சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் திட்டக்குடியை ஒட்டியுள்ள ஒரு டாஸ்மாக் கடையருகே ஒரு நடுத்தர வயதுப் பெண், அந்த வழியாக டூவீலரில் வந்த 65 வயது முதியவரை வழிமறித்தார். "எனது மகளுக்கு உடல்நிலை சரியில்லை, அவசரமாக செல்ல வேண்டும். நீங்கள் செல்லும் வழியிலுள்ள குழுமூர் வரை (அரியலூர் மாவட்டம்) வருகிறேன்'' என்று லிப்ட் கேட்டார். பெரியவரும் பாவம்பார்த்து அப்பெண்ணை தனது டூவீலரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். அங்கிருந்து குழுமூர் சுமார் 15 கிலோமீட்டர் இருக்கும்நிலையில், டூவீலரில் செல்லும்போதே அவரிடம் அப்பெண்மணி தனது குடும்ப விவரங்களைப் பேசியதோடு, கணவரை பிரிந்து வாழ்வதாகக் கூறி அவருக்கு சபலத்தை ஏற்படுத்தினார்.

Advertisment

அந்த பெரியவரும் அப்பெண் விரித்த வலையில் விழுந்தார். குழுமூர் அருகேயுள்ள வங்காரம் வனத்துறைக்கு சொந்தமான காட்டுப்பகுதிக்குள் பெரியவரை தள்ளிக்கொண்டு போனார். ஏற்கனவே பெரியவர் மதுபாட்டில் வாங்கி வைத்திருந்த நிலையில், நானும் மது குடிப்பேனென அப்பெண் கூற, இருவருமாக மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த நேரத்தில் வாட்டசாட்டமான ஒரு இளைஞர் திடீரென அங்கே வந்து, அப்பெண்ணோடு சேர்ந்துகொள்ள... அப்பெரியவரை மிரட்டி, அடித்துத் துவைத்தனர். அவர் அணிந்திருந்த ஆறரை பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு, அந்த இளைஞரோடு டூவீலரில் அப்பெண் சென்றுவிட்டார். அதன்பின்னரே திட்டமிட்டு தன்னிடம் நகையை திருடியதை உணர்ந்து பெரியவர் அதிர்ச்சியானார்.

Advertisment

பாதிக்கப்பட்ட பெரியவர், தளவாய் காவல் நிலையத்தில் புகாரளித்தார். விசாரணை செய்த காவல்துறையினரிடம் பத்திரிகை, ஊடகங்களில் எனது பெயர் வர வேண்டாம். விஷயம் வெளியே தெரியாமல் அந்தப் பெண்ணிடமிருந்து எனது நகையை மீட்டுத் தாருங்கள் என்று வேண்டியுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஸ் சாஸ்திரி கவனத்திற்கு கொண்டுசென்றனர். அவர் உடனடியாக செந்துறை இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜவேலு, போலீசார் அருள், மணிகண்டன், வேல்முருகன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து பெரியவரை தாக்கி  நகைகளைப் பறித்துச்சென்ற அந்த ஆண், பெண் இருவரையும் கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டார்.

Advertisment

தனிப்படை போலீஸ் திட்டக்குடி பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் அந்தப் பெண்ணும் பெரியவரும் புறப்பட்ட பகுதி  களில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்து குற்றவாளிகள் இருவரையும் இரண்டு நாட்களில் கைது செய்தனர். பெரியவரை உல்லாசத்திற்கு அழைத்துச் சென்ற அந்த பெண் ஆண்டி                மடம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த பாஞ்சாலை என்கிற கலையரசி. அவரது                  ஆண் நண்பர் ஜெயங்கொண்டம் மேல குடியிருப்பு பகுதியை சேர்ந்த நவீன்குமார். கலையரசியிடம் விசாரணை நடத்தியதில், கலையரசி இதேபோன்று வயதுமுதிர்ந்த ஆண்களை ஆசை வலையில் வீழ்த்தி காட்டுப் பகுதிக்கு அழைத்துச்சென்று உல்லாசம் அனுபவித்துவிட்டு, அவர்களிடமிருந்து               பணம், நகையை பறித்துச் செல்வது வழக்கமென்றும், இதுதொடர்பாக ஏற்கெனவே கலையரசி மீது செந்துறை, பெண்ணாடம் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன என்றும் தெரியவந்தது. 

இதுபோன்ற வழக்குகளில் சிக்கி சிறைக்குச் செல்லும் கலையரசி, ஜாமீனில் வெளியே வந்ததும் மீண்டும் ஆண் நண்பர்களோடு சேர்ந்து இதே வேலையை தொடர்வாராம். ஊருக்கு ஒதுக்குப்புறமான டாஸ்மாக் கடைகளை நோட்டமிடுபவர், 60 வயதுக்கு மேற்பட்ட, சற்று வசதியானவர்கள் டூவீலரில் வருவதை கவனித்து, அதேபோல் லிப்ட் கேட்டு காட்டுப் பகுதிக்கு வளைத்துச் சென்று பணம், நகை பறிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறாராம். இதில் கலையரசிக்கு உதவுவதற்காகவே பெண்ணாடம், ஜெயங் கொண்டம், அரியலூர், செந்துறை, பெரம்ப லூர், தொழுதூர் என பல பகுதிகளில் ஆண் நண்பர்கள் எப்போதும் தொடர்பில் இருப்பார்களாம். கலையரசியிடம் உல்லாசம் அனுபவித்த பின் பணம், நகையை இழப்பவர்கள், மானம் மரியாதை கருதி, காவல்துறைக்கு போக யோசிப்பதே கலையரசிக்கு பலம்!

60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடம் பணம், நகையைப் பறிக்கும்போது கலை யரசியை எதிர்த்துப் போராட முடியாது என்பதாலேயே இளைஞர்களை அழைக் காமல், வயதான நபர்களாகப் பார்த்து லிப்ட் கேட்டு ஏமாற்றுகிறாராம். மேலும், அவர்களில் மனைவியை இழந்தவர்களுக்கு சபலம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இளைஞர்களுக்கு சபலம் ஏற்படுத்துவதும், பணம், நகை பறிப்பதும் கடினமென்பதால் அவரது இலக்கு முதியவர்களாகவே இருந்துள்ளது. 

போலீசார், கலையரசியை கைது செய்த தகவல் வெளியே தெரிந்ததும், பல ஆண்கள் காவல் துறையிடம் தாங்கள் ஏமாற்றப்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளனர். காவல்துறை இதையெல்லாம் தோண்டித்துருவி விசாரணை நடத்தினால் உங்களுக்குத்தான் அவமானம் என்று கூறி, வங்காரம் காட்டுப்பகுதி சம்பவத்தை மட்டும் வழக்காகப் பதிவு செய்த போலீசார், கலையரசி, நவீன்குமார் இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர். சிறைக்கு சென்றுள்ள கலையரசி ஜாமீனில் மீண்டும் வெளியே வருவார். மீண்டும் தன் கைவரிசையை காட்டுவார். எனவே கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த முதியவர்களே, உஷாராக இருந்து கொள்ளுங்கள் என்கிறது காவல்துறை! 

-எஸ்.பி.எஸ்.