ருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நாங்கள்தான் ஆட்சியமைப்போம் என தேர்தல் பிரச்சாரத்தை முன்னதாக துவங்கிய அ.தி.மு.க. ஒருபக்கம். அதற்கு இணையாக அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற மத்திய விசாரணை அமைப்பு களை ஏவிப் பயமுறுத்தும் பா.ஜ.க. ஒருபக்கம். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றான வாக்காளர்கள் என் பக்கம் என நடிகர் விஜய் ஒரு பக்கம் தி.மு.க. வுக்கு எதிரான தாக்குதல் நடத்தும் நிலையில், "வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்கள் நிச்சயம்'' என சூளுரைத்து கட்சித் தொண்டர்களை முடுக்கிவிட்டுள்ளது ஆளுங்கட்சியான தி.மு.க. எனினும், தி.மு.க. மா.செ., மந்திரிகளிடையே நானே பெரியவன் என ஒருவருக்கொருவர் ஈகோ யுத்தம் நடத்தும் சூழலில் கட்சித்தலைவர் ஸ்டாலினின் கனவு பலிக்குமா?

Advertisment

"கட்சியில் இப்பொழுது தலைமைக்கு விசுவாசமாக இருப்பதில் ரகுபதி, ராஜகண்ணப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆர், அனிதா ராதாகிருஷ்ணன், எ.வ.வேலு, முத்துச்சாமி, செந்தில்பாலாஜி, சேகர்பாபு, தங்கத்தமிழ் செல்வன்  உள்ளிட்ட அனைவருமே அ.தி.மு.க. இறக்குமதிதான்! அவங்க நேற்று வந்தவங்க.. அவங்களுக்கு கொடுக்கவேண் டிய முக்கியத்துவத்தை எங்களுக்கும் கொடுங்க என கட்சியின் நீண்டகால சீனியர்கள் மனம்புழுங்கி மேற்கண்டோரை தவிர்த்துவருகின்றனர். இது குறித்து மத்திய மண்டலத்திலுள்ள அமைச்சர் நேரடியாக "வார்த்தைகளைக்' கொட்டியதும் உண்டு. சில இடங்களில் வெகுஜனங்கள் முன்னிலை யில் முட்டிக்கொண்டதும் உண்டு. இதைத்தாண்டி "நல்லாட்சி' கொடுக்கவேண்டுமென்பதே தலைவ ரின் ஆசை. மக்களோடு மக்களாக இருக்கவேண்டும். மக்களின் குறைகளை உடனடியாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதால் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தைக் கொண்டுவந்தார் தலைவர் ஸ்டாலின். அவரின் எண்ணத்தில் மண் விழுவதுபோல். தங்கள் லெவலுக்கு மற்றைய நிர்வாகிகளுடன் 'ஈகோ' காண்பிக்கின்றனர் கட்சிக்காரர்கள். இதில் சில இடங்களில் தடித்த வார்த்தைகளைத் தாண்டி  அடிதடிவரை சென்றதும் உண்டு. இவர்களைக் கொண்டு எப்படி "200' எனும் இலக்கை அடைவது?'' என மனம் வெம்பினார் பெயர் சொல்லவிரும்பாத கட்சியின் சொத்துக்குழு உறுப்பினர் ஒருவர்.

தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை கம்பம் ராமகிருஷ்ணனும், எம்.பி. தங்கதமிழ்ச் செல்வனும் சண்டக்கோழிதான். உனக்குத் தான் என்னுடைய ஆதரவு என மகராசன் எம்.எல்.ஏ.வை கையில் வைத்துக்கொண்டு தங்க.தமிழ்செல்வன் மீது பாயவிடுவதும், பதிலுக்கு இவர் அவருடைய மாவட்ட நிகழ்ச்சிகளில் "ரவுசு' செய்வதும், காணக் கூடிய அன்றாட நிகழ்ச்சிகளில் ஒன்று. மீறி விளக் கம்கேட்டால், "எம்.பி. நான், எங்கே வேண்டு மானாலும் செல்வேன்' என்பது இவரது பதிலாக இருக்கும். சமீபத்தில் தேனி மாவட்டம் ஆண்டிப் பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சக்கம் பட்டி இந்து மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில் மாவட்ட ஆட்சியர், பொதுஜனங்கள் முன்னிலையிலேயே, "போடா முட்டாப் பயலே..'', "யாரைப் பார்த்துடா முட்டாப் பய லேன்னு'' சொல்ற? -ராஸ்கல்! என மேடையில் முட்டிக் கொண்டனர் தேனி எம்.பி. தங்கத்தமிழ்செல்வனும்,  உள்ளூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகராசனும். அதுபோல் ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் சந்திரலேகா (தி.மு.க.) மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி முன்னின்றது தி.மு.க. எம்.எல்.ஏ. மகராசன். காரணம், பேரூராட்சித்தலைவர் தங்கதமிழ்செல் வனின் ஆதரவாளர். இது இப்படியிருக்க, தங்க.தமிழ்செல்வன் அட்ராசிட்டி குறித்து தி.மு.க.வின் பென் அமைப்பு கட்சிக்குத் தெரிவிக்க, "ஆமா..! இப்ப இந்த பிரச்சனைதான் முக்கிய மா?'’என அந்தக் குறிப்பைக் கிழித்தெறிந்து தங்க.தமிழ்செல்வனை காப்பாற்றியிருக்கின்றார் அந்த மீசைக்கார அமைச்சர். 

stalin1

Advertisment

ராமநாதபுரம் மாவட்டத்தில் மா.செ. காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கமும், அமைச்சர் ராஜகண்ணப்பனும் எலியும் பூனையும்போல. இருவரது ஆதரவாளர்களும் மோதி அடித்துக் கொள்வதும் உண்டு. ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் கவனம் செலுத்தவேண்டிய மா.செ. ராஜகண்ணப்ப னுக்கு எதிராகவே குழி வெட்டுவதில் கவனம் செலுத்த, லேட்டாகப் புரிந்துகொண்ட தலைமை ஓரணியில் தமிழ்நாடு விஷயத்தில் மட்டும் மா.செ.வைக் கண்டித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாங்கள் சளைத்தவர்களா என்ன..? நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை எம்.எல்.ஏ. அப்துல் வஹாப்பிற்கும், முன்னாள் எம்.எல்.ஏ. மைதீன் கானுக்கும் பெட்டிஷன் விஷயத்தில் போட்டியே நடக்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்திலோ அமைச்சர் கீதாஜீவனுக்கு எதிராக அவரது சொந்த தம்பியான மேயர் ஜெகன் சண்டை போடாத நாட்களே இல்லை. ஒருவரை ஒருவர் காலைவாரிவிடுவதிலேயே கவனம்செலுத்தும் இவர்கள், கட்சியின் விவகாரங்களில் கவனம் செலுத்துவதில்லை என்பது நிதர்சனம்.

மத்திய மண்டலத்திலோ சீனியர், ஜூனியர் எனும் ஈகோ யுத்தம். இதில் 'நேத்து வந்த              பயலுக்கு பதில்சொல்ல வேண்டியிருக்கு' என முறுக்கிக்கொண்ட சீனியர் கதைகள் இங்கு ஏராளம். புதுக்கோட்டை மாவட்டத்திலோ அமைச்சர் ரகுபதி தனக்கு வேண்டிய ஒருவருக்கு ந.செ. பதவி கொடுக்க, "என் ஆளை விட்டுட்டு எப்படி கொடுக்கலாம்.?, நகரத்தை இரண்டாகப் பிரியுங்கள்' என பிரித்த பகுதியை தன்னுடைய ஆதரவாளருக்கு வாங்கிக் கொடுத்துள்ளார் ஜூனியர் அமைச்சர். இதனை எப்படி தலைமை யிடம் கூறுவது? என இப்பொழுதுவரை முகத்தில் கையை வைத்துக்கொண்டு யோசித்துவருகின்றார் அமைச்சர் ரகுபதி.

Advertisment

தஞ்சாவூர் மாவட் டத்திலோ பெயருக்குத் தான் அமைச்சராக இருக்கின்றார். ஆனால் அவருக்கு மாவட்டத்தில் எந்த மரியாதையையும் கொடுப்பதில்லை துரை சந்திரசேகரும், சன். ராம நாதனும். "துறைசார்ந்த நிகழ்ச்சிகளில்கூட எனக்கு மரியாதை தருவதில்லை இருவரும். எங்கு போய் சொல்வேன்?'' என்கின்ற புலம்பல் கேட்கின்றது. 

விழுப்புரத்திலோ இன்னும் புதுமாப்பிள்ளை நான்தான் எனும் பெயரில் சீனியர் வேஷ்டியை மடித் துக்கட்ட மஸ்தான் தன்னுடைய ஆதரவாளரை அவருக்கு எதிராகக் களமிறக்கி கம்புசுழற்ற வைத்திருக்கின்றார்.

"அமைச்சராக இல்லாவிட்டாலும் பரவா யில்லை. இந்த மேற்கு மண்டலம் உமக்குத்தான்' என தலைமை அறிவித்த நாளிலிருந்தே செந்தில்பாலாஜிக்கு தனியாக ஆதரவாளர் வட்டம் உருவானது. எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் தனது காருக்குப் பின்னால் அசோக்பாபு, ஆறுக்குட்டி, செந்தில் கார்த்திகேயன், சரத்பாபு, எக்ஸ் எம்.பி. நாகராசன், ஸ்ரீசத்யா ஆகியோரின் கார்கள் அணிவகுப்பில் கட்டாயம் இடம்பெறும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அவர்களுக்குத் தான் சீட் கொடுக்கவுள்ளார் செந்தில்பாலாஜி என்ற செய்தி கோவையில் உள்ளது. அதில் அனைவரும் பரம்பரை தி.மு.க.காரனா.? என்றால் அது நிச்சயமில்லை. அனேகர் அ.தி.மு.க. இறக்குமதி களே..! முறைவாசல் செய்தால்தான் சீட் கிடைக்குமா.? உண்மையான கட்சிக்காரனுக்கு சீட் இல்லையா.? வாக்கு செலுத்த மட்டும்தான் நாங்களா? என செந்தில்பாலாஜிக்கு எதிராக மறைமுக யுத்தத்தை தொடங்கியிருக்கின்றனர் கோவை தி.மு.க.வினர்'' என்கிறார் கவுண்டம் பாளையம் கார்த்திக்.

சமீபத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களில் அனேகர் அ.தி.மு.க.வினர். மீதம் செந்தில்பாலாஜியின் ஆதர வாளர்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். இதுகுறித்து அதிரடி தினகரன் என்பவரின் முகநூல் பதிவோ,  "ரேஷன் கடையில விற்பனையாளர் வேலைக்கு அப்ளிகேஷன் எல்லாம் போட்டு பொறுப்பா அமைச்சர பாத்து லெட்டர் குடுத்து மாவட்டச் செயலாளர் சொல்லி இந்த வேலைகூட கிடைக்கலைன்னா அப்போ ஒரு கட்சிக்காரன் குடும்பம் எப்படிப் பொழைக்கிறது? நடக்கிற தி.மு.க. ஆட்சியில தி.மு.க.காரன் பிள்ளைக்கு வேலை கிடைக்காதா..?'' என்கின்ற பதிவு, உண்மையான கட்சிக்காரர்கள் மத்தியில் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலை நோக்கி பூத் கமிட்டிக்கு 9 நபர்கள் என தேர்தல் பணியினை முடுக்கிவிட்டுள்ளது அ.தி.மு.க. ஆனால் சம்பாதிப் பதிலும், சரிக்குச் சமமாக மல்லுக்கட்டுவதிலுமே குறியாய் இருக்கும் ஈகோ தி.மு.க.வினர் தாங்களும் வேலைசெய்யாமல் இல்லை என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கட்சித்தலைமையை ஏமாற்றிவருகின்றனர்.   இப்பொழுதே பகிரங்கமாக புகைந்துவரும் உட்கட்சி மோதல்களுக்கு விரைவில் முடிவுகட்ட வேண்டும் என்பது தொண்டர்களின் கோரிக்கை. 

தலைமை பரிசீலிக்குமா..?

_____________
இறுதிச் சுற்று!

மீண்டும் எடப்பாடி ஆம்புலன்ஸ் தகராறு!

டப்பாடி பழனிசாமியின், ‘"மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' பிரச்சார சுற்றுப்பயணம் 3 நாட்களாக திருச்சியில் நடந்துவருகிறது. 25ஆம் தேதி, திங்கட்கிழமை காலையில், விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில்முனைவோர்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தினரை சந்தித்து உரையாடினார். ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய பெருமாள்சாமி, எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தில், அதிகமாக மக்கள் கூடியுள்ள இடங்கள், மக்களின் கருத்துகள் குறித்து அவரிடம் அப்டேட் செய்துவருகிறார். இந்த பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், தங்கமணி உள்ளிட்டவர்கள் எடப்பாடியுடன் செல்கிறார்கள். ஏற்கெனவே ஆம்புலன்ஸ் குறித்து எடப்பாடி பேசிய வன்முறைப் பேச்சால் உசுப்பேற்றப்பட்ட அ.தி.மு.க. வினர், திருச்சி துறையூர் பகுதியின் எடப்பாடி பிரச் சாரத்துக்கு வருவதற்கு முன்பாக அப்பகுதி வழியாக நோயாளியை ஏற்றுவதற்காக வந்த ஆம்புலன்ஸைத் தடுத்து நிறுத்தி, ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியதில் அவர் தற்போது மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். இது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.           

   -துரை.மகேஷ்