"ஹலோ தலைவரே, கரூரில் முப்பெரும் விழாவை மாபெரும் மாநாடாக நடத்தி, தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது தி.மு.க.''”

Advertisment

"ஆமாம்பா, அதேபோல் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க.வும், ஒரு மாபெரும் மாநாட்டை நடத்தி, மலைக்கோட்டை மாநகரை மலைக்க வைத்திருக்கிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் ம.தி.மு.க.  நடத்திய மாநாடு வரலாறு படைத்திருக்கிறது. வைகோ தலைமையில் நடந்த அந்த மாநாட்டில் ஒருலட்சம் பேர் கலந்துகொண்டு தமிழக அரசியல் கட்சிகளை ஆச்சரியத்தில் மூழ்கடித்திருக்கிறார்கள். இங்கு கூடிய அத்தனைபேரும் பெரும்பாலும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தானாம். திருச்சி எம்.பி.யாக இருக்கும் துரை.வைகோ, களமிறங்கி இந்தக் கூட்டத்தைக் கூட்டினார் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள் பெருமிதத்தோடு. அதேநேரம் ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட நடிகர் விஜய்யின் பிரச்சாரத்திற்கே வெறும் 60 ஆயிரம் பேர்தான் திருச்சியில் கூடினார்களாம். அவர்களை ம.தி.மு.க. இந்த விசயத்தில் ஓவர்டேக் செய்திருக்கிறது.''”

"தமிழகத்தின் களநிலவரம் விறுவிறுப்பாக மாறிவரும் நிலையில், டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்திருக்கிறாரே எடப்பாடி?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.விலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கவேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து, அங்கே கலகத்தை உரு வாக்கினார் செங்கோட்டையன். இதனால், கட்சியின் பொறுப்புகளிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இதனால், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலம் அமித்ஷாவைச் சந்தித்து முறையிட்டார் செங்ஸ். ஏற்கனவே அவரிடம், உங்கள் கூட்டணியில் ஒன்றுபட்ட அ.தி.மு.க. இருந்தால்தான் நாம் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கும். ஆனால் அதற்கு எடப்பாடி தடையாக இருக்கிறார் என்று சொல்லிவந்தார். இந்த நிலையில்தான் செங்ஸ், அமித்ஷாவிடம் முறையிட்டார். இதைத் தொடர்ந்து எடப்பாடி டெல்லிக்கு அழைக்கப்பட் டார்.  அதனால் கட்சியின் சீனியர்களான கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்களுடன் டெல்லி சென்று, துணை ஜனாதிபதி சி.பி.ஆருக்கு எடப்பாடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது வழங்கப்பட்ட மதிய விருந்தின் போது, அனைவருமாக மனம்விட்டுப் பேசிக் கொண்டனர். இதன் பிறகு இரவுதான் அமித்ஷாவின் தரிசனம் எடப்பாடிக்குக் கிடைத்ததாம்.''”

"சரிப்பா, அந்த சந்திப்பில் என்ன நடந்தது? கர்ச்சிப் ரகசியம் என்ன?''”

"அன்று இரவு அமித்ஷாவை எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க. டீம் சந்தித்தது. அந்த சந்திப்பு 20 நிமிடம் வரை நீடித்தது. அதன்பிறகு தனிப்பட்ட முறையில் அமித்ஷா- எடப்பாடியின் சந்திப்பு 25 நிமிடம் நடந்தது. அப்போது கொஞ்சம் பதட்டத்துடன்தான் எடப்பாடி இருந்தாராம். அந்த சந்திப்பு குறித்து அ.தி.மு.க. சீனியர்கள் தரப்பில் நாம் விசாரித்தபோது, ‘அமித்ஷாவை தனிப் பட்ட முறையில் சந்தித்த எடப்பாடி, "செங்கோட்டையன் கட்சியை உடைக்கப் பார்க்கிறார்.  சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்கள் அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து செல்ல வில்லை. இவர்கள் எல்லாம் நீக்கப் பட்டவர்கள். இவர்களை அ.தி.மு.க.வில் இணைப்பதால் எங்களுக்கோ, பா.ஜ.க.வுக்கோ எந்த அரசியல் லாபமும் இல்லை.  நீங்கள் நினைக்கும் வெற்றியை, அவர்கள் இல்லாமலே  நாம் பெற்றுவிட முடியும்' என்று தெளிவுபடுத்தினார். இதைக்கேட்ட அமித்ஷா, "அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட் டணி குறித்து ஏற்கனவே எங்களுக்கு ஒரு ரிப்போர்ட் தரப்பட்டிருக்கிறது.  அதில், ஒன்றுபட்ட அ.தி.மு.க. இல்லாத சூழலில், 20 சதவீத வாக்குகள் கூட கிடைக்காது என்று  இருக்கிறது. அதனால், மீண்டும் ஒரு சர்வே எடுக்கச்சொல்லியிருக்கிறேன். அதன் ரிசல்ட் வந்ததும் மீண்டும் சில விசயங்களைப் பேசுவோம்' என்று சொல்லியிருக்கிறார். இதுதான் அங்கே நடந்தது’என்கிறார்கள்.  ஆனால் எடப்பாடிக்கு சரமாரியாக அமித்ஷா விடமிருந்து டோஸ் விழுந்தது என்றும், கடுமையாக அவர் எச்சரிக்கப்பட்டார் என்றும், அதன் காரணமாகவே முகத்தை வெளியே காட்ட முடியாமல், அவர் கர்ச்சிப் போட்டுக்கொண்டு அங்கிருந்து வெளியே வந்தார் என்றும் மற்றொரு தகவல் அம்பலப்படுத்துகிறது. இந்த நிலையில், ஓ.பி.எஸ். ஆதர வாளர்கள், செங்கோட்டையனை சந்தித்துப் பேசியிருக்கிறார்களே?''

"தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான மனோகரன், ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்தவர். அவர் தங்கள் அணியைச் சேர்ந்த தொகுதி நிர்வாகிகளுடன் போய் செங்கோட்டை யனைச் சந்தித்தார். அப்போது, "பிரிந்து கிடக்கிற அ.தி.மு.க.வினரை ஒருங்கிணைக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மகிழ்ச்சியைத் தருகின்றன. அந்த முயற்சி விரைவில் பலிக்கட்டும்' என்று வாழ்த்து தெரி வித்தார். பின்னர் தன்னைச் சந்திக்கிறவர்களிடம் எல்லாம் "இணைப்பு முயற்சி சாத்தியமில்லாமல் போனால், நமது ஓ.பி.எஸ். அணி, தேர்தலில் நிற்பது விரயமாகிவிடும். சரியான லேபிள் இல்லாவிட்டால் எப்படி தேர்தலில் நாம் போட்டியிட முடியும்?'’ என்று தன் ஆதங்கத்தைத் தெரிவித்து வருகிறார். விரைவில் சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் ஆகியோர் சந்திப்பார்கள் என்றும் பரபர தகவல்கள் உலவுகின்றன. இவையெல்லாம் எடப்பாடியை பதட்டப்படுத்தி வருகின்றன.''”

Advertisment

"ஒருபக்கம் உட்கட்சி நெருக்கடி, மறுபக்கம் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க. நெருக்கடி என தவித்துவரும் இ.பி.எஸ்., இந்த நெருக்கடிகள் எல்லாம் எப்போது மாறுமெனத் தெரிந்துகொள்ள நம்பிக்கையான ஜோசியர் ஒருவரைப் போய் பார்த்திருக்காராமே"

"ஆமாங்க தலைவரே! அந்த ஜோசியர் அவரது ஜாதகக் கட்டத்தைப் பார்த்துட்டு யாகம் செய்ய பரிந்துரை செய்ததோடு, அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பிலிருந்த ஜெ.வின் போயஸ்கார்டன் வீட்டை வாங்கி அதிலமர்ந்தால் இப்போதைய பிரச்சினைகள் தீர்வதோடு நீண்டகால அளவிலும் அவருக்கு கட்சியின் மீதான செல்வாக்கு ஓங்கும்னு யோசனை சொல்லியிருக் காராம். ஜெ.வின் சொத்து தீபாவின் கைக்கு வந்த போது ஹைதராபாத் திராட்சை தோட்டத்தை ஒரு முன்னாள் எம்.பி.யோட மகன்தான் விற்பனை செய்து கொடுத்திருக்கிறாராம். அவரையே பிடித்து போயஸ்கார்டன்

rang2

வீட்டை விலைபேச சொல்லியிருக்காராம் இ.பி.எஸ்.. அவரும் தீபாவை அணுகி, இ.பி.எஸ்.ஸோட விருப்பத்தைச் சொல்ல, அவர் பழைய உரசல்களை மனதில் வைத்துக் கொண்டு, அவர் எப்படி என் அத்தைக்கு நிகராவார்? இனி போயஸ்கார்டனைக் கேட்டு இங்க வராதீங்கனு நோஸ்கட் பண்ணி அனுப்பி வைச்சிருக்காராம்."

"சரிப்பா... பா.ஜ.க. நயினாருக்கு எதிரான புகார்கள், அக்கட்சியின் தேசியத் தலைமைக்குப் போய்க்கொண்டிருக்கிறதே?''”

"பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினாரின் மகனான நயினார் பாலாஜி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீமூலக்கரை பஞ்சாயத்துப் பகுதியில் கல்குவாரி ஒன்றை எடுத்திருக்கிறார்.இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் நயினாருக்கு எதிராக உள்ள பா.ஜ.க. பிரமுகர்கள், இது குறித்த புகார்களை தங்கள் தேசியத் தலைமைக்கு ஏகத்துக்கும் அனுப்பிவைத்து வருகிறார்கள். அந்தப் புகாரில் ‘"முன்னாள் மாநில நிர்வாகி, நயினாரைப்போல் வாரிசு அரசியலை நடத்த வில்லை. நயினார் தன் மகனை வைத்துக்கொண்டு சொத்து சேர்த்து வருகிறார். ஏற்கனவே சென்னையில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை வாங்கி, சம்மந்தப்பட்டவர்களை ஏமாற்றியதாகப் புகார் இருக்கிறது'’என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்களாம். நயினாருக்கு எதிராகக் குவியும் புகார்களைப் பார்த்து பா.ஜ.க.வின் தேசியத் தலைமையே  திகைத்துப்போயிருக்கிறதாம்.''”

"பா.ம.க.வில்  நடந்துவரும் மோதல் விவ காரம், தேர்தல் கமிஷன்வரை போயிருக்கிறதே?''”

rang1

"அன்புமணி தரப்பு, "பா.ம.க.வின் உண்மையான தலைமை நாங்கள்தான்' என்று உரிமை கொண்டாடிவருகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தை அது அணுகியதைத் தொடர்ந்து, அது அன்புமணிக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது. அந்தக் கடிதத்தின் மூலம் அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீ கரித்திருப்பதாக, அவர்  தரப்பு அறிவித்தது. இதையறிந்து அதிர்ச்சியடைந்துவிட்டார் ராமதாஸ். அன்புமணி தரப்பு கட்சியின் முகவரியை தேர்தல் ஆணையத்திடம் மாற்றிக் கொடுத்ததால், ஆணையம் தொடர்புகொண்ட விசயங்கள் ராமதாஸ் தரப்பிற்கு உடனடியாகத் தெரியாமல் போய்விட்டதாம். இருப்பினும் தன் சார்பில் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள், கட்சியின் பொதுச் செயலா ளர் முரளிசங்கர் உள்ளிட்டோரை  டெல்லிக்கு அனுப்பிவைத்தார் ராமதாஸ். அவர்கள் தேர்தல் ஆணையரைச் சந்தித்து, முறைப்படி பா.ம.க.வின் தலைவராக இல்லாத ஒருவரை அங்கீகரித்து, தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்திருப்பது தவறு. உடனடியாக அதைத் திருப்பப்பெற வேண்டும். உரிய விசாரணையை நடத்தி அதன்பிறகு அங்கீகாரத்தை வழங்க வேண்டும்'’என்றெல்லாம் தெரிவித்துவிட்டு வந்திருக்கிறார்கள். இப்படி தேர்தல் கமிஷன் வரை இவர்களின் மோதல் சென்றிருக்கிறது.''”

"தமிழக அமைச்சர் ஒருவரின் உதவி யாளர் மீது புகார் கொடுக்கப்பட்டதாகத் தகவல் வருகிறதே?''”

"தமிழக அமைச்சர் ரகுபதியின் உதவியாளர் பாலு என்பவர் மீது, சென்னை ஏர்போர்ட்டில் புகார் தரப்பட்டிருக்கிறது.  சென்னையிலிருந்து திருச்சிக்கு அமைச்சர் பிளைட்டில் வரும்போது, விமானம் புறப்படுகிற கடைசி நிமிடம் வரை லாஞ்ச்சில் உட்கார்ந்து அரட்டையடித்து, விமானத் தரப்பின் பிரஷரை ஏற்றுவாராம் பாலு.  அமைச்சர் போகும் எல்லா இடங்களுக்கும் பிளைட்டில் செல்லும் பாலு, அமைச்சரின் ஹேண்ட் லக்கேஜை எடுத்துச் செல்கையில், அக்கம் பக்க பயணிகளிடம் தேவையில்லாமல் பிரச்சினை செய்வாராம். அது குறித்துக் கேள்வி எழுப்பும் விமானப் பணிப்பெண்களிடமும் அவர் தகராறில் ஈடுபடுவாராம். சமீபத்தில், ஒரு பெண் பயணியிடம் மரியாதைக் குறைவாக பாலு நடந்துகொண்டதால், பிரச்சினை பெரிதாகியிருக்கிறது.  பாதிக்கப்பட்ட அந்த பெண், ஏர்போர்ட் அத்தாரிட்டியிடம் பாலு மீது புகார் கொடுத்திருக்கிறாராம். இவரது இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் அமைச்சரின் பெயர் ரிப்பேர் ஆகிறது என்கிறார்கள்.''”   

"மெத்தன அதிகாரிகள், கட்டிய வீடுகளைப் பயனாளிகளுக்குத் தராமல் அல்லாடவிடு கிறார்களாமே?''”

"தமிழக அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக, திருவள்ளூர் மாவட்டம் பூச்சி அத்திப்பட்டு பகுதியில் 150 கோடி மதிப்பீட்டில் 1,152 அடுக்குமாடி வீடுகளைக் கட்டுவதற்கான திட்டம், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் குடிசைகளில் வாழும் மக்களை இந்தக் குடி யிருப்புகளில் குடியமர்த்துவதுதான் திட்டத்தின் முக்கிய நோக்கம்.  இந்தத் திட்டத்தின் படி, 1,152 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகிவிட்டனவாம். இருந்தும் அவற்றை பயனாளி களிடம் ஒப்படைக்கவே இல்லையாம். இதனால், குடிசைகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்கள் வீடுகள் கிடைக்காமல் அவதி அடைகின்றனராம். அதிலும், பயனாளிகள் தாங்கள் செலுத்த வேண்டிய, வீட்டின் மதிப்பில் 10 சதவீதத் தொகையை அரசுக்கு செலுத்திய நிலையிலும் அவர்கள் இன்னும் அல்லாடி வருகின்றனராம்.''

"எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது முழுமை பெற்ற பிறகு, அதனை உடனடியாக மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ஒவ்வொரு ஆய்வுக் கூட் டங்களிலும் அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார் முதல்வர்  ஸ்டாலின்.  இருந்தும் அதிகாரிகள் தரப்பு, மெத்தனத்தைக் காட்டி திட்டங்களை குறட்டைவிட வைத்துவருகிறார்கள்.''”

"போலீஸ் அனுமதிக்காத நிலையிலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மீனவர்களின் உரிமைக்காக போராட்டத்தை நடத்தி இருக்கிறாரே?''”

rang3

"தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படை யால் தொடர்ந்து தாக்கப்படுவதும், இம்சைக் குள்ளாவதும் தொடர்கதையாக இருப்பதால், இவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண,  கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், வேல்முருகன் தலைமையில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் போராட்டத்தில் குதித்தனர். முன்னதாக வேல்முருகன் எந்த வழியாக வருவார் என்று பலரும் காத்திருக்க, அவர், போலீஸுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 3 நாட்டுப் படகுகளில் தங்கள் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகி நியாஸ் உள்ளிட்ட நிர்வாகிகளோடு கடல் வழி யாகவே போராட்டக் களத்திற்கு வந்துசேர்ந்தார். இதைக்கண்டு போலீஸ் திகைத்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வேல்முருகன், "மோடி வந்தால் மீனவர்களுக்கு பாதுகாப்பு என்றார்கள். ஆனால் அவர் வந்த பிறகுதான் சிங்கள பௌத்த இனவாத அரசு, நம் மீனவர்களின் படகுகளைப் பிடித்துவைக்கிறது.  இந்தி பேசும் இந்தியக் கடற்படையினரும் தமிழ் பேசும் மீனவர்களைத் தாக்கி வருகின்றனர். சிங்களப் பேரினவாத அரசு, கச்சத்தீவு தங்களுடையது என்று கொக்கரிக்கிறது. இந்திய அரசு இப்போதும் வாய்மூடி இருப்பது அவமானம்'’ என்றார் காட்டமாய். இந்தப் போராட்டம் தமிழக மீனவர்கள் மத்தியில் ஆவேச நெருப்பைப் பற்ற வைத்திருக்கிறது.''”

"என் காதுக்கு வந்த ஒரு தகவலை, நானும் பகிர்ந்துக்கறேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக அண்மையில் மு.வீரபாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக் கிறார். ஏற்கனவே இந்தப் பதவியில் இருந்த முத்தரசன் சிறப்பாகத்தானே பணியாற்றினார். அவரை எதற்கு இவ்வளவு விரைவில் மாற்றவேண்டும் என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் வயது காரணமாகவும், மூன்றுமுறை இந்தப் பதவியில் இருந்த காரணத்தாலும் முத்தரசனே, தனக்குக் கட்சிப் பொறுப்பு வேண்டாம் என்று கட்சியின் மாநில கமிட்டியில் தெரிவித்ததோடு, கட்சியின் மாநிலப் பொறுப்புக்கு மிகவும் பொருத்தமானவர் என்று, வீரபாண்டியனையும் அவரே பரிந்துரைத்தாராம்.''

rang4