கலைஞர் சிலை திறப்பு விழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, நலத் திட்டங்கள் வழங்கும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இரண்டுநாள் பயணமாக திருவாரூர் வந்தார் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின்.
சென்னையிலிருந்து விமானம்மூலம் வந்தவர், திருச்சி ஜமால்முகமது கல்லூரி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு காட்டூரிலுள்ள கலைஞர் கோட்டத்தைப் பார்வையிட்டார். "எத்தனை பேர் தினமும் பார்வையிட வர்றாங்க' என்று கேட்டபடியே போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கென அமைக்கப்பட்ட அறையில் இருந்தவர்களிடம், "இந்த அறை பயனுள்ளதாக இருக்கிறதா' என கேட்டறிந்தார்.
பின் அங்கிருந்து, திரண்டிருந்த மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் ரோடு ஷோ சென்றார். கிட்டத்தட்ட 6 கிலோமீட்டர் நடந்த ரோடு ஷோ திருவாரூர் மேம்பால ரவுண்டானா அருகே அமைக்கப்பட்ட கலைஞரின் சிலையில் முடிந்தது.
அங்கு 9 அடி உயரத்தில் நிறுவப்பட்ட கலைஞரின் முழு உருவ வெண்கலச் சிலையை திறந்துவைத்துவிட்டு சன்னதித் தெருவிலுள்ள வீட்டிற்கு சென்று இரவு தங்கியவர், மறுநாள், தெருவிலுள்ள வீடுகளில் "ஓரணியில் தமிழ்நாடு' குறித்து பரப்புரை செய்துவிட்டு, திரு.வி.க. கல்லூரியிலுள்ள சமூகநீதி விடுதிகளில் மாணவர் களோடு சந்தோசத்தை பகிர்ந்துகொண்டார்.
புதிய பேருந்து நிலையமருகே அமைக்கப் பட்ட நலநிதி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்ததுடன், புதிய பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "முத்தமிழறிஞர் கலைஞரின் மகனாக மட்டுமின்றி அவரது கொள்கை வாரிசாக, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இந்த விழாவிலே நான் பங்கேற்கிறேன்'' என்று சொந்த ஊர் மக்கள் முன்னால் பேச்சைத் தொடங்கினார்.
திருவாரூர் மண்ணுக்கு தி.மு.க. செய்த சாதனைகளைப் பட்டியலிட்டவர், "திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு ஒவ்வொராண்டும் மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்படுகிறது. விவசாயம் செழித்து விளைச்சல் பெருகியுள்ளது, விவசாயிகளுக்கு நல்ல விலையும் கிடைக்கிறது. பழமையான ஜூபிலி மார்க்கெட் பகுதியில் 11 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். மாணவர்கள் பயன்பெறும் வகையில் வண்டாம்பாளையத்தில் 56 கோடியில் மாதிரிப் பள்ளி அமைக்கப்படும். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆறுகள், வாய்க் கால்கள், மதகுகள் உள்ளிட்டவை 43 கோடியில் சீரமைக்கப்படும். பாரம்பரிய நெல் ரகங்களை தன் வாழ்நாள் முழு வதும் பேணிப் பாதுகாத்த நெல் ஜெயராமன் அரும் பணியை போற்றும் வகையில் திருத் துறைப்பூண்டியில் அவருக்கு நினைவுச்சிலை அமைக்கப்படும்.
நெஞ்சை நிமிர்த்திச் சொல் கிறேன், தமிழ் நாட்டு வரலாற்றில் இவ்வளவு திட் டங்களை எந்த அரசும் செய்திருக் காது. எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி தமிழ்நாட்டை மீட்போம்… சாரி தமிழகத்தை மீட்போம் என்கிற பயணத்தை தொடங்கியிருக்கிறார், தமிழ்நாடு என்று சொல்லக்கூடாதென்று சொல்கிற கூட்டத்துடன் தற்போது அ.தி.மு.க.வைச் சேர்த்துவிட்டார். அ.தி.மு.க.வை மீட்கமுடியாத இவர் தமிழகத்தை மீட்கப்போகிறாராம்.
செஞ்ச குற்றங்களிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தமிழர்கள் உரிமைகளையும் பா.ஜ.க.விடம் அடகுவைத்தீர்கள். உங்களுக்குத் தெரிந்தது எல்லாம் துரோகம் செய்வது மட்டும்தான். உங்களைக் கொண்டுவந்தவர்களுக்கு துரோகம், உங்களை நம்பி வழங்கப்பட்ட கட்சிக்கும் அந்த தொண்டர்களுக்கும் துரோகம் செய்து கூட்டணி வைத்தீர்கள். பள்ளி கல்வி நிதியை வழங்காத, கீழடி ஆய்வறிக்கையை மூடிமறைக்கும் நபர்களுடன், கூட்டணி வச்சிக்கிட்டு பழனிச்சாமியால் எப்படி பயணம் செய்யமுடியுதுன்னு தெரியலை.
சமீபத்தில் அறநிலையத்துறை நிதியில் பள்ளி, கல்லூரி கட்டக்கூடாது என்று பேசுகிறார். இதற்கு முன்பு பா.ஜ.க.வுக்கு வெறும் டப்பிங் வாய்ஸ் கொடுத்தார், இப்போது பா.ஜ.க.வின் ஒரிஜினல் வாய்ஸாக மாறிவிட்டார். பக்தவச்சலம் காலம் முதல் அறநிலையத்துறை நிதியை கல்லூரிகளுக்குப் பயன்படுத்துவது நடந்துகொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர். காலத்தில் தொடங்கப்பட்ட பழனியாண்டவர் தொழில்நுட்ப கல்லூரிக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டி நீங்கள் திறந்து வைத்தபோது மயக்கத்தில் இருந்தீர்களா?
கல்விக்காக உண்மையாகவே குரலெழுப்புவ தாக இருந்தால் கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படுமென சட்டமியற்றி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. இதற்கு ஆளுநர் இதுவரை அனுமதி தரவில்லை. இதற்காக குரல் கொடுக்க உங்களுக்கு நெஞ்சுரம் இருக்கிறதா, மக்களுக்கு எதிரான கருத்துக்களை பேசிக்கொண்டு மக்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்துவிட்டு, மக்களை ஏமாற்றிவிடலாம் என்ற நப்பாசையோடு பயணம் செய்தால் மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்''’என்று உத்வேகத்துடன் பேசினார்.
அதேசமயம் திருவாரூர்க்காரர்களும், தி.மு.க. தொண்டர்களும்... "கலைஞர் முதல்வராக இருக்கும்போது, தற்போதைய எம்.எல்.ஏ.வும், மாவட்டச் செயலாளருமான கலைவாணன் மக்களின் கருத்துக்களை, கோரிக்கைகளை அவரிடம் எடுத்து வைப்பார். மூத்த முன்னோடி களும் கலைஞரிடம் உரிமையோடு கோரிக்கை வைப்பார்கள். கலைஞர் மறைந்த பிறகு பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆனதும் கோரிக்கைகளை முன்வைக்க யோசிக்கும் நிலையாகிடுச்சி. பாதாளச் சாக்கடை பிரச்சனை, குடிதண்ணீர் பிரச்சனை என திருவாரூர் தவிக்கிறது. முதல்வர் சொந்த மண்ணுக்கு செய்யநினைத்தாலும், அவரிடம் கோரிக்கையை கொண்டுசெல்ல ஆளில்லை''’என்கிறார்கள்.