"16 வயது சிறுமிக்கு 16 முறை! கருமுட்டை வியாபாரம்... கல்லா கட்டும் மருத்துவ உலகம்!'’என்ற தலைப்பில் ஈரோடு சிறுமியின் கருமுட்டை விவகாரம் பற்றி ஜூன் 11-14 நக்கீரன் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்தியில் அரசு இதில் கவனம் செலுத்தி மருத்துவக் குழுவை அமைத்து சட்ட விதிகளை உருவாக்கி முறைப்படுத்தவேண்டும் என்பதையும் கூறியிருந்தோம்.
நமது செய்தியின் எதிரொலியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு சார்பில் ஒரு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். சுகாதாரத்துறைச் செயலாளர் தலைமையில் குடும்பநலத்துறை இயக்குனர் துணைத் தலைவராகவும், மகளிர் அமைப்பைச் சேர்ந்த வசுதா ராஜசேகர், மகப்பேறு பேராசிரியர் டாக்டர் மோகனா, சட்டத்துறை உதவிச் செயலாளர் ஆகிய 5 பேர் அடங்கிய இக்குழு செயல்படும்.
இதன்படி, 23 வயது முதல் 35 வயதுள்ள பெண்கள் மட்டுமே கருமுட்டை தானம் வழங்கமுடியும். அதுவும் ஒரு பெண் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே 7 கருமுட்டைகள் மட்டுமே வழங்கமுடியும். சட்டப்படி மருத்துவர்கள் செயல்பட வேண்டும். முட்டை வழங்கும் பெண்களை எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. கருத்தரிப்பு மையங்கள் எந்த மோசடிகளிலும் ஈடுபடக் கூடாது. சட்ட விதிமீறல் நடந்தால் அந்த மருத்துவர்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து முதல் 10 லட்சம் அபராதமும், மறுமுறையும் தவறுசெய்தால் 3 முதல் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், உடன் 10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்கிறது இச்சட்டம்.
இதற்கிடையில் ஈரோடு சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரத்தில், ஈரோட்டைச் சேர்ந்த இரண்டு தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்கள் ஊழியர்களிடம் ஏற்கனவே ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை செய்தார்கள். மேலும் சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரத்தில்... சேலம், ஓசூர், ஆந்திர மாநிலம் திருப்பதி, கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆகிய தனியார் மருத்துவமனைகளுக்கும் விசாரணைக்கு நேரில் வந்து ஆஜராகுமாறு ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பி யிருந்தனர்.
ஜூன் 11-ஆம் தேதி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஓசூர் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் நிர்வாகிகள், மருத்துவர்கள் என இரண்டு வாகனங்களில் 10-க்கும் மேற் பட்டோர் எஸ்.பி. அலுவலகத்தில் ஆஜராகினார்கள். அவர்கள், மருத்துவப் பதிவேடுகள், முக்கிய ஆவணங்களையும் எடுத்துச்சென்றனர். அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள்.