மிழக சட்டமன்றத்தின் மழைக்காலக் கூட்டம் தொடங்கியிருக்கிறது. நடிகர் விஜய்யின் கரூர் பரப்புரை பயணத்தில் ஏற்பட்ட 41 அப்பாவிகளின் உயிரிழப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் சூழலில், சட்டமன்றம் கூடியதால் கரூர் துயரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அதற்கேற்ப சட்டமன்றத்தின் இரண்டாம்நாள் நிகழ்வில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளுக்கிடையே காரசார விவாதங்கள் எழுந்தன. 

Advertisment

புதன்கிழமை பேரவை கூடியதும் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. கரூர் துயரத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் தங்கள் கையில் கருப்புப்பட்டை அணிந்து வந்து சபையை ஈர்த்தனர். எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.வில் போர்க்கொடி உயர்த்தியிருந்த செங்கோட் டையனும் இந்த கருப்புப்பட்டையை அணிந் திருந்தார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் கருப்புப்பட்டையைப் பார்த்து, "உறுப்பினர்களுக்கு ரத்தக் கொதிப்பா?' என்று கிண்டலடித்தார் சபாநாயகர் அப்பாவு.  

Advertisment

கேள்வி நேரம் முடிந்ததும் பேசுவதற்கு எழுந்தார் எடப்பாடி பழனிச்சாமி. கரூர் சம்பவம் குறித்து அ.தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்புத் தீர்மானமும், கவன ஈர்ப்புத் தீர்மானமும் கொடுத்திருந்தன. அதனை அனு மதித்து விவாதிக்க வேண்டும் என பேசுவதற்காக எழுந்தார் எடப்பாடி.     

ஆனால், விவாதம் தொடங்குவதற்கு முன்பாக கரூர் சம்பவம் குறித்து பேச  முதல்வர் ஸ்டாலினும் எழுந்தார். இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தார் எடப்பாடி. இதனால், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிச்சாமியை பார்த்தும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஸ்டாலினை பார்த்தும் குரல் கொடுத்தனர். இதனால், கூச்சல் எழுந்தது. ஸ்டாலின் பேசத் தொடங்கியதும் தி.மு.க.வினர் அமைதியானார்கள். 

Advertisment

ஆனால் அ.தி.மு.க.வினரோ, எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதியுங்கள் எனக் குரல் கொடுத்தபடியே இருந்ததால், குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, "பேரவை விதி எண் 56-ன்படி நீங்கள் மனு கொடுத்திருக்கிறீர்கள். அது குறித்து முதல்வர் பதில் சொல்லவில்லை. அரசு சார்பில் ஒரு அறிக்கையை வாசிக்கவிருக்கிறார். அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்'' என்று வேண்டுகோள் வைத்தார். 

அவரின் வேண்டுகோளை பொருட்படுத்தாத அ.தி.மு.க.வினர் தொடர்ந்து கூச்சலிட்டதால், குறுக்கிட்ட பேரவையின் அவைமுன்னவர் துரைமுருகன், "இந்த சபையை ஈர்க்க எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிமை உண்டு. முதல்வர் இந்த அவையில் ஒரு அறிக்கையை வாசிக்கவும் உரிமை உண்டு. அவர் வாசித்து முடித்ததும் நீங்கள் பேசுங்கள்'' என்றார். இதனையடுத்து அமைதி யானார்கள் அ.தி.மு.க.வினர். 

கரூர் சம்பவம் குறித்து பேரவையில் அறிக்கை வாசித்த முதல்வர் ஸ்டாலின், "கரூர் துயர  சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. நம் அனைவரையும் சோகத்திலும், துயரத்திலும் ஆழ்த்தியது. கரூர் வேலுச்சாமி புரத்தில் த.வெ.க. தலைவரின் அரசியல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அனுமதி கேட்டிருந்தனர். அவர்கள் அனுமதி கேட்ட இடங்களில் போக்குவரத்து நெருக்கடியும் பொதுமக்களுக்கு தொல்லைகளும் ஏற்படும் என்பதால் அந்த இடங்கள் நிராகரிக்கப்பட்டு வேலுச்சாமி       புரத்தில் 11 நிபந்தனைகளுடன் மக்கள் சந்திப்            புக்கு அனுமதி தரப்பட்டது'' என்று விவரித்தவர், இந்த நிகழ்ச்சிக்காக கரூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து காவல்துறை உயரதிகாரி          கள் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டு விவரித்தார் முதல்வர். மொத்தம் 606 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதையும், கூட்டம் அதிகமாக வரும் என்பதை கணித்து கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார் ஸ்டாலின். 

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், "த.வெ.க. தலைவர் நாமக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு கரூருக்கு இரவு 7 மணிக்கு வந்தார். அதாவது அறிவிக்கப்பட்ட 12 மணியை கடந்து 7 மணி நேரம் தாமதமாக வந்தார். இந்த காலதாமதம் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருந்தது. குடிநீர், உணவு உள்ளிட்ட முக்கியமான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்திருக்க வேண்டும்; ஆனால், செய்யவில்லை. இரு தினங்களுக்கு முன்பு அதே வேலுச்சாமிபுரத்தில், எதிர்க்கட்சித் தலைவரின் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும் ஏற் பாட்டாளர்களும் கட்டுப் பாட்டோடு நடந்து கொண்டதால் எந்த அசம் பாவிதமும் நடக்கவில்லை. ஆனால், அதற்கு நேர்மாறாக இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. 

நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், பிரச்சார வாகனத்தின் பின்னால் ஏராளமானோர் வந்ததாலும், கரூர் நகர உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர், பிரச்சார வாகனத்தில் இருந்த ஏற்பாட்டாளர்களை அக்க்ஷயா மருத்துவமனை அருகே நிறுத்தி உரையாற்றுமாறு அறிவுறுத்தினர். அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் பேசுவோம் எனப் பிடிவாதமாக தொடர்ந்து முன்னேறிச் சென்றனர்.

30-35 மீட்டர் தூரம் சென்றபோது இருபுறமும் இருந்த கூட்டத்தினரை இது நிலைகுலையச் செய்தது. இதனால் கூட்டத்தில் பல இடங்களில் அலைமோதல் ஏற்பட்டிருக்கிறது. கூட்டத்திலிருந்த பெண்கள், குழந்தைகள் மத்தியில் பீதி, மூச்சுத் திணறல், மயக்கம், நெரிசல் ஏற்பட்டது. பலரும் கீழே விழுந்து மிதிபட்டிருக்கிறார்கள். கூட்ட நெரிசலால் மக்கள் உதவி கோருவதை கவனித்து, காவல் துறையினர் மருத்துவமனை ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். கூட்ட நெரிசலிலிருந்து  மக்களை காப்பாற்றத்தான் ஆம்புலன்ஸ் வந்ததே தவிர, நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்சும் வரவில்லை'' என்று சுட்டிக்காட்டினார் முதல்வர். 

"ஒரே இரவில் அத்தனை உடல்களையும் எப்படி போஸ்ட்மார்டம் செய்தீர்கள்?' என்கிற சந்தேக கேள்வி எதிர்க்கட்சிகளிடம் மட்டுமல்ல, பொது மக்களிடமும் இருந்தது. இதனை தெளிவுபடுத்தும்விதமாகப் பேசிய முதல்வர், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிப்பதற்காக சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, திண்டுக்கல், கோயம்புத்தூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட  152 மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள்  பணியில் ஈடுபட்டார்கள். பொது சுகாதார இயக்குநர் தலைமையில் கூடுதல் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டன.  கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 700 படுக்கைகளோடு எந்த அவசர நிலையையும் சமாளிக்க ஏதுவாக, கூடுதல் 400 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. 

உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41. இதில் ஆண்கள் 13 பேர், பெண்கள் 18 பேர், குழந்தைகள் 10 பேர். கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில், இறந்த அனைத்து உடல்களை யும் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால் அன்று இரவில் உடற்கூராய்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் சிறப்பு அனுமதி பெற்று உடற்கூராய்வு மேற்கொள் ளப்பட்டது.

உடனடியாக, உடற் கூராய்வு நடைமுறையை முடித்து பாதிக்கப்பட் டோரின் குடும்பத்தின ரிடம் ஒப்படைக்க வேண்டி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி தடயவியல் துறைத் தலைவர் மரு.சங்கர் தலைமையில் 24 மருத்துவர்கள் மற்றும் 16 உதவிப் பணியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது. 28.09.2025 அன்று அதிகாலை 1.45 மணிக்கு, முதல் உடற்கூராய்வு தொடங்கப்பட்டு, 28.09.2025 அன்று மதியம் 1.10 மணியளவில் 39வது உடற்கூராய்வு முடிவுற்றது'' என்றார் ஸ்டாலின். 

இதனையடுத்து பேசிய எடப்பாடி பழனிச் சாமி, "தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத் திருந்தால் கரூர் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம்'' என்றும், விஜய்க்கு வக்காலத்து வாங்குவது போல சில விசயங்களை சுட்டிக்காட்டினார். அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், "அதிகாலை 1.45 மணிக்கு பிரேதப் பரிசோதனை துவங்கியது. மொத்தம் ஐந்து மேசைகளில் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது.  14 மணி நேரத்திற்கு உடற்கூராய்வு நடைபெற்றது. உடற்கூராய்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சந்தேகம் என்பதற்கு இடமே இல்லை''  என்றார். 

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, அ.தி.மு.க. நடத்திய கூட்டத்தையும் விஜய் நடத்திய கூட்டத்தையும் ஒப்பிட்டு சில கருத்துக்களை விவரித்தார். இதனை எதிர்க்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் பேச, அப்போது பேசிய அமைச்சர் சிவசங்கர், எடப்பாடி பழனிச்சாமியின் முந்தைய ஆட்சியின் போது நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார். 

இதனால் கடுப்பான எடப்பாடி, சபாநாயகர் இருக்கைக்கு முன்பு சென்று தர்ணா பண்ண, அவரைத் தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களும் ஓடோடிச் சென்று தரையில் அமர்ந்தனர். சிவசங்கர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு ரகளையில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் அவர்களை வெளியேற்ற சபைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். காவலர்கள் உள்ளே வர முயற்சிக்க, எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் வெளியேறினர்.

வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி, "ஆளும் கட்சிக்கு ஒரு நீதி; எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என நடத்துகிறது இந்த அரசு'' என்றவர், முதல்வர் ஸ்டாலினின் அறிக் கையில் முரண்பாடு இருப்பதாக சுட்டிக்காட்டி விட்டு, "கரூர் நிகழ்வைப் பொறுத்தவரை அரசின் அலட்சியம், காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்கப்படாததுதான் காரணம்'' என குற்றம்சாட்டினார். 

கரூர் துயரத்துக்கு யார் காரணம் என்பதை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்திய பிறகும், விஜய்யை கூட்டணிக் குள் இழுப்பதற்காக விஜய்க்கு வக்காலத்து வாங்கும் அரசியலை முன்னெடுத்துவருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.