தமிழக பா.ஜ.க. தலைவராக முருகன் நியமிக்கப்பட்டதை அடுத்து கட்சியின் மாநில நிர்வாகிகள், அணித்தலைவர்கள் என பல்வேறு பதவிகளுக்கு நியமனம் நடந்தன. இந்த நியமனங்களில், அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்பட மாற்று கட்சிகளிலிருந்து பா.ஜ.க.வுக்குத் தாவிய முக்கியஸ்தர்கள் பலருக்கும் முக்கியத்துவம் தரப்படவில்லை. அவர்கள் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்காதததும், பொறுப்புகளே சிலருக்கு கொடுக்கப்படாததும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. இதில் பழைய அ.தி.மு.க.வினரை தாய்க்கழகமான அ.தி.மு.க.வுக்குள் கொண்டு வரும் அசைன்மெண்ட்டுகளை அமைச்சர்களுக்கு தந்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது, ""அதிமுக கூட்டணியில் பா.ஜ.க. இருக்கும் நிலையில், பா.ஜ.க.வில் உள்ள முன்னாள் அ.தி.மு.க.வினரை நாம் இழுப்பது டெல்லிக்கு கோபத்தை வரவழைக்காதா?'' என அமைச்சர் கே.சி.வீரமணி, எடப்பாடியிடம் கேட்க, ""கூட்டணி உறவு ஆரோக்கியமாக இல்லை. நமக்கு எதிரானவைகளை அவர்கள் (டெல்லி) எடுக்கின்றனர். இனி அவர்களுக்கும் நமக்கும் மத்திய-மாநில அரசு என்கிற அளவில் மட்டுமே உறவு. அதனால், நமக்கான அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டும்''’ என்றிருக்கிறார் எடப்பாடி.
பா.ஜ.க.வில் இணைந்திருந்த ஆற்காடு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன் எதிர்பார்த்தது தமிழக பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் பதவி. ஒதுக்கப்பட்டது, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி. ஏகத்துக்கும் அதிருப்தியடைந்திருந்தார் சீனிவாசன்.
உளவுத்துறை மூலம் இதனையறிந்த எடப்பாடி, அமைச்சர் வீரமணியிடம் அதனை விவரிக்க, உடனே சீனிவாசனிடம் பேசினார் வீரமணி. இவர் எடுத்த முயற்சியில், பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி முன்னிலையில் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்துகொண்டார் சீனிவாசன். இதனை பரபரப்பான செய்தியாக மாற்றியது அ.தி.மு.க. இதனை ஜீரணிக்க முடியாமல் டெல்லி தலைமைக்கு எடப்பாடிக்கு எதிராக போட்டுக் கொடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் முருகன்.
அதேபோல, பா.ஜ.க. தமிழக தலைவர் பதவியை எதிர்பார்த்து பல்வேறு காய்களை நகர்த்திய அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரான நயினார் நாகேந்திரனும் எதிர்பார்த்தது கிடைக்காததால் அதிருப்தியடைந்திருந்தார். தி.மு.க.வுக்குள் நயினாரை இழுக்க மு.க.ஸ்டாலின் முயற்சிப்பதை அறிந்து, நெல்லைக்கு பறந்த பாஜக தலைவர் முருகன், நயினாரை சந்தித்து சமாதானம் பேசியிருக்கிறார். நயினாரோ, பிடிகொடுக்கவில்லை. இந்த நிலையில்தான் முன்னாள் கனிமவளத்துறை அமைச்சர் நயினாரை இழுக்கும் அசைன் மெண்ட்டை இந்நாள் கனிமவள அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைத்தார் எடப்பாடி.
இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள், ""நயினாரிடம் பேசிய சண்முகம், பா.ஜ.க. மீது உங்களுக்குள்ள கோபம் நியாயமானதுதான். அதற்காக, தி.மு.க.வை கையிலெடுத்து விடாதீர்கள். அது உங்களின் அரசியலுக்கு நல்லதல்ல. மீண்டும் தாய்க்கழகத்திற்கு வருவதுதான் சரியான முடிவாக இருக்கும் என அழுத்தம் கொடுத்துப் பேசியிருக்கிறார். நயினாரும் இதனை தட்டிக்கழிக்காமல், கொஞ்சம் டைம் கொடுங்கள்'' என தெரிவித்துள்ளார். அதனால் நயினாரும் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பு உண்டு. மதுரை மற்றும் நெல்லைக்கு இந்த வாரம் செல்லும் எடப்பாடியின் பயணத்தில் நயினாரை சந்திக்க வைக்கும் முயற்சியும் எடுக்கப்பட்டிருக்கிறது''’என்கிறார்கள்.
நயினார் நாகேந்திரனுக்கு எடப்பாடி வலை வீசுவதையும் பாஜக தலைவர் முருகனால் ஜீரணிக்க முடியவில்லை. இதனையும் டெல்லிக்கு பாஸ் செய்திருக்கிறார் முருகன். இது குறித்து பாஜக தலைவர்கள் தரப்பில் விசாரித்த போது,’’புதிய தலைவரான முருகன் மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களுக்கான முக்கியத்துவத்தை தருவதில்லை. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அவர் முக்கியத்துவம் தருகிறார். நிர்வாகிகள் நியமனத்திலேயே இதனை கவனிக்க முடியும். இதனால் கட்சிக்குள் அதிருப்திகள் அதிகரித்து வருகிறது. இதனையறிந்து, பா.ஜ.க.வை பலகீனப்படுத்த அ.தி.மு.க.-தி.மு.க. தலைமைகள் அரசியல் செய்கின்றன. இதனை டெல்லியிடம் சொல்லியுள்ள முருகன், பாஜகவுக்குள் எடப்பாடி ஊடுருவுவதாகப் போட்டுக் கொடுத்துள்ளார். இதனால் எடப்பாடிமீது ஏக கடுப்பில் இருக்கிறது எங்களது (பா.ஜ.க.) தேசியத் தலைமை!''’என சுட்டிக்காட்டுகிறார்கள்.
பா.ஜ.க.வுக்குள் எடப்பாடி ஊடுருவுகிறாரா? என அதிமுகவின் மேலிட தொடர்பாளர்களிடம் விசாரித்தபோது, ""மத்திய அரசின் முடிவுகளுக்கு எடப்பாடி அரசு ஆதரவாக இருக்க வேண்டுமென் பதற்காக மட்டுமே அ.தி.மு.க.வை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது பாஜக தலைமை. மற்றபடி, அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவு சரியில்லை. அதனால், டெல்லியுடன் மோதும் முடிவில் இருக்கிறார் எடப்பாடி. அதிமுக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், மா.செ.க்களின் எண்ணங்களும்கூட இதுவாகத் தான் இருக்கிறது. அ.தி.மு.க.வினர் மட்டுமல்ல; மாற்று கட்சிகளிலிருந்து பா.ஜ.க.வுக்கு சென்று தற்போது அதிருப்தியில் இருக்கும் அனைவரையும் அ.தி.மு.க.வுக்குள் கொண்டுவர வேண்டும் என்கிற திட்டத்தோடு ரகசிய வேட்டையை துவக்கியுள்ளார் எடப்பாடி. அ.தி.மு.க.வுக்கு எதிராக பாஜக தலைமை இயங்கும் நிலையில், அவர்களுடன் மோதுவது என்கிற முடிவை எடுத்ததனால் தான் பாஜகவுக்குள் ஊடுருவுகிறார் எடப்பாடி'' என்கிறார்கள் மிக உறுதியாக.
-இரா.இளையசெல்வன்