நெருங்கிவரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தும், 3 மாநிலங்களில் ஆட்சியை இழந்ததை முன்னெச்சரிக்கையாகக் கொண்டும் உயர்சாதியினரில் ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தத்தை மக்களவை-மாநிலங்களவை இரண்டிலும் அவசர அவசரமாக நிறைவேற்றியிருக்கிறது மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு.

இதுவரை கல்வி மற்றும் சமூக ரீதியில் பின்தங்கிய எஸ்.சி-எஸ்.டி-ஓ.பி.சி. பிரிவினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சட்டத்தை அமல்படுத்தி 28 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், சமூகநீதித் துறை உள்ளிட்ட 40 மத்திய அமைச்சரவைக்கு உட்பட்ட 48 துறைகளில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி நிலவரப்படி பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்த வாய்ப்புகள் 12 சதவீதம் மட்டுமே.

modi

தமிழ்நாட்டில் இந்திய சுதந்திரத்திற்கு முன்பு, நீதிக்கட்சி ஆட்சியிலிருந்தே வகுப்புவாரி உரிமை என்ற பெயரில் அனைவருக்குமான இடஒதுக்கீடு இருந்து வந்தது. 1950 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான குழு உருவாக்கி நடைமுறைக்கு வந்த அரசியல் சட்டத்தின் சில அடிப்படை உரிமைப் பிரிவுகள், இந்த அரசாணைக்கு எதிராக இருப்பதாக உயர்ஜாதியினர் நீதிமன்றத்துக்கு போனார்கள். அதைத்தொடர்ந்து தந்தை பெரியார் மிகப்பெரிய கிளர்ச்சியைத் தொடங்கினார். இதையடுத்து வகுப்புவாரி உரிமையை பாதுகாப்பதற்காக 1951 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சியில்தான் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளவை தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு 18 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சதவீதமாகவும் ஆக்கி மொத்த இட ஒதுக்கீடு 49 சதவீதமாக உறுதிசெய்யப்பட்டது. 1979 ஆம் ஆண்டில் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆண்டு வருமானம் 9 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருப்போர் பிற்படுத்தப்பட்டோராக இருக்க முடியாது என்று வருமான வரம்பு உத்தரவைப் போட்டார். அதைத் தொடர்ந்து மாபெரும் கிளர்ச்சிகள் உருவாகின. 1980 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்தது. உடனே, தனது உத்தரவை வாபஸ் வாங்கிய எம்.ஜி.ஆர். பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடை 50 சதவீதமாக்கி, மொத்த இட ஒதுக்கீடை 68 சதவீதமாக்கினார். அதாவது, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற முயற்சி எம்ஜிஆர் காலத்திலேயே படுதோல்வி அடைந்தது. அதன்பிறகு 1989-ல் ஆட்சிக்கு வந்த கலைஞர், பிற்படுத்தப்பட்டோருக்கு 30% அதிலேயே மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% என 50 சதவீதத்தினைப் பிரித்ததுடன், தாழ்த்தப்பட்டோருக்கு 18% பழங்குடியினருக்கு தனியே 1% என மொத்த ஒதுக்கீடை 69 சதவீதமாக்கினார்.

இட ஒதுக்கீடு அளவு 50 சதவீதத்திற்கு மேல் போகக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நெருக்கடியை ஏற்படுத்தியபோது, 1992 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா தமிழகத்தின் இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சட்டமியற்றி, அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, இந்திய அரசியல் சட்டத்தின் 9 ஆவது அட்டவணையில் இடம்பெறச் செய்தார்.

தமிழகத்தின் இட ஒதுக்கீடு வரலாறு இப்படியென்றால், அகில இந்திய அளவில் எஸ்.சி.-எஸ்.டி. பிரிவினருக்கு 22.5% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும், 1990 வரை பிற்படுத்தப்பட்டோர் என்ற பட்டியலே இல்லை. அவர்களுக்கென்று கல்வி, வேலைவாய்ப்பில் தனி ஒதுக்கீடும் இல்லை. 1979 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அன்றைக்கு ஆட்சி செய்த ஜனதா அரசு, “சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலைத் தயாரிக்கும்படி பி.பி.மண்டல் தலைமையில் குழு அமைத்தது. 1980 ஆம் ஆண்டு அந்தக் குழு தனது அறிக்கையில் இந்திய ஜனத்தொகையில் 52 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்டோர் என்றும், அவர்களுக்கு வேலைவாய்ப்பில் 27 சதவீதம் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றும் பரிந்துரை செய்தது.

Advertisment

10 ஆண்டுகளுக்குப் பிறகு, 1990 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அரசுதான் மண்டல் பரிந்துரைகளை அமல்படுத்த ஆணை பிறப்பித்தது. அதற்காகவே, அன்றைக்கு வி.பி.சிங் அரசுக்கு எதிராக உயர்ஜாதியினரின் போராட்டத்தை தூண்டிய பா.ஜ.க., ஆட்சியையும் கவிழ்த்தது என்பது வரலாறு. எனினும், வி.பி.சிங் தொடங்கிய பணி, நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% என்றும், மன்மோகன்சிங் ஆட்சியில் கல்வி நிலையங்களில் 27% என்றும் இடஒதுக்கீடு நிலைநாட்டப்பட்டது.

நடைமுறையில் இதன் பயன் முழுமையாக சேராத நிலையிலேயே, இதனால் உயர்சாதியினர் பாதிக்கப்படுவதாகவும் தகுதி, திறமைகள் பின்தள்ளப்படுவதாகவும், உயர்சாதி ஏழையருக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றும் குரல்கள் உயர்ந்து வந்தன.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டிற்கு நரசிம்மராவ் அரசும், வாஜ்பாய் அரசும் மேற்கொண்ட முயற்சிகள் சட்டரீதியாக வெற்றி பெறவில்லை. அவற்றை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இப்போது மோடி அரசால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மசோதா இரு அவைகளில் நிறைவேறியுள்ள நிலையில், இதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், திரிணாமூல் உள்ளிட்ட கட்சிகள் நேரடி மற்றும் மறைமுக ஆதரவு தந்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் ஆனந்த சர்மா, "இந்த இட ஒதுக்கீடு அவசியம்தான். 5 மாநிலத் தேர்தலில் தோல்வி அடைந்தவுடனேயே இந்த மசோதாவைக் கொண்டு வந்திருப்பதுதான் கேள்விக்குறி'’என்றிருக்கிறார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, "மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது'’என ஆதரித்திருக்கிறார். இரு அவைகளிலும் நிறைவேறினாலும் உச்சநீதிமன்றத்தின் முன் நிற்குமா என்ற கேள்வி எழுப்புகிறார்கள் சட்ட அறிஞர்கள்.

பா.ஜ.க. அரசு நீதிமன்றத்திலும் வெற்றி பெற்றால்தான், அதன் தேர்தல் கணக்குப்படி உத்தரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பெரிய மாநிலங்களில் வசிக்கும் உயர்சாதியினரின் வாக்குகளைத் தக்க வைக்க முடியும். எனினும், பொருளாதார இடஒதுக்கீடு இல்லாதபோதே, மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் அதிகபட்சமாக 90 சதவீதம் வரை பிராமணர்கள் உள்ளிட்ட உயர்சாதியினரின் ஆதிக்கம் நிலவுகிறது.

இச்சூழலில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் எத்தனை பேர்-அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்பது பற்றிய எந்த ஆய்வும் அறிக்கையும் இல்லாமல், 8 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்கள் உயர்சாதி ஏழைகள் என மோடி அரசு தீர்மானித்திருப்பது, இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலிருந்து சமத்துவத்துக்கான இளைஞர் அமைப்பு இந்த ஒதுக்கீடை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. இனி அங்கு கிடைக்கப்போகும் தீர்ப்பு என்ன என்பதைப் பொறுத்தே ஜெயிக்கப் போவது சமூக நீதியா அல்லது மனு நீதியா என்பது முடிவாகும்.

-ஆதனூர் சோழன்

______________

தனித்து ஒலித்த தமிழ்நாடு!

இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைக்கும் மோடி அரசுக்கு எதிரான, வலுவான குரல் தமிழ்நாட்டிலிருந்துதான் ஒலித்துள்ளது.

stalin

மு.க.ஸ்டாலின், தி.மு.க. தலைவர்: (சட்டமன்றத்தில்)

அரசியல் சட்டத்திற்கு எதிராக, நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இது தாழ்த்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது. இதற்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

thambidurai

தம்பிதுரை, துணை சபாநாயகர், அ.தி.மு.க.: (மக்களவையில்)

“சமூகரீதியாக மட்டுமே இடஒதுக்கீடு வழங்க அரசியல் சட்டம் வழிவகை செய்கிறது. பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்க முடியாது. ஏழைகளை உயர்த்த மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத் திட்டங்கள் என்னவாயிற்று? மோடி சொன்னதுபோல ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போட்டிருந்தாலே யாரும் ஏழையாக இருந்திருக்கமாட்டார்கள்.

t

டெரிக் ஓ’ பிரையன், திரிணாமுல் காங்கிரஸ் (மேற்கு வங்கம்) :

“தினமும் ரூ.37 சம்பாதித்தாலே வறுமைக் கோடுக்கு கீழ் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இனிமேல் தினமும் ரூ.2,100 சம்பாதிப்பவர்களுக்கு இடஒதுக்கீடு என்றால் அவர்களும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்று கருதப்படுவார்களா?’’

kanimozhi

கனிமொழி, தி.மு.க.: (மாநிலங்களவையில்)

“நான் பெரியார் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன். அரசியல் சட்டத்தின் முதல் திருத்தத்தை கொண்டுவந்த முதல் பிரதமர் நேரு கூட, ‘பொருளாதார’ என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் தவிர்த்தார். எந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த 10 சதவீதம் என்பது நிர்ணயிக்கப்பட்டது? தேர்வு கமிட்டிக்கு அனுப்பி விவாதிக்காமல் எதற்காக இத்தனை அவசரம் காட்டுகிறீர்கள். ஒருவர் மதத்தையோ, பொருளாதார நிலையையோ மாற்றலாம். சாதியை மாற்றமுடியாது.’’

draja

டி.ராஜா, சி.பி.ஐ.:

“அரசியல் சட்டத்தையும் நாடாளுமன்றத்தையும் மதிக்காமல் அரசு அடாவடியாக இந்த மசோதாவை கொண்டுவந்திருப்பது இந்திய குடிமக்களை கவலையடையச் செய்துள்ளது.