(சென்ற இதழ் தொடர்ச்சி...)

பொருளாதாரக் கோட்பாடுகள் குறித்தும், ஒவ்வொரு நாடும் பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைகள் குறித்தும் கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியையும், திராவிட மாடலையும் காண்போம்.

story

ஆங்கில நாட்டில் (பிரிட்டன்) பழைமைவாதிகள் கட்சி என்றும் தொழிலாளர்கள் கட்சி என்றும் உள்ளன. இதில் முதல் கட்சியை முதலாளித்துவ வலதுசாரி கட்சி என்பர். இரண்டாவது கட்சியை சோசலிச இடதுசாரி கட்சி என்பர். ஆனால், அடிப்படையில் ஒன்றையொன்று சார்ந்த நாடாளுமன்ற ஜன நாயக ஆட்சியை ஆதரித்து நிற்கின்றன. இதைப்போன்றே அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒன்று குடியரசு கட்சி என்றும், இன்னொன்று ஜனநாயக கட்சி என்றும் மாறிமாறி ஆட்சியில் இருந்து வருகின்றன. டொனால்ட் ட்ரம்ப் முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தை தீவிரமாக ஆதரித்து நின்ற வலதுசாரி ஜனாதிபதி ஆவார். அங்காடி பொருளாதாரத்திற்கு முழுமையான ஆதரவு தந்த வலதுசாரியான நரேந்திர மோடி அமெரிக்க ஜனாதிபதியை நமஸ்தே ட்ரம்ப் என்று ரூபாய் 100 கோடி வரவேற்புக்கு செலவு செய்து அகமகிழ்ந்தார். ஆனால், இடதுசாரி சாயலைக் கொண்ட ஜனநாயகக் கட்சி அமெரிக்க அதிபர் பைடன் அவர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு காரணம் ட்ரம்ப் அவர்களின் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தின் தோல்வியே ஆகும். அதாவது, தனியார் துறையில் கோலோச் சிய மருத்துவ முதலாளிகளின் ஆளுமையே அடிப்படை காரணமாகும். ஆகவே, வலதுசாரி இடதுசாரி சிந்தனை ஓட்டம் உள்ள கட்சிகள் அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் உள்ளது.

Advertisment

தி.மு.க. அரசு இடது சாரியா?

திராவிடர் இயக்கமும், அதன் தோழமைக் கட்சிகளும் சூத்திரக் கீழ் சாதியைச் சார்ந்தவர் களாக இருப்பதால், அவர்களால் முதலாளித்துவ சந்தைப் போட்டிப் பொருளியலை ஆதரிக்க இயலாது. ஏனெனில், தடையில்லா வாணிபத்தில் வறுமை, வேலையின்மை ஒழியாது. ஏழையும், பணக்காரனும் போட்டி போட்டு வாணிபம் செய்ய முடியாது. பெருங்கடலில் ஒரு டால்பின் மீன் திமிங்கலத்தை நேருக்கு நேர் சந்தித்து விட்டது. திமிங்கலம் டால்பின் மீனை விழுங்கப் போனது. அப்பொழுது டால்பின் திமிங்கலத் திடம் வேண்டியது; ‘"நான் சிறிய மீன் விட்டுவிடு'’என்றது. ஆனால் திமிங்கலம், “"இப்பெருங்கடலில் தடையில்லாப் போட்டி உள்ளது; யார் யாரை வேண்டுமானாலும் விழுங்கிவிடலாம்; போட்டி சரிசமமானது; எனவே, நீ என்னை விழுங்கி விடு; உனக்கு ஒரு வாய்ப்புத் தருகிறேன்'’என்றது.

story

Advertisment

டால்பினால் எப்படி மலை போன்ற திமிங்கலத்தை விழுங்க முடியும்? சின்ன மீனை பெரிய மீன் இரையாக்கிவிட்டது. டால்பின் எவ்வளவு கெஞ்சியும் இரக்கமற்ற திமிங்கலம் விழுங்கிவிட்டது. இதுதான் சந்தைப் போட்டி முதலாளித்துவம். எனவே, உயர்சாதி சனாதன பா.ஜ.க., தனியார் துறையை ஆதரிக்கும் வலதுசாரி ஆட்சியாகும். தி.மு.க. எழை சூத்திர மக்களைக் கொண்ட சோசலிச இடது சாரியாகும்.

உலகத்தையே உலுக்கிய அமெரிக்க பொருளாதார பெரும் மந்தம் (1929-1932) தலையிடா வாணிபக் கொள்கை நவீன உலகத்திற்கு பொருந்தாது என்பதை நிரூபித்துவிட்டது. சந்தைப் பொருளாதாரம் தோல்வியடைந்துவிட்டது. 1929, 1990, 2008, 2019 ஆகிய காலங்களில் சந்தைப் பொருளாதாரம் படுதோல்வியைச் சந்தித்து விட்டது. வறுமை, வேலையின்மை, நிரந்தர பொருளாதார வளர்ச்சி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அந்நிய செலாவணி சிக்கல் போன்ற பிரச்சினைகளை அங்காடிப் பொருளாதாரத்தால் தீர்க்க முடியவில்லை. இதை அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வேர்டு பல்கலைக்கழக இடதுசாரி பொருளியல் அறிஞர் ரிச்சர்ட் டி. உல்ப் பறைசாற்றுகிறார். முதலாளித்துவ பொருளாதார அமைப்பு ஒரு நோயுற்ற அமைப்பாகும் என்று கூறுகிறார். (The Sickness is the System #Richard D Wolff)

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு இடதுசாரி பொருளியல் தத்துவம் என்று கூறப்படுகின்ற ஜனநாயக சோசலிச பொருளாதாரமே அனைத்து பிரச்சனைகளுக்கும் மாமருந்தாகும். அதுவே நிரந்தர தீர்வாகும். இதற்கு எடுத்துக்காட்டாக, உலகில் இரண்டாவது மாபெரும் பொருளாதார வளமும் வலிமையும் கொண்டு சீனா திகழ்கிறது. திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கையால் தடையில்லாத வாணிபத்தை ஒழித்த- வறுமையை ஒழித்த- வேலையின்மையை ஒழித்த சோசலிச பொருளாதாரத்தின் சாதனையின் சாட்சியாக இருக்கிறது அந்த நாடு. இன்று சீன பொருளியல் சாதனைக்கு உலகில் எந்த ஒரு நாடும் ஈடு இணையில்லை.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆலோசனை கூற, பொருளியல் அறிஞர் அடங்கிய ஐவர் குழுவினர் இடதுசாரி சிந்தனை சார்பு உள்ளவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக, நோபல் பரிசு பெற்ற எம்.ஐ.டி. பொருளியல் அறிஞர் எஸ்தர் தப்லோ வறுமை ஒழிப்பும் பொருளாதார முன்னேற்றமும்’ என்ற துறைக்கு தலைவராக உள்ளார். அவர் மேலும் ‘வறுமைப் பொருளியல்’ (Poverty Economics) என்ற நூலை எழுதியுள்ளார்.

333

அதைப்போன்றே மற்றொரு பொருளியல் அறிஞர் ஜேன் டிரீஸ் அவர்கள், ‘நிலையற்ற புகழ்’ என்ற நூலை நோபல் பரிசு பெற்ற அமர்த்யாசென் அவர்களுடன் இணைந்து எழுதியுள்ளார். இவ்விருவரும் வறுமை, வேலையின்மை குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளனர். ஏ.கே.சென் இடதுசாரி சிந்தனையாளர். இவர்களைப் போன்றே ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் ஆகிய இருவரும் பேரியல் பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு காண்பதில் வல்லவர்கள்.

தி.மு.க. ஆட்சி வந்த பின்னர் திட்டக்குழு உயிர் பெற்றது. மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவின் துணைத் தலைவராக ஜெயரஞ்சன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். ஒட்டு மொத்தத்தில் ஐவர் குழுவும், திட்டக்குழுவும் தி.மு.க. ஆட்சி, இடதுசாரி பொருளாதார சிந்தாந்தத்தை கொண்டது என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. போட்டி சந்தைப் பொருளாதாரத்தின் விளைவாக இந்தியாவில் மேலே உள்ள ஒரு விழுக்காட்டு மக்கள், 52 விழுக்காட்டு மக்களின் சொத்துக்களை தங்களது தனியுடைமையாக்கியுள்ளனர்.

மேனாள் திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, மேல்மட்டத்தில் 20 விழுக்காட்டு மக்கள் மொத்த வருவாயில் 60 விழுக் காட்டையும், மீதமுள்ள 40 விழுக்காட்டு வருமானத்தை 80 விழுக்காடு மக்கள் பெறுகின்றனர். நாட்டு வருமானத்தில் எந்த ஒரு கூடுதல் வருமானத்தையும் மேலே யுள்ள 20 விழுக்காட்டி னருக்கே சென்றடைகின்றது என்றார். எனவே, கடும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுள்ள இந்திய சமுதாயத்தில் போட்டி, தகுதி, திறமை என்பதெல்லாம் பொய்மை வாதமாகும்.

இந்த பொருளாதார அமைப்பு ஏழை, பணக்காரர்களுக்கிடையே உள்ள ஏற்றத் தாழ்வை அதிகரித்துக்கொண்டே செல்லும். உற்பத்தியைப் பெருக்கினாலும் அது ஏழையைச் சென்றடையாது. அங்காடிப் பொருளாதாரம் வருமானத்தையும், செல்வத்தையும் அனைவருக்கும் பகிர்ந்தளிக்காது. இதுவேதான் பொருளாதார சீரழிவிற்கு அடிப்படைக் காரணமாகும். எனவே, ஜனநாயக சோசலிசம் ஒன்றே தீர்வாகும்.

அங்காடி பொருளாதார அமைப்பு அரசின் தலையீடு இல்லாமலேயே தானாகவே இயங்கக் கூடிய சக்தியுடையது. அளிப்பும், தேவையும் சமநிலையில் இல்லையென்றால் அங்காடி விலை ஏற்றம், குறைவு அதை சமநிலைக்கு கொண்டு வந்து விடும். விலை ஒன்றே உற்பத்தியையும், தேவையையும் சமநிலைக்கு கொண்டுவரும் சக்தி என்பது 1929-இல் அமெரிக்க பொருளா தாரத்தில் ஏற்பட்ட உலக வரலாறு காணாத பெருத்த மந்தம் பொய்ப்பித்துவிட்டது.

ஆடம் ஸ்மித் கூறிய தலையிடா வாணிபம் தோற்றதனால், அளிப்பு தேவையைவிட அதிகமாகிவிட்டது. அதனால் விலை குறைந்துவிட்டது. இலாபம் குறைந்துவிட்டது. முதலீட்டாளர்களுக்கு போதிய வருமானம் இல்லை. உற்பத்தி குறைக்கப்பட்டது. அதனால் வேலை யின்மை அதிகரித்தது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. உற்பத்தி மிதமிஞ்சி இருந்தது. ஆனால் வாங்குவோர் இல்லை. இதை ‘செழுமையிடையே வறுமை’ என்பர். இலாபம் இல்லாததால் யாரும் முதலீடு செய்ய முன்வரவில்லை. முதலாளித்துவம் என்பது இலாபத்தின் அடிப்படையிலேயே செயல்படக்கூடியது. இந்நிலையில் அமெரிக்க அரசாங்கம் இலாபம் கருதாமல் முதலீடு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆக, பொருளாதார மந்த காலத்தில் முதலாளித்துவ அங்காடிப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற அரசு முதலீடு செய்ய வேண்டியதாயிற்று. இந்த இடத்தில்தான் பொதுத் தேவையை ஏற்படுத்த அரசாங்கம் பொது மராமத்து வேலைகளை (PWD) மேற்கொண்டது. அதாவது, ‘கையடி பம்பில் நீர் வரவில்லையென்றால் ஒரு சொம்பு நீரை ஊற்றி அடித்தால், நிலத்தடி நீர் தொடர்ந்து வரும்.’அதைப்போல அரசாங்கம் மந்த காலத்தில் தன் முதலீட்டைச் செய்து அங்காடி பொருளாதாரத்தை காப்பாற்றியது.

ஆங்கில நாட்டு பொருளாதார மேதை ஜெ.எம்.கீன்ஸ், அரசு தலையீடு பொருளாதார மந்த காலத்தில் தவிர்க்க முடியாதது என்றார். அவர் தலையிடா வாணிபத்தின் முடிவு(The End of Laissez Faire) என்ற நூலையும் எழுதினார். அமெரிக்க அரசாங்கம் 1945-இல் முழுவேலை சட்டம் (The Great Employment Act) இயற்றப்பட்டது. அதன்படி பணவீக்க காலத்திலும் பணவாட்ட காலத்திலும் சந்தைப் பொருளாதாரத்தில் அரசு தலையிட்டு சிக்கலிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று அறுதியிட்டுக் கூறியது.

எனவே, சந்தைப் பொருளாதாரம், தலையிடா வாணிபம் என்பது படுதோல்வி அடைந்த அமைப்பாகும். எனவே, அதை நம்பி இந்தியா போன்ற மூன்றாவது உலக நாடுகள் செயல்பட்டால் வறுமை, வேலையின்மைக்கு நிரந்தர தீர்வு இல்லை என்பதே பொருளியல் தரும் பாடமாகும்.

“வறுமை எங்கிருந்தாலும் அனைத்து செழிப்பிற்கும் அபாயமாகும்.”"அனைவருக்கும் நீதி -எவருக்கும் இல்லை அநீதி'”என்பதே நீதிக் கட்சியின் தொடர்ச்சியான தி.மு.க.வின் சமூக -பொருளியல் தாரக மந்திரமாகும்.