மிக்ஜாம் புயல்.. 2015 சென்னை வெள்ளத்துக்கு பிறகு அப்போது பெய்த மழையளவைவிட கூடுதலாகப் பெய்து, சென்னையை புரட்டிப் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறது. புயலுக்கு முந்தைய ஒருவார காலமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விட்டுவிட்டுப் பெய்துவந்த மழை, வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையை நெருங்கியதையடுத்து, டிசம்பர் 3, ஞாயிறன்று இரவு 8 மணியளவில் தொடங்கி, புயல் காற்றோடு கூடிய மழை விடாமல் பொழிந்து, டிசம்பர் 4, திங்கள் நள்ளிரவுக்குப் பிறகே ஓயத்தொடங்கியது. கிட்டத்தட்ட 30 மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த அதி பெருமழையால், சென்னை மாநகரமும், அதன் புறநகர்ப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின. பெரும்பாலான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. செல் போன் டவர்களும் செயலிழந்தன. புயல் வருமுன்பே கடைகளில் பன், பிரெட், பிஸ்கெட், ஸ்நாக்ஸ், பால் பாக்கெட், மெழுகுவர்த்திக்காக மக்கள் கூட்டம் அலைமோத, அனைத்தும் உடனுக்குடன் விற்றுத் தீர்ந்தன. கடைகளும் வரிசையாக அடைக்கப்பட்டன.
செம்பரம்பாக்கம் ஏரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்த தால் அணையிலிருந்து 8000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. பூண்டி ஏரியிலிருந்து 40 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. புழல் ஏரியிலிருந்து கடந்த சில நாட்களாக தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், கனமழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து அணை நிரம்பி உபரி நீர் வழிந்ததில் அப்பகுதியிலுள்ள சாலை முழுவதும் சேதமடைந்தது. மிக்ஜாம் புயலுக்கு மறு நாளான செவ்வாயன்று, காலையிலிருந்தே பால் பாக் கெட்டுக்களுக்காக மக்கள் அலைமோதினர். அரசாங்கத் தின் தரப்பில் ஆவின் பால்பாக்கெட்டுகள் வினியோகிக்கப் பட்ட போதிலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பால் பாக்கெட்டுகளின் விலை இஷ்டத்துக்கு ஏற்றப்பட்டு அடிதடியாக விற்றன. மழை நீர் சூழ்ந்ததால், பேருந்து போக்குவரத்து குறைக்கப்பட்டு, உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைய நினைக்கும் மக்கள், பேருந்துக்காக வெகுநேரம் காத்திருந்தனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரும், மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் களமிறங்கி, 1000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் பொதுமக்களை மீட்கும் பணியில் துரிதமாக செயல்பட்டனர். மேட்டுக் குப்பம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய ஐ.டி. நிறுவன ஊழியர்களையும், வட மாநிலத் தொழிலாளர்களையும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரும் மாநில மீட்புக் குழுவினரும் இணைந்து மீட்டுவந்தனர். ஓ.எம்.ஆர். சாலை, காரப்பாக்கம் பகுதியில் சிக்கிய பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் விஷ்ணுவிஷாலையும் மீட்டு காப்பாற்றினர். சோழிங்கநல்லூர் பகுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்களை விடுதியிலிருந்து மீட்டுவந்தனர்.
பெருமழையால் வேளச்சேரி பகுதியில் 7 மாடிக் கட்டிடம் அமைக்கத் தோண்டப்பட்ட பள்ளத்தில் சரிந்து விழுந்து இருவர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் இருவரின் நிலை இதுவரை தெரியவில்லை. தென் சென்னையின் புறநகர்ப்பகுதிகளான வேளச்சேரி, மடிப் பாக்கம், பெருங்குடி, கள்ளுக்குட்டை, நாராயணபுரம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், பெரும்பாக்கம், மாடம் பாக்கம், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், பல்லாவரம், கீழ்கட்டளை, பம்மல், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருமளவு சூழ்ந்ததில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. ஆதனூரில் தொடங்கும் அடையாறு மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் இரண்டும் திருமுடிவாக்கம் அருகே கலந்து பெருமளவு வெள்ள நீர் ஓடியதால், அனகாபுத்தூர் குன்றத்தூர் சாலை பாலம் மூழ்கியது. தாம்பரம் முடிச்சூர் பகுதியில் தற்போது நீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டு மக்கள் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். வரதராஜபுரம் என்.ஜி.ஓ. காலனிபகுதியில் தொடர்ந்து நீர் வடிக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் டவுன் பகுதியில் வெள்ளத்துக்கான முன்னெச்சரிக்கை வேலையை சிறப்பாக செய்து முடித்த தால் பெரிய அளவிலான பாதிப்பு அந்த மாவட்டத்தில் இல்லை. தற்போது 80 சதவீத வெள்ளம் சூழ்ந்த பகுதி களிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு விட்டது. காஞ்சிபுரம் நகரப் பகுதியில் கடந்த வெள்ளத்திற்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திய வேகவதி ஆற்றுப் பகுதியை முன்கூட்டியே சீராக தூர்வாரியதால் இந்தமுறை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சுகாதாரத் துறை சார்பில் 300 நடமாடும் மருத்துவக் குழுவினர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய்த் தொற்றை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈ.சி.ஆர். சாலையில் மாமல்லபுரம் அருகே கரும்பாடி பகுதியில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டு இரண்டு நாட்களாக போக்குவரத்து பாதிக்கப்பட் டுள்ளது. சென்னை வேளச்சேரி எஸ்.ஆர்.பி. கூல்ஸ் - வேளச்சேரி பஸ் ஸ்டாப் இடையிலான 3 கி.மீ. தூரத்துக்கு கடந்த 2005ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பல கோடி செலவிட்டு டிரைனேஜ் சிஸ் டம் போடப்பட்டது. ஆனால் முறையாக செய்யப் படாததால் தற்போது பெருமழையில் அந்த ட்ரைனேஜ் முழுக்க நீர் தேங்கி, சுமார் 5000 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. கடந்த சென்னை வெள்ளத் தைப் போன்றே, தற்போதும் த.மு.மு.க. அமைப்பின் தன்னார்வலர்கள் 150 பேர் தாம்பரம் பகுதியில் சுமார் 5000 பேருக்கு உணவுப் பொருட்களை வழங்கினர்.
தமிழ்நாடு அரசு, வெள்ள மீட்புப் பணிக்காக, சிறப்பு ஐ.பி.எஸ். அதிகாரிகளையும், அமைச்சர்களை யும் நியமித்து மீட்புப்பணிகளைத் துரிதப்படுத்தியது. மழை வெள்ளத்திலிருந்து மீட்டு, நிவாரண முகாம் களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம், அவர்களுக்கான உணவு மற்றும் வசதிகள் குறித்தும், மீட்புப்பணி விவரங்களை தமிழக அமைச்சர்களிட மும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். சென்னை வெள்ளம் மீட்புப் பணிகளை ஒருங் கிணைப்பதற்காக சென்னை மாநகராட்சி அலுவல கத்தில் அவசர கால உதவிக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. சென்னை சேப்பாக்கத்திலும் மாநில அவசர கால மையம் அமைக்கப்பட்டது. அவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி னார். சென்னை காவல்துறை சார்பில், போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்படி 12 போலீஸ் பேரிடர் மீட்புக்குழுக் கள் அமைக்கப்பட்டன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் தண்ணீ ரை வெளியேற்றுவதற்காகவும், புயலால் சாய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தவும், சென்னை மாநகராட்சி ஊழியர் களோடு, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 5,000 ஊழியர்களும் வரவழைக்கப்பட்டு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். மாநில பேரிடர் மீட்புப் படையினரோடு, தேசிய பேரிடர் மீட்புப் படை யைச் சேர்ந்த 750 பேர் இணைந்து, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழந்துள்ள குடியிருப்பு களில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள தாக வருவாய் பேரிடர் மேலாண் மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார். சென்னையில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகளில் மின் ஊழியர்கள் இரவுபகலாக ஈடுபட்டுவருவதாகவும், மழை நீர் தேங்காத பகுதிகளில் உடனுக்குடன் மின் விநியோகம் தரப்பட்டுவருவதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மேயர் ப்ரியா, அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ் ணன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு, தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தினர். முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தனது பேட்டியில், "தற்போது பெய்துள்ள மழையளவு 2015 மழையளவைவிட மிக அதிகமாகும். 2015 வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு, ரூ.4,000 கோடி மதிப்பில் வெள்ளநீர் வடிகால் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டோம். அதனால்தான் தற்போது வரலாறு காணாத வெள்ளத்தை எதிர்கொண்ட போதும் அதன் தாக்கம், கடந்த காலங்களைவிட பெருமளவு குறைந்திருக்கிறது. 2015ஆம் ஆண்டில் செம்பரம்பாக்கம் ஏரியில் 1 லட்சம் கன அடி அளவிற்கு பெருமளவு நீரை திடீரெனத் திறந்துவிட்டதால் பெருமளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டது. அது செயற்கையாக உருவாக்கப்பட்ட வெள்ளம். இது இயற்கையாக ஏற்பட்ட வெள்ளம். வரலாறு காணாத பெருமழையால் ஏற்பட்ட சேதத்திற்கு நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக 5,000 கோடி நிதி ஒதுக்க வேண்டுமென்று ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பவுள்ளோம்'' என்று கூறினார்.
தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் நிலவரங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். அப்போது கூடுதல் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரை மீட்புப்பணிகளுக்கு அனுப்பிவைக்கும்படி முதல்வர் கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு அரசின் வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு 5000 கோடி நிதி ஒதுக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மழை வெள்ளப் பாதிப்பு குறையும்வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-அரவிந்த், தெ.சு.கவுதமன்
படங்கள் : ஸ்டாலின், குமரேஷ்