முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசின் முக்கிய சவால் கொரோனாவைச் சமாளிப்பது என்றால், கூடவே இணைந்து வருவது அதனால் பாதிக்கப்பட்டிருக்கும் கல்வி.

பள்ளிக்கல்வித் துறைக்கு இளமைத் துடிப்புள்ள புதியவரான அன்பில்மகேஷ் பொய்யாமொழியும், உயர்கல்வித் துறைக்கு ஏற்கனவே அதே துறையில் அனுபவம் பெற்ற பொன்முடியும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் முன்னுரிமை கொடுத்து உடனே கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை தமிழக நலனில் அக்கறைகொண்ட ஒரு கல்வியாளராக எடுத்துரைப்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.

ed

Advertisment

பள்ளிக்கல்வி

சென்ற ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறையில் நடந்த குழப்படிகள் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு அறிவிப்பை ஆராயாமல் வெளியிடுவது, பிறகு கல்வியாளர்களும் மக்களும் எதிர்த்தவுடன் அதை அப்படியே கைவிடுவதும் என தொடர் அந்தர்பல்டிகள், மாணவர்கள் வாழ்க்கையை ரணகளப்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம், தவறான அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதல்களே. எனவே சரியான அதிகாரிகளை உரிய இடத்தில் அமர்த்துவதும் அனுபவம் வாய்ந்த கல்வியாளர்களின் ஆலோசனைகளைக் கேட்பதும், சரியான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும்.

முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதற்காகவே ஒரு விஷயத்தைக் கைவிடுவது சரியல்ல, "கல்வித் தொலைக்காட்சி தொடர்ந்து மேலும் சிறப்புடன் ஒளிபரப்பாகும்' என்கிற பள்ளிக் கல்வி அமைச்சரின் அறிவிப்பு ஒன்றிலேயே, இந்த அரசு பரந்த மனப்பான்மையுடன் சரியான திசையில் பயணிக்கப்போகிறது என்ற நம்பிக்கை நமக்கு பிறக்கிறது.

Advertisment

கலைஞரால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்ற ஆட்சியில் டாய்லெட் வசதிகூட இல்லாத அளவுக்கு கேவலப்படுத்தப்பட்டதை உடனடியாக சரிசெய்ய வேண்டிய பொறுப்பு, அந்த நூலகத்தை தன்வசம் வைத்திருக்கும் பள்ளிக் கல்வித் துறைக்கு உள்ளது.

educ

அண்ணா நூற்றாண்டு நூலகம் மட்டுமில்லாது, ஒட்டுமொத்த தமிழக கிராமப்புற, அடித்தட்டு மக்களின் கல்வியில் பெண் கல்விக்குத் தடையாக இருப்பதே பெரும்பாலான அரசு பள்ளிகளில் மகளிர் கழிப்பறை வசதிகள் இல்லை என்பதுதான். இதன் அத்தியாவசியத்தை உணர்ந்து உடனடியாக புதிய அரசு இதைச் செயல்படுத்த வேண்டும்.

தற்போது அரசின் உடனடி கவனத்தில் இருப்பவை, பத்தாம் வகுப்பு மற்றும் +2 பொதுத் தேர்வுகள்தான். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இந்த ஆண்டு இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில், மதிப் பெண்களை எப்படி கணக்கிடுவது என்பதுதான் விவாதப் பொருளாகி யிருக்கிறது. காரணம், பத்தாம் வகுப்பு என்பது பாலிடெக்னிக் சேர்வது உள்பட பல விஷயங்களுக்கு கல்வி தகுதியாக இருக்கிறது.

இதைவிட முக்கியமானதாக, நம் பள்ளிகளில் +1 வகுப்பில் குரூப் தேர்வு செய்ய பத்தாம் வகுப்பு மதிப்பெண்களைத்தான் அடிப்படையாக வைத்துக்கொள்வதால், பல தனியார் பள்ளிகள் அரசு அறிவிப்பையும் மீறி சத்தம் போடாமல் தங்கள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்திய தகவல்களும் பரவின. எனவே இந்த ஆண்டைப் பொறுத்தவரை +1 மாணவர்கள் விருப்பப்படி அவர்கள் கேட்கிற குரூப் கொடுக்கவேண்டும் என்று உத்தரவிடுவது மதிப்பெண் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

+2 பொதுத்தேர்வுகளைப் பொறுத்தவரை, நாம் அவ்வளவு சுலபமாக முடிவெடுத்துவிட முடியாது. இது ஒவ்வொரு மாணவரின் உயர்கல்விச் சேர்க்கையை முடிவு செய்யப்போகிற மதிப் பெண்கள் சம்பந்தப்பட்டது என்பதால் தடாலடியாக எந்த முடிவும் எடுத்துவிட முடியாது. நல்லவேளையாக +2 பிராக்டிகல் தேர்வுகள் ஏற்கனவே முடிந்துவிட்டதால் 6 பாடங்களுக்கான தேர்வுகளை மட்டும் எழுதவேண்டும். தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதென்பது கிராமப்புற மற்றும் அடித்தட்டு மாணவர்களுக்கு எதிரானதாக அமைந்துவிடும். எனவே சற்று காலதாமத மானாலும் மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழல் வரும்வரை காத்திருந்து, நேரடித் தேர்வுகளாக நடத்துவதுதான் சரியாக இருக்கும். அதிலும் கேள்வித்தாள் வடிவமைக்கும் வல்லுநர்கள் தங்கள் மேதாவித்தனத்தைக் காண்பிக்கும் நோக் கத்தைத் தவிர்த்து, மாணவர்களின் இன்றைய கடுமை யான ஆன்லைன் கல்வி சூழலுக் கேற்றவாறு யதார்த்தமாக இருப்பது அவசியம்.

educa

குறுகிய காலத்தோடு முடிந்து விடும் என்று நாம் எதிர்பார்த்த ஆன்லைன் கல்வி ஆண்டுகள் கணக்கில்லாமல் தொடர்வதால், இதுசார்ந்து கற்றலில் ஏற்படும் சமூக ஏற்றத்தாழ்வு, மாணவர்களின் மனஅழுத்தம் ஆகியவை நன்கு ஆராயப்பட்டு, ஆன்லைன் கல்விக் கான முறையான வழிகாட்டு நெறி முறைகள் வகுக்கப்படவேண்டும்.

கடந்தமுறை கலைஞர் ஆட்சியில் நீண்ட ஆய்வுகளுக்குப் பின் சமச்சீர் கல்வி உருவானது எனினும், ஆட்சியின் நிறைவு காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட காரணத்தால், அடுத்துவந்த ஆட்சியில் அது முறையாக அமல்படுத்தப்பட வில்லை. சமச்சீர் கல்வியின் அடிப்படையே ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன் போர்டு, ஆங்கிலோ இந்தியன் போர்டு என இருந்த அனைத்தையும் ஒன்றாக்கி, தமிழ்நாடு என்றாலே சமச்சீர் என்கிற ஒரே போர்டுதான் என்ற நிலையை உருவாக்குவது தான். எனினும் இன்றளவும் தனியார் பள்ளிகள் 'மெட்ரிகுலேஷன் பள்ளி' என்கிற பெயரை பயன் படுத்துவதை தடைசெய்ய அரசு முயற்சிக்கவில்லை. இதன்காரணமாக அரசு பள்ளிகள் தரம் குறைந்தது போலவும், மெட்ரிகுலேஷன் என்று பெயர் கொண்ட தனியார் பள்ளிகள் தரம்உயர்ந்தது போலவும் ஒரு மாயை மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும்.

அதேபோல் ஒவ்வொருமுறை பாடத்திட்டத் தில் ஏதாவது மாற்றம் செய்யும்போதும் ஈஇநஊ பாடத்திட்டத்தை பார்த்து., அதுதான் உலகத்தில் சிறந்தது என்பது போலவும் அதுபோலவே நாமும் மாற்றவேண்டும் என்றும் முயற்சி செய்வதுண்டு. அதுவும் ஒரு மாயைதான். சொல்லப்போனால் எதையெல்லாமோ காப்பியடித்த நாம், ஈஇநஊ பாடத்திட் டத்தில் உள்ள ஒரு நல்ல விஷயத்தை இதுவரை கண்டு கொள்ளவில்லை. ஈஇநஊ பாடத் திட்டத் தில் +2 மாணவர் களுக்கு முதன்மைப் பாடங்கள் 4 மற்றும் மொழிப் பாடமாக ஆங்கிலம் என மொத்தம் 5 பாடங்களுக்கு 500 மதிப்பெண் களுக்கு மட்டுமே தேர்வு எழுதுவதால் அவர்களால் முதன்மைப் பாடங்களில் கவனம் செலுத்தி அவற்றில் அதிக மதிப்பெண்கள் பெற்று, உயர்கல்வி சேர்க்கையில் எளிதாக ஜொலிக்க முடிகிறது. ஆனால் ஸ்டேட்போர்டில் தமிழ்மொழி பாடம் சேர்ந்து 6 பாடங்களுக்கு படிக்கவேண்டியிருப்பதால் சுமை அதிகமாகி முதன்மைப் பாடங்களில் கவனம் செலுத்த முடிவதில்லை. நமது பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புவரை படிக்கும் தமிழ்ப்பாடமே தரமானது என்பதால் +2 அளவில் நாமும் 5 பாடங்களாக குறைக்கலாம்.

ed

சென்ற ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர் களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிய ஒரு விஷயம், +1 வகுப்பில் பொதுத்தேர்வு என்பது. ஏற்கனவே பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு, +2 பொதுத்தேர்வு எனும் நிலையில் இடையில் ஒரு வருடம்தான் மாணவர்கள் கொஞ்சம் இளைப்பாற முடிந்தது. திடீரென +1 பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதால் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு பெரிய அளவில் மன அழுத்தத்தை உண்டாக்கிவிட்டது. அதிலும்கூட அறிவிக்கும்போது +1 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று சொல்லிவிட்டு, பிறகு அது தேவையில்லை என்று மாற்றினார்கள். இந்த நிலையில் மாணவர்களை தொடர்சிரமத்திற்கு உள்ளாக்கும் +1 பொதுத்தேர்வு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

வசதி வாய்ப்பற்றவர்கள்கூட சக்திக்கு மீறிய கட்டணம் கட்டி தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதன் நோக்கமே, தங்கள் பிள்ளைகள் நல்ல ஆங்கிலம் பேசவேண்டும் என்பதற்காகத்தான். இதை உணர்ந்த அரசு, இங்கிலீஷ் மீடியம் வகுப்புகளை அரசு பள்ளிகளில் தொடங்க, அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் இந்த வகுப்புகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

அதேபோல், இன்றளவும் தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு பாஸ் பண்ணவே சிம்மசொப்பனமாக இருப்பது ஆங்கிலப் பாடம்தான். அதை கஷ்டப்பட்டு பாஸ் செய்த பிறகும் அந்த மாணவர்கள் கல்லூரி காலத்தில்கூட ஆங்கிலம் பேசத் தடுமாறும் நிலைதான் உள்ளது. எனவே ஆங்கிலப் பாடத்தையே வெறுமனே மனப்பாடம் செய்கிற தியரியாக இல்லாமல் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுத் தருகிற பிராக்டிகல் பாடமாக வடிவமைக்க வேண்டும்.

"நீட்' வேண்டாம் என்பதுதான் நம் அடிப்படைக் கொள்கை என்றாலும் அது நீக்கப்படுகிறவரை, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு இருக்கிறவரை அவர்களுக்கான இலவச நீட் கோச்சிங் கண்டிப்பாக தொடர்வதோடு, இன்னும் சிறப்பான முறையில் அதைச் செயல்படுத்தவேண்டும். இந்த இடத்தில் இன்னொரு நுழைவுத்தேர்வு பற்றிப் பேசவேண்டியது அவசியமாகிறது. என்ஜினியரிங் படிப்புக்கு அகில இந்திய அளவில் தலைசிறந்த கல்வி நிறுவனங் களான மத்திய அரசின் ஒஒப, சஒப போன்றவற்றில் சேர நடத்தப்படும் ஓஊஊ நுழைவுத்தேர்வு பற்றி அரசு பள்ளி மாணவர்களுக்குத் தகவல்கூட தெரிவதில்லை. அதற்கு இன்னொரு காரணம் இந்ததேர்வு, கால காலமாக ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இப்போதுதான் தமிழிலும் எழுதும் வாய்ப்பு அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது. எனவே நமது அரசு பள்ளி மாணவர்களும் பெரிய எண்ணிக்கையில் ஒஒப, சஒப சேர வசதியாக அவர்களுக்கு இலவச ஓஊஊ கோச்சிங் வழங்கப்பட வேண்டும்.

உயர்கல்வி

உயர் கல்வித்துறை சந்திக்கும் சவால்களும் சற்றும் குறைந்தவை அல்ல. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் குளறுபடிகளை முதலில் கையிலெடுத்து அதற்கு மாற்றுவழிகள் சொல்லப் பட்டிருப்பது ஆறுதல் தருகிறது. எனினும் அதைவிட பெரிய பூதமான அரியர்ஸ் தேர்வு விவகாரம் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று.

அடுத்து நாம் மிகக்கவனமாக அக்கறை செலுத்தவேண்டிய விஷயம், அண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதில்தான். இந்தமுறையும் வெளிமாநிலத்தவர் ஒருவரை அந்தப் பதவியில் உட்கார விட்டுவிடாமல் தகுதியான, நேர்மையான, திறமையான ஒரு தமிழர் தேர்வாகும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

"புதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் நுழைய வாய்ப்பில்லை' என உயர்கல்வி அமைச்சர் சொல்லியிருப்பது கேட்பதற்கு இதமாக இருந்தாலும் அது சாத்தியமா என்பது தெரியவில்லை. "நீட்' வேண்டாம் என நாம் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், புதிய கல்விக்கொள்கை போடும் புது அணுகுண்டு, கலை அறிவியல் உள்பட உயர் கல்வியில் சேரும் அனைத்து பட்டப் படிப்புகளுக்குமே நுழைவுத்தேர்வு கொண்டுவரப்படுகிறது என்பதுதான். இது ஒட்டுமொத்த கிராமப்புற, அடித்தட்டு மக்களின் கல்வியை நிர்மூலமாக்கிவிடும் என்பதால், இதை கொள்கைரீதியாக இப்போதே எப்படித தடுக்கப்போகிறோம் என்று உடனடியாக திட்டமிடவேண்டும்.

கடந்த ஆட்சியில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் அட்மிஷனுக்கு சென்ற வருடம் முதல்முறையாக சிங்கிள் விண்டோ கவுன்சிலிங் முறையை அறிமுகப் படுத்தியிருந்தார்கள். இதன் மூலம் அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் போலவே ஒரே ஒரு விண்ணப்பத்தின் மூலம் தமிழகத்தின் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரி களுக்கும் அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் ஆன்லைனிலேயே விண்ணப்பித்து சிரமமில்லாமல் சீட் பெறமுடியும். சென்ற ஆண்டின் நிறை குறைகளை ஆராய்ந்து இந்த வருடம் அதே முறையை தொடர வேண்டும்.

ஸ்காலர்ஷிப் தொகையை மட்டுமே நம்பி தங்களது உயர்கல்வியைத் தொடரும் லட்சக் கணக்கான பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர்களின் ஸ்காலர்ஷிப் தொகை, கடந்த பல ஆண்டுகளாகவே உரிய காலத்தில் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை முறைப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை.

அடுத்த முக்கியமான தேவை, தமிழகத்தின் பொறியியல் கல்வியை முறைப்படுத்துவது. 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் கவுன்சிலிங் முடிந்தவுடன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதும், ஏராளமான பொறியியல் கல்லூரிகள் தொடர்ச்சியாக மூடப்படுவதும் ஆரோக்கியமானதல்ல. இந்த உள்கட்டமைப்பு வசதிகளை நம் மாநிலத்திற்குப் பயன்படும் வகையில் என்ன மாதிரியான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்குப் பயன்படுத்த முடியும் என்று வல்லுநர் குழுவை வைத்து ஆராயவேண்டும்.

நீண்ட காலமாகவே தீர்க்கப்படாமல் இருக்கும் இன்னொரு பிரச்சினை, பல்கலைக்கழகங்கள் தங்கள் எல்லைதாண்டிச் செயல்படுவது. அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமே தனது எல்லையை தமிழகம் முழுக்க கொண்டுள்ளது. கலை அறிவியல் பல்கலைக் கழகங்களைப் பொறுத்தவரை, தங்கள் சுற்றுவட்டார சில குறிப்பிட்ட மாவட்டங்களை வரையறையாகக் கொண்ட கல்லூரிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் கொடுக்கும் உரிமை உண்டு. இந்தவகையில் தமிழகத்தில் ஒரு கலை அறிவியல் கல்லூரி தொடங்க எவ்வளவு நிலம் வேண்டும், எத்தனை சதுர அடியில் கட்டிடங்கள் வேண்டும் என்றெல்லாம் சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டு, கல்லூரி கல்வி இயக்ககம் அனுமதி கொடுத்து பிறகு அந்தப் பகுதியில் உள்ள பல்கலைக்கழகம் அங்கீகாரம் கொடுத்த பின்பே கல்லூரி நடத்த முடியும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக கோவை பாரதியார், காரைக்குடி அழகப்பா போன்ற பல்கலைக்கழகங்கள், சென்னையின் மையப்பகுதியில் ஒரு சிறு அறையில் வகுப்பு நடத்துபவர்களை கல்லூரி என்கிற பெயரில் அங்கீகாரம் அளித்து பட்டம் கொடுக்கிறார்கள். இது அவர்களின் எல்லை தாண்டிய செயல். இங்கு சென்னை பல்கலைக்கழகம் மட்டுமே செயல்பட முடியும். இந்த வியாபாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

ஏற்கனவே கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகத்தை, புதிய கல்வி அமைச்சர்கள் இன்னும் உச்சத்துக்கு எடுத்து செல்வார்கள் என்று நம்புவோம்.