"இபு ஃபுரூஃபென்' என்பது உடல்வலியைப் போக்கும் அலோபதி மருந்து. இந்த வலி நிவாரணியை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, பல்லாயிரம் மக்களின் வாழ்க்கையில் தீராத வலியை ஏற்படுத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டு பரவிக்கொண்டிருக்கிறது.

1986-இல் சாசன் டிரக்ஸ் என்ற பெயரில் அபய்குமார் என்பவரால் புதுச்சேரி மாநிலம், காலாப்பட்டில் 5 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது இந்த மருந்துக் கம்பெனி.

pondi

இப்போது 15 ஏக்கர் பரப்பளவுக்கு விரிந்துள்ளது. ஆண்டுக்கு 4,800 டன் மருந்து உற்பத்தி செய்துகொண்டிருந்த இக்கம்பெனி, இப்போது ஆண்டுக்கு 9,156 டன் உற்பத்தி செய்யத் திட்டமிட்டிருக்கிறது.

Advertisment

இதற்கான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் மே இரண்டாம் வாரத்தில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தவமணி திருமண மண்டபத்தில் நடந்தது.

மாவட்ட ஆட்சியர் சத்யேந்திர சிங் துர்சாவத் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்திற்கு ஊர்வலமாக கறுப்புக் கொடியோடு பொதுமக்கள் வந்தார்கள்.

கூட்டம் தொடங்கியது. மேடையில் அமர்ந்த மாவட்ட ஆட்சியர் அவர் எதிரில் வைக்கப்பட்டிருந்த மினரல் வாட்டரை எடுத்துக் குடித்தார். எதிரில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி, ""கலெக்டரய்யா அதைக் குடிக்காதீங்க... இன்றைக்கு மட்டும் நான் கொண்டுவந்த இந்தத் தண்ணீரைக் குடிங்க. இதைத்தான் நாங்க எப்பவும் குடிக்கிறோம்'' என்றபடி தன் கையிலிருந்த அழுக்கான தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு ஆட்சியரை நெருங்கினார்.

Advertisment

பதற்றமும் சச்சரவும் கூச்சலும் தொடங்கியது. இரண்டு மூன்று நிமிடங்களில் கருத்துக் கேட்புக் கூட்டத்தை முடித்துக்கொண்டு ஆட்சியரும் அதிகாரிகளும் அங்கிருந்து கிளம்பினர்.

புறப்பட்ட அதிகாரிகளை மண்டபத்தின் வாயிலில் முற்றுகையிட்ட பொதுமக்கள், ""கருத்துக் கேட்புக் கூட்டம் வேண்டாம், அந்த மருந்து தொழிற்சாலையை மூடுங்கள்'' என்று கோஷமிட்டு வாக்குவாதம் செய்தனர்.

அதேசமயம் காங்கிரசின் புதுச்சேரி வடக்கு மாவட்ட தலைவர் ஜோசப் தலைமையில் 200 பேர் மருந்துக் கம்பெனிக்கு ஆதரவாக ஊர்வலமாக வந்தனர்.

அதேபோல என்.ஆர். காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கல்யாண சுந்தரம் உள்ளிட்ட பலர் மருந்து தொழிற்சாலையை மூடச்சொல்லி கோஷமிட்டபடி வந்தனர். இரண்டு கோஷ்டிகளும் மோதிக்கொண்டதால், தடியடி நடத்திய போலீஸார் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசிக் கூட்டத்தைக் கலைத்தனர். 100-க்கும் அதிகமானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறனிடம் பேசினோம்...

""இந்த மருந்துக் கம்பெனியால் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர் மிக மோசமாகக் கெட்டுப்போய்விட்டது. தோல்வியாதி மட்டுமின்றி கர்ப்பப்பையில் கோளாறு ஏற்படும் அளவுக்கு பாதிப்பை உண்டாக்குகிறது. இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டமே சட்டப்படி விதிமீறல்தான். இப்போதைய உற்பத்தியே பெரும் பாதிப்பு. மருந்து உற்பத்தியை இரட்டிப்பு ஆக்கினால் மக்கள் வாழவே முடியாது'' என்றார் தமிழ்மாறன்.

இந்த மருந்துக் கம்பெனிக்கு ஆதரவாக அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இயங்குகிறார்கள். பொதுமக்களோ "மூடியே ஆகவேண்டும்' என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

-சுந்தரபாண்டியன்