"நான் ஒரு உண்மைக் கிறித்தவர்...'' என அறிமுகம் செய்துகொண்ட அவர், ""உலகம் முழுவதும் 4,40,000 கிறித்துவ மிஷனரிகள் உள்ளன. இந்திய அளவில் 15 சதவீத பள்ளி மாணவர்களும், 10 சதவீத கல்லூரி மாணவர்களும் கிறித்தவ நிறுவனங்களில்தான் படிக்கின்றனர்.
15 சதவீத மருத்துவ சேவையும்கூட கிறித்தவ மருத்துவமனைகளால்தான் அளிக்கப்படுகின்றன. சி.எஸ்.ஐ. எனப்படும் தென்னிந்திய திருச்சபையானது. கல்விப் பணி, மருத்துவப் பணி மூலம் மக்களுக்கு சேவை செய்யவும் தன்னை அர்ப்பணித்து வருகிறது'' என்றவர், ""சிவகாசி தட்டுமேட்டுத் தெருவிலும் ஒரு சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி இருக்கிறது. சுதந்திரம் வாங்குவதற்கு முன்னால் 1939-ல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
நகரின் மையப்பகுதியில் செயல்படும் அரசு நிதிஉதவி பெறும் அந்த ஈராசிரியர் பள்ளியில், ஆசிரியர்கள் இருவரும், ரூ.60 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் பெற்றும், மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெறும் 17 பேர்தான். அந்த 17 பேரும்கூட தற்போது பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டார்கள். ஏன் தெரியுமா?'' என்றார் ஆதங்கத் துடன்.
மேலும் அவர்,“""தொடக் கப்பள்ளி என்பதால் 5-வது வகுப்பு வரையிலும்தான். அங்கு படித்துவந்த ஒரு சிறுமி கர்ப்பமானாள். அவள் பள்ளிக்கு வரக்கூடாது என்று விரட்டி யடிக்கப்பட்டாள். அவள் கர்ப்பமானதற்குக் காரணம் வெளிநபர் என்றாலும், பள்ளிச் சூழலும் ஆரோக்கியமானதாக இல்லை. பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜகுமார் எந்நேர மும் போதையில்தான் இருப் பார். அவர் பாடமே நடத்து வதில்லை.
போதையில் இருக்கும் அவருடைய பொழுதுபோக்கே, மாணவர்களை பலம்கொண்ட மட்டும் அடிப்பதும், கெட்ட வார்த்தைகளால் திட்டு வதும்தான். அத்துடன் ஆபாசமாகவும் அசிங்கமாகவும் பேசுவார். நடு ரூம் என்றொரு அறை உண்டு. "அங்கே வா...' என்று அழைத்துச் செல்வார். சிறுமி களை கை, கால் அமுக்கிவிடச் சொல்வார். குடித்துவிட்டு வகுப்பறையில் இவர் வாந்தி எடுப்பதை மாணவிகள்தான் கையினால் அள்ளி சுத்தம் செய்யவேண்டும். மாணவர்களை கிட்டத்தட்ட அடிமைகள் போலவே நடத்துகிறார்.
அந்த மாணவனின் பெற் றோருக்கு கட்டணக் கழிப்பறை யில்தான் வேலை. அவன் சரியாகப் படிக்காத மாணவன் தான். அவனை அந்த அடி அடிப்பார். அதைவிட கொடுமை... அவனை அடிக்கும் போது “"இந்த சாதியில பொறந்துட்டு நீயெல்லாம் எதுக்கு படிக்க வர்ற? உனக் கெல்லாம் கக்கூஸ்தான் லாயக்கு. அங்கே போயி உட்கார்ந் துக்கோ. அதுதான் உனக்கு சரியா வரும்' என்று அவ மானப்படுத்துவார். இதனால் அந்த மாணவன் பள்ளிக்கு வருவதே இல்லை. சிறுமிகளை அடிக்கும்போது, தொடக் கூடாத இடத்திற்கெல்லாம் அவருடைய கைகள் போகும். பெற்றோர் தரப்பிலிருந்து பள்ளியின் தாளாளர் ஸ்டான்லி ஜெயராஜுக்கு புகார் போனது. தலைமை ஆசிரியர் தாளாள ருக்கு ஒருவகையில் உறவினராம். புகாரைக் கண்டுகொள்ளவும் இல்லை, நடவடிக்கை எடுக்க வுமில்லை. அதனால், அந்தக் காலனியிலிருந்து வந்து கொண்டிருந்த அத்தனை மாண வர்களும் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டனர். வெறும் 3 மாணவர்களை வைத்துப் பள்ளியை ஓட்டிக்கொண் டிருக்கின்றனர்'' என்றார்.
பள்ளிக்கு வராத மாணவன் மகாராஜாவை வீட்டில் சந்தித்தோம். ""அந்த சார் இருக்கிற ஸ்கூல் பக்கமே போகமாட்டேன். முதுகுல நங்குநங்குன்னு குத்துவாரு. ஸ்கேலைக் கொண்டு அடிப்பாரு.
எனக்கு வலிக்கும்ல'' என்று கண்ணைக் கசக்கினான். அவனுடைய பாட்டி தேவ யானை, ""அப்படிச் சொல்லா தடா.. பஸ்ல போட்டிருக்கிற ஊரு பேரையாச்சும் நாலெ ழுத்து கூட்டிப் படிக்கத் தெரிஞ் சிக்கணும்டா... படிக்கப் போடா...'' என்று கெஞ்சினார். தாத்தா கிருஷ்ணனோ, ""“வாத்திமாரு மேல குற்றம் சொல்லுற அளவுக்கு நான் பெரிய மனுஷன் இல்ல சாமி. பொழப்பே கக்கூஸ்லதான். இவன் என்ன கலெக்டருக்கா படிச்சு கிழிக்கப்போறான்? அந்த வாத்தியாரு இவனைக் கொஞ்சம் நல்லா பார்த்துக்கக் கூடாதா?'' என்று பரிதவித்தார்.
அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜ குமாரிடம் பேசினோம்.
""நான் கடவுளுக்கு பயப் படற ஆளு. நான் தலைமை ஆசிரியர் பொறுப்புக்கு வந்து அஞ்சே முக்கால் வருஷமாச்சு. எனக்கு இப்ப கெட்டநேரம். நான் நல்லவன்னு நானே சொல்லுறேன்.
வேற யாரும் எனக்கு சர்டிபிகேட் தரவேண்டாம். என்னோட பெரிய வீக்னஸ், குடிப்பேன். படிக்கலைன்னா அடிப்பேன். கொஞ்சம் கூடு தலா கண்டிச்சிட்டேன். பொம் பள புள்ளைங்கன்னா அவ்வ ளவு பாசமா இருப்பேன். என் மேல பாலியல் குற்றச்சாட்டு சொல்லுறதெல்லாம் அபாண்டம். பெற்றோர் களுக்குப் பணம் கொடுத்து என் மீது பொய் புகார் கொடுக்க வச்சிட்டாங்க. எங்ககிட்ட படிச்ச பொண்ணு கர்ப்பமாயிட்டதால, ஸ்கூலுக்கு வரவேணாம்னு சொன்னேன். என்னோட அசிஸ்டெண்ட் அருள்மேரி லில்லி, நான் சமூக சேவை பண்ணுறேன்னு சொல்லி, அந்த ஸ்டூடண்ட் ஸ்கூலுக்கு வரணும்னாங்க. எல்லாத்துக்கும் உள்நோக்கம் இருக்கு.
அவங்களுக்கு என்னை ஸ்கூலை விட்டு விரட்டணும். அவங்க எச்.எம். போஸ்ட்டுக்கு வரணும்கிற ஒரே சிந்தனைதான். என்னுடைய கஷ்டங்களை வெளில சொல்ல முடியல'' என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்னார்.
ஆசிரியை அருள்மேரி லில்லி நம்மிடம், ""“நான் எதையும் சொல்ல விரும்பல. பிரச்சினைன்னு வந்தால் ஸ்கூல் மேனேஜ்மென்ட்கிட்ட சொல்லிருவேன்'' என்றார்.
நாம் தொடர்பு கொண்டபோதெல்லாம் பள்ளியின் தாளாளர் ஸ்டான்லி ஜெயராஜ் தவிர்த்த நிலையில், சிவகாசி கல்வி மாவட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தியின் கவனத்துக்கு விஷயத்தைக் கொண்டுசென்றோம். ""விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்'' என்று உறுதியளித்தவர், விசாரணைக்குப்பிறகு நம்மைத் தொடர்புகொண்டார்.
""முதலில் டி.இ.ஓ.க்களை அனுப்பினேன். பிறகு நானும் அந்தப் பள்ளிக்குச் சென்று விசாரித்தேன். நடந்ததெல்லாம் உண்மைதான். ஆனால், அந்த எச்.எம். மறுக்கிறார். குழந்தைகளிடம் விசாரித்தபோது அவரால் பட்ட கொடுமைகளைச் சொன்னார்கள்.
குழந்தைகளிடமே எழுதி வாங்கியிருக்கிறோம். இதற்குமுன் ஒரு தடவை இதே தலைமை ஆசிரியர் ராஜகுமார் போட்டோ ஆதாரங்களுடன் கல்வித்துறை அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்.
அப்படியிருந்தும் அந்தப் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒண்ணு அவரை டிரான்ஸ்பர் பண்ணிருக்கணும், இல்லைன்னா நடவடிக்கை எடுத்திருக்கணும்.
ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதையே காரண மாக வைத்து கல்வித்துறை ஏன் இந்தப் பள்ளிக்கூடத்தை மூடக்கூடாது? என்று பிஷப் மற்றும் தாளாளர் ஆகிய இருவரிடமும் விளக்கம் கேட்டிருக்கிறோம்.
அந்தக் குழந்தைகளை நான் விசாரித்தபோது "சாப்பாடுகூட கிடைக்கல' என்றார்கள். அத்தனை குழந்தைகளும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.
ஸ்கூலுக்கு மது குடித்துவிட்டு வந்து வாந்தி எடுத்து, மாணவிகளை அள்ள வைத்திருக்கிறார் என்றால்... கொடுமையிலும் கொடுமை அல்லவா?'' என்றார் வேதனையுடன்.
அரசுப் பள்ளிகளும் சரி... அரசு உதவி பெறும் பள்ளிகளும் சரி... இதுபோல் கவனிப்பாரற்று இருந்தால்.. அங்கு படிக்கின்ற மாணவர்களின் நிலை என்னவாகும்? அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறி யாகிவிடும்!
-ராம்கி