மோடி அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக 60 நாட்களுக்கு மேல் அமைதியாக நடந்த போராட்டத்தை வன்முறையாக சித்தரிக்க முயன்ற அரசாங்கம், குடியரசு நாளான ஜனவரி 26ஆம் தேதியை அதற்கேற்ப பயன்படுத்த முனைந்தது. அரசுடனான 11 சுற்றுப் பேச்சு வார்த்தையிலும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளது, சட்டங்களை முழுமையான ரத்து செய்ய வேண்டும் என்பதுதான். கடைசிக்கட்ட பேச்சுவார்த்தை யில், மத்திய அரசு இந்த சட்டத்தை ஒன்றரை வருடங்களுக்கு ஒத்திவைக்க முன் வந்தது. முழுமையான ரத்தே ஒரே தீர்வு என்றனர் விவசாய சங்கத்தினர்.

Advertisment

farmers

இதையடுத்து, குடியரசு தினமான ஜனவரி 26 அன்று டெல்லியில் லட்சக்கணக்கான ட்ராக்டர்களுடன் மிகப் பிரம்மாண்டமானதொரு பேரணி யை நடத்த விவசாய அமைப்புகள் திட்டமிட்டன. இதற்கெதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், உச்சநீதிமன்றமோ, பேரணியை அனுமதிப்பதா… இல்லையா என்பதை மத்திய அரசின் கீழ் உள்ள டெல்லி காவல்துறையே முடிவுசெய்துகொள்ளலாமென தீர்ப்பளித்தது.

ட்ராக்டர் பேரணியை டெல்லிக்கு வெளியே நடத்துமாறு விவசாயிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை விவசாயிகள் ஏற்காத நிலையில் சில நிபந்தனைகளுடன் விவசாயிகள் பேரணிக்கு அனுமதி வழங்கியது. டெல்லியில் வழக்கமான குடியரசு தின அணிவகுப்பு முடிந்தபின்பே பேரணிக்கு அனுமதி என்பது முக்கிய நிபந்தனையாகக் கூறப்பட்டது.

Advertisment

இந்நிலையில் சிங்கு, திக்ரி, காசிப்பூர் எல்லைப் பகுதிகளில் குடியரசு தின அணிவகுப்பு முடியும்முன்பே பேரணி செல்லமுயன்றனர் விவசாயிகள். போலீஸ் தடுப்புகளால் மறித்திருந்த நிலையில், விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விவசாயிகள் ட்ராக்டரின் துணையுடன் தடுப்புகளை அகற்றி முன்னேறினர். இதையடுத்து இந்த மோதல் தடி யடி, கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சாக மாறியது.

farmersrally

சிந்தாமணி சவுக் என்ற இடத்தில் போராட்டக்காரர்கள் கண்ணாடியை உடைத்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாலேயே தடியடி, கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு நடைபெற்றதென போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அரசியல் தூண்டுதலால் நுழைந்த சமூக விரோதிகளே இதற்கு காரணம் என்கிறார்கள் விவசாய சங்கத் தலைவர்கள். ஆன்லைன் மூலமாக போராட் டக் காட்சிகள் பரவும் என்பதால் டெல்லியில் அவசர அவசரமாக இணையப் பயன்பாட்டை முடக்கியது மோடி அரசு. மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

Advertisment

மேலும், விவசாயிகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பாதையிலிருந்து விலகி நாடாளுமன்றத்துக்கு நெருக்கமான ஐ.டி.ஓ. சென்ட்ரல் பகுதி வரை சென்றனர். செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்து, சீக்கிய அமைப்பின் கொடியையும், விவ சாயிகளுக்கான கொடியையும் ஏற்றினர். ஆனால், தேசியக் கொடியை அகற்றிவிட்டு காலிஸ்தான் தனிநாடு கொடி ஏற்றப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது.

farmersrally

""தேசியக் கொடியை அகற்றிவிட்டு நாங்கள் எந்தக் கொடியையும் ஏற்றவில்லை. தனியே வேறு ஒரு இடத்தில்தான், விவசாய சங்கக் கொடியையும், நிஷான் ஷாகிப் எனும் சீக்கியர்களின் புனிதக் கொடியையும் ஏற்றினோம். காலிஸ்தான் கொடி எந்த இடத்திலும் ஏற்றப்படவில்லை'' என பஞ்சாப் நடிகரும் போராட்டத்தை திசைதிருப்பியதாக குற்றம்சாட்டப்படுபவருமான தீப் சித்து மறுப்புத் தெரிவித்தார்.

அதேநேரத்தில், டெல்லியின் மற்றொரு பகுதியில் எந்தவித அத்துமீறலுமின்றி அமைதி யான முறையில் ட்ராக்டர் பேரணி நடந்தது. உள்ளூர் மக்கள் பேரணியை பார்த்து மகிழ்ந்த தோடு, போராட்டக்காரர்களை வரவேற்று உணவு மற்றும் நீர் வழங்கினர்.

விவசாயிகளின் அத்துமீறலால் தங்கள் தரப்பில் 86 பேர் காயமடைந்துள்ளதாகவும், பொதுச்சொத்துக்கள் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 22 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மாறாக, விவசாயிகள் தரப்பிலும் ஏராளமான பேர் லத்தியடிக் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். ட்ராக்டர் கவிழ்ந்ததில் நவ்னீத்சிங் என்ற விவசாயி உயிரிழந்துள்ளார். அவர் துப்பாக்கிச் சூட்டிலேயே உயிரிழந்தார் என விவசாயிகள் சொல்கின்றனர்.

இதையடுத்து குடியரசுத் தினத்தின் நள்ளிரவு முதல் டெல்லியில் 15 தினங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மும்பை சட்டக் கல்லூரி மாணவரான ஆஷிஷ் ராய் என்பவர், போராட்டத்தில் நடந்த இந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்து உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென மனுத் தாக்கல் செய்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 41 விவசாய சங்கங்களின் கூட்டமைப் பின் பொதுச்செயலாளர் சர்வான் சிங், வன்முறைக்கும் தங்கள் அமைப்பு களுக்கும் தொடர்பில்லை. கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியைச் சேர்ந்த வர்களே போலீஸ் தடுப்புகளை மீறி முன்கூட்டி நகருக்குள் நுழைந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரும் ஸ்வராஜ் கட்சியின் தலைவருமான யோகேந்திர யாதவ், ""நடந்தது குறித்து வெட்கப்படுகிறேன். மற்றும் பொறுப் பேற்றுக்கொள்கிறேன்'' எனத் தெரி வித்துள்ளார்.

நிலவரம் இயல்பு நிலைக்குத் திரும்பியதும் விவசாயிகள், போராட்டம் நடைபெறும் எல்லைக்குத் திரும்பிச்சென்றனர். போராட்டம் முடியும்வரை ஊருக்கு திரும்பிச்செல்லும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, செவ்வாய் மாலையன்று, உயர்மட்டக் கூட்ட மொன்றைக் கூட்டி, ஏற்கெனவே 4500 துணை ராணுவப் படையினர் இருந்த நிலையில், முன்னெச்சரிக்கையாக கூடுதலாக 2000 பேரை போராட்டக்காரர்களின் இடங்களில் நிறுத்த உத்தரவிட்டுள்ளார். போராட்டக்குழுவின் தலை வர்கள் கைதுசெய்யப்படலாம் என்றும் தெரிகிறது.

farmersrally

டெல்டாவை டெல்லியாக்கிய எடப்பாடி!

டெல்லி மட்டுமல்லாது மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங் களில் குடியரசு தினத்தன்று விவசாயிகளுக்கு ஆதரவாக ட்ராக்டர், இருசக்கர வாகனப் பேரணிகள் நடைபெற்றன. குறிப்பாக தமிழகத்தில், விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்களை ஒடுக்குவதில், விவசாயி எனக் கூறிக் கொள்ளும் எடப்பாடி அரசு முனைப்புக்காட்டியது.

திருமானூரில் தேசியக் கொடியுடன் டிராக்டர் பேரணி நடைபெற்றது.டிராக்டர் பேரணியை காவல்துறையினர் தடுத்துநிறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்துள்ள னர். திருச்சி மாவட்டத்தில் திருச்சி, திருவரம்பூர், அந்தநல்லூர், மணிகண்டம் ஒன்றிய விவசாய சங்கங்கள் மற்றும் திருச்சி மாவட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக நீதிமன்றம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகிலிருந்து 500-க்கு மேற்பட்டோர் காவல்துறை எதிர்ப்பையும் மீறி பேரணியாகச் சென்றனர்.

சென்னிமலையில் விவசாயிகள் தேசியக் கொடிகளுடன் இருசக்கர வாகனங்களில் ஊர்வலம் சென்றனர். அதை போலீசார் தடுத்து நிறுத்திய தால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை, சிவகிரி என மாவட்டத்தின் பல ஊர்களிலும் வாகனப் பேரணி நடந்தது.

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டெல்டா மாவட்டங்களிலும் டிராக்டர் பேரணி நடத்த கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாய சங்கத்தினர் முடிவெடுத்தனர். விவசாயிகள் முன்னெடுக்கும் ட்ராக்டர் பேரணியில் தி.மு.க.வின் விவசாய சங்கமும் கலந்துகொள்ளும் என அறிவித்திருந்தார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.

இதற்கிடையில் டெல்டா மாவட்ட போலீஸார் விவசாயிகளின் ட்ராக்டர் பேரணியை எப்படி தடுத்துநிறுத்துவது, போராட்டங்களை முடக்குவது என அவசர அவசரமாக குடியரசு தினத்திற்கு முதல் நாள் ஒவ்வொரு பிரதான சாலைகளிலும் ஒத்திகை பார்த்தனர்.

திட்டமிட்டபடியே தஞ்சாவூரில் போலீசாரின் தடையை மீறி விவசாயிகள் ட்ராக்டர் பேரணி முன்னேறியதால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே மிகப்பெரிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதேபோல திருவாரூர் மாவட்டத்திலும் போலீசார் டிராக்டர் பேரணி யைத் தடுத்ததால் தடுப்புகளை உடைத்துக் கொண்டு பேரணியாகச் சென்று ரயில் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திமுடித்தனர். நாகப்பட்டினத்தில் விவசாயிகளின் டிராக்டர்களை நூறு மீட்டர்கூட நகர்த்தவிடாமல் முடியாமல் மணல் குவாரி லாரிகளைக் கொண்டுவந்து சாலைகளை போலீஸார் தடுத்ததால் விவசாயிகளின் டிராக்டர்கள் முன்னேறிப் போகமுடியாமல் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் திருவாரூர் மாசிலாமணி, ""குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்படும், டிரைவர்மீது வழக்கு போடப்படும் என மிரட்டியிருக்கின்றனர். அ.தி.மு.க.வின் ஏவலாளாக காவல்துறை மாறிவிட்டதுதான் வேதனை'' என்றார்.

-எஸ்.பி.சேகர், ஜீவாதங்கவேல், பகத்சிங், செல்வக்குமார்,

மகேஷ்