மாணவிகளுக்கு ஆசிரியர்கள் தான் பாலியல் டார்ச்சர் செய் வதை பார்த்திருக்கிறோம். ஆனால் இப்ப ஆசிரியைகளுக்கே பாலியல் டார்ச்சர் நடந்து வருகிறது

ee

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, வத்தலக்குண்டு, வேடசந்தூர் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் வேடசந்தூர் கல்வி மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை, ரெட்டியார்சத்திரம் ஆகிய நான்கு ஒன்றியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் வேடசந்தூர் ஒன்றியத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு வட்டார கல்வி அலுவலராக இருக்கக்கூடிய அருண்குமார் மீது 3 தலைமை ஆசிரியைகள், வேடசந்தூர் கல்வி மாவட்ட அதிகாரி கீதா மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கருப்புச்சாமி யிடம் பாலியல் புகார் கொடுத்தனர். இதன்பேரில் வட்டார கல்வி அலுவலரான அருண்குமாரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளனர்

இது சம்பந்தமாக பாலியல் புகார் கொடுத்த தலைமை ஆசிரியைகள் உட்பட சில ஆசிரியைகளிடம் கேட்டபோது... "எங்க பகுதியில் உள்ள சக ஆசிரியர்களை அண்ணன் என்று தான் கூப்பிடுவோம். அதற்கு வட்டார கல்வி அலுலரோ, (பி.இ.ஓ.) "அவர்களை அண்ணன் என்று நீங்கள் அழைத்தால், அவர்கள் எல்லாம் எனக்கு மைத்துனர்கள். அப்போ நான் உங்களுக்கு என்ன வேண்டும் என்று தெரிந்து கொள்ளவேண்டும்' என்ற தவறான நோக்கத்தில் பேசுவார்.

Advertisment

eo

அதுபோல், "கணவர் இறந்து தனியாக எப்படி இருக்கிறீர்கள்?' எனக்கூறி மனதை புண்படும்படியும் பேசுவார். அதுபோல் மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்க அலுவலகம் செல்லும்போது சில தலைமை ஆசிரியைகளை இருக்கையில் அமரச் சொல்லி, "டீச்சர் நீங்கள் எல்லாம் எனக்கு எட் டாக்கனியாக இருக்கிறீர்கள்' என்று இரட்டை அர்த்தத்தில் பேசுவார். அதுபோல் ஆபாச படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தும் வந்தார். இந்த கொரோனா காலத்தில் தலைமையாசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்துபோக வேண்டுமென்று கல்வித்துறை அறிவித்து, அதன் பெயரில் நாங்களும் வந்துபோகும் நிலையில்... அவ்வப்போது ஆய்வு என்ற பெயரில் திடீரென பி.இ.ஓ. பள்ளிகளுக்கு வந்து இரட்டை அர்த்தத்தில் பேசி எங்களை பாலியல் டார்ச்சர் செய்வார். ஒருசில பள்ளியில் கதவை சாத்தி விட்டு தலைமை ஆசிரியையிடம் அத்துமீறி நடக்க முயற்சி செய்திருக்கிறார். அதற்கு சரியான பாடம் கற்பித்திருக்கிறார்கள். இப்படி எங்க வட்டார கல்வி அலுவலரான அருண்குமார், தொடர்ந்து பாலியல் டார்ச்சர் செய்துவந்தது கண்டு மனம் நொந்து போய்தான் எங்களுடைய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டணி சங்கத்திலும் மற்றும் தோழர் பாலபாரதியிடமும் புகார் செய் தோம். அதன் அடிப்படையில்தான் ஆசிரியர்களும் சங்க நிர்வாகிகளும் போராட்டத்தில் குதித்ததன் பேரில் தற்காலிகப் பணி நீக்கம் மட்டும் செய் திருக்கிறார்களே தவிர, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்று கூறினார்கள்

மதுரை மாவட்டத்தில் இந்த பி.இ.ஓ. பணிபுரிந்தபோது பாலியல் டார்ச்சர் கொடுத்தார் என்ற அடிப்படையில்தான் குஜிலியம்பாறைக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். அங்கேயும் இரண்டு பெண்களிடம் பாலியல் டார்ச்சர் செய்ததின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்துதான் வேடசந்தூர் வட்டார கல்வி அலுவலராக வந்த eeஅருண்குமார், தொடர்ந்து அங்குள்ள சில தலைமையாசிரியை களிடம் பாலியல் டார்ச்சர் செய்திருக்கிறார். அதன் அடிப்படையில்தான் அவர்கள் புகார் கொடுத் துள்ளனர். இப்படி இதுவரை 27 பெண்களிடம் இவர் பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. தற்பொழுது துறைரீதியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தாலும் கூட, விசாரணைக் கமிட்டி மூலம் உயர்அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். எல்லா மாவட்டங்களிலும் விசாகா கமிட்டி வைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன்படி ஒவ்வொரு துறைகளிலும் புகார் பெட்டி அமைக்க வேண்டும். ஆனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அதைச் செய்ய தவறிவிட்டனர். தற்பொழுது முதல்வ ராக இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலினாவது ஒவ்வொரு துறை யிலும் புகார் பெட்டி வைக்கவேண்டும், அதிலும் குறிப்பாக கல்வித்துறை, சுகா தாரத் துறையில் அவசியம் வைக்கவேண்டும். அதன் மூலம்தான் இப்படி துறைரீதியாக டார்ச்சர் செய்யும் அலுவலர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க முடியும்'' என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான தோழர் பாலபாரதி.

Advertisment

இந்த குற்றச்சாட்டுகளைப் பற்றி வட்டார கல்வி அலுவலர் அருண்குமாரிடம் கேட்ட போது.... "பாலியல் புகார் கொடுத்த மூன்று பள்ளி தலைமை ஆசிரியைகள் பல்வேறு முறைகேடு களில் ஈடுபட்டது குறித்து, அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்டதின் அடிப்படையில் என்மீது பொய்யான பாலியல் புகார் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்'' என்று கூறினார்

இதுபற்றி மாவட்ட கலெக்டர் விசாகனிடம் கேட்டபோது, "தலைமை ஆசிரியைகள் கொடுத்த அந்த பாலியல் புகார் மீது பி.இ.ஓ. வை தற்போது சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். அதைத் தொடர்ந்து துறைரீதியான விசாரணை நடந்து வருகிறது. அதன் பிறகுதான் மேல்நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்

கல்வித்துறையை சீரழிக்கும் பாலியல் குற்றங்கள் மீது முறையாகவும் விரைவாகவும் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.