாறக் காரணம் என்கிறார்கள். இதற்கிடையே, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் 17 பேரின் தொகுதிகளிலும் ஒரு சர்வே எடுத்துப் பார்த்திருக்கிறது ஆளும்கட்சி. அதில், காங்கிரசின் ஒரு தொகுதியிலும் திருப்திகரமான ரிசல்ட் வரவில்லையாம். தென் மாவட்டங்களில் மட்டும் ஆதரவு சற்று அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பது உறுதி செய்யப்படும்பட்சத்தில் கதர்ச்சட்டைகளின் சிட்டிங் தொகுதிகள் மாறுதலுக்கு உட்பட்டது என்கிறது அறிவாலயம். 

-சஞ்சய்

தி.நகரா? அண்ணா நகரா? அல்லாடும் பா.ஜ.க. பிரமுகர்!

adukalam6

சென்னையிலுள்ள 18 தொகுதிகளில் 6 தொகுதிகளை அ.தி.மு.க.விடமிருந்து கைப்பற்ற வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. தலைமை. ஆனால், எடப்பாடி பழனிச்சாமியோ, 2 தொகுதிகளுக்கு மேல் "நோ' எனச் சொல்லி அடம்பிடித்து வருகிறார். ஆனாலும் அசராத தமிழகத் தாமரைத் தலைவர்கள், சென்னையில் குறைந்தபட்சம் 4 தொகுதிகளாவது வாங்கிக் கொடுங்கள் என்று அமித்ஷா விடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தி.நகர் தொகுதி நமக்குத்தான் எனத் திட்டமிட்டு அந்த தொகுதியில் கடந்த 4 மாதங்களாக தேர்தல் வேலை களைத் தொடங்கினார் பா.ஜ.க. வினோஜ் பி.செல்வம். இதைக்கவனித்த அ.தி.மு.க., "தி.நகர் தொகுதியைக் கேட்டு எந்த ரூபத்தில் வற்புறுத்தினாலும் பா.ஜ.க.வுக்கு விட்டுக் கொடுக்கமாட்டோம், பகல் கனவு காணாதீர்கள்... வேறு தொகுதியைத் தேடிக்கொள்ளுங்கள்' என்று அழுத்தமாக சொல்லிவிட்டதால், வினோஜ் பி.செல்வம் ஏகத்துக்கும் அப்செட்டாம். இந்த சூழலில், அண்ணா நகர் மீது அவரின் கவனம் விரிந்துள்ளது. ஆனால், அந்த தொகுதியை கோகுலஇந்திராவுக்காக ரிசர்வ் பண்ணி வைத்துள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி. 

-இளையர் 

எங்களுக்கு ஓட்டு போடாமல் இருக்க வேண்டாம்! -திண்டுக்கல் சீனிவாசன்

adukalam7

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக் கல்லில் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்திவந்த உள்ளிருப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க அங்குவந்த அ.தி.மு.க. மாஜி திண்டுக்கல் சீனிவாசன், வழக்கமான உளறல் பேச்சை ஆரம்பித்தார். "அ.தி.மு.க. சார்பிலும், அடுத்து முதல்வ ராகவுள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணி சார்பிலும் ஆதரவு தெரிவிக்க இங்கு வந்துள்ளேன். ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அ.தி.மு.க. சார்பில் கூறிக்கொள்கிறேன்'' என்றவரிடம், "அ.தி.மு.க. ஆட்சியையும் சேர்த்து 15 ஆண்டுகளாக கோரிக்கை வைத்துவருகிறார்களே?'' என்ற கேள்விக்கு  மழுப்பலாக, "தி.மு.க.வை பார்த்துதான் இதை கேட்கவேண்டும். அப்போதே எங்களிடம் கூறியிருந்தால் தி.மு.க.வை தூங்கவிட்டிருக்க மாட்டோம்'' என்றார். "தி.மு.க.வை தவிர யார் ஆட்சியமைத்தாலும் அது டெல்லி ஆட்சியென்று ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?'' என்ற கேள்விக்கு, "ரயில் நிலையம் மற்றும் பத்து ரயில்கள் வேண்டுமென்றால் டெல்லியில்தான் கேட்கவேண்டும். அவர்களின் ஆத்தாவிடமா கேட்க முடியும்?'', என்றவர்... "மோடிக்காக எங்களுக்கு ஓட்டுப் போடாமல் இருந்துவிட வேண்டாம்'' என்று பேச்சை முடித்தார். பா.ஜ.க. மீதான கோபத்தால் தங்களுக்கும் பாதிப்பு வந்துவிடுமென்ற பயத்திலிருக்கிறார் என்றனர் விபரமறிந்தவர்கள்.

-ஆதித்யா