"ஹலோ தலைவரே.. தேர்தலை எதிர்நோக்கும் பரபரப்பு, விஜய் மாநாட்டுக் களேபரம்னு தமிழகமே விறுவிறுப்பை அனுபவிச்சிக்கிட்டு இருக்கும் நேரத்தில், நம்ம தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் 50ஆம் ஆண்டு மணவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடி யிருக்கார்.''”
"ஆமாம்பா, முதல்வரின் மணவிழா வால் தி.மு.க. தரப்பு ஏக உற்சாகத்திலிருக்குதே?''”
"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், தனது 50ஆவது திருமண நாளை 20ஆம் தேதி மகிழ்வுடன் கொண்டாடினார். அமைச்சர்கள், அரசின் உயரதிகாரிகள், தி.மு.க.வின் சீனியர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்னு பலரும் முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து, வாழ்த்தி மகிழ்ந்தனர். இதனால் சித்தரஞ்சன் சாலையே பரபரப்பாக இருந்தது. வாழ்த்திவிட்டு வெளியே வந்த நிர்வாகிகள், ’தலைவருக்கு 50ஆவது மணநாள்னு சொல்றதை நம்பவே முடியலை. அவ்வளவு இளமையாக இருக் காரு’ என்று திகைப் புடன் சொன்னதை நம்மால் கேட்க முடிந் தது. தனது தாயார் தயாளு அம்மாளை, மனைவி துர்கா அம்மையாருடன் சந்தித்து ஆசிபெற்றார் ஸ்டாலின். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் முதல்நாளே அவரைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தி.மு.க. கூட்டணி சிந்தாமல், சிதறாமல் ஒற்றுமையாக இருக்கிறது என்று அரசியல் எதிரிகளுக்குக் காட்டவேண்டும் என்பதற் காக, தோழமைக் கட்சித் தலைவர்களுக்கு, தி.மு.க. தரப்பிலிருந்து ஓலை சென்றதால் தான், இந்த ஒற்றுமை சங்கமம் என் கிறார்கள் விபரமறிந்தவர்கள். இதற்கிடையே, பொன்விழா காணும் அப்பாவும் அம்மாவும் இன்றுபோல் என்றும் மகிழ்ந்திருக்க அன்பு முத்தங்கள் என்று சொல்லி வாழ்த்தியுள்ளார் துணை முதல்வர் உதயநிதி.''’
"மகிழ்ச்சிப்பா, இந்த நேரத்தில் அமைச்சர் ஒருவருக்கும் மாஜி அமைச்சர் ஒருவருக்கும் நடக்கும் உரசலால் தி.மு.க.வில் பரபரப்பு ஏற்பட்டிருக்கே?''”
"தி.மு.க.வைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் இருந்தே மாஜி மந்திரி செந்தில்பாலாஜிக்கும், அமைச்சர் எ.வ.வேலுவுக்கும் ஏழாம் பொருத்தம் தான். அரவக்குறிச்சி இடைத்தேர்தலின்போது வேலுவிற்கு தெரிந்த கோவை மீனா ஜெயக்குமார் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர் மேயர் வேட்பாளர் ஆகிவிடக் கூடாது என்று, அவருக்கு திட்டம் போட்டு சீட் கொடுக்காமலே தவிர்த்தார் செந்தில்பாலாஜி. இது இருவரின் உரசலை அதிகமாக்கியது. இந்த நிலையில், வழுக்கி விழுந்து சிகிச்சை பெற்ற அமைச்சர் துரைமுருகன், வரும் தேர்தலில் நிற்பாரா என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதேபோல் கட்சியின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்கிற கேள்வி எழ, டி.ஆர்.பாலு பெயரும், பொரு ளாளராக எ.வ.வேலு பெயரும் பரிசீலிக்கப்பட்டன. உடனே, "என்னதான் இருந்தாலும் எ.வ.வேலு மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர். அவருக்கு இந்தப் பதவியைக் கொடுக்கலாமா?'’ என தலைமைக்கு எதிர்ப்புக் கடிதங்கள், செந்தில்பாலாஜி கைங்கர்யத்தால் சென்றுகொண்டிருக்கின்றன என்கிறார்கள். எப்படியும் தலைமை, கட்சிக்காக சுழன்றடிக்கும் எ.வ.வேலுவை தூக்கிப் பிடிக்கும் என்கிறார்கள்.''
"அதேபோல் ஆளுங்கட்சி மா.செ.வுக்கும் அமைச்சர் ஒருவருக்கும் இடையிலான உரசல், விபரீதமாகச் செல்கிறது என் கிறார்களே?''”
"கடலோர மாவட்ட அமைச் சருக்கும், அங்குள்ள தி.மு.க. மா.செ. வுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இந்த நிலையில் அமைச்சரோ,‘"நான் அமைச்சராக இருந்தாலும் இந்த மாவட்டத்தில் எனக்கென்று எதுவும் கிடையாது. மா.செ. வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. தலைமையிடம் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. வரும் தேர்தலில் நான் நிற்கவுள்ள தொகுதியில், எனக்கு எதிராக வேலை பார்க்க இப்போதே ஆள் பிடித்து வருகின்றார் மா.செ.'’ என பகிரங்கமாகவே ஆதங்கத்தை வெளிப் படுத்திவருகிறார். அந்த மா.செ., அமைச்சரை லோக்கல் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லையாம். தன்னை முழுமையாக அவர் ஓரம்கட்டுவதால், அவருக்கு எதிராக அமைச்சர் காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டாராம். இந்தப் பகுதியிலிருந்து போதைப் பொருள்களான மெத்தபெட்டமைன், கஞ்சா மற்றும் பீடி உள்ளிட்ட பொருட்கள், மா.செ. ஆசியுடன் கடல் கடந்து செல்கிறதாம். மா.செ. மீது கடுப்பில் உள்ள அமைச்சர், இதுகுறித்த தகவலை எல்லாம் மத்திய புலனாய்வுத் துறைக்கு, ஆதாரங்களை அனுப்பி வைத்திருக் கிறாராம். உட்கட்சி விவகாரம், இப்படி திசைமாறிப் போய்க்கொண்டிருக்கிறது.''”
"எடப்பாடி கலந்துகொண்ட கூட்டத்தின் வழியாகச் சென்ற ஆம்புலன்ஸின் ஓட்டுநர் தாக்கப்பட்டிருக்கிறாரே?''”
"பிரச்சாரப் பயணத்தில் இருக்கும் எடப்பாடி, வேலூர் மாவட்ட அணைக்கட்டில், அங்குள்ள பேருந்து நிலையம் அருகே உரையாற்ற வந்தார். அப்போது அந்தப் பகுதியில் கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று அவசரகதியில் சென்றது. அதைப் பார்த்துக் கோபமான எடப்பாடி, அந்த ஆம்புலன்சில் நோயாளியே இல்லை என்றும், தன் ஒவ்வொரு கூட்டத்திலும் இதே போல் ஆளில்லாமல் ஆம்புலன்ஸை விடுகிறார் கள் என்றும், அரசு மீது குற்றச்சாட்டை வைத்தார். மேலும், இதுபோல் ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால் அதை ஓட்டி வருபவர்தான் அதில் பேஷண்டாக செல்லவேண்டி வரும் என்று பகிரங்கமாக மிரட்டிய எடப்பாடி, அந்த ஆம்புலன்ஸ் எண்ணையும் அதன் ஓட்டுனர் பெயரையும் விசாரித்து, காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் என்றும் கட்சியினருக்கு அங்கேயே உத்தரவிட்டார். அப்போது எடப்பாடி அருகில் இருந்த மாஜி மந்திரி வீரமணி கோபமாக ஆம்புலன்ஸ் டிரைவரைத் திட்ட, இவர்களின் தூண்டுதலால் அ.தி.மு.க. தொண்டர்கள் சிலர் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மறித்துத் தாக்கினர். இது குறித்து நம்மிடம் பேசிய ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேந்தர், ’"நோயாளி ஒருவரை அணைக்கட்டு மருத்துவமனையில் இருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவேண்டும் என கால் வந்ததால் சென்றேன். இவர்களால் நான் தாக்கப்பட்டேன். அவர்கள் அடித்ததில் என் ஐ.டி. கார்டின் வார் அறுந்தது. இதன் பிறகும் காவல்துறை பாதுகாப்போடு சென்று, ஒரு மணி நேரம் தாமதமாகச் சென்று, நோயாளியை வேலூர் மருத்துவமனையில் சேர்த்தேன். எங்கள் உயிரையும் பணயம் வைத்துதான் இந்த வேலையைச் செய்கிறோம். எங்களை இப்படித் தாக்கலாமா?'’என்றார் கலக்கமாய். இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் 1330 ஆம்புலன்ஸ்கள் உயிர் காக்கும் சேவையை செய்துகொண் டிருக்கிறது. ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டம் கூட்டுவதோடு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பெயரை நோட் பண்ணு என்றெல்லாம் ஒரு முன்னாள் முதல்வர், மிரட்டுகிற தொனியில் பேசுவது அநாகரிக செயல். இத்துடன் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்' என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.''
"அன்புமணியை கட்சியை விட்டு நீக்கும் முடிவை நோக்கி ராமதாஸ் இருப்பதாகச் சொல்கிறார்களே?''”
"டாக்டர் ராமதாஸ் கூட்டிய பொதுக்குழுவில், அன்புமணிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டிருந்தது. இதையொட்டி, 14 கேள்விகளைக் கேட்டு அதற்கு விளக்கமளிக்குமாறு அன்புமணிக்கு கடிதம் அனுப்பினார் ராமதாஸ். அதை அன்புமணி கண்டுகொள்ளவே இல்லை. எனவே, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வசதியாக, அவரை பா.ம.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியி லிருந்து நீக்கவேண்டும் என வலியுறுத்தப்பட, ராமதாஸும் அந்த முடிவை நோக்கி நகர் கிறாராம். அதேசமயம், குடும்ப உறுப்பினர்கள் சிலர் மட்டும், நீர் அடித்து நீர் விலகிடுமா? கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என ராமதாஸுக்கு அழுத்தம் கொடுத்து வரு கின்றனர். எப்போதும் தீர்க்கமாக முடிவெடுக்கும் ராமதாஸ், இதிலும் உறுதியாகயிருக்கிறாராம். கட்சியின் கட்டுப்பாடுகளையும் சட்ட விதிகளையும் மீறுபவர் யாராக இருந்தாலும், அவர் பின்வாங்கமாட்டார் என்கிறார்கள் தைலாபுரத்துக்கு நெருக்கமானவர்கள் பரபரப்பாய்.''”
"மல்லை சத்யா பற்றி பல்வேறு தகவல்கள் வருகின்றதே?''”
"தன்னையும் தன் மகனையும் விமர்சித்து, பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துவரும் ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை, கட்சியின் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கியிருக்கிறார் வைகோ. 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க மல்லை சத்யாவுக்கு அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் விளக்கம் தருவாரா? தரமாட்டாரா? என்கிற பட்டிமன்றம் ம.தி.மு.க.வில் நடந்து வருகிறது. ஒரு வேளை அவர் விளக்கம் கொடுத்தால், அதை வைகோ ஏற்க மறுக்கும் பட்சத்தில் கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்படுவார் சத்யா என்று ம.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. இதற்கிடையே, சத்யாவின் ஆதரவாளர்களோ, விளக்கம் எல்லாம் எதற்கு? பேசாமல் தி.மு.க.வில் இணைந்துவிடலாம். அவர்கள் நம்மை ஏற்காவிட்டால் விஜய் கட்சிக்குப் போய்விட லாம். அல்லது புதிதாகக் கட்சி ஒன்றைத் தொடங்கி விஜய் கட்சி யுடன் கூட்டணி வைக்க முயற்சிக்கலாம் என்று, சத்யாவுக்கு ஆலோசனை சொல்லி வருகிறார்களாம். இது புகை கிளப்பி வருகிறது.''”
"தடைசெய்யப்பட்ட மலைப்பகுதிகளிலும் நில விற்பனை அமோகமாக நடந்துவருகிறதே?''”
"தமிழ்நாட்டில் மனைகளின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்துவிட்டதால், விலை குறைந்த மலைப்பகுதி யினை புரமோட்டர்கள் நாடி வருகின்றனர். இந்தப் பகுதிகளில் இடம் வாங்க வேண்டுமென்றால் மனிதர்களுக்கும் விலங்குகளுக் கும் இடையிலான மோதலைத் தடுக்க அமைக்கப்பட்ட "ஹாகா' கமிட்டியின் ஒப்புதல் அவசியம். கோவை மாவட்டத்தில் மட்டும் 23 வருவாய் கிராமங்களும், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு தாலுகாக்களில் உள்ள சில கிராமங்களும், "ஹாகா'வின் கட்டுப்பாட் டில் இருக்கின்றன. அதே சமயம் இப்படிப்பட்ட "ஹாகா'வைத் தாண்டி வருவாய், வனம், கனிமத்துறைகளின் தடையில்லாச் சான் றிதழை வாங்கிக் கொண்டு பெருமளவில் மனை விற்பனை நடை பெறுகிறது என்கிறார்கள். குறிப்பாக தொண்டா முத்தூர், ஆலாந்துறை, நரசீபுரம், வண்டிக்காரனூர், தீனம்பாளையம், செம்மேடு என பல பகுதிகளிலும் "ஹாகா' அனுமதி இல்லாமலே 3 ஆயிரத் திற்கும் அதிகமான வீடுகள் 2 ஆண்டுகளுக்கு முன்பே முளைத் திருக்கின்றன. தற்பொழுது மேலும் ஏராளமான மனைகள் உருவாகியுள்ளன. காரணம் கோவை தெற்கு வருவாய் கோட் டாட்சியர் அலுவலகமாம். தடை யில்லாச் சான்றிதழ் வேண்டுமா? 2.45 சென்ட் பரப்பளவுக்கு தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு ரூ.30ஆயிரம், வனத்துறைக்கு ரூ.10 ஆயிரம், கனிமம் மற்றும் சுரங்கத்துறைக்கு ரூ.10 ஆயிரம் என கொடுத்து விட்டால் அனுமதி வீடு தேடி வந்துவிடும் என்கிறார்கள்.''”
"தர்மஸ்தலா விவகாரத்தை தமிழக காங்கிரஸ் எம்.பி. தூண்டி விட்டார் என்று, கர்நாடக பா.ஜ.க.வினர் சொன்னது எடுபடவில்லையே?''”
"ஆமாங்க தலைவரே, நூற்றுக்கணக்கான பெண்களை வேட்டையாடிக் கொன்று புதைத்ததாகக் குற்றம்சாட் டப்பட்ட கர்நாடக மாநில தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில் விவகாரத்தை, அங்குள்ள பா.ஜ.க. தரப்பு அரசியலாக்கிக் குளிர்காய முயன்றுவருகிறது. தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில் பற்றி புகார் கொடுத்த அதன் முன்னாள் ஊழி யர் பீமாவை, தமிழக காங்கிரஸ் எம்.பி.யும் கர்நாடகாவின் முன் னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் தூண்டிவிட்ட தால்தான், இப்படி ஒரு புகாரையே பீமா பொய்யாக எழுப்பியிருக் கிறார் என்று, கர்நாடக மாநில பா.ஜ.க. மாஜி மந்திரி ஜனார்த்தன ரெட்டி ஒரு வெடிகுண்டை வீசினார். அந்த பீமாவை, சசிகாந்த் தான் இயக்கிவருகிறார் என்றும் அவர் உரக்கக் குற்றம்சாட்டினார். இதை அங்குள்ள சேனல்கள் சிலவும் பரபரப்பாகப் பரப்பி, கர்நாடக மக்களின் உணர்வைப் புரட்டிப் போட்டன. அதேசமயம், ஜனார்த்தனரெட்டி சொல்வதெல் லாம் கட்டுக்கதை என்று மறுத்திருக்கிறார் சசிகாந்த். கர்நாடகாவில் உள்ள சமூக ஆர்வலர்களோ, ’சடலங்களைப் புதைத்தததாகச் சொல்லும் பீமாவின் வார்த்தைகள் பொய் என்றால், அதை நேரில் பார்த்ததாக 7 பேர் சொல்லியிருக்கிறார்களே, அதற்கு என்ன பதில்? அங்கே தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளும் பொய் சொல்லுமா?’ இதுபோன்ற பா.ஜ.க. தரப்பின் பிரச்சாரங்கள் இங்கே எடுபடாது’என்கிறார்கள் அழுத்தமாக.''”
’"இந்த விவகாரம் இருக்கட்டும்ப்பா. காவல்துறையில் ஒரு மெஹா மாற்றம் இருக்கும் என்கிறார்களே?''”
"தமிழக காவல்துறையில் குறிப்பாக, தென்மண்டலத்தில் இருக்கும் காவல்துறையினர் சாதிவெறியுடன் செயல்படுவதால், பகீரூட்டும் க்ரைம்கள் அதிகரித்துவருவது குறித்து நமது நக்கீரன் அடிக்கடி செய்தி வெளியிட்டு எச்சரித்து வருகிறது. குறிப்பாக உளவுத்துறையில் இருக்கும் டிபார்ட்மெண்ட் ஆட்கள்தான் இப்படிப்பட்ட சாதி நெருப்பை ஊதிவிடும் காரியத்தில் அதிகம் இறங்குவதையும், நம் நக்கீரன் சுட்டிக்காட்டிவருகிறது. இதைத்தொடர்ந்து காவல்துறை தலைமை, 5 ஆண்டுகளுக்கும் மேலாக தென்மண்டல காவல்துறையில் பணியாற்றுவோரை உடனடியாக வடக்கு மற்றும் கொங்கு உள்ளிட்ட மேற்கு மண்டலத்துக்கு மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. இதைத் தொடர்ந்து மேற்கு மண்டலப் பகுதியில் அதிகம் மாமூல் புழங்கும் காவல் நிலையங்களுக்குத் தங்களை டிரான்ஸ்பர் செய்யும்படி, சம்மந்தப்பட்ட காவல்துறையினர் டிமாண்ட் வைக்க ஆரம்பித்து விட்டார்களாம். அதேசமயம் ’தென்மண்டல உளவுத்துறையில், ஒரே சமூகத்தினர் இருந்தாலும் பரவாயில்லை, அவர்களை மாற்றவேண்டாம்... தேர்தல் வருவதால் பிறகு பார்த்துக்கொள்ள லாம்’என்று உளவுத்துறை ஐ.ஜி. சொல்லிவிட் டாராம்.''”
"அந்த மாவட்ட உயரதிகாரி வசூலில் மலைக்க வைக்கிறாராமே''?”
"பஞ்சாமிர்தத்திற்குப் பெயர்போன ஊருள்ள மாவட்டத்திற்கு சமீபத்தில் இடமாற்றலாகி வந்தார் அந்த மாவட்ட உயரதிகாரி. குமரக்கடவுள் பெயர் கொண்ட அவர் லஞ்சத்தில் வெளுத்துக் கட்டுகிறாராம். அதையும் நாசுக்காகப் பேசி பொருட்களாக அவர் கறந்துவிடு கிறாராம். அதாவது, மலைக் காய்கறிகள், வெங்காயம் மற்றும் பழங்கள் இங்கு எளிதாக கிடைக்குமாமே? என்று வேளாண் வணிகத்துறை அதிகாரிகளிடம் பீடிகை போட்டு, உழர்வர் சந்தைகளில் விற்பதையெல்லாம் வாங்கிக்கொள் கிறாராம். அண்மையில் அவர் மகளுக்குப் பிறந்தநாள் வர, அதைச் சாக்காக்கி, தன் கேம்ப் ஆபீஸிலேயே ஷாமியானா பந்தல் போட்டு, 36 துறை அதிகாரிகளுக்கும் தகவலைக் கொடுத்து, டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ. தொடங்கி பி.டி.ஓ.க்கள் வரை அனை வரையும் வரவழைத்து அவர்கள் மூலம் தங்கம், வெள்ளியிலான பரிசுப்பொருட் களை வாங்கிக் குவித்திருக்கிறார். அன்றைய வசூலின் மதிப்பு மட்டும் ரூ.50 லட்சத்தைத் தாண்டும் என் கிறார்கள். இந்த விவகாரம் இப்போது சென்னை தலைமைச் செயலகம் வரை சென்றுள்ள தாம்.''”
"நானும் என் கவனத் துக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில், அங்குள்ள சண்முக ருக்கு பூஜை புனஸ்காரங்களுக்கு உதவியாகக் கைங்கர்யம் செய்துவரும் திரிசுதந்திரர்கள் என்னும் பிராமண ஊழியர் தரப்பின் மீது, அவர்களை விடவும் தங்களை உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பிராமண சிவாச்சாரியார்கள், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கினைத் தொடர்ந்துள்ளனர். இதன் விசாரணை நடந்துவருகிறது. இந்த வழக்கால் இரு தரப்பிற்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் பூசலால், 7ஆம் நாள் மண்டபப் படிக்குச் செல்லவேண்டிய சண்முகர் வெகுநேரம் காத்திருக்க நேர்ந்ததாம். இதனால் பக்தர்கள் மத்தியில் கொதிப்பு ஏற்பட, கோயில் நிர்வாகத்தினர் இருதரப்பை யும் சமாதானப்படுத்திய பிறகே சண்முகர் புறப்பாடு நடந்ததாம்.''