கொடநாடு கொலை வழக்கில் மிக மிக வேகமாக ஐ.ஜி. சுதாகர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு குற்றவாளிகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வேலையில் நக்கீரனும் தனது புலனாய்வு மூலம் உதவிக்கொண்டிருக்கிறது.
அந்த வரிசையில் ஒரு முக்கியமான சாட்சியமாக, இந்த வழக்கில் தொடர்புடைய வி.ஐ.பி. குற்றவாளியான எடப்பாடி அண்ட் கோ எவ்வளவு பணம் செலவழித்துள்ளனர் என்பதற்கு உதாரணமாக ஒரு பெண் இருந்துள்ளார் என்கிறார்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள்.
அவர் பெயர் மல்லிகா நல்லுசாமி. இவர் கணவர் பெயர் பிச்சுமணி. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜின் மரணத்திற்கு காரணமான காரின் உரிமையாளர்தான் இந்த மல்லிகா நல்லுசாமி.
பெங்களூர் நகரின் புறநகர் பகுதியான சிலிக் போர்ட் என்ற இடத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள காகுபேசின ஹள்ளி என்ற பகுதியில் உள்ள ஸ்ரத்தா பால்மேரயு அபார்ட் மெண்ட்டில் குடியிருக்கிறார். இவரது கணவர் பிச்சுமணி, ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் பெரம்ப லூர் மாவட்டம் செட்டிகுளத்தை அடுத்த மாவிலங்கை. செட்டிகுளம் அரசு பள்ளி, நேரு மெமோரியல் கல்லூரியில் 98-ஆம் ஆண்டு பட்டப் படிப்பு படித்த பிச்சுமணி, பெங்களூருவில் உள்ள யாட்- என்கிற மென்பொருள் கம்பெனியில் மேனேஜராக சேருகிறார். மராத்தான் என்கிற ஓட்டப்பந்தய சேம்பியனாகியிருக்கிறார். 2017-ஆம் ஆண்டு கோவை ஜக்கி ஆசிரமத்திற்கு சென்ற அவர் வரும் வழியில் மர்மமாக இறந்து போகிறார். அவர் இறந்து இரண்டு மாதங்கள் கழித்து 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி வீட்டில் நிலவிய வறுமை காரணமாக மல்லிகா தனது கணவரின் சொந்த ஊரான மாவிலங்கைக்கு போக, தனது மாமியார் மற்றும் இரண்டு குழந்தை களுடன் ஆத்தூர் வழியாக காரில் வருகிறார். அந்த காரில் அடிபட்டு கனகராஜ் இறக்கிறார். அதன் பிறகு நடந்தவைதான் மிகவும் ஆச்சரியமான விஷ யங்கள் என்கிறார்கள் மல்லிகாவின் உறவினர்கள்.
அந்த விபத்து நடக்கும்வரை பிச்சுமணி வாங்கி வைத்திருந்த கடன்களால் மிகவும் கஷ்டப் பட்டு வந்தவர் மல்லிகா. கணவர் 80 லட்ச ரூபாய் செலவில் வாங்கி வைத்திருந்த வீட்டுக்கு மாதம் நாற்பதாயிரம் ரூபாய் கட்ட முடிய வில்லை. ஆனால் விபத்துக்குப் பிறகு அவர் கணவர் வேலை செய்த கம்பெனியே அவருக்கு வேலை போட்டுக் கொடுத்தது. ஒரு சாதாரண சிப்பந்தி யாக வேலைக்குப் போன மல்லிகா... திடீ ரென வீட்டுக்கென வங்கியில் வாங்கியிருந்த கடன் 80 லட்ச ரூபாயை அடைத்துவிட்டார். அவர் லைஃப் ஸ்டைலும் மாறிவிட்டது. கணவரின் உற வினர்கள் மற்றும் நண்பர்களை ஒதுக்கிவிட்டார். விபத்து நேரத்தில் அவருக்கு உதவிய வெங்கடேஷுடன் மட்டும் நட்பைத் தொடர்கிறார் என அவருக்கு நெருக்கமானவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
மல்லிகாவின் பெங்களூரு, பெரம்பலூர் பயணத்திற்கு ஏற்பாடு செய்தவர் ஆத்தூர் தம்மம்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ். இவரது உறவினர், தம்மம்பட்டி கூட்டுறவு சங்க நிர்வாகி என்ற முறையில் எடப்பாடிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் மற்றும் ஆத்தூர் பகுதி அ.தி.மு.க. நிர்வாகி ரஞ்சித் ஆகியோருக்கு நெருக்கமானவர். விபத்து நடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி மல்லிகாவின் கார், பெங்களூருவிலிருந்து நார்மலாக வரக்கூடிய நேரத்தை விட ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்துள்ளது. இந்த தாமதம், ஒரு பெரிய சந்தேகக்குறி என்கிறார்கள் மல்லிகாவின் உறவினர்கள்.
விபத்திற்குள்ளான காருக்கு இன்சூரன்ஸ் இல்லை. இன்சூரன்ஸ் இல்லாத காரை தேசிய நெடுஞ்சாலை யில் ஓட்டி வரமாட்டார்கள். தம்மம் பட்டியை சேர்ந்த ரபீக்கை வைத்து அந்த காரை ஓட்டிவர வைத்துள்ளார் வெங்கடேஷ். விபத்து நடந்த சில நாட்களிலேயே அந்த காரை ஆத்தூரில் ஒருவருக்கு விற்றுவிட்டார். இன்சூரன்ஸ் இல்லாத விபத்துக்குள்ளான காரை எப்படி விபத்து நடந்த ஒருசில நாட்களில் விற்றார் என உறவினர்கள் கேட்டபோது, வெங்கடேஷ் மூலம் விற்க ஏற்பாடு செய்தேன் என பதில் சொல்லியிருக்கிறார் மல்லிகா.
நாம் மல்லிகாவை தொடர்புகொண்டு கேட்டோம். "அப்படியெல்லாம் விற்கவில்லை, அந்த காரை நான் ரிப்பேர் பண்ணினேன், அதன்பிறகுதான் விற்றேன்'' என்கிறார். கொடநாடு கொலை வழக்கு இன்றளவும் முடியவில்லை. வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ், எப்படி இறந்தார் என்கிற புலன்விசாரணை இன்றளவிலும் தொடர்கிறது.
இந்நிலையில், விபத்துக்குள்ளான கார் சட்டப்படி அப்படியே இருக்கவேண்டும். அதை எப்படி ரிப்பேர் செய்தீர்கள்? என கேட்டோம். அதற்கு அவரிடம் பதில் இல்லை. கனகராஜ் நேராக வந்து காரில் மோதினார், அது தொடர்பான வழக்கு முடிந்தது என போலீஸார் கூறினார்கள். எனது காரை திருப்பி என்னிடமே கொடுத்தார்கள். அதை பெங்களூருவுக்கு கொண்டு செல்ல முடியாது என்பதால் விற்றுவிட்டேன். ஆனால், விபத்து நடந்த ஒரு சில நாட்களில் காரை நான் விற்கவில்லை என்று கூறினார்.
தனது வசதி வாய்ப்பான வாழ்க்கை பற்றி வரும் குற்றச் சாட்டுகளை மல்லிகா மறுத்தார். காரை ஓட்டி வந்த ரபீக், பெங்களூருவில் சில்க்போர்டு என்ற இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் மல்லிகாவின் வீடு இருந்தது என நம்மிடம் கூறினார். கூகுள் மேப் சில்க்போர்டிலிருந்து 12 கி.மீ. தொலைவில் மல்லிகா வீடு இருப்பதை காட்டியது.
இன்சூரன்ஸ் சரியாக இல்லாத வண்டியை எப்படி தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டிவந்தீர்கள் என ஓட்டுநர் ரபீக்கிடம் கேட்டபோது, வழக்கம்போல, அது எனக்கு தெரியாது என பதில் சொன்னார். இந்த வழக்கில் தம்மம்பட்டி வெங்கடேஷ்தான் சந்தேகத்திற்குரியவர். ஆனால் அவரை இதுவரை போலீசார் சந்தேகிக்கவில்லை, அவரிடம் விசாரணை நடத்தவும் இல்லை. ஆத்தூருக்கு பக்கத்தில் உள்ள காட்டுக்கோட்டை என்ற இடத்தில் உள்ள ஒயின்ஷாப் பாரில், கனகராஜ் இறப்பதற்கு முன்பு குடித்துள்ளார் என கனகராஜின் உறவினர் ரமேஷ் கூறுகிறார். அந்த பாரில் கனகராஜுடன் ரமேஷும் இருந்துள்ளார் என ரமேஷின் நண்பர்கள் கூறுகிறார்கள். ஆக... கனகராஜ் விபத்தில் சிக்கும்போது ரமேஷ் உடன் இருந்துள்ளார் என்கிறார்கள் ரமேஷின் உறவினர்கள்.
அத்துடன் சந்தோஷ் சுவாமி என்கிற குற்றவாளியை கேரளாவில் கைது செய்யும்போது கனகராஜை கைது செய்துவிட்டீர்களா? என சந்தோஷ் சுவாமி கேட்க, அவரை சேலம் போலீஸார் பார்த்துக் கொள்வார்கள் என பதில் சொன்னதாக சந்தோஷ் சுவாமி புதிதாக நடந்த விசாரணையில் சொல்லியிருக்கிறார். சேலம் எடப்பாடி ஆய்வாளர் சுரேஷ்குமார், கனராஜுடன் பேசிக்கொண்டிருந்தார் என கனகராஜின் சகோதரர் தனபால் நம்மிடம் சொன்னார்.
தற்போது பென்னாகரத்தில் வேலை செய்யும் சுரேஷ்குமாரிடம் அதுபற்றி கேட்டோம். அவர் இறப்பதற்கு முன்பு நான் கனக ராஜிடம் பேசினேன். அவர் எங்கிருக்கிறார் என கண்டுபிடித்துத் தருமாறு சேலம் எஸ்.பி.யாக இருந்த ராஜன் என்னிடம் சொன்னார். நான் பேசினேன். போனில் பேசிய கனகராஜ், எனக்கு கிட்னியில் கல் உள்ளது, அதன் சிகிச்சைக்காக சேலம் பெரம்பலூர் மாவட்ட எல்லையில் உள்ள டெய்லரான கனகராஜ் என்பவர் அவரோடு போனில் தொடர்புகொண்டபோது, போனை கனகராஜின் சகோதரர் பழனிவேல் எடுத்து, கனகராஜ் இறந்துவிட்டதாக கூறினார் என சொன்னார். கனகராஜ் என்ன செய்தார், அவர் எப்படி மரணமடைந்தார் என்பது அவருக்கு நெருக்கமான அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது உறவினர்களே உண்மையை மறைக்கிறார்கள். கனகராஜை, அவர் குடித்துக்கொண்டிருந்த பாரில் வைத்தே ஒரு கும்பல் துரத்தியது என்கிறார்கள் கனகராஜின் உறவினர்கள்.
கனகராஜ் நிச்சயமாக கொலை செய்யப்பட்டுதான் மல்லிகாவின் காரில் தூக்கிப் போடப்பட்டிருக்கிறார். காவல்துறைக்கு இந்த விவரங்கள் தெரியும். விபத்து நடந்த ஆத்தூருக்கு பக்கத் தில் உள்ள புத்திரகவுண்டன்பாளையம் என்ற இடத்தில்தான் எடப்பாடிக்கு மிக நெருக்கமான சேலம் இளங்கோவன், ஆறுகோடி ரூபாயில் ஒரு மாளிகை கட்டியிருக்கிறார். சேலம் இளங்கோவனையும் ஊட்டியில் உள்ள சஜீவனையும் அமைச்சர் வேலுமணிக்கு மிக நெருக்கமானவர் என பதிவுத்துறை சஸ்பெண்ட் செய்துள்ள செல்வகுமார், கொடநாடு மேனேஜர் நடராஜன் ஆகியோரை விசாரித்தாலே கொடநாடு கொலை வழக்கு முடிவுக்கு வரும் என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.