சிதம்பரம் தீட்சிதர்கள் குறித்த தொடர்ச்சியான சர்ச்சைகள் சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது சங்கர் தீட்சிதர் என்பவர் குழுவாக சேர்ந்து போலி சான்றிதழ்கள் தயார் செய்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து சிறைக்கு சென்ற சம்பவம் அறங்கேறியுள்ளது.
சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி கிராமத்தையொட்டிய இடத்தில், கடந்த 18-ந்தேதி, பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்களென நூற்றுக்கும் மேற்பட்டவை சிதறிக்கிடந்தன. அதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சிதம்பரம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் ரகுபதியிடம் தெரிவிக்க, உடனடியாக இவர் தலைமையில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகள் உள்ளிட்ட காவல்துறையினர் சான்றிதழ்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அவற்றில் அண்ணாமலை பல்கலைக்கழக சான்றிதழ்கள் அதிகமிருந்ததால், பல்கலைக்கழகத்தில் விசாரணை செய்தபோது, போலிச் சான்றிதழ்கள் எனத் தெரியவந்தது. பின்னர் விசாரணையைத் தீவிரப்படுத்தியதில், சிதம்பரம் மன்மத சாமி நகரைச் சேர்ந்த நடராஜரத்தின தீட்சிதர் மகன் சங்கர் தீட்சிதர், கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்த நாகப்பன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், அதேபோல் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் பெயரில் இவர்கள் போலி சான்றிதழ், பட்டமளிப்பு சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்களைத் தயாரித்து ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. சங்கர், நாகப்பன் வீடுகளில் சோதனையிட்டதில், போலி சான்றிதழ்கள், சான்றிதழ்கள் தயாரிப்புக்கான பேப்பர்கள், மை, கம்ப்யூட்டர் லேப்டாப், சீல் உள்ளிட்டவற்றை கைப்பற்றி, இருவர் மீதும் கிள்ளை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
சிதம்பரம் காவல் கண்காணிப்பாளர் ரகுபதி கூறுகையில், ""பல ஆண்டுகளாக இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதில் பாண்டிச்சேரியிலுள்ள கௌதமன் என்பவர் கொடுக்கும் ஆர்டரின்பேரில் தான் இவற்றை தயார்செய்து கொடுத்துள்ளனர். இந்த சான்றிதழ்களைத் தனியார் துறை வேலைவாய்ப்புக்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கும் பயன்படுத்தியிருக்கலாம். இவர்களின் வங்கிக்கணக்குகளை ஆய்வுசெய்து, தொடர்புடைய மற்றவர்களையும் கண்டறிவோம். முக்கிய குற்றவாளிகள் விரைவில் சிக்குவார்கள்'' என்றார்.
சங்கர்தீட்சிதர் போலி சான்றிதழ் தயார் செய்து சிறைக்கு சென்ற சம்பவம், இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கர் தீட்சிதர், நடராஜர் கோவில் தீட்சிதர் என சிலர் கூறியதால், நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேசன் தீட்சிதர், "இவருக்கும் கோவிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். தீட்சிதர்கள் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிவருவது அதிர்ச்சியளிக்கிறது.