பதவியேற்ற அன்றே அரசுப் பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என கோப்பில் கையெழுத்திட்டு, தி.மு.க. அரசு பெண்களுக்கான அரசு என்பதனை முதலமைச்சர் ஸ்டாலின் வெளிக்காட்டினார். கணவனை இழந்து நான்கு குழந்தை களுடன் போராடிவரும் சாந்தி என்ற இளம்பெண்ணிற்கு ஓட்டுநர் பணியினை வழங்கி பொள்ளாச்சி நகராட்சியும் பெண்களுக்கான நகராட்சிதான் என நிரூபித்திருக்கிறார் நகராட்சித் தலைவியான ஷியாமளா நவநீதகிருஷ்ணன்.
சாந்தி நம்மிடம்... "ஜமீன்புரவிபாளை யம்தான் எனக்கு சொந்த ஊர். 14 வயது இருக்கும்போதே நாகராஜுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். குடிகார கணவனின் அடி, உதை, சித்ரவதை. அதே வேளையில் எனக்கு மூன்று பெண் குழந்தை களோடு ஒரு ஆண் குழந்தை. கணவருக்கு குடிப்பழக்கத்தோடு பெண் பழக்கமும் சேர... பிரச்சினை பெரிதானது. ஒரு கட்டத்தில் பெண்களைக் கூட்டிவந்து வீட்டிலேயே வைத்துக்கொள்ள, வேறு வழியில்லாமல் என்னுடைய 4 குழந்தைகளையும் அழைத் துக்கொண்டு பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதிக்கு வந்துட்டேன். ஒருகட்டத்தில் கணவரும் இறந்துபோனார். கணவரைப் பிரிந்து வந்தபோது, என்னுடைய மகனின் வயது வெறும் 4 மாதம். இப்பொழுது அவன் ஆறாம் வகுப்பு படிக்கிறான். இரண்டு பெண் குழந்தைகள் பதினோராம் வகுப்பும், 7-ஆம் வகுப்பும் படிக்கின்றனர். வீராப்பில் வந்துவிட்டாலும் கட்டட வேலை, காய்கறி மார்க்கெட், தேங்காய் மட்டைக் கம்பெனி என கிடைக்கின்ற வேலைக்குப் போக ஆரம்பித்தேன்.
இந்த கூலியை வைச்சுக்கிட்டு பிள் ளைகளை படிக்க வைக்க முடியாது என்ப தால் நேரம் கிடைக்கையில் டிரைவிங் கத்துக் கிட்டேன். முறைப்படி லைசென்ஸும் வாங்கி காய்கறி மார்க்கெட்காரங்க மூலமா காய்கறி வண்டிகளை இயக்க ஆரம்பிச்சேன். கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநி லங்களுக்கு சரக்கு வாகனங்களை ஓட்டி னேன். இந்த தருணத்தில்தான் கொரோனா வந்து மீண்டும் என்னை வறுமையில் தள்ளிவிட்டது.
குழந்தைகளுடன் சென்று முதல்வரைப் பார்த்தால் வாழ்க்கைக்கு வழிபிறக்கும் என எண்ணி சென்னைக்கு வந்தேன். அப்பாயின்ட்மெண்ட் இருந்தால்தான் பார்க்கமுடியும் என சொல்லிவிட்டார்கள். பிறகுதான், பொள்ளாட்சி நகராட்சித் தலைவியான ஷியாமளா நவநீதகிருஷ்ணனைப் பார்க்கச் சென்றேன். அவர் என்னைப் பற்றி விசாரித்து விட்டு உடனடியாக டிரைவர் பணி வாய்ப்பை வழங்கி னார். இனி என் வாழ்வு சிறக்கும்'' என நம்பிக்கையோடு பேசினார். பொள்ளாச்சி நகராட்சித் தலைவியான ஷியாமளா நவநீதகிருஷ்ணனோ, "நகராட்சியில் ஓட்டுநர் பணிக்கான வாய்ப்புக் கேட்டு வந்தார். அவரது குடும்ப சூழ்நிலை பற்றி நன்றாக விசாரித்துவிட்டு நகராட்சி ஆணையரின் ஒப்புதலோடு தற்காலிகப் பணியில் சாந்தியைச் சேர்த்துள்ளோம். இப்போதைக்கு இது அவர்களது குடும்பத்தைக் காப்பாற்றும்'' என்கிறார்.
தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள ஓட்டுநர் பணி நிரந்தர பணியாக மாறவேண்டுமென்பதே பொள்ளாச்சி மக்களின் விருப்பம். நிறைவேற்றுமா அரசு?