ஒரு மாநில அரசாங்கம் என்பது சட்டத்தை இயற்றும் அதிகாரம் பெற்ற அமைப்பாகும். கடந்த எடப்பாடி அரசாங்கமோ, சட்டத்தை மீறவும், நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளவும் செய்திருக்கிறது.
தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் இயங்கும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தில் இயக்குநர் பதவி கடந்த 2020 பிப்ரவரியிலிருந்தே காலியாக உள்ளது.
டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டு கோடிகளில் ஊழல் பண்ணுவதற்கு வசதியாக, தகுதி வாய்ந்த ஒருவரை இயக்குநர் ஆக்குவதற்கு முடிவு செய்தது அந்த அரசாங்கம். முதுநிலை பட்டியலுக்கான அரசாணையின்படி, முதுநிலையில் உள்ள இரண்டு அதிகாரிகளைத் தவிர்த்துவிட்டு, 4-வது இடத்தில் இருந்த செந்தில் குமாரை இயக்குநராக நியமித்தது. அவரும் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி, தொழிற்சாலை நிர்வாகங்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களை மிரட்டி வந்தார்.
இந்நிலையில், அத்துறையில் முதுநிலை பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள மாற்றுத்திறனாளி அதிகாரியான ராஜசேகரன், ‘இயக்குநராக செந்தில்குமாரை தமிழக அரசு நியமித்தது விதிமீறலாகும். இந்நியமனத்தை ரத்து செய்யவேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர் நீதிமன்றமும் சட்டத்திற்கு புறம்பான செந்தில்குமாரின் பதவி உயர்வு நியமனத்தை ரத்து செய்தது. பதவி உயர்வு விதிமுறைகளைப் பின்பற்றி, சீனியாரிட்டி பட்டியலின்படி புதிய இயக்குநரை நியமிக்க அரசுக்கு அறிவுறுத்தியது. எடப்பாடி அரசாங்கமோ, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையிலும் மேல்முறையீடு செய்தது. மேலும், அத்துறையில் பொறுப்பு இயக்குநராக செந்தில்குமாரே தொடர வழிவகை செய்தது.
வழக்கு தொடர்ந்த கூடுதல் இயக்குநர் ராஜசேகரன் ஒரு மாற்றுத் திறனாளி என்பதால், இயக்குனராக விடாமல் செய்ததா அ.தி.மு.க. அரசு? என்ற கேள்விக்கு, ஊனமுற்ற நபர்களுக்கான உரிமைகள் சட்டம்-2016 விடையளிக்கிறது. ‘ஒரு அரசாங்கம், ஊனமுற்ற நபர்களை பிறருக்குச் சமமாக நடத்தவேண்டும். சம உரிமை பேணப்பட வேண்டும். அவர்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதும், நேர்மையான மரியாதையை அனுபவிப்பதும் உறுதி செய்யப்படவேண்டும்’என்பதை அச்சட்டம் வலியுறுத்துகிறது.
நேர்மையான அதிகாரி ஒருவர் இத்துறையின் வரலாற்றில், இயக்குநர் பதவி உள்பட எந்த பதவியும் இதுவரையிலும் ‘ஓவர்லுக்’ செய்து நியமிக்கப்பட்டதில்லை. ஆதாய நோக்கத்தோடு, செந்தில் குமாருக்காக விதிகளைக் காற்றில் பறக்கவிட்டிருக்கிறது கடந்த அ.தி.மு.க. அரசு”என்று குமுறலாகச் சொல்ல, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் (பொறுப்பு) செந்தில்குமாரை தொடர்புகொண்டோம்.
"விதிமீறலாக அரசாங்கம் எனக்காக எதுவும் பண்ணவில்லை'' என்றவரிடம், உயர்நீதிமன்ற உத்தரவு குறித்தும், எடப்பாடி பழனிசாமியுடனான நெருக்கம் குறித்தும் கேள்வி கேட்ட போது பதிலளிக்க முடியாமல் தயங்கி விட்டு, “"நீங்க என்ன எழுதணுமோ எழு திக்கங்க...''’என்று லைனை துண்டித்தார்.
முந்தைய எடப்பாடி அரசாங்கத் தின் தவறுகளை தற்போதைய தி.மு.க. அரசு திருத்தவேண்டும் என்ற பொதுவான எதிர்பார்ப்பு, அரசுத்துறை வட்டாரத்தில் உள்ளது.