இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் குறிக்காத நிலையிலும் 20 தொகுதிகளிலும் தேர்தலை எதிர்கொள் வதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றன தமிழக அரசியல் கட்சிகள்.
சமீபத்தில் நியமிக்கப்பட்ட அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 3-ந்தேதி நடந்தது. முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் முன்னிலையில் நடந்த ஆலோசனையில், "தினகரன் வேட்பாளர்களை வீழ்த்த வேண்டும்; ஆர்.கே.நகரைப் போல... 20 தொகுதிகளையும் கோட்டைவிட்டுவிடக் கூடாது' என்பது உள்பட இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து பல்வேறு யோசனைகளை பலரும் முன்வைத்தனர்.
கட்சி நிர்வாகிகளின் யோசனைகளுக்குப் பிறகு பேசிய வைத்திலிங்கம், ""ஆர்.கே.நகரில் ஜெயித்ததுபோல இடைத்தேர்தலிலும் ஜெயிக்க தினகரன் திட்டமிட்டுள்ளார். அதனால், நாடாளு மன்றத் தேர்தலோடு இடைத்தேர்தலை நடத்து வதற்கேற்ப சில முயற்சிகளை எடுப்பது நல்லது. இடைத்தேர்தல் தனியாக நடந்தால் தி.மு.க.வும் தினகரனும் மறைமுகமாக கூட்டணி வைப்பார்கள். அது நமக்கு சிக்கலை ஏற்படுத்தும்'' என சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால், கே.பி.முனுசாமி பேசும்போது, ""நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தல் வருவதுதான் நமக்கு நல்லது. அப்போதுதான் 20 தொகுதிகளிலும் தனிக்கவனம் செலுத்த முடியும். லோக்சபா தேர்தலும் பை-எலெக்ஷனும் ஒரேசமயத்தில் வந்தால் நமது வலிமையை நிரூபிக்கும் வாய்ப்பு அமையாது. அம்மாவின் செல்வாக்கும் அ.தி.மு.க. தொண்டர்களின் ஆதரவும் நம் பக்கம்தான் என்பதை நிரூபிக்க இடைத்தேர்தல் முன்கூட்டி வருவதுதான் நல்லது. அதனால், இடைத்தேர்தல் தனியாக வருவதற்கான வழிகளை ஆராய்ந்து அதற்கான திட்டமிடல்களை செய்ய வேண்டும்'' என்றிருக்கிறார் அழுத்தமாக.
பூத் கமிட்டியை அமைப்பது தொடங்கி ஒவ்வொரு ஸ்டெப்பையும் எப்படி எடுத்துவைக்க வேண்டும் என சுட்டிக்காட்டிவிட்டுப் பேசிய ஓ.பி.எஸ்., ""துரோகியையும் (தினகரன்) எதிரியையும் (தி.மு.க.) ஒருசேர வீழ்த்த நமக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதனால், 20 தொகுதிகளிலும் ஜெயிக்கும் சிந்தனை நம்மிடம் உறுதியாக இருக்கவேண்டும். அந்த வெற்றிதான்... துரோகி யார் என்பதை அடையாளப்படுத்தும். வெற்றிக்குத் தேவையான என்ன உதவிகள் வேண்டுமானாலும் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்றார்.
இறுதியில் பேசிய எடப்பாடி, ""இந்த இடைத்தேர்தல் நமக்கு விடப்பட்டிருக்கும் சவால். 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது நம்முடைய செல்வாக்கை நிலைநிறுத்த உதவும். ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள குறைந்தபட்சம் 8 தொகுதிகள் தேவைப்படுகிறது. இதை மனதில் வைத்துக் கொண்டு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் ஜெயித்துக் காட்டவேண்டும்'' என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்த நிலையில், இடைத்தேர்தலில் ஒரு தொகுதிக்கு 200 கோடி என 20 தொகுதிகளுக்கும் 4,000 கோடி செலவு செய்ய எடப்பாடி அரசு திட்டமிட்டிருப்பதாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் அதிரடி குண்டு வீசியிருக்கிறார்.
இதுகுறித்து கே.பி.முனுசாமியிடம் நாம் பேசியபோது, ""அம்மா ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கலைஞர் ஆகிய மக்கள் செல்வாக்குப் பெற்ற இரண்டு தலைவர்கள் இல்லாத நிலையில் வரும் இந்த இடைத்தேர்தலின் வெற்றி எங்களுக்கு முக்கியமானது. அம்மா நடைமுறைப்படுத்தியுள்ள திட்டங்களை நாங்கள் முறையாக செயல்படுத்தி வருவதால் 20-லும் வெற்றி எங்களுக்குத்தான். அப்படியிருக்க நாங்கள் எதற்கு செலவு செய்ய வேண்டும்? 4000 கோடிங்கிறது சாதாரண பணமா? தினகரன் என்கிற கொள்ளைக் கும்பலிடம் தங்க தமிழ்ச்செல்வன் சேர்ந்திருப்பதால் தினகரனின் சிந்தனை இவருக்கும் வந்திருக்கிறது''‘என்கிறார் அதிரடியாக.
இதற்கிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் பலரிடமும் நாம் பேசியபோது, ""இடைத் தேர்தல் தனியாக வருவதை எடப்பாடி உள்பட கட்சியினர் யாருமே விரும்பவில்லை. காரணம், ஆட்சி பற்றி அனைத்து தரப்பினரிடமும் உள்ள அதிருப்தி, தி.மு.க.வும் தினகரன் கட்சியும் ஜெயித்தால் தான், தாங்கள் விரும்பாத இந்த ஆட்சி கவிழும் என்கிற மக்களின் மனநிலை, உளவுத்துறையினர் கொடுத்துவரும் நெகட்டிவ் ரிப்போர்ட்டுகள் ஆகியவைதான். அதனால், நாடாளுமன்றத் தேர்தலோடு இடைத்தேர்தலை நடத்துவதற்கேற்ப டெல்லியிடம் பேசி வருகிறார்கள். பொறுப் பாளர்கள் நியமனம், ஆலோசனைக் கூட்ட மெல்லாம் ஒரு பாவ்லாதான். ஆக... இடைத்தேர்தல் முன்கூட்டி வராது; ஒருவேளை வந்தாலும் அ.தி.மு.க. தேறாது.
20 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களுக்கு சரியான வேட்பாளர்கள் அ.தி. மு.க.வில் இல்லை. மேலும், போட்டியிடுபவர்கள் குறைந்தபட்சம் 20 கோடியாவது செலவு செய்ய வேண்டியிருக்கும். 20 கோடி செலவு செய்தாலும் வெற்றிக்கு உத்தரவாதமில்லைங்கிறதுனால போட்டியிடும் ஆர்வம் யாருக்கும் இல்லை. அதேசமயம், 20 கோடியையும் கட்சித் தலைமை கொடுத்தால் நிற்க தயாராக இருப்பதை எடப்பாடியிடம் பலரும் சொல்லிவருகின்றனர். ஆனால் எடப்பாடியோ, "20 கோடி கொடுப்பது பிரச்சனை இல்லை. அதை ஜெயிப்பதற்காக செலவு செய்யாமல் பதுக்கிக்கொண்டால் என்ன செய்வது? ஆர்.கே.நகரில் அப்படித் தானே நடந்தது' என சந்தேகப்படுகிறார். அதனால் இடைத்தேர்தல் எங்களுக்கு நித்ய கண்டம் பூரண ஆயுசு என்கிற நிலைதான்'' என்று விவரிக் கின்றனர்.
-இரா.இளையசெல்வன்
படங்கள்: ஸ்டாலின்