மாவட்டந்தோறும் ஒரு பிரம்மாண்டத்தை காட்ட நினைக்கிறார் தினகரன். அ.ம.மு.க. திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நல்லசாமி ஏற்பாட்டில் ஒட்டன்சத்திரத்தில் ஆக.26-ல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. செம கூட்டம்.

அதில் பேசிய தினகரன், ""மதுரைக்குப் பிறகு எங்களுடைய எந்தக் கூட்டத்திற்கும் (எடப்பாடி) பழனிச்சாமி அனுமதி கொடுப்பதில்லை. கோர்ட்டில் அனுமதி வாங்கித்தான் நடத்தி வருகிறோம். மற்ற எல்லா கட்சி கூட்டங்களுக்கும் அனுமதி கொடுக்கிறார்கள். அப்படி இருக்கும்போது எங்களைப் பார்த்து பயமா?

ttv

அண்ணன் பழனிச்சாமி என்னை குட்டி எதிரி என்கிறார். ஆம்! அம்மாவின் குட்டி எதிரி. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்னு சொல்லுவாங்க. ஆனால், நான் 16 ஆயிரம் அடி பாய்வேன். இந்த குட்டி எதிரிக்காகத்தான் பழனிச்சாமி உள்பட மூன்று அமைச்சர்களும் ஆர்.கே.நகர் வீதியில் அலைந்தார்கள்.

கொங்கு மண்டலத்திலிருந்து இதுவரை ஒரு முதல்வர்கூட வரவில்லை என்பதற்காகத்தான் இந்த பழனிச்சாமியை சின்னம்மா முதல்வராக ஆக்கினார். எதிர்க்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பழனிச்சாமி வீட்டுக்கு போயிருக்கக்கூடாது. கோர்ட்டுக்குத்தான் போயிருக்க வேண்டும்.

தி.மு.க.வுடன் எடப்பாடி கூட்டணி வைத்து இருக்கிறார். அந்த அளவுக்கு தி.மு.க. எம்.எல்.ஏக்களுக்கும், தி.மு.க. நபர்களுக்கும்தான் காண்ட்ராக்ட் கொடுத்திருக்கிறார். அந்த ரிக்கார்டுகளை நான்கு மாதங்களுக்கு முன்பு தங்க தமிழ்ச்செல்வனும், வெற்றிவேலும் தலைமைச் செயலாளரிடம் அளித்துள்ளனர். தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளதோ இல்லையோ, ஆனால் தி.மு.க.வுடன் எடப்பாடி கூட்டணியில் உள்ளார்.

திகார் ஜெயிலுக்குப் போனேன் என்கிறார்கள். எதுக்குப் போனேன் உங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கத்தான் போனேன். இப்ப ஊழல் ஆட்சிதான் நடக்கிறதே தவிர அம்மா ஆட்சி நடக்கவில்லை. அதனாலதான் அம்மா ஆட்சியை உருவாக்குவோம் என்கிறோம்.

ஆர்.கே.நகரில் டோக்கனை தூக்கி காட்டுகிறார்கள் என்கிறார்கள். அது வேறு யாருமில்லை, மதுசூதனன், தனது கைத்தடிகளை தூண்டிவிட்டு 20 ரூபாய் நோட்டை தூக்கி காண்பிக்கச் சொல்லிவருகிறார்.

இடைத்தேர்தலில் அ.ம.மு.க. மாபெரும் வெற்றிபெறும். அதற்கு கூட, டி.டி.வி. வானத்தில் இருந்து பணத்தைக் கொட்டினார் என்று சொல்வார்கள். வருகிற 31-ம் தேதி தீர்ப்பு. நல்ல தீர்ப்பாக கிடைக்கும். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார். தற்போது சினிமா பீல்டில் நகைச்சுவை நடிகர் வடிவேல் இல்லை. அந்த இடத்தை எடப்பாடி அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் நிறைவேற்றி வருகிறார்கள்.''

-சக்தி