திராவிடத்திற்குள் பார்ப்பனியத்தைப் புகுத்தியவர் எம்.ஜி.ஆர். என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேசிய பேச்சு அ.தி.மு.க. அரசியலில் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.
முத்தமிழறிஞர் கலைஞரின் 7ஆம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம் அம்பத்தூரில் கடந்த 7-ந் தேதி தி.மு.க. நடத்தியது. இதில் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், "தமிழ்நாட்டில் புதிதாக கிளம்பி யிருக்கும் கட்சிகள் சில, தமிழ்த் தேசியம் பேசுகிறோம் என்கிற போர்வையில், உண்மையான எதிரி யார் என்பதைச் சொல்லாமல், கலைஞரும் தி.மு.க.வும்தான் எதிரி என சொல்கின்றன. கலைஞருக்கு நினைவுச் சின்னம் வைத்தால், அதை உடைத்தெறிவோம் என்ற வெறுப்பை உமிழ்கிறார்கள். ஆனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை அந்த கட்சிகள் விமர்சிப்பதில்லை. கலைஞரை மட்டுமே குறிவைத்தனர்.
கடந்த 50 ஆண்டுகளாக கலைஞருக்கு எதிரான வெறுப்பு அரசியல் தமிழகத்தில் இருக்கிறது. இதே தொற்றுநோய் எனக்கும் இருந்தது. ஆனால், கலைஞரின் ஆற்றல், ஆளுமை ஆகியவை கண்டு வியந்துபோய், எனது எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். பெரியார் பேசியதைத்தான் அண்ணா பேசினார்; அண்ணா பேசியதைத்தான் கலைஞர் பேசினார். ஆனால், தாக்கப்பட்டது கலைஞர் மட்டும்தான்.
இதற்காக பயன்படுத்தப்பட்டவர் எம்.ஜி.ஆர். இவரை கலைஞருக்கு மாற்றாக நிறுத்தி, வெறுப்பு அரசியலை பார்ப்பன சக்திகள் கட்டமைத்தன. அதேபோல, திராவிட இயக்கத்திற்குள் பார்ப்பனியம் ஊடுருவக் காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். இவர்தான், திராவிடக் கட்சியின் தலைவியாக ஒரு பார்ப்பன பெண்மணியை (ஜெயலலிதா) தலைமை வகிக்கப் பாதை போட்டுக் கொடுத்தார் என்கிற விமர்சனங்களும் இருக்கின்றன. ஜெயலலிதாவிடம் அவரது கடைசி மூச்சுவரை, கலைஞருக்கு எதிரான வெறுப்பு அரசியல் இருந்தது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சிறந்த கதாநாயகன் -கதாநாயகி என்கிற அடிப்படையில்தான் அவர்களுக்காக மக்கள் திரண்டனரே தவிர மிகச் சிறந்த அரசியல் தலைவர்கள் என்பதால் அல்ல''” என்றார் மிக ஆவேசமாக.
திருமாவளவன் பேசியது குறித்து எடப்பாடியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, "தமிழக மக்கள் எம்.ஜி.ஆரை. தெய்வமாக நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்திருக்கிறார் திருமாவளவன். அ.தி.மு.க.வில் அனைத்து ஜாதியினரும் மதத்தினரும் ஒற்றுமையாக இருக்கிறோம். இது, திருமாவளவன் போன்றவர்களுக்குப் பிடிக்கவில்லை எரிச்சலை ஏற்படுத்துகிறது. காரணம், அரசியலில் திருமாவளவன் நினைத்தது நடக்கவில்லை. அதனாலேயே இப்படி வார்த்தைகளை கக்கியிருக்கிறார். இப்படி அவர் விமர்சனம் செய்தால் அரசியலிலிருந்து காணாமல் போய்விடுவார்''’ என்று எடப்பாடி பழனிச்சாமி பதிலடி தந்தார் மிக காட்டமாக.
இந்த நிலையில், தனது பேச்சு சர்ச்சையாவதை அறிந்துகொண்ட திருமாவளவன், "எம்.ஜி.ஆர். மீதும் ஜெயலலிதா மீதும் எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. என்னுடைய பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டுள்ளது''’என்று விளக்கமளித்துள்ளார்.
இதற்கிடையே, எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவை விமர்சித்ததன் மூலம், தி.மு.க. கூட்டணியிலிருந்து சிறுத்தைகள் விலகாது என்பதை திருமா உறுதிப் படுத்தியுள்ளார் என்கிறார்கள் சிறுத்தைகள்.