தமிழக தேர்தல் களத்தில் பண விநியோகம் அதிகமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் கணித் துள்ளது. அதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி ராஜீவ்குமார் சென்னைக்கு வந்து தமிழக தேர்தல் ஆணையர் சத்யப்பிரதா சாகுவுடன் இணைந்து பல மீட்டிங்குகளை நடத்தினார். "தமிழக தேர்தல் களத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சுழன்று புரளப்போகிறது. அரசியல் கட்சிகள் கோடிக்கணக்கான ரூபாய்களை வாரியிறைக்கப் போகிறார்கள். அதைத் தடுப்பதற்கு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. தயாராக இருக்கிறது. வருமான வரித்துறையில் இதற்காக பத்து டீம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவர்களுடன் தமிழக போலீஸ் ஒத்துழைக்க வேண்டும்''”எனப் பேசிய ராஜீவ்குமார், சில போலீஸ் அதிகாரிகளை நேரடியாகக் கூப்பிட்டு எச்சரிக்கையும் செய்தார்.
தமிழக போலீஸ் தீவிரமாக களமிறங்கியது. தமிழகம் முழுவதும் முறையான பில்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட நூற்றுக் கணக்கான கிலோ தங்கம் பிடிபட்டது. நாமக்கல்லில் ஒரு பஸ் அதிபர் வீட்டில் நாலுகோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பிடித்தனர். சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவர் மீதும் சோதனை என்ற பெயரால் போலீஸ் காட்டிய கடுமை, ஊடகங்களில் பெரிதாகப் பேசப்பட்டது. இருப்பினும் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ்குமார் சொன் னது போல பெருமளவு பணம் புரளத்தான் ஆரம்பித்துள்ளது. நாமக்கல்லில் பிடிபட்ட நாலுகோடி ரூபாய்தான் தமிழகத்தில் பிடிபட்ட அதிக அளவிலான பணம். அதை வருமான வரித்துறைக்கு போட்டுக் கொடுத்தவர் அந்த பஸ் அதிபருக்கு நெருக்கமானவர்தான்.
தமிழகத்தில் மணல் தொழிலில் கோலோச்சுபவர்கள் கரிகாலன், ரத்தினம், ராமச்சந்திரன். இவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப் போட் டுள்ளது. இவர்களது சொத்துக்கள் 130 கோடி ரூபாய்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இவர்களுக்கு மணல் திருட அனுமதியளித்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன்கள் அனுப் பப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்ததும் வீரியமாகும் இந்த வழக்குகளைச் சமாளிக்க இந்த தேர்தல் களத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள மணல் மாபியா முடிவு செய்துள்ளது. அத்துடன் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரிடம் பேசி தமிழகம் முழுக்க பா.ஜ.க.விற்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் நிதி தருவதாக ஒப்பந்தம் போட்டுள்ள னர் மணல் மாபியாவைச் சேர்ந்தவர்கள். அதன் முதல் கட்டமாக கோவையில் போட்டியிடும் பா.ஜ.க. மா.த.வுக்கு 20 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. அவருக்கு தேர்தல் வேலை செய்ய நூற்றுக்கணக்கான ஆட்களையும் மணல் மாபியா அனுப்பி வைத்துள்ளது.
பல்லடத்தில் மணல் மாபியா ஆட்களுக்கும் லோக்கல் தி.மு.க.வினருக்கும் இடையே மோதல் வெடித்ததன் விளைவாக கரிகாலனின் இந்தத் திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இப்படி பா.ஜ.க., அ.தி.மு.க. மட்டுமல்ல. துரைமுருகனின் மகன் போட்டியிடும் வேலூரிலும் பண விநியோகப் பொறுப்பை கரிகாலன் ஏற்றுள்ளார். இப்படி அனைத்துக் கட்சிகளுக்கும் பணம் விநியோகம் செய்யும் மணல் மாபியாவை பிடிக்காமல் பா.ஜ.க. மா.த. தடுத்து நிறுத்தியுள்ளார். நிலைமை இப்படியே போகாது வெகுவிரைவில் அமலாக்கத்துறை இவர்கள் மீது பாயும் என்கிறது ஒன்றிய அரசு வட்டாரங்கள்.
பா.ஜ.க.வைப் பொறுத்தவரை ஒரு தொகுதிக்கு எட்டு கோடி என அனைத்து தொகுதிகளுக்கும் 320 கோடிகளை பா.ஜ.க.வின் தேசியத் தலைமை ஒதுக்கியுள்ளது. பா.ஜ.க.வின் நட்சத்திரத் தொகுதிகளான கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, கோவை, தேனி, தருமபுரி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஐம்பது கோடி ரூபாயை செலவிட பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைமை முடிவு செய்தது. பா.ஜ.க.வின் தமிழகத் தேர்தல் செலவு மட்டும் 1000 கோடியைத் தாண்டும் என மதிப்பீடு செய்யப்படுகிறது. அ.தி.மு.க. தொகுதிக்கு பத்து கோடி என 400 கோடி ரூபாயை முதற்கட்டமாக ஒதுக்கியுள்ளது. இவர்களுக்குச் சமமாக தி.மு.க.வும் செலவு செய்துவருகிறது. இந்த மூன்று அணிகளும் சேர்ந்து இந்தத் தேர்தலில் 3000 கோடி ரூபாய்களுக்கு மேல் செலவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அ.தி.மு.க.வில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் பணக்காரர்கள். அவர்கள் தங்களது சொந்தக் காசை வாரியிறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தேனியில் டி.டி.வி., ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ்., மற்றும் கோவை, ஈரோடு, வேலூர், தருமபுரி, தென்சென்னை ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க.வினர் பணத்தை சகட்டுமேனிக்கு செலவழித்துக் கொண்டுள்ளார்கள். இந்தப் பணம் இதுவரை கட்சி நிர்வாகி களுக்கும் முக்கியத் தொண்டர்களுக்கும் மட்டுமே போய்ச் சேர்ந்திருக்கிறது. தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில் மேலும் ஒரு பெரிய தொகை இந்தக் கட்சிகளால் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட உள்ளது. அத்துடன் சேர்த்தால் தமிழகத் தேர்தலில் செலவிடப்படும் பணம் பத்தாயிரம் கோடியைத் தாண்டும் என்கிறார்கள் தேர்தல் கமிஷன் அதிகாரிகள். இதில் பா.ஜ.க. மா.த. தனியாகவே 500 கோடி ரூபாய் அளவுக்கு தேற்றிவிட்டார். அதைக் கட்சிக்காரர்களுக்குத் தர மறுக்கிறார். அத்துடன் தேசியத் தலைமை தேர்தலுக்காகக் கொடுக்கும் பணத்திலும் ‘கட்டிங்’ பார்க்கிறார் என்கிற புகார் பா.ஜ.க.வில் எழுந்துள்ளது.