புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர்.காங்கிரஸ் -பா.ஜ.க. கூட்டணி உடையுமா? என எதிர்பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி தொடருமா? பிரியுமா? என பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதற்கு காரணம் புதுவையில் இண்டியா கூட்டணிக்கு எந்த கட்சி தலைமை தாங்குவது என்கிற மோதல் விஸ்வரூபமெடுத்துள்ளது. 

Advertisment

2021 சட்டமன்றத் தேர் தலின்போது இண்டியா கூட்டணி யிலுள்ள காங்கிரஸ் 15 இடங்களிலும், தி.மு.க. 13 இடங்களிலும், சி.பி.எம்., வி.சி.க. தலா 1 இடத்திலும் களமிறங்கின. தேர்தல் முடிவில் தி.மு.க. 6 இடங்களிலும், காங்கிரஸ் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை தி.மு.க. பெற்றது. தேர்தல் முடிவுக்கு பின்னர் நீயா? நானா? என இரு கட்சிகளும் மோதிக்கொள்ளத் துவங்கினர். அதை சரிசெய்ய இரண்டு கட்சித் தலைமையும் முயற்சியெடுக்கவில்லை. 2024-ல் நாடாளுமன்றத் தேர்தலின்போது எம்.பி. சீட்டை காங்கிரசுக்கு விட்டுத்தந்தது தி.மு.க. காங்கிரஸ் மாநிலத் தலைவர் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுவிட்டார். அப்போது அடங்கியிருந்தவர்கள், மீண்டும் தனித்தனியாக பயணிக் கின்றனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் நமது தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டுமென்ற குரல்கள் புதுவை தி.மு.க.வில் அதிகரித் துள்ளன. கூட்டணி தொடர்ந்தால் நாம் 20 தொகுதிகளில் நிற்க வேண்டுமென்றும் பேசிவருகிறது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த மாதம் புதுவை காங்கிரஸ் தலைவர்கள் டெல்லிக்கு அழைக்கப் பட்டனர். அங்கே தி.மு.க.வுக்கு ஆட்சியில் பங்கெல்லாம் தரக்கூடாது, 20 சீட்களில் நாம் போட்டியிடவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். 

Advertisment

pondy1

இந்நிலையில் தி.மு.க.வில் புதுச்சேரி மாநிலத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.பி. ஜெகத்ரட்சகன், கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி, சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க.வை தங்களது கட்சி அலுவலகத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது காங்கிரஸை கடுப்பாக்கியுள்ளது. கூட்டணியில் 8 சதவீத வாக்குவங்கியுள்ள தி.மு.க., கூட்டணிக்கு தலைமை தாங்குமா? 26 சதவீதமுள்ள காங்கிரஸ் தலைமை தாங்குமா? என மாணிக்கம்தாகூர் எம்.பி. எழுப்பிய கேள்வி தி.மு.க.வினரை கொதிப்படையச் செய்துள்ளது. சமூக வலைத்தளத்தில் தி.மு.க.வினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். 

இதுபற்றி நாம் விசாரித்தபோது, "2021-ல் புதுவையில் 30 தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்த தகுதியான ஆட்கள் இல்லையென்பதால் தி.மு.க.விடம் பாதித் தொகுதிகளை தந்துவிட்டு 15 இடங்களில் களமிறங்கிய காங்கிரஸ், இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. 13 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 6 இடங்களில் வெற்றிபெற்றது. அதன்பின் கடந்த 4 ஆண்டுகளில் தொகுதிக்கு இரண்டு கோஷ்டிகளை உருவாக்கியுள்ளது காங்கிரஸ். அது காங்கிரஸ் நடைபயணம் சென்றபோதே வெளிப்பட்டது. ஆனால், கடந்த தேர்தலைப் போல் தி.மு.க.வுக்கு 13 இடங்கள் தரக்கூடாது. இம்முறை காங்கிரஸ் 20 இடங்களில் போட்டியிடவேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகப் பேசுகிறார்கள். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக தி.மு.க. இருப்பதோடு, மக்கள் மத்தியில் ஆளும் என்.ஆர்.சி. -பா.ஜ.க.வை எதிர்த்து போராட்டங்களை நடத்திவருகின்றது. தி.மு.க.வும் இப்போது எல்லா தொகுதியிலும் போட்டிபோடத் தகுதியானவர்களை உருவாக்கிவைத்துள்ளது. அதனால் இந்தமுறை 20 இடங்களில் தி.மு.க. போட்டியிட வேண்டும் என நினைக்கிறார்கள். இருப்பதோ 30 தொகுதி. இதில் ஆளுக்கு 20 தொகுதியைப் பெறவேண்டுமென  போட்டிபோடுவதால்தான் சிக்கலே. 

Advertisment

pondy2

அதோடு, இங்கு நான்தான் பெரிய கட்சி என்ற மனப்பான்மையில் கூட்டணிக் கட்சிகளை அணுகுகிறது காங்கிரஸ். தேர்தலை முன்னிட்டு பாண்டிச்சேரியிலுள்ள 23 தொகுதிகளில் நடைபயணம் போன காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இருவரும் கூட்டணியிலுள்ள கட்சிகளை சம்பிரதாயத்துக்குக்கூட அழைக்கவில்லை, இது கூட்டணிக் கட்சியினரை அதிருப்தியடையச் செய்தது. இந்நிலையில்தான் சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க.வின் புதுவை மாநிலச் செயலாளர்களை தி.மு.க. அலுவல கத்துக்கு அழைத்து தொகுதி குறித்து பேசியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுவை மாநில செயலாளர் சலீம் தலைமையிலான நிர்வாகிகள், தங்கள் கட்சிக்கு  தட்டாஞ்சாவடி, காமராஜ் நகர், நெல்லித்தோப்பு, உழவர்கரையை குறிப்பிட்டு, இதிலிருந்து இரண்டு தொகுதிகள் தேவையெனக் கேட் டுள்ளனர், இதேபோல் வி.சி.க.வும் பட்டியல் தந்துள்ளது. தி.மு.க.வின் இந்த செயல் காங்கிரஸை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 

இதுகுறித்து தி.மு.க. நிர்வாகி களிடம் கேட்டபோது, "கூட்டணிக் கட்சிகள் அனைத்துக்கும் தான் அழைப்பு விடுக்கப்பட்டது, காங்கிரஸ் வரவில்லை. கடந்த தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் ஒருமுறை காங்கிரஸ் அலுவலகத் திலும், மறுமுறை தி.மு.க. அலுவல கத்திலும் நடக்கும், அதன்படிதான் இப்போதும் நடக்கிறது. எங்கள் கட்சி வளர்ந்துள்ளது, கூடுதல் இடத்தில் நிற்க விரும்புகிறோம்'' என்கிறார்கள்.

உங்களை நம்பி நாங்கள் இல்லை. நீங்கள் கூட்டணியிலிருந்து வெளியே போனால் எங்களுக்கு கவலையில்லை. மற்ற கட்சிகளோடு சேர்ந்து நாங்கள் தேர்தலை சந்திப் போம் என காங்கிரஸுக்கு எச்சரிக்கை செய்கிறது தி.மு.க.

"காங்கிரஸ் -தி.மு.க. மோதலால் என்.ஆர்.சி. -பா.ஜ.க. கூட்டணி தெம்பாக இருக்கிறது. தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் ஈகோ, சுலபமாக கூட்டணியை உடைக்கிறது' என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.