2026ஆம் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றால் மகளிருக்கு மாதம் ரூ.2000, ஆண்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதன்படி, "மகளிர் நலன், குலவிளக்கு திட்டம் அடிப்படையில் குடும்ப அட்டைதாரருக்கு (பெண்கள்) மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும், ஆண், பெண் இருவருக்கும் கட்டணமில்லா நகரப் பேருந்து திட்டம், அம்மா இல்ல திட்டம் மூலம் கிராமப் பகுதியில் சொந்த கான்கிரீட் வீடு, நகரப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தரப்படும், 100 நாள் வேலை வாய்ப்பு 150 நாட்களாக உயர்த்தப்படும், 5 லட்சம் பெண் களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கப்படும்' உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்தார்.
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்புகள் குறித்து அ.தி.மு.க.வின் இரண்டாம்கட்டத் தலைவர் களிடம் விசாரித்தபோது, "தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகின்ற தேர்தலுக்கென பல்வேறு புதிய திட்டங்களை கையில் வைத் துள்ளார். எனவே நாம் இந்தத் தேர்தலிலும் பெருந்தோல்வியை சந்திக்கக்கூடுமென்ற கலக்கத்திலுள்ள அ.தி.மு.க.வினர், வரும் தேர்தலில் போட்டியிடுவதில் சுணக்கம் காட்டுகிறார்கள். வரும் தேர்தலில், 10 முதல் 15 கோடி வரை தேர்தல் செலவுகளுக்கான பணத் தை கட்டுபவர்களுக்கு தான் அ.தி.மு.க.வில் இந்த முறை சீட் என்ற விதிமுறையுடன் எடப் பாடி களத்திலிறங்கிய நிலையில்... அவ்வளவு செலவழித்து தோல்வியடைந்தால் நட்டம் நமக்குத்தானென்று கணக்கு போட்ட அ.தி. மு.க.வினர், போட்டியிடத் தயங்குகிறார்கள். எனவே அ.தி.மு.க.வினருக்கு நம்பிக்கையூட்டும் விதமாக இத்தனை அறிவிப்புகளையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
இப்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு களைப் போலவே இன்னும் பல அறிவிப்புகள் தம்மிடம் உள்ளதால், மக்களின் ஆதரவோடு நாம் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்ற நம்பிக்கையை நேர்காணலுக்கு வரக்கூடிய வேட்பாளர்களுக்கு ஏற்படுத்துவதற்காகத்தான் இந்த அதிரடியை முன்கூட்டியே செய்துள்ளார். அதேவேளை, பிரதமர் தமிழகம் வரும்நிலையில் மேடையில் அறிவிக்கவேண்டிய திட்டங்களை எடப்பாடி, முந்திரிக்கொட்டைபோல் முந்திக்கொண்டு அறிவித்துவிட்டார்'' என பா.ஜ.க. கடுப்பில் இருக்கிறது'' என்று இரண்டாம்கட்டத் தலைவர்களில் சிலர் விமர்சிக்கிறார்கள்.
ஏற்கெனவே தி.மு.க. அரசு மகளிருக்கு இலவச பேருந்துப் பயணத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் எடப்பாடி ஆட்சிப் பொறுப்பேற்றால் மகளிருக்கு இரண்டாயிரமும், ஆண்களுக்கு இலவச பேருந்துப் பயணமும் வழங்கினால் போக்கு வரத்துத்துறை என்னவாகும்? தற்போதே போதிய வருமானமில்லாமல் நிதி பற்றாக் குறையில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்துகள் போதிய தரமில்லாமல் பெரும் நட்டத்தை சந்தித்துவரும் நிலையில், எடப்பாடியின் இந்த அறிவிப்பு, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான சம்பளம், பேருந்து தேய்மானச் செலவு, டீசல் செலவு என அனைத்திலும் பெரும் கடன் சுமையை ஏற்றக்கூடும். இந்த சூழ்நிலையில், இந்த அறிவிப்புகள், மக்களை ஏமாற்றும் வெற்று அறிவிப்புகள் என்றும், எடப்பாடியின் அறிவிப்புகளால் தமிழ்நாடு மோசமான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுமென்றும் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.
ஏற்கெனவே பல்வேறு இலவசங்களால் தமிழ்நாடு அரசு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், எடப்பாடியின் இந்த அறிவிப்பு பா.ஜ.க.விற்கு வெறுப்பை உண்டாக்கியுள்ளது. புதிய ஆட்சி அமைந்தாலும், அந்த ஆட்சியாளர்கள் இந்த கடன்களையெல்லாம் அடைத்து, மீண்டும் பொருளாதார ரீதியாக முன்னேறவேண்டு மென்றால், அடுத்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகும். இந்நிலையில், தமிழ்நாட்டை கூறுபோடும் விதமாக ஒவ்வொருவரும் மாறி மாறி புதிய இலவச அறிவிப்புகளை வழங்கி மீண்டும் விலை உயர்வு என்ற பெயரில் மக்களிடமிருந்து அவர்கள் கொடுத்ததைவிட பன்மடங்கு அதிகமாக வசூலிக்கலாம் என்ற திட்டத்தில்தான் இந்த அறிவிப்புகள் வருகிறது.
எடப்பாடி பொங்கலுக்கு 5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றார். தி.மு.க. 3 ஆயிரம் வழங்கியது. மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் வழங்கிவரும் நிலையில், அ.தி.மு.க. 2 ஆயிரம் தருவதாக அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, எடப்பாடி வருகின்ற தேர்தல் பிரச்சாரத்தில், தன்னால்தான் தி.மு.க. இந்த திட்டங்களை அறிவித்ததாக பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
"தமிழ்நாட்டு மக்களுக்கான இலவச அறிவிப்புகள், தமிழகத்தின் மோசமான அரசியல் சூழ்நிலையை வெளிக்காட்டுவதோடு, நிதிச்சுமையை மேலும், மேலும் அதிகரிக்கச் செய்யும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது என்கிறார்கள்' அரசியல் ஆர்வலர்கள்.
-ஸ்ரீவர்மா
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/19/eps-2026-01-19-16-28-44.jpg)