முள்ளிவாய்க்காலோடு முடிந்து போய்விடவில்லை தமிழீழக் கனவு. அது புதிய முயற்சியாக உருப்பெற்றிருப்பதை அண்மையில் ஈழத்தில் நடந்த பேரணி மெய்ப்பித்துள்ளது. ஈழத்தின் இன்றைய நிலவரம் -சிக்கல்கள் குறித்து நக்கீரனுக்குப் பேட்டி அளித்தார் மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர்.
இந்தியாவிற்கு இவ்வளவு அருகில் இருக்கும் இலங்கை சீனாவின் பக்கம் சாய்வது சாத்தியமா?
சாத்தியமா? என்று கேட்கும் காலமெல்லாம் முள்ளிவாய்க்காலோடு முடிந்துபோய்விட்டது. தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு பரிசாகக் கொடுத்தது இந்தியா. இலங்கையோ, ஈழத்தமிழர்களுக்கு சொந்தமான நெடுந்தீவு, நயினாதீவு, அனலைத்தீவு என மூன்று தீவுகளை கடந்த சனவரி 18-ஆம் திகதி சீனாவுக்கு வழங்கியுள்ளது. இந்திய கடல் எல்லை யில் இருந்து 18 மைல் தொலைவில் இருக்கும் இத்தீவுகளில் சீன நிறு வனங்கள் வந்தமர்ந்து மின்னுற்பத்தி செய்யப்போகின்றனவாம். மின்னுற்பத்தி மட்டும் செய்வார்கள் என்பதை பச்சிளங்குழந்தை கூட நம்பாது. சீனா விற்கு கையளிக்கப்பட்ட அன்றய தினத் தில்தான் தமிழக மீனவர்கள் நான்கு பேர் திட்டமிட்டு சுட்டுக் கொல்லப் பட்டார்கள். இலங்கை-சீன நட்புக்காக ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, தமிழக மீனவர்களும் பலியிடப்படுகிறார்கள்.
சீனா கால்பதிக்க இலங்கை பட்டுக்கம்பளம் விரிக்கின்றது. ஏற்கெனவே போட்ட ஒப்பந்தத்தை மீறி கிழக்கு ஸ்ரீலங்காவின் கொழும்பில் உள்ள துறைமுகத்தின் முனையத்தைக்கூட கொடுக்காமல் கடந்தவாரம் கைவிரித்து விட்டது. இனி அந்த மூன்று தீவுகள் இந்தியாவுக்கு எதிராக கடலில் மிதக்கும். சீனாவின் கண்ணிவெடிகளாக மாறிப் போகும். புலிகள் இருந்திருந்தாலோ, அல்லது தமிழர்களுக்குத் தாயக நிலம்மீது இறைமை இருந்திருந்தாலோ இது நடந்திருக்க முடியுமா? புலிகள் ஈழத்திற்கு மட்டுமல்ல இந்தியாவையும் காத்துநின்ற எல்லைச்சாமிகளாக பாக் நீரிணையில் இருந்தார் கள். இன்றோ சீனப் பூதத்தின் அந்தப்புரமாக ஆகிவிட்டது இலங்கை. கிறுகிறுவென ஏறும் தண்ணீர் கழுத்துக்கு மேலே போய்க்கொண்டி ருக்கிறது, மூக்கு எட்டிவிடும் தூரம்தான், பின் மூச்சைஅடைக்கும். ஈழத்தமிழர்களின் உரிமை என்று முழுமையாக நிலைநாட்டப்படுகிறதோ அன்றுதான் இந்த பிராந்தியத்தில் இந்தியாவிற்கு எதிரான சீனா உள்ளிட்ட வல்லரசுகளின் ஆட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்படும்.
இந்தியாவுடன் ஒப்புக்கொண்ட கொழும்பு துறைமுகத்தின் கிழக்குமுனைய ஒப்பந்தத்தில் இருந்து இலங்கை அரசு பின்வாங்குவது ஏன்?
சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள துறைமுகத்தின் கிழக்குமுனையத்தின் 51%ஐ தம்மிடம் வைத்துக்கொண்டு மிகுதி 49% முதலீட்டுக்கு இந்திய-ஜப்பானிடம் 2019-இல் இலங்கை அரசு ஒப்பந்தம் போட்டிருந்தது. ஆனால், ஆசியாவின் வலிமைமிக்க நாடுகளான இந்தியாவுடனும் ஜப்பானுடனும் போட்டுக் கொண்ட இந்த ஒப்பந்தத்தை சின்னஞ்சிறிய இலங்கையால் இந்திய பெருங்கடலில் வீசி எறிய முடிந்தது எப்படி? இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டதை சிங்களத் தொழிலாளர்கள், ஆளுங்கூட்டணியில் உள்ள கட்சிகள், எதிர்க் கட்சிகள் எதிர்ப்பதாக சனாதிபதி கோத்தபாய சொல்கிறார். அப்படி யென்றால், கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையம் 100%ம், அம்பாந்தோட்டை துறை முகமும் சீனாவிடம் இருப்பதற்கு சிங்களர்களிடம் இருந்து எதிர்ப்பு ஏன் வரவில்லை? ஏனெனில் இந்தியாவை எதிர்ப்பது என்பது சிங்களவர்களின் இரத்தத்தில் ஊறிப்போன ஒன்றாகும். விவேகானந்தர் அடிகள், மகாத்மா காந்தியடிகள் போன்றோர் இலங்கைக்கு வந்தபோது சிங்களர்கள் எதிர்த்தார்கள். இராஜீவ்காந்தியை சிங்கள இராணு வத்தினர் ஒருவர் துவக்கால் அடித்ததற்காக, அவர் சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டார். இந்திய இலங்கை உடன்படிக்கையின்படியான 13-ஆவது திருத்தத்தை இலங்கை மதித்ததா? இவையெல்லா வற்றையும்விட 1971-இல் இந்திய-பாகிஸ்தான் போரின்போது இலங்கை அரசு பாகிஸ்தானையே வெளிப்படையாக ஆதரித்தது. ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்துவருகிறார்கள் என்பதால்தான் இலங்கை பேரினவாத அரசால் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு இனஅழிப்புக்கு ஆளாகிவருகின்றனர். இனியும் தமிழினஅழிப்பை தடுக்காமல் இந்தியா வேடிக்கை பார்க்கலாமா?
ஐ.நா. மனிதவுரிமை ஆணையத்தின் கூட்டத் தொடர் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை குறித்து ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை எச்சரிக்கும்விதமாக உள்ளதே?
இதுவரை வெளிவந்த ஐ.நா. மனிதவுரிமை ஆணையாளர் அறிக்கைகளிலோ அல்லது ஐ.நா. தீர்மானங்களிலோ பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் ஒருபோதும் அடையாளப்படுத்தவில்லை. ஆனால் ஆணையாளரினால் தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழர்களுக்கு பிரச்சினை நடைபெற்றிருக்கின்றது என நான்கு தடவைகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் குற்றம் இழைத்த படையினரின் சொத்துக்களை முடக்கவேண்டும், அவர்களுக்கு பயணத் தடை விதிக்க வேண்டும் போன்ற விடயங்கள் வலி யுறுத்தப்பட்டுள்ளது மிகமுக்கியமாக அவரின் அறிக்கையில் சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வது பற்றி நாடுகள் சிந்திக்கவேண்டும் என அறிக்கையின் முடிவுரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிறீலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கைக்குஆணையாளரின் அறிக்கை வலுச்சேர்த்துள்ளது.
ஆணையாளரின் அறிக்கையில் உள்ளடங்கும் விடயங்கள் தீர்மானமாக மாறுமா?
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை காட்டமானதாக வந்திருந்தாலும், ஜெனீவாவில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மானத்திலும் அந்த பரிந்துரைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும். வழமையாக ஆணையாளரின் அறிக்கை சில விடயங்களை வலியுறுத்தினாலும், தீர்மானம் மென்மையாக இருப்பதைத்தான் நாம் கடந்த காலங்களில் பார்த்திருக்கின்றோம். இணை அனுசரணை வழங்குவதாகச் சொல்லி கடுமையான தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யும் உபாயத்தையே சிறிலங்கா அரசாங்கம் கடந்த காலங்களில் ஐ.நா.வில் கையாண்டு வந்திருக்கின்றது.
இம்முறை தீர்மானத்தை பலவீனப் படுத்தி காலத்தை இழுத்தடிக்கும் இலங்கை அரசின் தந்திரத்திற்குள் சிக்காமல் ஆணை யாளர் தெரிவித்திருக்கும் ஆரோக்கியமான -பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தக்கூடிய விடயங்களையும் உள்ளடக்கியதாகவே புதிய தீர்மானம் அமைய வேண்டும். இல்லையெனில் மனித உரிமைகள் பேரவை மீதான நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்துவிடுவார்கள் என்பதே உண்மை யாகும்.
ஈழத்தில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் வெற்றி குறித்து?
சிறீலங்கா அரசின் இன அழிப்புக்கு எதிராக ஒட்டுமொத்த ஈழமே திரண்டு இருக்கிறது. இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும், தமிழர் பகுதிகளில் தொடரும் சிங்கள அரசின் ஆக்கிரமிப்புக்கள் தடுக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கை களை உள்ளடக்கி இந்த எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. எமது தாயக பகுதிகளின் எல்லைகளை அடையாளப் படுத்தும் விதமாக கிழக்கில் பொத்துவில் தொடக்கம் வடக்கில் பொலிகண்டிவரை என்ற முழக்கத்தோடு இந்தப் பேரணி இடம் பெற்றுள்ளது.
பேரணியைத் தடுத்து நிறுத்த இலங்கை அரசு மேற்கொண்ட அனைத்து அடக்கு முறைகளையும் தகர்த்தெறிந்து இலட்சத்துக்கும் அதிக மான தமிழ் பேசும் மக்கள் ஓரணியில் திரண்டு உரிமைக்குரல் எழுப்பியுள்ளார்கள். இந்தப் பேரணி சிங்கள தேசத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளதோடு, உலகத் தமிழர்கள் மத்தியில் நீதிக்கான பயணத்தில் புதிய நம்பிக்கையையும் தந்துள்ளதோடு அனைத்துலக சமூகத்தாலும் இந்தபேரணி அதிகம் கூர்ந்து கவனிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேரணியின் மூலம் அங்குள்ள எமது மக்கள் அனைத்துலக சமூகத்தின் மூலமே நீதி கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையை உலக சமூகத்தை நோக்கி விடுத்துள்ளனர். எனவே அங்குள்ள எமது மக்களின் கோரிக்கைகளை ஏற்று ஐ.நா.வில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கவேண்டும். இதற்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரின் குரல்களும் ஒலிக்கவேண்டும்.
சீனாவின் கொரோனா தடுப்பூசியை போடுவதற்கு ஈழத் தமிழர்கள் தயங்குவதாக அறிய முடிகிறதே?
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி சிங்கள இராணுவத்தினருக்கே முன்னுரிமை அளித்து போடப் பட்டது. தற்போது சீனாவிடமிருந்து தடுப்பூசிகள் இலங்கைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்... தமிழ்மக்கள் மத்தியில் கடுமையான அச்சம் எழுந்துள்ளது. 2009 இறுதிப் போரின்போது சீனாவிடம் இருந்து வாங்கிய இராசயன ஆயுதங்களைப் பயன் படுத்தி தமிழர்களைக் கொன்றொழித்த இலங்கை அரசு தடுப்பூசியைக் கூட இனஅழிப்பு வேலைக்கு பயன்படுத்தி விடும் என்ற அச்சம் எங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இலங்கை இராணுவத்தின் புனர்வாழ்வு முகாம்களில் சென்றுவந்த போராளிகளுக்கு ஆபத்தான, மெல்லக் கொல்லும் ஊசிகள் போடப்பட்டதால்தான் போராளிகள் மர்மமான முறையில் மரணமடைந்து வருகின்றனர் என்ற சந்தேகங்களும் எமது மக்கள் மத்தியில் இருப்பதால் சீனாவின் கொரோனா தடுப்பூசி குறித்த அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.
-கீரன்