நாடெங்கும் தீபாவளி களை கட்டிய சூழலில், நவம்பர் 4 இரவு 9.30 மணி, சென்னை மெரீனா கடற்கரை ஜெயலலிதா நினைவிடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
"நான்தான் ஜெயலலிதாவின் மகள். அப்பல்லோ மருத்துவமனையில் அவர் இருந்தபோது மருத்துவமனையின் பின்பக்கமாக சென்று பார்த்தேன். அப்போது எனக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து கண் கலங்கினார்'' என சொன்னதோடு, விரைவில் சசிகலாவை சந்திப்பேன் என்றார் ஒரு பெண்மணி. அவரே தன் பெயர் பிரேமா என்று மீடியாக்களிடம் தெரிவித்து, சமாதிக்கு செல்ல முற்பட்டார். போலீஸ் அனுமதிக்கவில்லை. அவருடன் வந்திருந்த 10, 15 ஆட்கள், “"அம்மா வோட மகள் சார்... அனுமதிங்க'’என்றனர். “"எல்லாரும் அம்மாவுக்கு மகள்தான்'’ என்று கலாய்த்தார் ஒரு போலீஸ்காரர்.
அனுமதி கிடைக்காத நிலையில் பிரேமா, "இன்னைக்கு தீபாவளி எங்க அம்மாகிட்ட(ஜெ.) ஆசிர்வாதம் வாங்கலாமுன்னு வந்தேன். இங்கே உள்ளே (போலீசார்) விடல. என் நேட்டிவ் மைசூர். இங்கு நான் பல்லாவரத்தில் தங்கியிருக்கிறேன். என்னை எல்லோருக்கும் தெரியும்''” என்றவரிடம், "இவ்வளவு காலம் சொல்லாமல் இப்ப திடீரென சொல்கிறீர்களே?'' என்று மீடியாக்கள் கேட்டதற்கு, "அதற்கு காரணம் இருக்கு. காலம் வரும்போது சொல்கிறேன்'' TN07 BF3893 toyota fortuner காரில் புறப்பட்டார்.
நவம்பர் 5 காலை 10 மணி
ஜெயலலிதாவின் திடீர் மகள் வருவார் என எதிர்பார்த்து ஜெ. சமாதியருகே காத்திருந்த மீடியாக்களுக்கு ஏமாற்றம்.
மாலை 4.30 மணி
பிரேமா வந்தார். அவருக்கு உதவியாக ஒரு பெண் வந்தார். பாதுகாப்புக்காக கட்டுமஸ்தான ஆட்கள் வந்தனர். அவர்கள் புடைசூழ, ஜெ. சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பிரேமா. மீடியாக்களின் கேமராக்களும், மைக்குகளும் அவர்முன் குவிந்தன.
"நான் மைசூரில் வளர்ந்தேன். 30 வருஷமா பல்லாவரத்தில் இருந்தேன். இங்க வரக்கூடாதுன்னுதான் நினைத் தேன். அம்மா ஞாபகம் அதிகமானது. அதனால்தான் ஆசிர்வாதம் வாங்கலாமுன்னு வந்தேன். பிரச்சனை இருப்பதால்தான் இத்தனை வருஷங்களா வெளியில வரலை. இப்ப வந்திருக்கிறேன். எல்லா எவிடென்ஸ் களும் இருக்கு. ஒரு நல்ல நாள் வரட்டும். அன்னைக்கு உங்களுக்கு வெளிப்படுத்துகிறேன்.
ஆயிரம் பேர் வந்து சொல்ல லாம். பெத்த தாயை தேடி வந்திருக் கிறேன் என்றால் என்னைவிட வேற எவிடென்ஸ் தேவையில்லை என்று நினைக்கிறேன். எனக்கு வேறு யாரும் இல்ல. சின்னம்மான்னா யாருன்னு தெரியாது.... சசிகலா அம்மாதான். இதுவரை பேசியதில்லை. அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக் கிறார்கள். இனிமேதான் பேசிவிட்டு என்னோட புரூஃப் அனைத்தையும் வெளிப்படுத்துவேன் என்று சொல்லிக்கிட்டு இருக்கிறேன். என்னை வளர்த்த அப்பா, அம்மா மைசூரில் இருந்தார்கள். அவர்கள் சமீபத்தில் இறந்துவிட்டார்கள்.
அரசியல் பற்றி எதுவும் கேட்காதீர்கள். கூடிய விரைவில் அரசியல் பற்றியும், என்னைப் பற்றியும் வந்துவிடும். ஒரு தாயைவிட சொத்து வேறு எதுவுமே இல்லை. அவர்கள் ஒரு ஸ்டீல் லேடி என்பது தமிழ்நாட்டிற்கே தெரியும். அவுங்க சம்பாதித்ததை எனக்கு வேணும் என்கிறது என்ன நியாயம் சொல்லுங்க. அந்த டைம்ல எங்க அம்மா போயிட்டாங்கன்னு மனம் நொந்துபோயி மெண்டல் அப்செட் மாதிரி இருந்தேன். அந்த நேரத்துல எங்க அம்மாதான் பெரியதாக தெரிஞ்சாங்களேயொழிய அவங்க சொத்து, பதவி எதுவுமே பெரியதா தெரியல. அதிலிருந்து மீண்டு வரதுக்கு எனக்கு இத்தனை வருடம் தேவைப்பட்டது.
அப்பல்லோ மருத்துவமனையில் அம்மா இருந்தபோது போனேன். பார்த்துவிட்டு வந்தேன். அட்மிட் பண்ணும்போது என்னையும் அலோ பண்ணவில்லை. அதற்குப் பிறகு உண் மையை தெரிந்துகொண்டு அவுங்க வரச்சொல்லுங்கன்னு சொன்னபோது அப்பல்லோ ஹாஸ்பிடல் பேக் வழியா என்னை கூட்டிட்டுப் போய் எங்க அம்மாவையே எனக்கு காண்பித்தார்கள். அங்கு முத்துசாமின்னு (காவல் துறை அதிகாரி) எங்க அம்மா அசிஸ்டண்ட்டா இருந்தாங்க. அவங்கதான் கூட்டிட்டு போனாங்க. பேசினேன். அப்ப அவுங்களுக்கு உடம்பு சரியில் லாம இருந்தது. என்கிட்ட பேசுனாங்க. மத்தபடி வேறு எதுவும் அவுங்களால பேச முடியல. எனக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தாங்க. என் கையை பிடித்தபோது அவர்களின் கண் கலங்கியது. நானும் அழ ஆரம்பிக்கும்போது பேபிய கூட்டிட்டு போயி டுங்கன்னு சொன்னாங்க. என் பெயர் பிரேமா. எங்க அம்மா கூப்பிடுறது செல்லப்பெயர் ஜெயலட்சுமி. கார்டன் வீட்டில் ஒன்ஸ் போய் பேசியிருக்கிறேன். அப்பல்லோ ஹாஸ்பிடல்ல செகண்ட் டைம் பேசியிருக்கேன்''’ என்று கூறிக்கொண்டே போனார். மீடியாக்கள் பல கேள்விகளைக் கேட்டபோது அதைத் தவிர்த்தார். தனது அப்பா பற்றி பிரேமா எதுவும் சொல்லவில்லை.
ஜெ.வுக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பதை நக்கீரன் பல ஆண்டுகளுக்கு முன்பே வெறியிட்டிருந்தது. ஆனால் அது இவரல்ல.
"ஜெயலலிதாவின் மகள் என புது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் பிரேமா யார்?' என களத்தில் இறங்கினோம்.
நவம்பர் 6
ஒருவழியாக ஓர் தொடர்பு எண் கிடைத்தது. பல முயற்சிக்குப் பின் தொடர்பில் வந்த நபர், நான்தான் ஜெயலட்சுமியின் கணவர் அன்பரசன் என்றும் நேரில் சந்திக்கலாம் என்றும் சொன்னவர் பலமுறை முயற்சி செய்தும் நேரில் வரவில்லை. பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள வெட்டர் லைன் அருகேதான் வீடு என்றார்.
நவம்பர் 7
கனமழையிலும் அவர் சொன்ன இடத்திற்கு சென்று போன் செய்தோம். எடுக்கவேயில்லை. அந்த பகுதியை சுற்றி சுற்றி வந்து, பிரேமா என்கிற ஜெயலட்சுமியின் படத்தைப் பலரிடமும் காட்டி, இவரைத் தெரியுமா என்றோம். இது போன்ற நபரை இந்தப் பகுதியில் பார்த்ததே இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
வெட்டர் லைன் பகுதியை சேர்ந்த டேவிட் மற்றும் கிஷோர் குமார் "பிறந்ததில் இருந்தே இந்த பகுதிதான் எங்க வீடு. இந்த முகத்தை இதற்குமுன் பார்த்ததே இல்லை'' என கூறினார். பெரியவர் ஒருவரை வழி மறித்து கேட்டோம். "என் பெயர் ஏழுமலை இந்தப் பகுதி உருவானதில் இருந்து இங்க தான் இருக்கேன். ரெட்ட இலை கட்சிதான் நானு. வீடு வீடா ஓட்டுக் கேட்டிருக் கேன். இதுபோல ஒருத்தரை நான் பார்த்ததே கிடையாது'' என்றார்.
ஆட்டோ ஓட்டும் ஏழுமலையிடம் பேசினோம்... "பல வருசமா ஆட்டோ சவாரி இந்த பகுதிலதான் ஓட்றேன். இவரைப் பார்த்ததே இல்லை'' என்றார். அன்று இரவுவரை அலையவிட்ட அன்பரசன் கடைசிவரை நேரில் வரவில்லை.
நவம்பர் 8 காலை 8 மணி
விடாமல் துரத்தி ஒருவழியாக அன்பரசனை தொடர்பில் பிடித்துப் பேசினோம் "என் பெயர் அன்பர சன். 45 வயது, கொளத்தூர் வினாயகா புரம்தான் என் வீடு. மூனு மாசத்துக்கு முன்புதான் பிரேமா என்கிற ஜெயலட்சுமியும் நானும் ஒரு விழாவுல பார்த்தோம். அந்த தொடர்புல நாங்க திருமணம் செய்துகிட்டோம், அவருக்கு (பிரேமா) ஏற்கனவே திருமணம் ஆகி அவரோட முதல் கணவர் சம்பத் இறந்துவிட்டார். நான் மறுமணம் செய்து கொண்டேன். அவர்களுக்கு சச்சின் என்ற 22 வயது மகன் இருக்கிறான். திருமணத்திற்குப் பின் தான் இவர் ஜெயலலிதாவின் மகள் என்று தெரிவித்தார். இவரை வளர்த்தவர் பெயர் கௌரவம்மாள்னு சொன்னாங்க. வளர்ப்பு அப்பா பெயர் தெரியாது. நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்றேன், சினிமா பட தயாரிப்பாளர் ஆக இருக்கேன். அவ்வளவு தான் தெரியும். மீடியாதான் பரபரப்பை கிளப்பி விட்டது'' என்றார். ஜெ. மகள் என்பதற்கான எந்த ஆவணமும் ஆதாரமும் இன்றி கிளம்பியிருக்கும் புது டுபாக்கூர்தான் பிரேமா.
-வே.ராஜவேல், அரவிந்த்
______________
ஃபோர்ஜரி மகள்கள் -கடுப்பாகும் அ.தி.மு.க.வினர்!
பிரேமா என்கிற ஜெயலட்சுமி கிளப்பிய பரபரப்பைப் பற்றி எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்கள் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை. அ.தி.மு.க.வில் முக்கிய சீனியர்கள் சிலரை தொடர்புகொண்டு நாம் பேசியபோது, "இதையெல்லாம் பேசுவது எங்களுக்கு இழுக்கு' என்றவர்கள், பின்னர் சிலவற்றைத் தெரிவித்தனர்.
சீசன் பிஸ்னெஸ் மாதிரி திடீர் திடீர் என ஜெயலலிதாவின் வாரிசுன்னு சொல்லிக் கொண்டு சில பெண்மணிகள் வெளியே வரு கிறார்கள். இந்தப் பெண்மணி உள்பட எல்லாருமே போர்ஜரிகள்தான். இப்படி திடீர் திடீரென முளைக்கும் வாரிசு களின் நோக்கம் என்ன? அவர்களை யாராவது இயக்குகிறார்களா? என்பதுதான் புரியவில்லை” என்கிறார்கள்.
ஜெ. இருக்கும்போதே கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பிரியா மகாலெட்சுமி என்பவர் தன்னை ஜெ. மகள் என்று சொல்லிவந்தார். அவர் டுபாக்கூர் என்பதை நக்கீரன் அம்பலப்படுத்தியது. 2016-ல் ஜெயலலிதா மறைந்ததும் ஜெய லலிதாவின் மகள் என ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானது. அது இசைக்கலைஞர் ஒருவரின் குடும்பத்தினர் புகைப்படம் என அம்பலமானதை அடுத்து அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. அதே போல, 2017-ல் அம்ருதா என்ற பெண்மணி, "ஜெயலலிதாவின் மகள் நான்தான்' என கோர்ட் வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். "இவரும் ஜெயலலிதாவின் வாரிசு இல்லை' என நக்கீரன் அப்போதே அம்பலப்படுத்தியது. உச்சநீதிமன்றமும் அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதே ஆண்டில், ஈரோட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற நபர், "ஜெயலலிதாவின் மகன் எனவும், 1986-லேயே ஜெ. தன்னை தத்தெடுத் தார்' என்று சொல்லி பரபரப்பை கிளப்பினார். சசிகலா -தினகரன் போன்றவர்களால் எனது உயிருக்கு ஆபத்து என்றும், பாது காப்பு கேட்டு காவல் துறையில் மனு கொடுத் தார் கிருஷ்ணமூர்த்தி. அதனை ஆராய்ந்த போலீஸ், அவை போலி என கண்டறிந்ததும் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தது.
தற்போது பரபரப்பு கிளப்பி யிருக்கும் பிரேமா பற்றி உளவுத்துறை விசாரிக்கத் துவங்கியுள்ளது. ஜெ. மரணத்துக்குப் பிறகு ஆளாளுக்கு உரிமை கோரி கிளம்புவதும், சர்ச்சைகளை ஏற்படுத்துவதும் ஜெயலலிதா அனுதாபிகளையும் அ.தி.மு.க.வினரையும் கடுப் பாக்கியுள்ளது. "எந்த ஆதாரமும் இல்லாமல் பரபரப்புகளுக்காக பேட்டி கொடுத்து சர்ச்சைகளை உருவாக்குபவர்களை காவல்துறை கைது செய்யவேண்டும்' என்று வருத்தமும் கோபமும் கலந்த குரலில் தெரிவிக்கிறார்கள் உண்மையான அ.தி.மு.க.வினர்.
-இளையர்
_______________
நான் அப்போலோவில் இல்லை
பின்வாசல் வழியாக அப்போலோ மருத்துவமனைக்குத் தன்னை அழைத்துச் சென்றதாகவும், ஜெ. சிகிச்சை பெற்ற வார்டுக்கு காவல்துறை அதிகாரி முத்துசாமிதான் கூட்டிச் சென்றார் என்றும் பிரேமா பேட்டி யளித்த நிலையில், இதுபற்றி தற்போது டி.ஐ.ஜியாக உள்ள முத்துசாமியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவர், "அப்போலோவில் நான் இல்லை. அதற்கு முன்பே சீருடைப் பணியாளர் பிரிவுக்கு மாற்றப்பட்டு பணியாற்றி வந்தேன். யாரையும் நான் வார்டுக்கு அழைத்துச் செல்லவில்லை''’என்றார் உறுதியாக.
-அருண்பாண்டியன்