பேராசிரியர் மு.நாகநாதன் எழுதிய Dravidian Political Economy, வளர்ச்சியா? வீழ்ச்சியா?, பொறிகள் ஆகிய மூன்று நூல்கள் ஜூலை 9, 2022 அன்று வெளியிடப்பட்டன.
இந்நிகழ்ச்சியைக் கல்வியாளர் பேரவையும் சென்னை லயோலா கல்லூரியின் சமூக அறிவியல் ஆய்வு மையமும் இணைந்து நடத்தியது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி நூல்களை வெளியிட்டார், நீதியரசர் அரிபரந்தாமன், அசோக்வரதன் ஷெட்டி, இ.ஆ.ப., மேனாள் துணைவேந் தர், இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம், பேராசிரியர் இராமு.மணிவண்ணன், பேராசிரியர் பெர்னாட்சாமி ஆகியோர் உரையாற்றினர். கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் உட்படப் பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
ஆங்கிலத்தில் வெளிவந்த Dravidian Political Economy என்ற நூ-ல் பொருளாதாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு இந்நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
இந்நூல் 9 இயல்களை உள்ளடக் கியது. உலகளவில், இந்திய அளவில் ஏற் பட்டு வருகின்ற பொருளாதார மாறுதல் களையும் அதன் விளைவுகளையும் பல தரவுகளோடும், புள்ளிவிவரங்களோடும் விளக்குகிறது. இந்தியப் பொருளாதாரம் கிழக்கிந்தியக் குழும ஆட்சியிலும், பிரித்தானியா அரசின் ஆட்சியிலும், விடுதலை பெற்ற பிறகு கடந்த 75 ஆண்டு கால காங்கிரசு, பா.ஜ.க. கூட்டணி ஆட்சிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள், அதன் வெற்றி, தோல்விகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
இந்நூல், வெளிநாட்டுப் பொருளா தார அறிஞர்களின் கருத்துகளை மட்டும் ஆய்வு செய்யாமல், இந்திய மண்ணிலும், குறிப்பாக, தமிழ்நாட்டில் நடைமுறைப் படுத்தப்பட்ட சமூகப் பொருளாதார சீர்திருத்தத் திட்டங்களை ஆய்கிறது. தென்னிந்தியாவின் சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் மானுட மேம்பாட்டிற்கு அளித்த பங்கினையும் இந்நூல் சுட்டுகிறது.
பேரறிஞர் காரல் மார்க்சு, தாதாபாய் நௌரோஜி, அண்ணல் காந்தி, நேதாஜி, தந்தை பெரியார், இராஜாஜி, அறிஞர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் சிந்தனைகளையும் இந்நூல் ஆய்வு செய்கிறது. பொதுவாக, பொருளாதார நூல்கள் அவற்றின் விதிகள், கோட்பாடு களின் அடிப்படையிலேயே எழுதப்பட் டுள்ளன. இதற்கு விதிவிலக்காகச் சமூ கத்தில் இயங்கும் அனைத்துக் கூறு களும் இந்நூலில் அலசப்பட்டுள்ளன.
பொருளா தார இயல் தனித்து இயங்காது என்பதற்கான தரவுகளும் அளிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தின் இராஜாராம் மோகன் ராய், கர்நாடகத்தின் பசவேசுவரய்யா, தமிழகத்தின் இராமலிங்க அடிகளார், மராட்டியத்தின் ஜோதி ராவ் புலே, கேரளத்தின் நாராயண குரு, ஆந்திராவின் வீரேசலிங்கம் ஆகியோர் சமூகச் சீர்திருத்தத்திற்கு அளித்த பங்கினையும் அவற்றின் விளைவுகளையும் இந்நூல் சுட்டுகிறது.
கடந்த ஒரு நூற்றாண் டாகத் தமிழ்நாட்டில் சமூக நீதிக் கொள்கை வழியாக அனைத்துச் சமூகத்தினருக்கும் கல்வி, வேலை வாய்ப்புகள் சென்றடைந்ததை இந்நூல் தகுந்த தரவுகளோடு விளக்குகிறது.
வேறுபட்ட தனித் தன்மையான இன, மொழி, மத, சமய, நிதி இயல் கூறுகளை அதிகாரக் குவிப்புகள் நிறைந்த ஒன்றிய அரசின் மேலாதிக்க ஆட்சியால்; ஜனநாயக வேர்கள் எவ்வாறு சிதைக்கப்படுகின்றன என்பதையும் இந்நூல் விளக்குகிறது.
இந்நூலின் முடிவுரையில் இந்திய அரசமைப் புச் சட்டம் உருவாகும்போது இராஜாஜி அவர் களுக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் நடை பெற்ற கருத்துப் பரிமாற் றங்கள் இடம் பெற்றுள் ளன. குறிப்பாக, இராஜாஜி, அண்ணல் அம்பேத்கரிடம், "நீங்கள் ஒரு பெரும் தவறைச் செய்துள்ளீர்கள். எல்லா மாநிலங்களும் இணைந்த ஒரு ஒட்டுமொத்த இந்தியக் கூட் டாட்சி முறை இயங்கும் தன்மையை இழந்துவிடும். அவ்விதக் கூட்டரசில் பிரதமரும் குடியரசுத் தலைவரும் இந்தி பேசுகின்ற மாநிலத்திலிருந்துதான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தென் னாட்டிற்கு என ஒரு கூட்டாட்சி முறைமையையும், வட நாட்டிற்கு ஒரு கூட்டாட்சி முறையையும் இணைக்கின்ற குறைந்த அதி காரத்தை உடைய ஓர் ஒன்றிய அரசோடு கூடிய ஒரு பெரும் கூட் டாட்சி அர சமைப்புச் சட்டத்தை நீங்கள் உருவாக்கியிருக்க வேண்டும். இல்லையென்றால் அமெரிக்காவில் நடைபெற்றது போல வட, தென் மாநிலங்களுக்குள் ஒரு பெரும் போர் நடக்கலாம். அதுபோன்ற மோதல்களுக்கான பல அடித்தளங் களைக் காலம் உருவாக்கிவிடும். இந்த உரையாடலை மையப்படுத்திப் பன்முகத் தன்மைகளை உறுதிப்படுத் தும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் ஒரு புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும்'' என இந்நூல் ஆசிரியர் வலியுறுத்துகிறார்.
வளர்ச்சியா? வீழ்ச்சியா?
சிந்தனையாளன் இதழில் எழுதிய கட்டுரை களின் தொகுப்பே "வளர்ச்சியா? வீழ்ச்சியா?' என்ற இரண்டாவது நூல். மறைந்த பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து அவர்களுக்குப் பேராசிரியர் மு.நாகநாதன் இந்நூலைக் காணிக்கை யாக்கி உள்ளார். சமூகச் சீர்திருத்தம், பகுத்தறிவு, மதச்சார்பின்மை மாண்பு, அறிவியல் மனப் பான்மை ஆகிய கருத்துகளின் கட்டுரைத் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. அண்மைக்காலமாக இந்தியாவில் தலைதூக்கி வரும் மதம் சார்ந்த வெறுப்பு அரசியலால் சமூக அமைதி குறைந்து வருவது, பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கிறது என்பதையும், பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகத் தொடர்ந்து ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருவதையும், மாநில உரிமைகள் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டு வருவதையும், பொருளாதாரச் சரிவால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் அன்றாடம் சந்தித்து வருகின்ற பாதிப்புகளையும் இந்நூல் தகுந்த புள்ளிவிவரங்களோடு விளக்குகிறது.
பொறிகள்”
சமூக ஊடகங்களான முக நூலும், புலனமும் இளைய சமுதாயத்தினரால் பெரிதும் விரும்பப்படுவதால், பேராசிரியர் மு.நாகநாதன் தொடர்ந்து தனது கருத்துகளை இத்தளங்களில் பதித்து வருகிறார். இவற்றின் தொகுப்பே "பொறிகள்'’என்ற நூலாகும். சமகால அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், கொரோனா பெருந் தொற்று நோயின் விளைவுகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள், தனிநபர் சுதந்திரத்தின் மீதும், சமூக நீதியின் மீதும் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள், மக்கள் மீது திணிக்கப்படும் வரிச்சுமைகள், அதன் விளைவாக ஏற்பட்டு வரும் சமூகப் பொருளாதாரப் பாதிப்புகள் குறித்து இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
இந்நூல்கள் அனைத்துப் பிரிவினரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் நூலாசிரி யர் பேராசிரியர் மு.நாகநாதன் அவர்களால் சிறப்புறப் படைக்கப்பட்டுள்ளன.