மிழக அமைச்சர்களிலேயே அதிகப் புகார்களில் சிக்கியிருப்பவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான். புகார் பந்தயத்தில் முதல்வர் பழனிச்சாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை தாண்டி முன்னே ஓடிக் கொண்டிருக்கிறார் வேலுமணி என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.

வேலுமணி மீதான புகார்களின் சீரியஸ் தன்மைக்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்கிறார்கள். ""தமிழகத்தில் ஆற்று மணலுக்கு அடுத்தபடியாக அதிகளவில் ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்ப்பது பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான குடிதண்ணீர்தான். தமிழகம் முழுவதும் குடிதண்ணீரை விநியோகிக்கும் உரிமை வேலுமணியின் துறையான உள்ளாட்சித் துறையின் கீழ்தான் வருகிறது.

velumani-corruption

ஆற்று மணல் கொள்ளை என்பது பழைய கால ஊழலாகிவிட்டது. அதனால் குடிநீர் விநியோகத்தில் புகுந்து கொள்ளையடித்தால் காலம் முழுவதும் பணம் கொட்டும் மரமாக மாறும் என திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள் ஆட்சியாளர்கள்'' என சீரியஸாகவே குற்றம் சாட்டுகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

அவர்கள் குற்றம் சாட்டுவது வேலுமணி கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை "சூயஸ்' என்கிற பிரான்சு நாட்டு கம்பெனிக்கு கொடுத்ததைத்தான். சுமார் 1200 கிலோமீட்டர் நீளமுள்ள, குடிநீர் குழாய்களுள்ள கோவை மாநகரில் உள்ள ஒன்றரை லட்சம் குடிநீர் இணைப்புகளை அடுத்த 26 வருடங்களுக்கு வேலுமணி 400 மில்லியன் யூரோ (1 யூரோ = 86 ரூபாய்)விற்கு சூயஸ் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார். அதோடு நிற்காமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளின் குடிநீர் விநியோகத்தையும் சூயஸ் நிறுவனத்திற்கு கொடுக்க திட்டமிட்டுள்ளார். கோவையைத் தொடர்ந்து சென்னைக்கும் சூயஸ் நிறுவனம் வந்திருக்கிறது.

velumani-corruption

சென்னைக்கு குடிநீர் வழங்க சென்னை மகாபலிபுரத்தை அடுத்த நெம்மேலியில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை கொண்டு வந்தார்கள். தினமும் 70 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்க 400 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்ட அந்தத் திட்டத்தை ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கோவையில் வேலுமணி ஆசியுடன் புகுந்த சூயஸ் நிறுவனம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் இந்த திட்டத்திலும் கால் பதித்துள்ளது. ஏற்கனவே இத்திட்டத்தை தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றும் போது VA TECH (வா.டெக்) COBRA (கோப்ரா) ஆகிய கூட்டு நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் வா டெக் இந்திய நிறுவனம், கோப்ரா பன்னாட்டு நிறுவனம் இரண்டும் இணைந்து வெற்றிகரமாக தினமும் 70 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கி வழங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் வா டெக், கோப்ரா ஆகிய இரண்டு நிறுவனங்கள் தனித்தனியாக டெண்டர் போட்டிருக்கின்றன. கூடவே IDE என்கிற இஸ்ரேல் கம்பெனியும் இன்னொரு பிரபலமான கடல்நீரை குடிநீராக்கும் பிரான்சு கம்பெனியும் இந்தத் திட்டத்தில் டெண்டர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளன.

இவற்றுடன் கோவையில் குடிநீர் விநியோக காண்ட்ராக்ட் பெற்ற சூயஸ் கம்பெனியும் களம் இறங்கியுள்ளது. இந்த ஐந்து கம்பெனிகளும் தாக்கல் செய்த டெண்டர்களை சென்னை குடிநீர் வாரியம் AECOM என்கிற நிறுவனத்திடம் கொடுத்து இந்த ஐந்து கம்பெனிகளும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தகுதி பெற்ற நிறுவனங்களா என கேட்டிருக்கிறது.

தமிழக குடிநீர் வழங்கல் வாரியத்தின் இந்த கேள்விக்கு AECOM கம்பெனியின் இணை டைரக்டர் உமேஷ் காக்பாலியா என்பவர் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி பதிலளித்துள்ளார். அதில் "இந்த ஐந்து நிறுவனங்களும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தகுதி பெறாதவை' என்கிறார். VA TECH நிறுவனமும் COBRA என்கிற நிறுவனமும் சேர்ந்துதான் நெம்மேலியில் 70 லட்சம் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றின. இரண்டும் தனித்தனியாக பிரிந்து திட்டத்தை நிறைவேற்ற விண்ணப்பித்துள்ளன. அதனால் அனுபவமின்மை காரணமாக இந்த இரண்டு நிறுவனங்களின் டெண்டர்களை ஏற்க முடியாது.

jaggi

அத்துடன் சூயஸ் நிறுவனம் ஆஸ்திரேலியாவில் 143 மில்லியன் லிட்டர் கடல் நீரை சுத்தம் செய்து குடிநீராக்கும் நிறுவனத்தை அமைத்துள்ளதாக கூறுகிறது. அதற்கு உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை. அதேபோல் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் வேறொரு நிறுவனத்துடன் இணைந்து 143 மில்லியன் கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையத்தை 31 டிசம்பர் 2016-க்குள் 3 வருடம் நடத்தியதாக கூறுகிறது. அதுகுறித்து கூட்டு வணிக ஒப்பந்தத்தை பலமுறை சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் கேட்டபிறகும் தரவில்லை. அதேபோல் ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை மேற்கொள்ள சூயஸ் நிறுவனம் கொடுத்த சான்றிதழும் -அதுவும் ஒரு கூட்டு வணிக நடவடிக்கையின் கீழ் வருவதால் அந்த சான்றிதழ் அடிப்படையில் நெம்மேலியில் 150 லட்சம் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான தகுதியாக ஏற்க முடியாது' என தெளிவாக குறிப்பிடுகிறார்.

ஆனாலும் இந்த திட்டத்தை சூயஸ் கம்பெனிக்கு அளிக்கும் முயற்சிகள் அமைச்சர் வேலுமணியின் ஆதரவால் வேகம் பெறுகின்றன என்கிறார்கள் சுற்றுச்சூழல் வல்லுநர்கள். வேலுமணிக்கு டெண்டர் விவகாரங்களில் விளையாடுவது கை வந்த கலை என்கிறார் அறப்போர் இயக்கத்தின் தலைவரான ஜெயராமன் வெங்கடேசன். 2014-ஆம் ஆண்டு மே மாதம் உள்ளாட்சித்துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்ற காலத்திலிருந்து அவரது சகோதரரான அன்பரசன், வேலுமணி இருவருக்கும் நெருக்கமான சந்திரபிரகாஷ், சந்திரபிரகாஷின் தாயார் சுந்தரி மற்றும் ராபர்ட் ராஜா ஆகியோரை பினாமிகளாக வைத்துக் கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை அவர்கள் பங்கு வகிக்கும் கம்பெனிகளுக்கு கொடுத்து வருகிறார்.

சந்திரபிரகாஷின் தாயார் சுந்தரி மற்றும் வேலுமணிக்கு நெருக்கமான விஷ்ணுவர்தன் ஆகியோர் டைரக்டர்களாக இருக்கும் வரதன் இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் என்கிற நிறுவனம் 2013-ல் செய்த 2 கோடி ரூபாய் வர்த்தகத்திலிருந்து 2017ஆம் ஆண்டு 67 கோடி வர்த்தகம் செய்யுமளவிற்கு வளர்ந்துள்ளது.

வேலுமணியின் சகோதரரான அன்பரசனின் நிறுவனமான செந்தில் அண்ட்கோவும் விஷ்ணுவர்தனுக்கு சொந்தமான கன்ஸ்ட்ரானிக்ஸ் இன்டியா என்கிற நிறுவனமும் வேலுமணியின் தயவால் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் பெறும் நிறுவனங்களாக சில ஆண்டுகளில் வளர்ந்துள்ளன.

வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சரான பிறகு சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் டெண்டர் என்பதே இல்லாமல் போய்விட்டது. டெண்டர் நடைமுறை சட்டத்திற்கு எதிராக இந்த இரண்டு மாநகராட்சிகளிலும் 2 நிறுவனங்கள் தான் அனைத்து வேலைகளுக்குமான டெண்டரில் பங்கு பெறும்.

velumani-corruption

கோவையில் குப்பை அள்ளுவதற்காக 2014-ஆம் ஆண்டு 6 கோடியே 50 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டது. அதில் KCP Engineers மற்றும் அதே கம்பெனியின் டைரக்டரான சந்திரபிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர். அதேபோல் கோவை மாநகராட்சியில் விடப்பட்ட 38 டெண்டர்களில், வர்தன் இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ், கான்ட்ரானிக்ஸ் இந்தியா, செந்தில் அண்ட் கோ ஆகிய நிறுவனங்களே பங்கேற்றுள்ளன. இவை அனைத்தும் அமைச்சர் வேலுமணிக்கு வேண்டியவர்களின் நிறுவனங்கள். அதேபோல் சென்னை மாநகராட்சியில் பேருந்து செல்லும் சாலைகளை தரம் உயர்த்தும் பணிகள் 1/1/2014 முதல் 20/11/2107 வரை மொத்தம் 80 பணிகள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான KCP Engineers நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிறுவனம் போட்ட சாலைகள் 3 வருடங்களுக்குள்ளே பழுதடைந்து போக... பழுதாகும் சாலைகளை தரம் குறைந்த வகையில் ஏன் போட்டாய் என கேட்காமல் அந்த சாலைகளை செப்பனிடும் பணியை டெண்டர் வழங்கு முறை சட்டத்தை மீறி அந்த சாலைகளை போட்ட ஃஈட ஊய்ஞ்ண்ய்ங்ங்ழ்ள் நிறுவனத்திற்கே அளித்த கொடுமையும் நடந்துள்ளது. எனவே வேலுமணி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளோம்'' என்கிறார் அறப்போர் இயக்கத்தின் தலைவர் ஜெயராமன் வெங்கடேசன் விரிவாகவும் ஆதாரங்களுடனும்.

வேலுமணி KCP Engineers என்கிற நிறுவனத்திற்கு நெருக்கமாக உள்ளார். அதன்மூலம் அரசு திட்டங்களில் தலையிடுகிறார் என ராஜன், சந்திரசேகர் ஆகியோரைப் பற்றி கடந்த ஏப்ரல், 02-04 நக்கீரன் இதழிலேயே "5,000 கோடிக்கு அதிபதியான அமைச்சரின் நிழல்' என நக்கீரன் பதிவு செய்தது.

இப்பொழுது கவர்னரின் செயலாளர் ராஜகோபால் டெல்லிக்குச் சென்று "வேலுமணி உட்பட தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் 30,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருக்கிறார்கள்' என மத்திய உள்துறையில் புகார் செய்துள்ளார். அதனால் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பயந்து தொண்டாமுத்தூர் தொகுதியில் ஆசிரமம் வைத்துள்ள ஜக்கி வாசுதேவ் மூலமாக மோடியின் தயவை நாடியிருக்கிறார் அமைச்சர் வேலுமணி என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

-தாமோதரன் பிரகாஷ்