"புள்ளைய பார்க்க ஆசையா வந்தாரே... கொரோனா டெஸ்டுனு என் புருசன கொன்னு புட்டாங்களே... மார்ச்சுவரியில இருக்காருன்னு சொல்லுறாங்களே.. என்ன ஆச்சுன்னு தெரியலையே...…என் புருசன் சாவுக்கு நியாயம் கிடைக்கணும்''’என்று கதறி அழும் இளம்பெண் ணின் வீடியோ அண்மையில் வைரலாகி பதற வைத்தது.
சிங்கப்பூரில் இருந்து கடந்த 25.06.2020 அன்று அதிகாலையில் சென்னை வந்த 40க்கும் மேற்பட்டவர்களுக்கு விமான நிலையத்திலேயே தமிழக மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்திருக்கின்றனர். கொரோனா தொற்று இல்லை என்று உறுதி ஆனபோதும், வெளிநாடுகளிலிருந்து வருவோரை 14 நாட்கள் தனிமைப்படுத்தல் என்ற மருத்துவ ஆலோசனைப்படி, தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் சொகுசு நட்சத்திர ஓட்டலில் தனித்தனி அறைகளில் அனைவரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற் கான கட்டணத்தை, வெளிநாடுகளிலிருந்து வருபவரிடமே வசூலிக்கிறார்கள்.
நாளொன்றுக்கு 2500 ரூபாய் என்ற கட்டணத்தில் ஹயாத் ஓட்டலின் அறையில் தங்கவைக்கப்பட்ட சுந்தரவேல் திடீரென உயிரிழந்ததால், சந்தேகம் அடைந்த மனைவி கதறிய அந்த வீடியோ விவகாரத்திற்கு பின்னால் பல அதிர்ச்சிகள் இருப்பது தெரியவந்திருக்கிறது.
தமிழக அரசு மற்றும் தனியார் ஓட்ட லின் படு அலட்சியத்தினால் தனிமைப்படுத்துதல் என்ற பெயரில், எந்தவொரு கவனிப்பும் இல்லாமல் சுந்தரவேலின் உயிர் அநியாயமாகப் பறிபோயிருப்பதும் மிக மெதுவாகவே தெரியவந்தன. அறையிலிருந்த சுந்தரவேல் இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை. மூடப்பட்டிருந்த கதவுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த உணவையும் வெளியே எடுக்கவில்லை. அதுபற்றி எந்த அக்கறையும் காட்டாத ஹோட்டல் நிர்வாகம், இரண்டு நாட்கள் கழித்து, உள்பக்கம் தாழிட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றபோது, நாற்காலியிலேயே சரிந்து கிடந்தார் என்றும், பாத்ரூமில் குளியல் கோலத்தில் கிடந்தார் என்றும் அவரது மரணம் பற்றி இருவேறு விதமாகத் தகவல்கள் வெளியாயின.
அரசு மற்றும் நட்சத்திர ஓட்டல் நிர்வாகத்தால் கணவர் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்ட நிலையில், அவரது சடலத்தை வைத்துக்கொண்டு சம்பாதிக்க நினைத்த ஈவு இரக்கமற்ற போலீசாரின் நடவடிக்கையும் அம்பலமாகி பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், நாம் அப்பெண்ணிடம் பேசினோம்.
""என் பேரு சந்திரா. சொந்த ஊரு தஞ்சாவூர். எனக்கு 2015ல கல்யாணம் ஆச்சு. என் புருசன் பேரு சுந்தரவேல். கடலூர் மாவட்டம் திட்டகுடியை அடுத்த நிதிநத்தம் கிராமம். ஜெ.சி.பி பொக்லைன் ஆப்ரேட்டரா இருந்தாரு. கடந்த பத்து வருசமா சிங்கப்பூரிலே வேலை செய்துட்டுவந்தாரு. கல்யாணம் முடிஞ்சும் அங்கதான் வேலை பார்த்தாரு. மூணுவருசம் கழிச்சிதான் எங்களுக்கு மகன் பொறந்தான். போன நவம்பர் மாசம் சிங்கப்பூர் போன என் புருசனுக்கு கொரோனா காரணமா வேலை சரியா இல்ல. அதனால திரும்பவும் சொந்தவூர் வர விண்ணப்பிச்சாரு. போன்ல வீட்டுக்கு வரப்போறேன்னு சொன்னாரு. சிங்கப்பூர் கிளம்புறதுக்கு முன்னால அப்ப அப்ப பேசி எல்லா விவரமும் சொல்லுவாரு. அதுதான் அவர் என்கிட்ட கடைசியா பேசியது.
அரசோட முயற்சியால போன ஜூன் 25 ஆம் தேதி காலை 9 மணிக்கு அவர் சென்னைக்கு வந்து சேர்ந்துட்டதா, ஒரு மெசேஜ் வந்துச்சு. அதுல, என் புருசன கொரோனா டெஸ்ட் முடிச்சி தேனாம் பேட்டை ’ஹயாத்’ ஓட்டல்ல தங்க வைச்சி இருக் கறதா தகவல் இருந்துச்சு. ஆனா, அவர் எங்ககிட்ட பேசாததால அவருக்கு என்ன ஆச்சின்னு தெரியாம பயம் வந்துச்சு. அதனால, ஒரத்தநாடு போலீஸ் ஸ்டேசன்ல புகார் கொடுத்தேன். வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள்னு நாளு கடந்து போச்சு. ஆனா, அவர் பேசவே இல்லாதது சந்தேகமா இருந்துச்சி. நெட் மூலமா ஓட்டல் நம்பர எடுத்து, கால் செஞ்சோம். ஓட்டல்ல இருந்து முதல்ல சரியான பதில் இல்ல. அப்புறமா, அவர் ஓடி போயிட்டதா சொன்னாங்க. இங்குள்ள போலீஸ் மூலம் பேசினப்போ, அவர் இறந்து போயிட்டதா சொன்னாங்க. பதறிப்போய், தேனாம்பேட்டை போலீஸ்ல பேசினோம்.
வயிறு வலின்னு இருந்தவருக்கு ஊசி போட்டாங்க, மாத்திரை கொடுத்திருக்காங்க. இதையெல்லாம் சொல்லவே இல்லை. பதறி அடிச்சிக் கிட்டு சென்னைக்கு போனோம். ஆனா அவர காட்டாம போலீஸ்காரங்க எங்கள ஒரு பெரிய ஸ்டார் ஓட்டல்ல தங்க வைச்சாங்க. மறுநாள் புதன் கிழமை அரசு ஓமந்தூரார் மருத்துவ மனைக்கு கூட்டிட்டு போனாங்க. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல மாரடைப்பால இறந்து போனதா சொல்லிட்டாங்க. அந்த நெலமையி லயும் அவர போஸ்ட்மார்ட்டம் செஞ்சதுக்கு 10 ஆயிரமும், ஆம்புலன்ஸ்ல ஊருக்கு கொண்டு போக 25 ஆயிரமும் கேட்டாரு போலீஸ்காரர் மாதவன். நான் இங்க வந்ததே என் தாலிய அடமானம் வைச்சிதான். என்கிட்ட 15 ஆயிரம்தான் இருக்குதுன்னு சொன்னேன். ஆனா அவுங்க அதுக்கு ஒத்துக்கவே இல்ல.
என்னோட நிலைமையை வாட்சப்புலே பேசினேன். அத பார்த்துட்டு, மக்கள் பாதை அமைப்புல இருந்து கீதாம்மா வந்தாங்க. எல்லாம் விவரமும் சொல்லி அழுதேன். அவங்க வந்து பேசியபிறகுதான், ஒரு வழியா அவர் பிணத்த கொடுத்தாங்க . அழுகிய நிலையில இருந்த அவர கடைசியா தொட்டுக்கூட அழமுடியல. என் தாலிக்கு எடப்பாடி அரசுதான் பதில் சொல்லணும்''’என்று சொல்லிவிட்டு கதறி அழுகிறார். சுந்தரவேல் சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்த பெட்டியை உடைத்து பணம், நகை திருடப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார் மனைவி சந்திரா.
மக்கள் பாதை கீதாவிடம் நாம் பேசியபோது, ""வாட்ஸ்ஆப் வீடியோவை பார்த்துட்டு மக்கள் பாதை சகாயம் ஐ.ஏ.எஸ். அய்யாதான் என்னை அனுப்பி வைச்சாரு. ஓமந்தூரார் மருத்துவமனையில் இலவச அமரர் ஊர்திக்கு காசு கேட்ட பிணந்தின்னிகளைப் பார்த்தேன். போஸ்ட்மார்ட்டத்துக்கு 10ஆயிரம் கேட்டாங்க. சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்னு சத்தம் போட்டதால எல்லாமே இலவசமா நடந்துச்சு''’என்றவர், ""மரணம், திருட்டு எல்லாம் நடந்தும் சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது போலீஸ் ஏன் வழக்கு போடல'' என்று கேள்வி எழுப்பு கிறார்.
தேனாம் பேட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷிடம் பேசிய போது, ""எல்லாம் சரியாகத்தான் நடந்தது. இழந்தவர்கள் பல புகார் கொடுப்பது வழக்கமான ஒன்று'' என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தார்.
ஓட்டல் நிர்வாகத்தை தொடர்பு கொண்டால், இந்த சம்பவத்துக்கு பின் அந்த ஓட்டல் ஊழியர்கள் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஓட்டல் மூடப்பட்டு விட்டது என்று சொல்வதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.
சென்னை விமானநிலையத்துக்கு வரும் வெளிநாடு வாழ் தமிழர்கள், அரசாங்கத்தால் கேளம்பாக்கம் வி.ஐ.டி. கல்லூரியில் தங்க வைத்து தனிமைப்படுத்தப்பட்டபோது, போதிய வசதிகள் இல்லாமல் இரண்டு உயிர்கள் பலியாயின. மூச்சுத்திணறல் என்றுதான் அரசுத்தரப்பில் காரணம் சொல்லப்பட்டது. அதன்பிறகு, பயணிகள் செலவிலேயே ஸ்டார் ஓட்டலில் தங்கவைப்பது அதிகமானது. சென்னை போலவே திருச்சி விமானநிலையத்திற்கு வருபவர்களின் நிலையும் இதேதான்.
தனியார் ஓட்டலில் சாதாரண அறையே 1,500 ரூபாய் கட்டணத்தில் இருந்து துவங்குகின்றது. கொஞ்சம் வதியான அறை என்றால் இன்னமும் கூடுதல் கட்டணம். பயணிகள் 21 நாட்களுக்கான ஓட்டல் அறை கட்டணத்தையும் செலுத்தவேண் டும். உணவையும் சேர்த்து ஒரு நாளுக்கு 3000 ரூபாய் வரை செலவாகும். குடும்பமாக வந்திருந்தால் ஒரு அறையிலேயே தங்கி விடலாம். எப்படிப் பார்த்தாலும் தனிமைப்படுத்தலுக்காக 25ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
தனியாக வரும் பெண் பயணிகள், 21 நாள் விடுதியில் தங்கினால் அவர்களின் நிலை இன்னும் மோசம். கொரோனா பரிசோதனை முடிவுகளையும் விரைவாக சொல்வதில்லை. நெகட்டிவ் என்றாலும், தனிமைப்படுத்திய பின்பே சொந்த ஊருக்கு அனுப்புகிறார்கள். அதற்குப் பல்வேறு நபர்கள் சிபாரிசு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. வெளிநாட்டில் கொரோனா வேகமாகப் பரவுவதும், வேலையிழப்பு சூழல் ஏற்பட்டிருப்பதும் தாய்நாடு நோக்கி தமிழர்களை வரவைக்கிறது. அப்படி வரு பவர்களிடம் ‘தனிமைப்படுத்தல்’ என்ற பெயரில் பணம் பிடுங்கும் அரசு, இதற்கான தனியார் டிராவல்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. கொரோனாவிலும் பணம் பார்க்கும் அரசாங்கம், டிராவல்ஸ் நிறுவனங்கள், ஹயாத் போன்ற ஓட்டல்களின் அலட்சியமே சுந்தரவேல் போன்றவர்களின் உயிரைப் பறிக்கிறது.
-எஸ்.பி.சேகர், அரவிந்த், ஜெ.டி.ஆர்.
______________
ஏழைக்கண்ணீர் உங்களுக்குத் தெரியவில்லையா?
தன் கணவரின் மரணத்துக்கு நியாயம் கேட்டு சந்திரா பேசிய இரண்டு வீடியோக்கள் வாடஸ்ஆப்களில் வைரலாகப் பரவியது. அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஆள்வோரின் முகத்தில் காறித் துப்புவதாக இருந்தது. அதிலிருந்து.. ..
""சிங்கப்பூரில் இருந்து கொரோனா தொற்று இல்லாமல் வந்த என் கணவர் சென்னை ஹையாத் ஹோட்டலில் இறந்துபோனார். இதற்கு முழு காரணம் தமிழக அரசும், அந்த ஹோட்டல் நிர்வாகமும்தான் என்று ஒரு வீடியோ போட்டேன். இதை பார்த்தவர்கள் நிறைய பேர் எனக்கு போன் போட்டு பேசுகிறார்கள். 100 நாள் வேலையில் இருப்ப வர்கள் பேசுகிறார்கள். ஆறுதல் கூறுகிறார்கள். கொரோனா இல்லாமல் வந்தவரை ஏன் பெரிய ஓட்டலில் தங்க வைத்தார்கள் என்கின்றனர். இந்த வீடியோவை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள். எடப்பாடி ஐயா என் கூக்குரல் உங்கள் காதில் விழவில்லையா? ஏழை கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லையா?
ஊரடங்கில் சிங்கப்பூரில் 3 மாசம் இலவச சாப்பாடு, நெட், மருத்துவம் கொடுத்து நல்லாத்தானே அனுப்பி வைச்சாங்க. இந்தியாவுக்கு வந்து நாலு நாள்ல கொன்னுட்டீங்க. என்ன ஆட்சி நடக்குது. இதுதான் ஏழைகளுக்கு நடத்துகிற ஆட்சியா? வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத் துகிறோம் என்று சொல்கிறீர்கள். அவர்களுக்கு எந்த வகையில் பாதுகாப்பு செய்து கொடுத்தீர்கள். பெரிய ஓட்டலில் தங்க வைத்தீர்கள். அவர்களது குடும்பத்திற்கு தெரியப்படுத்தினீர்களா? வயிறு வலின்னு சொன்னார், ஊசி போடப்பட்டது என்று சொல்கிறது ஓட்டல் நிர்வாகம். இறந்துபோனவர் உடல் ஓட்டல் பாத்ரூமில் கிடந்திருக்கிறது.
இரண்டு நாளா சாப்பாடு எடுக்காமல் இருக்கிறாரேன்னு ஏன் பாக்கவில்லை. ஓட்டல்காரர்களோ சாப்பாடு வைப்பதுதான் எங்க வேலை. அதெல்லாம் எங்க வேலை இல்லை என்கிறார்கள். இதுதான் ஸ்டார் ஹோட்டலா. இப்படித்தான் மனிதாபிமானம் இல்லாமல் நடப்பீர்களா?
ஒரு பொண்டாட்டியா, புருஷன் உடம்ப பாக்க முடியல. எவ்வளவு ஆசையா வந்திருப்பார், பொண்டாட்டி, ஒரு வயது புள்ள, சொந்தக் காரங்கள பாக்க. வெளிநாட்டில் இருந்து வர்றவங்களுக்கு இனி யாருக்கும் இதேபோல கொடுமை நடக்கக்கூடாது. என் புருஷன் கொண்டு வந்த நகை, பணம் எதுவும் இல்ல. அதுபத்தி கவலையில்ல. என் புருஷனுக்கு கொரோனா இல்லை. அப்படியிருந்தால் அவரது உடலை என்னிடம் கொடுத்திருக்க மாட்டாங்க. என் தாலிக்கு தமிழக அரசு பதில் சொல்லியாகணும். எட்டாவது நாள் என் தாலியை எடுக்கப்போறாங்க. பணக்காரர்களுக்கு மட்டும்தான் இந்த ஆட்சி. ஏழைகளுக்கு இந்த ஆட்சி கிடையாது.''